September 24, 2009

வலையில் ஓர் உலா...

நீண்ட நாட்களின் பின் மீண்டும் புளொக் மூலம் புலம்பலாம் என்று வந்திருக்கிறன். ஓரளவுக்கு அங்கும் இங்கும் நுனிப்புல் மேய்ந்திருக்கின்றேன். ஈழத்தவரின் அரசியல் சார்ந்த சூழல் நம்மில் பலருக்கும், எமது போராட்டம் கலந்த தகவல்களுக்கே ஓரளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது. பல முறை எழுத வேண்டும் என்று எண்ணி அமர்ந்து விட்டு நிறுத்தி விடுகின்ற ஒரு மனோ நிலை கொஞ்ச நாட்களாக இருந்து வருகின்றது. ஆயினும் மற்றவர்களின் எழுத்துக்களை ஓரளவு வாசிப்பதுண்டு.




ஆரம்ப கால கட்டங்களில் இது ஒரு சமூக வலையாக அவர் தம் அங்கலாய்ப்புக்களையும் அனுபவங்களையும் பகிர்கின்ற ஒரு ஊடகமாகவே தென் பட்டது. என் முன் தெரிகின்ற பல விடயங்களை மேற்குலகில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு தமிழ் பேசும் எம்மவர் பார்வையில் எப்படி வித்தியாசப்படுகின்றது அது ஏன் என்ற வினாக்களை அவ்வப்போது எனக்குள் எழுப்புவதுண்டு. இதை விமர்சனங்களின் விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட ஒருவரின் விசனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நாம் தகவல் உலகத்தில் வாழுகின்றோம். தகவல் என்பது ஒழுங்குபடுத்தபட்ட தரவுகளின் கோர்வை. நம்மவர் மத்தியில் பல திரட்டிகள் இருக்கின்றன. இவற்றை பாவிப்பதற்கான இலகுத்தன்மை இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. வலைப்பதிவு தொடர்பாக உதவி பெற்றுக் கொள்வதில் இன்றும் இன்னமும் சிரமம் இருக்கத் தான் செய்கின்றது. பல சுவாரசியமான வலைக்கு வந்த கதைகளை வாசித்திருக்கின்றேன். அனேகமானவர்களின் பதிவில் முகம் தெரியாத பிற தேசத்தில் வாழுபவரிடம் தான் உதவி பெற்று வலைக்கு வந்ததாக எழுதியுள்ளார்கள். நமக்கென்று ஒரு "வலையில் எழுத டம்மீஸ் புக்" என்று ஏன் தயாரிக்கக் கூடாது.

* புலொக் என்றால் என்ன?
* எப்படி பதிவு செய்வது?
* தமிழில் எப்படி தகவல்களை தட்டச்சு செய்வது?
* நீங்கள் எழுதியதை எப்படி மற்றவர்கள் வாசிக்க வைக்கலாம்?
* திரட்டிகளும் பயன்பாடும்.
* பின்னூட்டங்களும் அதன் கையாளுகையும்
* ஒலி, ஒளி வடிவம் இணைத்தல்
* மேம்படுத்தல்

இப்படியான தகவல்களை ஒரு கோர்வையாக ஒரு புலொக் வடிவத்திலோ அல்லது pdf வடிவத்திலேயே செய்தால் புது முகங்களை உள்வாங்கவும் எமக்குள் திறந்த மனப்பான்மையை வளர்க்கும். அடடா நான் அறிவுரை கூற மட்டும் இப்பதிவை எழுதவில்லை. இது பற்றிய தகவல்கள் பலரால் பாகம் பாகமாய் அங்கும் இங்குமாக இருக்கின்றது. பதிவர் வட்டங்கள் பல இருக்கின்றன. இந்த முயற்சி புலொக் எழுதும் எல்லா தமிழ் எழுத்தாளர்களின் கருத்தையும் உள்வாங்க உதவும் என்பது ஒரு கணிப்பு.

பதிவர் வட்டங்கள் எவை? அவற்றை தொடர்பு கொள்ள என்ன தொடர்பு முகவரி? போன்ற விடயங்களை சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கியமான விடயங்களை முயற்சிக்கலாம். இப்படி ஒரு கைக்கடக்கமான ஒரு கை நூல் வலைப்பக்கத்தில் இருக்கும் போது எல்லோரின் இணையப் பக்கங்களிலும் " நீங்களும் பதிய விரும்புகின்றீர்களா? என்ற ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு பெட்டிக்குள் இருந்து சிந்திப்பதுடன் நின்றுவிடாமல் பெட்டிக்கு வெளியேயும் நின்று சிந்திக்க வேண்டும் என்பது என் அவா! அறிமுகமில்லாத அகதியின் புலொக்கிலிருந்து அறிவுமுகம் என்று சொல்லி என் கிறுக்கல்களை கொட்டியிருக்கின்றேன். எனது கிறுக்கல்கள் எந்தவித கீறல்களையும் ஏற்படுத்தியிருக்காது என்று நம்பி உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களையும் வேண்டி நிற்கின்றேன்




Read more...

June 5, 2009

உணர்வு பூர்வமாகவா அறிவுபூர்வமாகவா சிந்திக்கும் நேரம் இது?







புலம் பெயர்ந்த மக்களிடையே ஒருமித்த கருத்தையும் செயற்பாட்டையும் ஏற்படுத்த பலரும் முயற்சிக்கின்ற இந்த வேளையில், ஒரு சிலரின் தனிப்பட்ட நோக்கங்கள் கொண்ட அல்லது தலைமைத்துவ சிந்தனைகள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றது. பல ஆண்டுகளாக பல மாவீரர்களின் அர்ப்பணிப்பில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வேட்கையை அணையாது தொடர்ந்து, எமது தமிழீழத் தாயகத்திற்கான முன்னெடுத்துச் செல்லவேண்டியது நம் எல்லோரின் கடமை.

நாம் பல்லாயிரக் கணக்கான மக்களை சிங்கள அரசின் இனச் சுத்திகரிப்பினால் இழந்தும், 300,000 மக்களை வதை முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாத அனாதைகளாகவும், 13,000 மேற்பட்டோர் முகாம்களிலிருந்து கடத்தப்பட்டு அவர்களின் நிலை தெரியாத நிலையிலும் மிக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் அவசரமானது எது?, அவசியமானது எது? என்று பிரித்தறியக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அவசியமானவை யாவும் அவசரமானது கிடையாது. இன்றைய கால கட்டத்தில் எம்மக்களுக்கு ஒரு உடன் விடிவாக அவர்களுக்கு தேவையான உணவு, உடை, உறையுள், சுயாதீனமாக சொந்த இடங்களில் சென்று வாழ வழி செய்யவேண்டும்.

இந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நமக்கு வெளி நாட்டு அரசுகளினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் எமக்குச் சார்பான நிலைய ஏற்படுத்த வேண்டும். ஓர் அரசியல் கட்சி சார்ந்த அணுகுமுறையத் தவிர்த்து உலகளாவிய தமிழ் மக்களின் ஒருமித்த ஒரு நிலைப்பாடு உருவாக்கப் பட வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்த்து மக்களுக்கு உடனடி நிவாரணம் சேர நாம் உழைக்க வேண்டும். இந்த உடனடித் தேவைக்காக நாம் உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகவும் சிந்திக்க வேண்டும்.

முன்னுதராணாமாக பல தமிழ் தலைமைகள் செயற்பட்டாலும், பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஈடாக, கூடிய புலம் பெயர் தமிழர் வாழும் கனடாவில் முன்னெடுக்க முடியவில்லை என்ற ஒரு குறைப்பாடும் விளங்குகின்றது. நம் மக்களை தலைமைப்படுத்த முயற்சிப்பவர்கள் மக்களை பிரித்தாள முயற்சிக்கக்கூடாது.

புலம்பெயர் நாடுகளில் தலைமைப் படுத்த முயற்சிப்பவர்கள்,

1. புலம் பெயர் நாட்டின் தேசிய மொழியிலும், நாட்டு அரசியல் பின்னணிகள், அரசியல் தலைவர்கள் முன்பு கூறிய கருத்துக்கள், இன்றைய நிலைப்பாடு, ஊடகங்களை கையாளக் கூடிய தன்மை போன்றவற்றைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2. எந்த நேரத்திலும் ஊடகங்களோ, அரசியல் பிரமுகர்களோ, தொண்டு நிறுவனங்களோ தொடர்பு கொள்ளக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
3. தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு சட்ட திட்டங்களினால் பாதிக்கப் படாதவராக இருக்க வேண்டும்.
4. தனிமனித அடையாளத்தை முன்னிறுத்தாமல், எம் மக்களின் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும்.

மேற்பட்ட கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கும் போது உள்ளூர் தலைமைகளில் எந்த குழப்பமும் ஏற்படாது. எம் தமிழ் இனத்தைச் சார்ந்து அரசியல் பிரதி நிதித்துவம் செய்யும் அரசியல் வாதிகள் இலங்கை, இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இரா. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டு எம் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்கள். அவர்களுடைய ஆரோக்கியமான கருத்துக்களை புலம் பெயர் நாட்டிலுள்ள் அரசியல் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். புலம் பெயர் மக்களின் அழுத்தம், இலங்கையில் வாழும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதி நிதிகளை வெளி நாட்டு அதிகாரிகள் யார் சென்றாலும் சந்திக்கும் வகையில் எங்களுடைய அழுத்தங்கள் இருக்க வேண்டும்.

உலகளாவிய அளவில் ஒருமித்த போராட்டமே எம் இலக்கை இலகுவாக அடைய வழி சமைக்கும். வெறும் உணர்வு பூர்வமாக சிந்தித்து மட்டும் நாம் நம் இலக்கை அடைந்து விட முடியாது. அறிவுபூர்வமாகவும் எம் சிந்தனை அமைய வேண்டும். எந்த குறிக்கோளும் இல்லாமல் ஒரு சிலரை வால் பிடிக்கும் தன்மை தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கும். தியாகி என்றோ, துரோகி என்றோ நம் தேவைகளுக்காக யாரையும் அடையாளப் படுத்த முயற்சிக்காமல், எம் மக்களின் உடனடித் தேவைகளுக்கு விடிவு தேடுவதுடன் எம் தமிழீழத் தாகத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

கீழே தரப்பட்டுள்ள "தமிழீழமே தாகம்" நிகழ்வு காணொளியில் இணைக்கப்பட்டுள்ள‌ பாடல் வரிகளைக் கேளுங்கள். ( நன்றி - நினைவுகள்.கொம்)
இப் பாடல் வரிகள் பல யதார்த்த நினைவுகளை அசைய வைத்து எங்களை ஒற்றுமைப் படுத்தும் என்று நம்புகின்றேன். உங்கள் கருத்தையும் பகிர்ந்து செல்லுங்கள்.



Read more...

May 29, 2009

எம் இனத்தை காப்பாற்ற வழி இல்லையா?


உறவுகளை இழந்த வலியில் எம்மினம் என்ன செய்வதென்று அறியாத நிலையில், யாருக்கு யார் ஆறுதல் சொல்வது! புலம் பெயர் நாடெல்லாம் வீதி வீதியாய் போராட்டம் செய்தோம், பாராளுமன்றங்களை முற்றுகையிட்டு மன்றாடினோம். கை கொடுக்க யாருமில்லாமல் கடைசி நிமிடம் வரை நம்மை உலகம் காக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து கொடூரமாக கொல்லப்பட்ட சொந்தங்களுக்காக நாம் என்ன செய்தோம், செய்கின்றோம் என்பது தான் இன்று நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம்.

இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க சர்வதேசத்தில் எவ்வளவு குழப்பங்கள். மனித உரிமை நிறுவனங்கள் என்ற பேரில் மனித அவலத்தை கண்டு கொள்ளாத மனிதர்கள். 21ம் நூற்றாண்டில் மனிதம் செத்து விட்டதா? அழுகின்ற நேரமா அல்லது எழுகின்ற நேரமா? யார் உயிருடன் உள்ளார்கள், யார் இல்லை என்ற பல கேள்விகள்.

நாம் மௌனிக்கின்ற நேரமில்லை. உலகத்தில் எல்லா மூலையில் உள்ள தமிழனும் ஒற்றுமையாக செயற்பட்டு, கண்மூடித்தனமாக இருந்த உலகப் பொது அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கும் வரையும் ஓயக் கூடாது. பான் கீ மூனுக்கு 20,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் தெரிந்தும் மௌனமாக இலங்கை சென்று அங்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்ததிற்கான தடயம் இல்லை என்கின்றார். இவர்கள் எல்லாம் எப்படி ஒரு மனிதாபிமான அமைப்பில் உயர் பதிவியில் இருக்கமுடியும்?

இந்த காணொளி கனடிய மக்களின் உள்ளக் குமுறலை எடுத்து வருகின்றது.




ஓயாமல் தினமும் உழைப்போம். இந்த மனித அவலத்திற்கு துணை போனவர்கள் யார் என்றாலும் அவர்களை மனித நீதியின் முன் நிறுத்த தொடர்ந்து போராடுவோம்.


Read more...

May 2, 2009

கனடியத் தமிழருக்கும் ஊடகங்களுக்கானமான கனடிய தமிழ் இளையோரின் உள்ளக்குமுறல்கள்.


உலகலகளாக ரீதியாக தமிழ் மாணவர்களின் எழுச்சிகரமான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டங்களில் பல சவால்களை இந்த இளையோர் சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. அவர்களுக்கு பலமாக இருக்க வேண்டிய கடமைப்பாடு புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோருக்கும் உண்டு.


மாணவர்களின் பேட்டியை கேட்க இங்கே அழுத்தவும். Canadian Tamil Students Interview.mp3 -






இந்த கனடிய இளையோரில் சிலரின் ஆதங்கத்தை ஒலிப்பதிவாக தொகுத்து இங்கு தந்துள்ளோம். இந்த பதிவு என்பது உங்கள் மனங்களோடு பேசுவதற்கான இவர்களுடைய சிறிய முயற்சி மட்டுமே. இவர்கள் எண்ணங்களை ஊக்குவிக்குமுகமாக தமிழ் வானொலிகள், இணயங்கள் இந்த ஒலிப்பதிவை உங்கள் ஊடகங்களில் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

Read more...

April 10, 2009

ஒட்டாவில் பாராளுமன்றலின் முன் எழுச்சிகரமாக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் ( சித்திரை 10)



மக்கள் அலை அலையாக வந்த வண்ணமாக உள்ளார்கள். எழுச்சிகரமாக கனடிய மக்களுக்கும் எம் மக்களின் நிலைப்பாட்டை தெரியவைத்து ஒரு போர் நிறுத்தத்தை வேண்டி நிற்கிறார்கள். சாய்ப்பிரியன் ஆரம்பித்து வைத்த நீராகரத்துடன் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் மேலும் நால்வர் இணைந்திருக்கின்றார்கள்.


உண்ணா நோன்பு செய்பவர்களின் உணர்வலைகள் இங்கே


Ottawa_fasting_interview_10_April.mp3 -

Read more...

April 8, 2009

தடை செய்யப்பட்ட விச வாய்வு ஆயுதங்களை கண்டிக்க ஒரு அரசும் இல்லையா?


U.N இனால் தடை செய்யப்பட்ட விச வாயு ஆயுதங்களை இலங்கை அரசு வன்னிப் போர் முனையில் உபயோகித்திருக்கின்றது. இது தொடர்பாக ஓர் ஆங்கிலச் சேவை எடுத்து வந்த காட்சி இங்கே. ஏனோ உலகத்தில் இந்த இரட்டை வேடம்.




Read more...

February 19, 2009

U.N. உள்ளே என்ன நடக்கின்றது?



இது ஒரு பேட்டி, ஈழப் பிரச்சனையை முன்வைத்து U.N இன் நடவடிக்கையை மேற்கத்தைய நிருபர் விமர்சிக்கிறார். நிச்சயம் கேட்க வேண்டிய பேட்டி.





Read more...

February 15, 2009

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!


ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையை இலங்கை மனித அவலம் தொடர்பாக‌ உடனடியாக எம்மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வைப்பதற்கான‌ மனு இங்கே கீழே தரப்பட்டுள்ளது.

மனுவை அனுப்புவதற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

தயவு செய்து உங்கள் நட்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி http://www.petitiononline.com/sgsl159/petition.html
என்ற இணைய முகவரி மூலம் மனுவை நிரப்பிக் கொள்ளலாம்.

முடிந்தால் உங்கள் தளங்களிலும் இந்த மனுவிற்கான இணைப்பை போடவும். காலத்தின் கட்டாயத்திற்கான தேவை. குறிப்பாக தமிழ் நாட்டு சகோதரர்களின் பங்களிப்பு இதற்கு மேலும் வலு ஊட்டும்

Read more...

February 8, 2009

நீங்களும் மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ளலாமா?


மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு பல சிரமங்கள் உண்டு. கீழைத் தேசங்களில் 12ம் வகுப்பு முடிந்த பின் ஒரு தேர்வுப் பரீட்சை எடுத்த பின்பு M.B.B.S படிக்க தகுதி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மேற்குலகில் குறைந்தது 2 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து, MCAT தேர்வில் சிறப்பாகச் செய்து, நேர்முகத் தேர்வு ஒன்றிற்கு அமர்ந்து அதில் தெரிவுக் குழுவை திருப்திப் படும் பட்சத்தில் தான் மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு உண்டு.

நீங்கள் எந்த வயதிலும் மருத்துவத்துறையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. தென் ஆபிரிக்காவிலிருந்து உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் வந்து கனடாவில் Doctor of Medicine ( M.D) பட்டம் பெற்று மருத்துவராக கடமையாற்றுகின்றார்.

பொறியியலாளரும், வழக்கறிஞரும் மருத்துவம் கற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றது. இங்கு மருத்துவ பீடம் கிடைக்காதவர்கள் கனடாவில் இருந்து இந்தியா சென்று படித்துக் கொள்கின்றார்கள். அவர்கள் பின்பு கனடாவில் சில பரீட்சைகள் எடுத்து தான் வேலை செய்ய வேண்டும்.

IMHO ( International Medical Health Organization) என்ற தன்னலமற்ற சேவை நிறுவனம், மருத்துவர்களை ஒன்றிணைத்து ஈழத்தில் அன்னலுறும் மக்களுக்கு உதவி வருகின்றார்கள். இந்த கனடாக் கிளையின் இளைஞர்களை இணைக்கும் டாக்டர் கண்ணா வேலா கொடுத்துள்ள பேட்டியில் மருத்துவம் படிக்க இளையவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கருத்துப் பகிர்வு செய்திருக்கின்றார். கேட்டுச் சொல்லுங்கள்.


Dr. Kanna Vela Interview - GTR

Read more...

February 7, 2009

உதவி செய்தலும் உதவி பெறுதலும்


உதவி பெறாமல் வாழ்ந்தவர்கள் என்று யாரையும் சொல்லி விட முடியாது. ஆயினும் உதவி செய்கின்ற மனப்பாங்கு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது ஏன் என்று ஒரு சின்னக் கேள்வியை எனக்குள்ளே எப்போதும் அசை போட்டுக் கொள்வதுண்டு. நான் யாரிடமாவது உதவி கேட்பதாயின் பல தடவைகள் சிந்தித்துத்தான் அணுகியதுண்டு அப்போதும் மூக்குடைந்த சந்தர்ப்பங்கள் உண்டு.

சுனாமிக் காலத்தில் அனேகமானோர் தாங்களாக முன் வந்து உதவிய போது, காலத்தின் தேவை கருதி உதவுபவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று திருப்திப் பட்டதுண்டு. இந்தக் காலத்தில், எனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் இதற்கு பங்களிப்பு செய்யக் கேட்ட போது அதில் ஒருவர் " அவை அவை தாங்கள் விலாசம் எழுப்புகின்றதுக்கு காசு கேட்கினம்" என்று விமர்சித்தார். அது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இவர் ஒரு சிலருக்கு தண்ணி வேண்டிக் கொடுத்து விட்டு தன்னை பெரியவராக உருவகப் படுத்தி எம் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதே தொழிலாகச் செய்வார். இவருடன் போராட்டத்தை நேசிப்பவர்கள் இருந்தாலும் " நக்கினார் நா இழந்தார்" என்பது போல் அவருக்கு வால் பிடித்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன்.

உதவி செய்யாமல் தவிர்த்து கொள்பவர்களில் அனேகமானோர் மற்றவர்களின் உதவியை அதிகம் வேண்டி நிற்பவர்களாயும், தாங்கள் புத்திசாலிகள் என்ற எண்ணக் கருவை கொண்ட சுய நலவாதிகளாய் இருப்பதையும் பார்த்திருக்கின்றேன். பழகிய 10 நிமிடத்திலேயே தாங்கள் வல்லவர்கள், படித்தவர் அல்லது பணக்காரர் என்ற தோறணையை வெளிப்படுத்துபவர்களாகவோ அல்லது உலகத்தில் எல்லாவற்றையும் இழந்து வாழ்பவர்கள் என்ற அனுதாபத்தை மற்றவர்களிடம் வேண்டி நிற்கும் அணுகுமுறையைப் பார்த்திருக்கின்றேன். சூடு சுரணை என்பது இவர்களிடம் மிகக் குறைவு, தங்கள் காரியம் ஆக வேண்டுமானால் என்ன பல்டியும் அடிப்பார்கள். சில நாட்களுக்கு முன் சொன்ன பொய்யிற்கும் இன்று சொல்லும் பொய்யும் முரண்படுவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

சிக்கனமாய் வாழ்வதற்கும் கஞ்சத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இவர்கள் உதவி செய்யாமல் தொடர்ந்தும் இவர்களுக்கு உதவி கிடைப்பது தாம் புத்திசாலித்தனமாய் சமுதாயத்தை உபயோகிக்கின்றோம் என்ற எண்ணம் தான்

எல்லோராலும் உதவ முடியும். பண உதவி மாத்திரம் உதவியாக அமைந்து விடாது. சரீர உதவி, சில வேளைகளில் ஆறுதல் வார்த்தைகளும் உதவியே.

நாம் இன்று உலகத்தின் உதவியை வேண்டி நிற்கின்றோம், அண்மையில் தென் ஒன்ராரியோவிலை அதிகளவு இரத்த தானம் கொடுத்த இனம் தமிழ் இனம் என்று கனடிய இரத்த தான அமைப்பினர் வாழ்த்தினார்கள். இந்த நாட்டிற்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்த தான் இத்த இரத்த தானம் நிகழ்ந்தது.

உதவி செய்தவர்களுக்குத் தான் திருப்பி உதவி செய்ய வேண்டும் என்றோ அல்லது தெரிந்தவர்களிக்கு மட்டும் உதவ வேண்டும் என்ற‌ அவசியம் இல்லை. யாரும் யாருக்கும் உதவலாம். ஒரு சிலர் மற்றவர்களை காயப் படுத்துவதே தொழிலாக செய்வார்கள். இப்படியானவர்கள் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே பெரிய உதவி. ஒரு சிலர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு வலியப் போய் உதவுவார்கள் ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சின்ன உதவியும் செய்ய மாட்டார்கள்.

உதவி என்பது பொருள், காலம் அறிந்து கேட்காமலே செய்ய வேண்டியது, உதவி செய்தது அவர்களை திருப்தியடையச் செய்ததா என்பதை அறிய முயல வேண்டும். வெறுமனே கடமைக்காக செய்த உதவியாக அமைந்து விடக் கூடாது. மற்றவர்கள் துணிந்து உங்களிடம் உதவி கேட்கும் நிலையில் நீங்கள் இருந்தால் அது பெருமைப் பட வேண்டிய விடயம்.

எனக்கு 15 வருடத்திற்கு மேல் பகுதி நேர ஆசிரியனாக கடமையாற்றிய அனுபவம் உண்டு. பல தரப்பட்ட மாணவர்களை சந்திக்கும் வய்ப்பை பெற்றவன். ஆசிரியத் தொழிலை ஏணிக்கு ஒப்பிடுவார்கள், படித்து முடித்த பின் ஏறி மிதிப்பார்கள் என்ற யதார்த்தமும் அடங்கியுள்ளதை அறிந்துள்ளேன்.

நீங்கள் பல பட்டங்களை எடுத்தவராகவோ அல்லது பல மேடைகளில் தொண்டை கிழிய உங்கள் கருத்துக்களை சொல்லுபவராகவோ இருந்தால் போதாது, உங்களை ஒரு சாதரணனும் அணுகக் கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் அணுக முடியாதவர்களாக வாழும் வாழ்க்கை முழுமை அடைந்து விடாது. உதவி செய்பவர்கள் இழிச்ச வாயர் என்ற எண்ணப் பாடுகள் சிலருக்குண்டு. இந்த எண்ணம் உள்ளவர்களும் காலப் போக்கில் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் அவர்கள் தேவைகள் பூர்த்தியாகும் போது மாறிவிடும்.

கனடிய சமூகம் மிகவும் உதவும் எண்ணம் கொண்ட சமூகம். இந்த நீரோட்டத்தில் கலந்து விட்டும் மற்றவர்களுக்கும் உதவும் மன நிலையை நாம் வளர்க்காவிட்டால் நாம் மனிதத்திலிருந்து விலகியவர்கள் ஆகி விடுவோம். ஒரு கை உதவினால் மற்ற கைக்கு தெரியக் கூடாது என்பார்கள், ஆயினும் எங்களுக்கு உதவியவர்களை மறக்காமல் நினைவு கோர வேண்டியது எம் கடமை.

உங்களுக்கும் உதவி மறுக்கப்பட்ட அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ!



Read more...

February 5, 2009

கனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.


கனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த் நடத்தினார்கள். காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது. கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற வினாக்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.


மதிப்புக்குரிய Jim Karygiannis M.P , Scarborough- Agincourt என்றவரின் முயற்சியிலை கனடாவில் தமிழருக்கான அவசர விவாதம் இன்று தான் நடை பெற்றது. கனடா இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் எம் மக்கள் அன்றாடம் படும் கஸ்டத்தையும் விளக்கியிருந்தார்.


3 மில்லியன் பணத்தை கொடுப்பதுடன் நின்று விடாமல் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அது சென்றடைய வேண்டும். போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தை உடனடியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். சமாதானத்திற்கான தீர்வை எட்டுவதற்கு கனடா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கனடாவிலுள்ள குடும்பங்களுடன் அவர்களுடைய உறவுகள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இழுத்தடிக்கப் படாமல் அதிகாரிகளை அதிகரித்து உடனடியாகச் செய்யப் படவேண்டும். வெறும் வார்த்தை அளவில் இல்லாமல் செயல் அளவிலும் நாம் இருக்க வேண்டும் என்றார்.

பல M.P. க்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள். பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டது. U.N போன்றவை பெரிய அமைப்புக்களாய் இருந்தும் இலங்கை விடயத்தில் எதுவும் செய்து விடவில்லை. கனடா போன்ற நாடுகள் U.N இனூடாக ஒரு தீர்மானத்தை எடுத்து இலங்கை விடயத்தில் தலையிட வேண்டும். ஒரு உறுப்பினர் தன் உரையில் தமிழர்கள் கனடிய நீரோட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறியிருக்கின்றார்கள், எனக்கு தெரிந்த நண்பர் லோகன் கணபதி ( மார்க்கம் மா நகராட்சி உறுப்பினர்) அவர் மனைவி மருத்துவராக இருக்கின்றார் என்று உதாரணமிட்டு பேசினார்.

ஒரு உறுப்பினர் தன் உரையில், இது அறிவுசால் ஆய்வு விவாதம் அல்ல, மனித அவலம் சம்பந்தமானது எனவே அந்த கோணத்துடன் பார்க்கப் படவேண்டும் என்றார். அவர் நியுயோர்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிகைகளை மேற்கோள்காட்டி, அரசு கிழக்கில் விடிவை எற்படுத்தியதாக சொல்லி அங்கும் அடக்குமுறையில் ஈடுபடுவதாகச் சொன்னார். அம்னெஷ்டி, Human Right Watch, பல நிறுவனங்கள் இதைப் பற்றி மறுக்கமுடியாத பல அறிக்கையை சொல்லியிருக்கின்றன.

இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்றார், சிறுபான்மையினம் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப் படவேண்டும். புலிகளை அழித்து விட்டால் தீர்வு வந்து விடாது, அது இன்னும் 30 வருடங்களுக்கு பிரச்சனையை கொண்டு செல்லும்.

அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை கொன்று சமாதனத்திற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அர்சு அழித்துவிட்டது. பல பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். கனடிய தூதரகம் வெறும் அறிக்கையுடன் நின்றுவிடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கனடியத் தமிழர்கள் தொடர்ந்து அவர்கள் M.P க்களை தொடர்பு கொண்டு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எனது M.P யார்? அவரை எப்படி தொடர்பு கொள்வது?
அ) Call this toll free 1-800-622-6232 ( 8 AM - 8 PM)
ஆ) Use this Web address and key in your postal code. Get the contact info.
http://www2.parl.gc.ca/Parlinfo/Compilations/HouseOfCommons/MemberByPostalCode.aspx?Menu=HOC

இது போல் எல்லா நாட்டிலும் உள்ள தமிழர்கள் அவர்கள் அரசுகளை வற்புறுத்த வேண்டும். தொடர்ந்து அயராது உழைப்போம்!

கனடிய பாராளுமன்ற ஈழப்பிரச்சனை 4:30 மணி நேர‌ விவாதத்தை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே அழுத்தவும்.

Read more...

February 1, 2009

மாதங்கி மாயா அருள் பிரகாசம் ( M.I.A) வன்னி மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார்!


உலகப் புகழ் பெற்ற ஒஸ்கார்(Oscar) விருதுக்கும், கிறாமி (Grammy) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டோர் தெரிவில் இருக்கும் தமிழிச்சி தானும் ஒரு அகதி, தான் பெறும் விருதை விட போரினால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களிற்கான ஒரு தீர்வே முக்கியம் என்கின்றாள். மேற்குலகில் இசைத்துறையில் தனக்கென்று அடையாளத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ் உறவு, நமக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகின்றாள்.




தந்தையின் பேரில் "அருளர்" என்றும், தாயின் பேரில் "கலா" என்ற இசைத் தொகுப்புக்களை தந்து தனக்கென்று இசைத்துறையில் அடையாளம் பெற்றுவிட்டவள், பிரித்தானிய குடியுரிமையுள்ளவள், தமிழ் தன் அடையாளம் என்று வியம்பி நின்றதால் அமெரிக்கா ஒரு இசை நிகழ்வுக்கு செல்ல இருந்த போது அனுமதி மறுக்கப் பட்டாள். அப்போது கனடிய மண்ணிற்கு வந்த பொழுது கனடிய பிரதான ஊடகமான CBC இன் THE HOUR என்ற பிரபல்யமான நிகழ்வில் மனம் விட்டு தான் தமிழ் என்ற அடையாளத்தை அடித்துக் கூறுகின்றாள்.

அமெரிக்கரின் "watch list" இலிருந்ததால் தான் அனுமதி மறுக்கப் பட்டது என்று பேட்டியாளருக்கு சொல்கின்றார்கள்.
கீழே உள்ள பேட்டியை பாருங்கள்.




இந்த மாயா முதல் 10 வருடங்களை பல இன்னல்களின் மத்தியில் ஈழத்திலும், இந்தியாவிலும் வாழந்தவள். தந்தை நம் ஈழப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர். இவர் தாயார் அவள் குழந்தையாக இருக்கும் போதே எம் பிரச்சனையை சொல்லி வளர்த்திருக்கின்றாள். தாய் துணி தைத்து கொடுத்து வருமானம் தேடி வளர்த்திட, வெட்டிய மிஞ்சிய துணிகளில் விளையாடி மகிழ்ந்தவள். இலண்டனிற்கு புலம் பெயர்ந்து இசைத்துறையில் படித்து படிப்படியாக பல தடைகளைத் தாண்டி வந்துள்ளாள்.

Vakthaa.tv வீடியோவை பார்க்க‌ இங்கே அழுத்தவும்..



இசைத்துறையில் நாட்டம் கொண்ட பாடகர், கிற்றார் இசை விற்பன்னர் Ben Brewer என்பவரை தன் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்து தாய்மை அடைந்து கிறாமி விருது நாளில் குழந்தை பெறத் தயாராகிக் கொண்டிருக்கின்றாள். மற்றவர்கள் ஆசுபத்திரி சென்று குழந்தை பெறுவதை தவிர்த்து, வீட்டில் நீச்சல் குழத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புவதாக கூறுகின்றாள். ஈழத்தில் எந்த வசதியுமில்லாமல் முகாம்களில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது இது எல்லாம் ஒரு வலியாகத் தெரியாது என்கின்றாள்.

நம்மினம் மிருகங்களை விட கேவலாமான முறையில் உண்ண உணவில்லாமல், தங்க இடமில்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட காலத்திலும் இலங்கை அரசு எந்த உதவியும் செய்யாமல் ஜேர்மனிய நாசிச காலங்களை விட மோசமானது என்று மேற்குலகிற்கு அடித்துச் சொல்கின்றாள்.

"PAPER PLANES" என்ற பாட்டிற்கு "Slumdog Millionaire" என்ற படத்தில் வந்ததிற்காகத்தான் விருது பெற தெரிவுக்குழுவின் குறுகிய தெரிவுக்குள் தெரிவாகியுள்ளாள். அவள் பாடல்களில் துவக்கு சுடும் சத்தம் எழுப்பப்படுவதைப் பற்றி கேட்கப் பட்டபோது, துவக்குச் சத்தம் என் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்று, புலம் பெயர்ந்தவர்கள் போரினால் பாதிக்கப்பட்டோர் எல்லோர் காதிலும் ஒலிப்பது இது. எங்களை நோக்கிச் சுடுவதை பார்த்தும் கேட்டும் பழகிவிட்டோம், பிடிக்காவிட்டால் சுடுபவர்களிடம் போய் சொல்லுங்கள் நிறுத்தச் சொல்லி!.

I fly like paper, get high like planes
if you catch me at the border i got visas in my name
If you come around here i make em all day
i get one down in a second if you wait

புலம் பெயர்ந்து வந்தவர்களின் கதையை நாசூக்காக சொன்ன பாடல் இது.



அமெரிக்க அரசின் பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று அல்கேடாவை அழிப்பதாக ஈராக்கில் ஒரு மில்லியன் மக்களை அழிப்பது , மற்ற அரசுகளுக்கு குறிப்பாக இலங்கை அரசு கண்மூடித்தனமாக தமிழர்களை அழிக்க வழிவகுத்தது. அமெரிக்க அரசு பொறுப்புடன் நடக்க வேண்டும் ஒபாமாவின் அரசு அதற்கான முனைப்புகளை செய்யும் என நினைக்கின்றேன், என்கின்றாள்.

காலத்தின் கட்டாயம் கருதி நமக்காக குரல் கொடுக்கும் ஒரு உறவுக்கு விருதுகள் கிடைப்பதையிட்டு நாமும் பாராட்டி, மேலும் சிறக்க வேண்டி நிற்போம்.



Read more...

January 31, 2009

வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.- "நலமுடன் இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே!"




மின்னஞ்சலில் தொடராக வந்த இக்கடித விபரத்தை உங்கள் பார்வைக்காக தருகின்றேன். வார்த்தைகளில் வலியின் கொடுமை தெரிகின்றது. அறிவு ஜீவிகள் என்று சொல்லி அரச நாற்காலிக்காய் மாத்திரம் வாழ்ந்துவிடுபவர்களுக்கு இது எட்ட வேண்டிய கடிதம். உங்கள் நட்புகளுக்கும் இக்கடிதத்தை எடுத்துச் செல்லுங்கள்!

இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்துஎன்னையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும்
மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் முடியை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம் எங்கே!!!!!

இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில்!

உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும்,
துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த
ரணங்களின் வலியோடும்
அகதி முகாமில் வாடும்
புலம்பெயர்ந்த ஈழக்
குழந்தையின் கிழிந்து
போன சட்டைப்பைகளில்
இருந்த உடைந்த
பென்சிலின்
ஒட்டுத்துண்டில்
இந்தக்கடிதம்
எழுதப்படுகிறது)

நலமுடன்
இருக்கிறீர்களா? உலகத்
தமிழர்களே?

குண்டு விழாத
வீடுகளில்,
அமெரிக்காவுடனான
அணுகுண்டு
ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவது
பற்றி அளவளாவிக்
கொண்டிருப்பீர்கள்,
இடைஞ்சலான நேரத்தில்
கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும்,
என் வீட்டுக் கூரையில்
விழுந்த
சிங்களவிமானத்தின்
குண்டுகள் என்னைப் போல
பல்லாயிரக்கணக்கான
தமிழ்க்குழந்தைகளை
அநாதை ஆக்கிய
போது, நீங்கள் எதாவது
நெடுந்தொடரின்
நாயகிக்காகக் கண்ணீர்
விட்டுக்
கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும்
அப்பாவும்
அரைகுறையாய் வெந்து
வீழ்ந்தபோது, உங்கள்
வீட்டு
வரவேற்ப்பறைகளில்
அரைகுறை ஆடைகளுடன்
அக்காமாரெல்லாம்
ஆடும் " மஸ்தானா,
மஸ்தானாவின்"
அரையிறுதிச் சுற்று
முடிவுக்கு
வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும்
நன்றாகப்
படிக்கிறார்களா? அம்மா,
அப்பாவின்
மறைவுக்குப் பின்னால்,
எனக்குத் தலை
வாரிவிட்டு, பட்டம்மா
வீட்டில்
அவித்த இட்டலி
கொடுத்துப் பள்ளிக்கு
அனுப்பிய அண்ணனும்
இப்போது இல்லை,
நீண்ட தேடலுக்குப்
பின்னர் கிடைத்த அவன்
கால்களை மட்டும்
மாமாவும்,
சித்தப்பாவும்
வன்னிக் காடுகளில்
நல்லடக்கம்
செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும்
என்று ஆசைதான் எனக்கு,
நீங்கள் இலங்கை
கிரிக்கெட்
அணியின் இந்தியச்
சுற்றுப் பயணத்தை, இரவு
பகல் ஆட்டமாய்ப்
பார்த்திருந்தீர்கள்....அதனால்
தான் எழுதவில்லை.........

ஒலிம்பிக் தீபத்தின்
சுடர்களை உலகம்
முழுவதும், என்னைப்போல
ஒரு மலை
நாட்டு திபெத்
சிறுவனும், அவன்
இனத்துப்பெரியவரும்
சந்து பொந்தெல்லாம்
மறித்துத் தடுத்தபோது,
எனக்கு உங்கள் நினைவு
வந்தது.....அதுமட்டுமல்ல,
இந்திய அரசுகளின்
உதவியோடு, இலங்கை
ராணுவத்திற்கு நன்றி
சொல்லும்
திரைப்படச் சுருளின்
பிரதிகளும் நெஞ்சில்
நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா
எழுதிக் கொண்டு,
மறுபக்கம், நவீன
ஆயுதங்களை
அனுப்பி வைக்கும்
உங்கள் கூட்டணித்
தலைவர்கள் எல்லாம்
நலமா தமிழர்களே?

இன்னொரு முறை
ஆயுதங்கள் அனுப்பும்
போது மறக்காமல் ஒரு
இரங்கற்பா
அனுப்புங்கள், சாவின்
மடியில் எங்களுக்கு
ஒரு
தமிழ்க்கவிதையாவது
கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின்
மறைவான இடத்தில்
நீங்கள் இலங்கை
ராணுவத்திற்கு
பயிற்சி அளிக்கும்
போது, குழந்தைகளையும்,
கர்ப்பிணிப்
பெண்களையும்
வலியின்றிக் கொல்வது
பற்றி ஒரு
வகுப்பெடுத்து
விடுங்கள். கொஞ்சம்
பாவமாவது
குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை
நேரத்தின் மங்கலான
வெளிச்சத்தில்,
தம்பியின்
பிஞ்சு உடல்
நான்கைந்தாய்
சிதறடிக்கப்பட்ட அந்த
கோர நாளில் நாங்கள்
எல்லாம் கூட்டமாய்
அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும்
பள்ளிக்கூடங்களை
தேடிக் கண்டு பிடித்து
கொலை
வெறியோடு உங்கள் "நேச
நாட்டு" விமானங்கள்
குண்டு மாரி பொழிந்த
போது
நீங்கள் இந்திய
விடுதலையின் பொன்
விழாக்
கொண்டாட்டங்களுக்கான
குறுஞ்செய்தி
வாழ்த்துக்களில்
களித்திருந்தீர்கள்,
உலகத்
தொலைக்காட்சிகளின்
நீங்கள் பார்த்து
மகிழும் முதன் முறைத்
திரைப்படங்கள்
தடை படுமே என்று தான்
அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை
கொன்று குவித்து,
நிர்வாணமாக்கி, இறந்த
உடலுக்குக்
கொடுக்கின்ற இறுதி
மரியாதை இல்லாமல், எம்
இறப்பை எள்ளி நகையாடிய
உங்கள் "
சார்க்"
கூட்டாளியின் கொடிய
முகம் கண்ட போதே எழுதி
இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி
மாநாடுகளில் கவனமாய்
இருந்தீர்கள்,
பெண்களின்
இடுப்பில் பம்பரம்
விட்ட களைப்பில் கட்சி
துவக்கிய
கேப்டன்களின்
பின்னால்
அணிவகுத்து
நின்றீர்கள், நீங்கள்
போட்ட வாழ்க
கோஷங்களின்
இரைச்சலில்
எங்கள் நிஜக்
கேப்டன்களின்
வீரமரணம் கேள்விக்
குறியாய்க் கலைந்து
போனது,
தமிழர்களே?அப்பாவின்
வயிற்றை அணைத்துக்
கொண்டு, செப்பயான்
குளத்தில்
முங்கி எழுந்த
நினைவுகளை மனதில்
சுமந்து கொண்டு, வாரம்
இரண்டு முறை
அடிகுழாயில் அடித்து,
அடித்து கொஞ்சமாய்
ஒழுகும் தண்ணீர்
நின்று
போவதற்குள் ஓடி வந்து
குளித்து விடுகிறேன்
அகதி முகாமில்.

முகாமின், தகரத்
தடுப்புகளின்
இடைவெளியில் தெரியும்
பள்ளிக்கூடமும்,
அதிலிருந்து வரும்
மதிய உணவின் வாசமும்,
அம்மாவின் மடியில்
இருந்து,
எப்போதும் கிடைக்கும்
அன்பையும் எண் பழைய
வாழ்வையும் நினைவு
படுத்தும்.
ஆயினும் பாழும் வயிறு,
பசி கலந்த வலி கொடுத்து
பாய்ந்து ஓடி
வரிசையில்
நிறுத்தி விடும்,
அளந்து
கொடுக்கப்படும்
அவமானச்
சோற்றுக்காய்.......

அப்போதெல்லாம் எழுதத்
தோன்றும் எனக்கு, ஆனால்
நீங்கள் பீஸாக்
கடைகளின்,
வட்ட மேசைகளில்
அமர்ந்து ஆங்கிலம்
பேசிக்
கொண்டிருந்தீர்கள்,
எழுதத்
தோன்றவில்லை.....எனக்கு....

அமைதியாய் விடியும்
பொழுதும்,
அழகாய்க் கூவும்
குயிலும்,
தோகை விரிக்கும்
மயிலும்,
காதல் பேசும்
கண்களும்,
தாத்தா பிடித்த
மீன்களில் அம்மா வைத்த
குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள்
பறிக்க நாங்கள்
குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப்
பாண்டி அண்ணன் வேடு
கட்டக் குவித்து வைத்த
மணலும்,
அதில் சங்கு பொறுக்கி
விளையாடிய என்
தம்பியின் கால்
தடங்களும்,
கருவேலன் காடுகளில்
பொன் வண்டு பிடித்த என்
பழைய நினைவுகளும்,

இனிமேல் எனக்குக்
கிடைக்கவே கிடைக்காதா
உலகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து
மூட ஞானிக்கு எழுதிய
நீண்ட கடிதமெல்லாம்
வேண்டாம்
அண்ணா, என்
கேள்விகளில் எதாவது
ஒன்றுக்கு, உங்கள்
வீட்டில் கிழித்து
எறியப்படும்
நாட்காட்டித்
தாள்களின்
பின்புறமாவது பதில்
எழுதுங்கள்,
உலகத் தமிழர்களே........

ஏனெனில் நீங்கள்
எழுதப் போகும் பதிலில்
தான் ஒரு இருண்டு போன
இனத்தின்
விடுதலையும், துவண்டு
போன அகதிகளின்
வாழ்க்கையின்
மறுபிறப்பும்
இருக்கிறது.


வலி கலந்த
நம்பிக்கைகளுடன்,
உங்கள் தொப்புள்கொடி
உறவு,
தமிழீழத்திலிருந்து!


முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்!

Read more...

January 29, 2009

முத்துக்குமாரா! உன் குரல் கண்டம் கடந்தும் ஒலிக்கின்றது.


பத்திரிகையில் கருத்துப் பகிர்வு செய்து கருத்தாளனாய் இருந்து எம் உரிமைக்காய் குரல் கொடுத்து உன் உடலை கருக்கி உலகிற்கு வியம்பி விட்டு, பிரிந்து விட்ட தமிழ் உறவே. உன் செய்கை சரி என்றோ பிழை என்றோ விவாதிக்கும் நேரமில்லை. உன் எண்ணங்களை இமயம் போல் பரப்பி உன் தேசத்தின் மேல் நம்பிக்கையிழந்து, வார்த்தைகளில் வர்ணம் தீட்டி வரலாற்றை நமக்காய் எடுத்துரைத்து, நியாயத்திற்காய் குரல் கொடுத்து, அரசியல் சாக்கடையின் அர்த்தம் சொல்லி கேட்பாரின்றிருக்கும் என் தேச உறவுக்காய் உயிர் நீத்த உத்தமனே!


இரட்டை வேடம் போடும் இந்திய அரசின் மாயை உலகிற்கு எடுத்துரைத்து சென்றுவிட்டாய். உன் வார்த்தைகளின் ஆழம், அரசியல் தெளிவு, தூர நோக்குப் பார்வை கொண்ட ஒரு இனமானத் தமிழனை தமிழர்கள் இழந்து விட்டார்கள்.

நீ ஈழத்தான் மனிதில் என்றும் வாழ்வாய். உனக்காக வரலாற்றில் ஒரு இடம் நிச்சயமாக உண்டு. உன் உற்றாருக்கும் பெற்றோருக்கும், மற்றோருக்கும் உனை இழந்து வாடும் உறவுகளுக்கு ஈழத்தவர்கள் சார்பில் எனது ஆறுதல்கள்

"ஊன்றிப்படித்து...
உயிர்க்கொடை தந்தவன்
உணர்வுக்கு வலுசேர்ப்பீர்.! "


இந்த இளைஞனின் கோரிக்கை கீழே!

நன்றி : புதினம்
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

January 25, 2009

இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவை "தெளிவு" - பகுதி 1



செய்திகளால் நிரப்பப்பட்ட இந்த உலகிலே, நாளுக்கு நாள் அரசியல் மாற்றங்கள். வல்லரசுகளின் பார்வைகளின் மாற்றங்கள் இன விடுதலைக்காக போராடுகின்ற சிறுபான்மை இனங்களுக்கு சவலாக அமைந்து விடுகின்றது. எம் இனத்தின் விடுதலைக்கான வேட்கையை வளர்ப்பதும், அதனுக்கு தேவையான காலமறிந்த பங்களிப்புக்கள் செய்வதும் எம் எல்லோருடைய கடமை.

இந்த "தெளிவு" என்னும் தொடரை நம்பிரான் என்ற தமிழ் இன உணர்வாளர் தமிழ்ச்சோலை வானொலிக்காக தயாரித்து வழங்குகின்றார்.


Poradda Vazvum Pankalippum - nampiran


சக்கடத்தாரின் புலொக்கில் இருந்த வேங்கைகளின் கவியரங்கம் " தொட்டுத் தழுவ துடிக்கின்ற உறவுகளே எட்டுகின்றதா எங்கள் குரல்! " உயிர்ப்புடன் இருக்கின்றது. கட்டாயம் சென்று கேளுங்கள். நன்றி சக்கடத்தார்!







Read more...

January 17, 2009

வெறிச்சோடிய நினைவுகள் விடியாதா எமக்கும்!


நதிக்கரையில் தான் நாகரீகம் பிறந்தது என்று சொல்வார்கள். யாழ்ப்பாணத்தானுக்கு சொல்லிக் கொள்ள எந்த நதியுமில்லை. ஆயினும் ஆலயங்களினாலும் பாட சலைகளினாலும் நிரம்பி வழிந்த ஆன்மீகமும் கல்வியும் அவனை பக்குவப் படுத்தும் கருவிகளாகவே அமைந்து விட்டது என்பது யதார்த்தம். ( பிற நகர்களை பற்றி தெரியாததால் குறிப்பிடவில்லை ‍ _ இது பிரதேசவாதம் அல்ல).

உயர்கல்வி என்று மறுக்கப்பட்டதோ அன்று தான் மாணவன் சிந்தித்தான் . அப்போது உதித்தது தான் போரட்டங்கள். இன அழிப்புக்களின் விளைவுகள் இந்த போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாற்றமடைந்தன. சாரம் கட்டி சைக்கிளில் சென்று சந்திகளில் அரசியல் பேசிக் கொள்வது நம் வழக்கம், சரக்கு(பெண் பிள்ளைகள்) பார்க்கும் வழக்கமும் உண்டு. " இடி அமீன்" என்ற பொலிஸ் அதிகாரியின் பெயரைக் கேட்டால் பெடிபெட்டை பயந்து ஒதுங்குகின்ற காலம் அது. பொலிஸ்காரர் வந்தால் என்றால் சந்தியில் சாரத்துடன் நிற்பவர்களுக்கு கேட்டுக் கேள்வி இல்லாமல் அடி தான். பொலிஸ் ஜீப்பை கண்டால் ஓட்டம் தான். இந்தக் கலாச்சாரம் முத்திப் போய் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் கூட எங்களை ஆடு மாடுகள் போல் நடத்தினார்கள்.

இந்தக் கால கட்டங்களில் பொலிசார் சுடப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யும் காலம் அது. வெள்ளிக் கிழமைகளில் இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் நடைபெறும். நான் ஹாட்லியில் கல்வி பொது தராதர‌ (க. பொ. த) உயர்தர வகுப்பு ( 12ம் வகுப்பு அல்லது +2) படித்துக் கொண்ட காலம். கல்லூரியிலுள்ள மாணவர்களை 5 பிரிவுகளாக பிரித்து, 5 இல்லங்களாக பிரிக்கப் பட்டு மெய் வல்லுனர் போட்டிகள் நடாத்தப் பெறுவது வழக்கம். இதற்காக 5 இல்லங்களுக்கான கூடாரம் அமைத்து பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா நிறங்களால் அந்தந்த இல்லங்கள் அலங்கரித்து உற்சாகமாக விளையாட்டுப் போட்டி நடக்கும் காலம் அது. இந்த விளையாட்டு போட்டிகளுக்காக கூடாரம் அமைப்பதற்காக போட்டிக்கு முதல் நாளில் சென்று கூடாரம் அமைத்து மாட்டிறைச்சி காய்ச்சி பாணுடன் சாப்பிட்டு ஒரு சிலர் நனைக்கத் தெரிந்த‌வர்கள் நனைத்தும், மணக்கத் தெரிந்தவர்கள் மணந்தும், அரசியல், அவள் இவள் என்ற ஆய்வு, கற்றுத் தந்த ஆசிரியர் பற்றிய கலாய்ப்பு என்ற பல விடயங்கள் அரங்கேறும் இரவு அது.

நாமும் வெள்ளி மாலை 6 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஒன்று சேர்ந்தோம். ஒரு மாதிரி இரவு 10 மணிக்கு கூடாரம் அமைத்து முடிக்கவும் மாட்டிறைச்சி சமைத்து முடிக்கவும் பசி வயிற்றை கிள்ள‌ பாண் (ரொட்டி) வாங்க அவசரம் அவசரமாக வசந்தன் என்ற நட்புடன் மூவர் பருத்தித்துறையில் உள்ள பேக்கரிக்கு போனார்கள். அங்கு பாண் முடிய பக்கத்தில் இருக்கும் நெல்லியடிக்கு பஸ்ஸில் சென்று பாண் வாங்கி திரும்பும் போது இவர்களுக்கு ஆங்கிலப் படம் பார்த்த அனுபவம் இவர்களுக்கு. வாகனத்தில் வலம் வந்த பொலிசார் சுடப் பட்டு அவர்கள் ஆயுதம் களையப்பட்டதை கண் கூடாக இவர் பார்த்திறுக்கின்றார்கள். அதன் பின் அவர்கள் பஸ் ஏறி திரும்பி வந்து விட்டார்கள்.

வீதிகள் வெறிச்சோடின, அவசரம் அவசரமாக வந்த கல்லூரி அதிபர் வந்து எங்களை அமைதி காக்கச் சொன்னார். மைதானத்தில் இருந்து இதைப் பற்றி பல அலசல்கள். வசந்தன் இந்த விடயத்தில் மிகவும் ஆவல் கொண்டவனாக இருந்தான்.

வசந்தன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். நீளம் பாய்தல், தடி ஊண்டி உயரம் பாய்தல், தத்தி மிரித்து பாய்தல் ( Triple Jump ) 800 மீற்றர் ஓட்டம் போன்றவற்றில் அவனை பாடசாலையில் யாரும் மிஞ்சியவர்கள் இல்லை. மிகவும் துடுப்பாட்டமான இளைஞன். அவன் கரவெட்டியில் துன்னாலை என்ற கிராமத்தை சேர்ந்தவன்.

கோவிற்சந்தை

கோவிற்சந்தை வசந்தனின் கிராமத்தில் உள்ள ஒரு இர‌வுச்சந்தை. இதுவும் மாணவர்கள் அரட்டை அடிக்க சேரும் இடம் என்று சொல்லிக் கொள்ளலாம்.இந்தக் கிராமத்தை சேர்ந்தவர்களின் சிறப்பு என்ன வென்றால் படிப்பிலும் விளையாட்டிலும் திறமையுள்ளவர்கள். வசந்தன் பாடசாலை படிக்கும் காலத்திலேயே வாகனம் ஓட்டத் தெரிந்தவன்.


நாங்கள் பாடசாலை முடிப்பதற்கான நாட்கள் இருக்கும் போது தான் 83 யூலை கொடூர கலவரம் நடந்ததது. இந்த சம்ப‌வத்தின் பின் தான் விடுதலை வேட்கை இன்னும் அதிகரித்தது. இதன் பின் வசந்தன் இயக்கத்திற்கு போய் விட்டான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய நெல்லியடி முகாம் மீதான முதல் கரும்புலி தாக்குதலை செய்த மில்லர் என்ற மாவீரன் தான் இந்த வசந்தன். ஜூலை 05 1987 தான் அவனுடைய தாக்குதல் நடைபெற்றது. இந்த நாளைத் தான் கரும்புலி நினைவு நாளாக கடைப்பிடிக்கின்றார்கள். அவன் நினைவாக அந்த இடத்தில் அந்த இடத்தில் பாடசாலைக்கட்டிடம் கட்டப் பட்டு அவனுக்கு நினைவுச் சிலையும் வைக்கப்பட்டது.

நெல்லியடி மத்திய மகாவித்தாலயம்.( பழைய இராணுவ முகாம்)

பின்பு மில்லருக்ககாக கட்டப் பட்ட சிலை இராணுவத்தால் உடைக்கப்பட்டு விட்டது. ( படம் தமிழ்னெற்)

மில்லர் சிலை ‍ இராணுவத்தால் உடைக்கப்பட்ட நிலையில்


வாழ்க்கையில் இப்படி ஒரு தியாகம் செயவதற்கு எப்படியான மனத்திடம் இருக்க வேண்டும், என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்கமுடியவில்லை. அன்று எங்களுடன் அந்த‌ மைதானத்தில் இருந்த பலர் மாவீரர்களாகி விட்டார்கள் என்பது எம் மீது ஒரு குற்ற உணர்வை உருவாக்குகின்றது. இப்படி எத்தனை உயிர்கள் நம்மினம் வாழவேண்டும் என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. எம்மால் முடிந்த முயற்சியைய‌யும் பங்களிப்பையும் செய்வது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்.




Read more...

January 10, 2009

திருப்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை!



எதிர்பார்ப்புக்கள் நிறைந்த நம் வாழ்வியியலில் நாம் நினைத்தது எல்லாம் நடந்து விடுவதில்லை. ஆனால் எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகின்ற போது அதை தாங்குகின்ற மனப்பக்குவம் இருப்பதில்லை. நான் கடந்து வந்த பாதையில் கண்டு கொண்ட அனுபவங்களில் இருந்து சிலவற்றை இரைமீட்டு பார்க்கின்றேன். யாருடைய மனங்களையும் புண்படுத்தக் கூடாது என்பதிற்காக கதாபாத்திரங்களை மாற்றித் தருகின்றேன்.

மதன் என் பாடசாலைத் தோழன். அவன் தந்தை ஒரு மருத்துவர். நன்றாக கல்வி கற்பான் அது மாத்திரமில்லை பேச்சுப் போட்டிகள், சாரணர் அமைப்பு போன்று பொது விடயங்களிலும் ஈடுபாடுடையவன். அடி தடி என்றால் ஒதுங்கி விடுவான். "ஊரில் பெடி என்றால் இப்படி எல்லோ இருக்கோணும்" என்று என் அம்மா உட்பட நண்பர்களின் அம்மாக்களும் அவனைப் புகழ்பாடுவார்கள். அவன்ரை பேரைச்சொல்லி நாங்களும் ஊர் சுத்த சுதந்திரம் கிடைத்தது உண்மைதான்.

நாம் பத்தாம் வகுப்பு ( ரியூசன்) படிக்கும் போது ஒரு பட்டணத்து தேவதை வந்தாள் படிப்பதற்கு. பின்பு தான் தெரியும் அங்கு கற்பிக்கும் ஆசிரியரின் மகள் என்று. "அவள் வேம்படியாம்" (யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் பாடசாலை) என்று கூட படிக்கும் மாணவிகளுக்கு அவள் மீது சற்றுப் பொறாமை. ஒரிருவர் தான் பாடசாலை வெள்ளை சீர் உடையுடன் வருவார்கள். அனேகமான மாணவிகள் வண்ணங்களில் தான் காட்சி தருவார்கள். ஆயினும் இந்த வேம்படிக்காரி மீது அங்கு படிக்கும் அனேகமானோருக்கு கண். மதனுக்கும் அவள் மேல் கண் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. மதனுக்கும் வேம்படிக்கும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் நன்றாக ஆங்கிலம் பேச எழுத தெரியும்.

மதனுக்கு ஆங்கில வகுப்பு ஒன்றுக்கு வர முடியவில்லை என்று ஆங்கில ஆசிரியர் வேம்படியின் எழுத்துக் கொப்பியை வேண்டி மதனிடம் கொடுத்து பார்த்து எழுதிவிட்டு அவளிடம் கொடுத்து விடு என்றார். இதை சந்தர்ப்பமாக்கி கொண்ட மதன் முதல் காதல் கடிதத்தை இந்த கொப்பிக்குள் வைத்து கொடுத்தான். இப்படி இவர்கள் காதல் மலர ஆரம்பித்தது.
10ம் வகுப்பில் தான் அடிக்கடி இவர்கள் சந்திக்க வாய்ப்புக்கள் இருந்தது. 11ம் வகுப்பில் இருந்து மதனுக்கு ரியூட்டரி ஆண்கள் மட்டும் படிக்கும் இடமாகி விட்டது. கடிதம் தான் இவர்கள் காதலுக்கு ஒரே ஒரு ஊடக‌மாக அப்போது இருந்தது. நண்பர்களும் நண்பிகளும் தான் தூதுவர்கள்.

பாடசாலை முடியும் நாட்களில் மாணவர்கள் இயக்கங்களில் அதிகமாக சேரும் காலம் அது. இந்தப் பயத்தினால் மதனுடைய பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் எம்மை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மதன் மைசூரிலும் நான் தமிழ் நாட்டிலும் பட்டப் படிப்பு படித்து வந்தோம். அவன் காதல் நீடித்து தான் வந்தது. நாட்டுப் பிரச்சனையால் கடிதத் தொடர்பு குறைந்து கொண்டு போய்க்கொண்டிருந்தது.

படிப்பு முடித்துக் கொண்டு "வேம்படி" எங்கு இருக்கின்றாள் அறிந்து இலங்கை சென்று கொழும்பில் தங்கியிருந்த காதலியின் இடத்திற்கு சென்று பார்த்தான். அவள் உறவினர் வீட்டில் தான் தங்கியிருந்தாள். ஆனால் அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. கல்யாண அழைப்பிதழை வைத்துவிட்டு அறையினுள் சென்று விட்டாள். வெறும் தமிழ் சினிமாக்களில் காதல் தோல்வியை பார்த்தவனுக்கு தனது காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒருவருக்கும் சொல்லாமல், பெற்றோரையோ உறவுகளையோ பார்க்காமல் இந்தியவிற்கு திரும்பி விட்டான். எல்லோரிடம் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

இவனுடைய தாய் இந்த விடயத்தை அறிந்து என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் வாயை மூட முடியாமல் தான் மௌனிக்க எண்ணி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாள். நண்பனின் உறவுகள் என்னை தொடர்பு கொண்டு இதை மதனிடம் சொல்லச் சொன்னார்கள். என்னால் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் தாயின் மரணச் சடங்குகள் அவனில்லாமலே நடந்து முடிந்தது.

மூன்று மாதத்தின் பின் தொலைபேசியில் மதனுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. என்னால் அவன் எண்ண மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவனாகவும், சொந்தங்களையும் நட்புகளையும் பார்க்க விருப்பம் இல்லாதவனாகவும் இருந்தான். என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்து பார்த்தேன். அவன் பிடிவாதத்தில் இருந்து அவன் விலகவில்லை. அவனைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை.

நாட்கள் நகர்ந்தன, நானும் கனடா வந்து சேர்ந்து விட்டேன். நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் மதனைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளின் பின் அவன் எண்ணெய் வள நாட்டில் இருப்பதாக எனக்கு தொலை பேசி நம்பர் தந்தார்கள்.

அழைத்துப் பேசிய எனக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருந்தன. நெற்றிப் பட்டை பூசி, தீட்சை பெற்று, திருவம்பாவை பேசித்திரிந்த நண்பன் கிறிஸ்தவ மதத்தின் பரப்புரையாளனாக எனக்கு கிறிஸ்தவ மதத்தின் பெருமை பற்றியும் இந்து சமயத்தின் மீது அவ நம்பிக்கையும் கொண்டவனாக இருந்தான். அவன் எண்ணங்களை திருப்திப்படுத்துவதிற்காக அவன் பரப்புரையை கேட்டேன். என்னுடைய எந்த கருத்து திணிப்பையும் முன் வைக்க விரும்பவில்லை. அந்த தொலைபேசி அழைப்புக்கு 300 டாலர் செலவானது, என் அறை நண்பர்கள் நான் என் காதலியுடன் கதைத்து விட்டு நண்பனிடம் கதைத்ததாக பொய் சொல்வதாக முதலில் என்னை கேலி செய்தார்கள். பின்பு உண்மையான நிலையை புரிந்து கொண்டார்கள். மதனை மதம் மாற்றியவர்கள் தான் திருமணத்தையும் அவனுக்கு செய்து கொடுத்தார்கள். அப்படியாவது அவன் வாழ்கின்றான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இவனின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று இப்போது எனக்கு உணரக் கூடியதாக இருக்கின்றது. அவன் கிளிப் பிள்ளை போல் அம்மா, அப்பா, ஆசிரியர் சொல் கேட்டு வளர்ந்தவன், தன் காதலை தவிர வேறு எதையும் தானாகச் செய்தவனில்லை. பிள்ளைகள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதிற்காக நடுத்தர வர்க்க குடும்பங்கள் பல அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை விதிக்கின்றார்கள். இதனால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சவால்களை கையாள முடியாமலும், தன்னுடைய முழு அன்பையும் ஒருத்தியுடன் கொடுத்து விட்டு, அவள் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கின்றாள் என்பதை அறியாமல் ஒரு மாயையில் வாழ்ந்து விடுகின்றார்கள்.

குழந்தைகளை எல்லோரிடமும் பழக சந்தர்ப்பம் தந்து அதில் எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று தன் காலில் நிற்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். நான் உளவியல் நிபுணன் அல்லன், ஆயினும் மற்றவர்களுக்கும் மனம் இருக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்தவன். எம்மை சுற்றியுள்ள அனுபவங்கள் கூட எம்மை பக்குவப் படுத்தும் என்பதை நம்புவன்.

வெறும் உதட்டளவு உறவில்லாமல் எந்த உறவையும் உணர்வுடன் பழகுங்கள். இன்னொருவருடைய தவறை மறைக்க " அவர் அப்படித்தான்" என்ற தாளம் போடாதீர்கள். தன்னிலை மறந்து நடப்பவர்கள் மன நோயாளிகள். மற்றவர்கள் எல்லோரும் தன்னிலை அறிந்து நடப்பவர்கள். வெறும் சந்தர்ப்பவாதங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டாதீர்கள். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் இது தான் வாழ்க்கை!

உங்கள் பார்வையையும் தாருங்கள்.



Read more...

January 4, 2009

பொன் மொழி, பொன் விழி அழகுதான்...



அட‌டா ஆரம்பிச்சுட்டாங்க, பொண்ணுங்களை வர்ணிக்க...., இல்லைங்க..., இப்படித்தான் இந்த தமிழ் மென் பொருட்களை தயாரித்தவரின் மனைவியும் அவர் அடிக்கடி தொலை பேசியில் பேசிக் கொள்வதை கேட்டு விட்டு குழம்பியிருக்கின்றார்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் 8 வருட உழைப்பில், தமிழக மென்பொருள் விற்பன்னர்களுடன் இணைந்து படைத்த பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மூன்று தமிழ் மென்பொருட்களை பற்றிய அறிமுகமே இந்த கட்டுரை.




பொன் பேனா:
கணணியின் தட்டச்சு இயக்கியினூடாக தமிழ் தட்டச்சு செய்வதற்கு பதிலாக, எழுத்துப் பலகை எனப்படும் ( tablet padச்) மூலம் அதனுடன் வரும் பேனாவால் தமிழில் எழுதும் போது கணணியில் எழுத்துருக்களாக வரும். இதன் மூலம் தமிழ் தட்டச்சு செய்யமுடியாதவர்களும் கணணியில் தமிழில் கட்டுரை எழுதவோ பிரசுரிக்க முடியும். "ல", "ள", "ழ" போன்ற எழுத்துப் பாவனைகளை அகராதியில் ஆராய்ந்து சில தெரிவுகளையும் மென் பொருள் தருகின்றது. தமிழ், "தமில்" போல் தத்தளிக்காமல் இத் தகவல் வலையில் தமிழாக வலம் வர வசதியாக இருக்கும்.




பொன் மொழி:
தமிழில் எழுத்துப் பிழைகளில்லாமல் எழுதவும், எந்த தமிழ் எழுத்துருவையும் (TAM, TAB, Unicode) எந்த தட்டச்சு முறையையும் பாவிக்குமுறையில் அமைந்துள்ள மென்பொருள். அகராதி, பழமொழிகள் போன்றவையும், ஆங்கிலம் மூலம் தமிழ், தமிழ் மூலம் ஆங்கிலம் போன்ற அணுகுமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாமினியில் எழுதியதை இன்னொரு எழுத்துருவிலே மாற்றக் கூடிய இலகுத் தன்மை. இந்த புலொக் எழுதுபவொருக்கு உதவியாக இருக்கும். இது எழுத்துகளை கோர்க்கும் ஒரு கோவையாக தன்னிச்சையாக தொழிற்படுகின்றது.


பொன் விழி:
ஏற்கனவே தட்டச்சு செய்த விடயங்களை ஸ்கான்னர் அல்லது கணணியில் தொலை நகல் மூலம் கிடைக்கப் பெற்றவற்றை எழுத்துருக்களாக மாற்றம் செய்கின்றது . Optical Character Recognition (OCR) என்ற தொழில் நுட்பம் மூலம் தமிழ் எழுத்துருக்களை அடையாளம் காணும் தொழில் நுட்பம் இந்த பொன் விழியில் வடிவம் பெற்றிருக்கின்றது. கை
யெழுத்தை அடையாளப் படுத்தும் அளவிற்கு இந்த மென் பொருள் செய்யப்பட்ட வில்லை.

பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மென்பொருள்கள் தமிழ் தகவல் ஊடகத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது முதல் வெளியீடு என்பதால் பல நுகர்வோர் அனுபவங்கள் வேண்டப்படுகின்றன. இந்த மென்பொருளை எழுதியவர் அளித்த வானலை பேட்டியிலிருந்து....


Anuraj Pon mozhi release.wav - GTR

இந்த இளம் மென் பொருள் தயாரிப்பாளர் வருங்காலங்களில் தமிழ் பேச்சு மூலம் தமிழ் எழுத்துருக்களை கொண்ட ஆவணங்களாக்க கூடிய மென்பொருளை கொண்டுவருவதாக கூறியிருந்தார்.

மேலதிக தகவல்களுக்கு http://www.pontamil.com

உங்கள் எண்ணங்களையும் தாருங்கள்.


Read more...

January 1, 2009

வாழும் மண்ணில் என் பார்வை.







பல்லினக் கலாச்சாரத்தில் முதன்மை பெறும் ஒரு நாடு கனடா. இங்குள்ளவர்கள் மதம், இனம், நிறம், கல்வி, அந்தஸ்து என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்வது என்னைப் பல தடவைகள் சிந்திக்க வைத்துள்ளது. பல வருடங்களை இந்த மண்ணில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவன் என்ற வகையில் ஒரு பார்வை.

ஒவ்வொரு இனமும் எப்படி ஒரு நாட்டுக்குள் வருகின்றது என்பதை பொறுத்து அந்த இனம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவது யதார்த்தம். ஈழத்தார் அனேகமானோர் அகதிகளாய் தான் வந்தார்கள். குறிப்பாக பொறியியலாளர்களாகவும், மருத்துவர்களாகவும், ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் தங்களை அடையாளப் படுத்தி செல்வாக்குடன் வாழ்ந்து விட்டு இங்கு தங்களை தக்க வைத்துக் கொள்வதில் பல சிரமங்கள்.

வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்கள் பலர் இங்கு தொண்ணூறூகளில் வந்த போது தாங்கள் நினைத்த வேலையை பெற முடியாமல் புலம்பி தீர்த்தார்கள். அவர்களில் பலரின் அணுகுமுறையில் தாங்கள் வல்லவர்கள் ஆயினும் இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு எங்களை அடையாளம் காணத் தெரியவில்லை என்று கூறினார்கள். நாம் முதிலில் வாழும் தேசத்தில் உள்ள தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும். எமது பிரச்சனைகளை சமூகத்திற்கும் அரசுக்கும் எடுத்துச்செல்வது எமது கடமை அதை உணர வேண்டும்.

கூட்டு முயற்சிகள் தான் பின்னாளில் நம்மவரில் பலரை அவர்கள் துறையில் இன்று தக்க வைத்துள்ளது என்பது இன்றைய யதார்த்தம். தமிழில் நாம் இந்த நாட்டில் பல பகுதிகளில் எமது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றோம். கனடிய தேசிய கீதத்திலிருந்து, அரசாங்க துண்டுப் பிரசுரங்கள், மருத்துவ கூடங்கள், போக்குவரத்துச் சேவைகள் தமிழில் சொல்லி பேசி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். பல் கலாச்சாரங்கள் இருக்கும் நாட்டில் பல் கலாச்சார வானொலி தமிழர்களால் கொண்டு நடத்தப்படுவது பெருமை தான்.

ஆயினும் தமிழர்கள் நிறுவனங்களில் நாம் இந்த நாட்டின் தரத்திற்கு முற்றாக வளர வில்லை என்பது ஒரு தவிர்க்க முடியாத கருத்து. ஒரு தமிழ் சேவை நிறுவனத்தில் " Please take one" என்று எழுதி விட்டு தமிழில் " தேவையென்றால் ஒன்றை எடுக்கவும்" எழுதியிருந்தார்கள். இங்கு மொழி பெயர்ப்பில் பிழை கண்டு பிடிக்க முயலவில்லை. நிர்வாகம் தமிழர்களை குறைத்து கருதுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றியுள்ளது.

போட்டி என்பதை விட பொறாமைகள் அதிகரித்த சமூகமாக மாறி வருகின்றோமோ என்ற அச்சம் என் மனதில் பல தடவைகள் எண்ணத் தோன்றியுள்ளது. ஈழத்தமிழர்களை ஒன்று சேர்க்கும் பலம் தமிழ்த் தேசியம். ஆயினும் ஒரு சிலர் தம் அடையாளங்களை தக்க வைக்கவும் தங்கள் வியாபாரங்கள் பெருகவும் தமிழ்த் தேசியத்தை தவறான வழியில் அடையாளப் படுத்த முயற்சிக்கின்றார்கள். வேற்றுமைகள் காண்பதை விட வேற்றுமையிலும் ஒற்றுமை காணலாம் என்பது முக்கியம். இதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

நாம் தான் தமிழ்த் தேசியவாதி என்று யாராவது சொன்னால் அது தவறு என்று சுட்டிக் காட்டுங்கள். தமிழ்த் தேசியத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் அதற்காக மற்றவர்கள் தமிழ்த் தேசியம் இல்லை என்று புறக்கணிப்பது தவறான அணுகுமுறை என்று எடுத்துரையுங்கள். அவர் பெரியவர், இவர் சிறியவர் என்ற எண்ணப்பாடுகளை தவிர்த்து கருத்துக்களை ஆராய்ந்து நடக்க கற்றுக் கொண்டு நடப்போமாயின் எம் ஒற்றுமை மேலும் வளரும்.

கனடியத் தமிழர் பேரவை, CARE போன்ற அமைப்புக்களால் பல ஒற்றுமை முனைப்புக்கள் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்டன.

1. கிராம அமைப்புக்கள், பழைய மாணவர் சங்கங்கள் ஒன்று சேர்ந்தன.
2. வானொலிகள் ஒன்றாக சேர்ந்து துயர் துடைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
3. பல விழிப்பு நிகழ்வுகள் மக்களால் நடாத்தப்பட்டது.
4. நாட்டிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மேடையில் நிகழ்வுகள் தந்தார்கள்
5. எல்லா இசைக்குழுக்களும் ஒன்றாக சேர்ந்து இசை நிகழ்வு செய்தார்கள்.

உலக அரசியலில் திருப்பங்கள்.

1. தமிழர் பிரச்சனை ஒரு பயங்கரவாதத்திற்குள் பார்க்கப் படுவது தவறு என்று சொல்லிய அமெரிக்கத்தலைவர்கள் ஒபாமா, திருமதி கிளின்டன் தெரிவான வரலாற்றுத் திருப்பம்.
2. கனடிய அரசியலில் மூன்று எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் உருவாகியது.
3. தாய்த் தமிழகம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்த வருடம்.

இப்படி உலகளாவிய அளவில் தமிழனுக்கு சாதகமான காலம் உருவாகின்ற வேளையில், உங்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை அகற்றி தமிழனுக்கு என்று தரணி அமைய நாம் எல்லோரும் உறுதியுடன் நடந்து கொள்வோம் என்று இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோம்.

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP