February 7, 2009

உதவி செய்தலும் உதவி பெறுதலும்


உதவி பெறாமல் வாழ்ந்தவர்கள் என்று யாரையும் சொல்லி விட முடியாது. ஆயினும் உதவி செய்கின்ற மனப்பாங்கு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது ஏன் என்று ஒரு சின்னக் கேள்வியை எனக்குள்ளே எப்போதும் அசை போட்டுக் கொள்வதுண்டு. நான் யாரிடமாவது உதவி கேட்பதாயின் பல தடவைகள் சிந்தித்துத்தான் அணுகியதுண்டு அப்போதும் மூக்குடைந்த சந்தர்ப்பங்கள் உண்டு.

சுனாமிக் காலத்தில் அனேகமானோர் தாங்களாக முன் வந்து உதவிய போது, காலத்தின் தேவை கருதி உதவுபவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று திருப்திப் பட்டதுண்டு. இந்தக் காலத்தில், எனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் இதற்கு பங்களிப்பு செய்யக் கேட்ட போது அதில் ஒருவர் " அவை அவை தாங்கள் விலாசம் எழுப்புகின்றதுக்கு காசு கேட்கினம்" என்று விமர்சித்தார். அது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இவர் ஒரு சிலருக்கு தண்ணி வேண்டிக் கொடுத்து விட்டு தன்னை பெரியவராக உருவகப் படுத்தி எம் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதே தொழிலாகச் செய்வார். இவருடன் போராட்டத்தை நேசிப்பவர்கள் இருந்தாலும் " நக்கினார் நா இழந்தார்" என்பது போல் அவருக்கு வால் பிடித்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன்.

உதவி செய்யாமல் தவிர்த்து கொள்பவர்களில் அனேகமானோர் மற்றவர்களின் உதவியை அதிகம் வேண்டி நிற்பவர்களாயும், தாங்கள் புத்திசாலிகள் என்ற எண்ணக் கருவை கொண்ட சுய நலவாதிகளாய் இருப்பதையும் பார்த்திருக்கின்றேன். பழகிய 10 நிமிடத்திலேயே தாங்கள் வல்லவர்கள், படித்தவர் அல்லது பணக்காரர் என்ற தோறணையை வெளிப்படுத்துபவர்களாகவோ அல்லது உலகத்தில் எல்லாவற்றையும் இழந்து வாழ்பவர்கள் என்ற அனுதாபத்தை மற்றவர்களிடம் வேண்டி நிற்கும் அணுகுமுறையைப் பார்த்திருக்கின்றேன். சூடு சுரணை என்பது இவர்களிடம் மிகக் குறைவு, தங்கள் காரியம் ஆக வேண்டுமானால் என்ன பல்டியும் அடிப்பார்கள். சில நாட்களுக்கு முன் சொன்ன பொய்யிற்கும் இன்று சொல்லும் பொய்யும் முரண்படுவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

சிக்கனமாய் வாழ்வதற்கும் கஞ்சத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இவர்கள் உதவி செய்யாமல் தொடர்ந்தும் இவர்களுக்கு உதவி கிடைப்பது தாம் புத்திசாலித்தனமாய் சமுதாயத்தை உபயோகிக்கின்றோம் என்ற எண்ணம் தான்

எல்லோராலும் உதவ முடியும். பண உதவி மாத்திரம் உதவியாக அமைந்து விடாது. சரீர உதவி, சில வேளைகளில் ஆறுதல் வார்த்தைகளும் உதவியே.

நாம் இன்று உலகத்தின் உதவியை வேண்டி நிற்கின்றோம், அண்மையில் தென் ஒன்ராரியோவிலை அதிகளவு இரத்த தானம் கொடுத்த இனம் தமிழ் இனம் என்று கனடிய இரத்த தான அமைப்பினர் வாழ்த்தினார்கள். இந்த நாட்டிற்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்த தான் இத்த இரத்த தானம் நிகழ்ந்தது.

உதவி செய்தவர்களுக்குத் தான் திருப்பி உதவி செய்ய வேண்டும் என்றோ அல்லது தெரிந்தவர்களிக்கு மட்டும் உதவ வேண்டும் என்ற‌ அவசியம் இல்லை. யாரும் யாருக்கும் உதவலாம். ஒரு சிலர் மற்றவர்களை காயப் படுத்துவதே தொழிலாக செய்வார்கள். இப்படியானவர்கள் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே பெரிய உதவி. ஒரு சிலர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு வலியப் போய் உதவுவார்கள் ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சின்ன உதவியும் செய்ய மாட்டார்கள்.

உதவி என்பது பொருள், காலம் அறிந்து கேட்காமலே செய்ய வேண்டியது, உதவி செய்தது அவர்களை திருப்தியடையச் செய்ததா என்பதை அறிய முயல வேண்டும். வெறுமனே கடமைக்காக செய்த உதவியாக அமைந்து விடக் கூடாது. மற்றவர்கள் துணிந்து உங்களிடம் உதவி கேட்கும் நிலையில் நீங்கள் இருந்தால் அது பெருமைப் பட வேண்டிய விடயம்.

எனக்கு 15 வருடத்திற்கு மேல் பகுதி நேர ஆசிரியனாக கடமையாற்றிய அனுபவம் உண்டு. பல தரப்பட்ட மாணவர்களை சந்திக்கும் வய்ப்பை பெற்றவன். ஆசிரியத் தொழிலை ஏணிக்கு ஒப்பிடுவார்கள், படித்து முடித்த பின் ஏறி மிதிப்பார்கள் என்ற யதார்த்தமும் அடங்கியுள்ளதை அறிந்துள்ளேன்.

நீங்கள் பல பட்டங்களை எடுத்தவராகவோ அல்லது பல மேடைகளில் தொண்டை கிழிய உங்கள் கருத்துக்களை சொல்லுபவராகவோ இருந்தால் போதாது, உங்களை ஒரு சாதரணனும் அணுகக் கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் அணுக முடியாதவர்களாக வாழும் வாழ்க்கை முழுமை அடைந்து விடாது. உதவி செய்பவர்கள் இழிச்ச வாயர் என்ற எண்ணப் பாடுகள் சிலருக்குண்டு. இந்த எண்ணம் உள்ளவர்களும் காலப் போக்கில் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் அவர்கள் தேவைகள் பூர்த்தியாகும் போது மாறிவிடும்.

கனடிய சமூகம் மிகவும் உதவும் எண்ணம் கொண்ட சமூகம். இந்த நீரோட்டத்தில் கலந்து விட்டும் மற்றவர்களுக்கும் உதவும் மன நிலையை நாம் வளர்க்காவிட்டால் நாம் மனிதத்திலிருந்து விலகியவர்கள் ஆகி விடுவோம். ஒரு கை உதவினால் மற்ற கைக்கு தெரியக் கூடாது என்பார்கள், ஆயினும் எங்களுக்கு உதவியவர்களை மறக்காமல் நினைவு கோர வேண்டியது எம் கடமை.

உங்களுக்கும் உதவி மறுக்கப்பட்ட அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ!7 comments:

கமல் 8:09 PM  

சந்திக்கும் வய்ப்பை பெற்றவன்.//

''வாய்ப்பைப் பெற்றவன்.'

நல்ல தொகுப்பு. உதவிக்குள்ளும் இப்படி உப பகுதிகள் உள்ளனவா? ம்...
'சொல்லாமற் செய்வார் பெரியார்!
சொல்லிச் செய்வார் சிறியார்.
சொல்லியும் சொல்லாமலும் செய்யார் அவர் யார்?

மனித மனங்கள் எப்போதுமே விசித்திரமானவை.
சிலர் தாங்கள் அது செய்தோம் இது செய்தோம் என்று தம்பட்டம் அடிபார்களே தவிர அவர்களிடம் நாம் நேரில் ஏதாவது சென்று கேட்டால் இல்லையென்று சொல்வார்கள்/ முகம் சுழிப்பார்கள்.

புலத்தில் இன்று பல ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களைச் சாட்டி அசைலம் பெற்ற போராட்டத்திற்கு ஒரு துளியும் தொடர்பில்லாத பலர் தமிழ்த் தேசியம் சார்பான நிகழ்வுகளைப் புறந்தள்ளுவது நான் கண் கூடாகக் காண்கின்ற உண்மை.
தொடருங்கள்.

அ.மு.செய்யது 11:01 PM  

//உதவி என்பது பொருள், காலம் அறிந்து கேட்காமலே செய்ய வேண்டியது, உதவி செய்தது அவர்களை திருப்தியடையச் செய்ததா என்பதை அறிய முயல வேண்டும். வெறுமனே கடமைக்காக செய்த உதவியாக அமைந்து விடக் கூடாது. ///

ஆழ்ந்த கருத்துகள் காரூரன்..

நல்ல பதிவு..

காரூரன் 12:11 AM  

*\\'சொல்லாமற் செய்வார் பெரியார்!
சொல்லிச் செய்வார் சிறியார்.
சொல்லியும் சொல்லாமலும் செய்யார் அவர் யார்?\\*

எல்லாத் தர‌த்திலும் மனிதர்களை சந்தித்துள்ளேன். புலம் பெயர் உலகில் "கலோ" சொல்வது கூட கடினமாகி விட்ட நிலையையும் பார்த்திருக்கின்றேன். நாம் யாருக்கும் பாரமில்லாமல் இருந்தாலே பெரிய விடயம் என்றத் தோணுகின்றது.

காரூரன் 12:15 AM  

வாங்க அ.மு.செய்யது,

உங்கள் தளத்தில் உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டவரை நினைவு கூர்ந்தது, நீங்கள் உதவியை மதிப்பவர் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

நன்றி நண்பரே!

ஹேமா 5:11 AM  

உதவி பற்றி நிறைவான ஆதங்கம்-தகவல்.உதவி எந்தவகையிலும் இருக்கலாம்.எங்கள் மாவீரர்களின் தியாகங்களைவிட உலகில் வேறு என்ன உதவி என்பதற்கு உதாரணம் தேவை!இன்று நாங்கள் எழுத்துக்களில் எங்கள் பிரச்சனைகளை உலகத்தோடு பரிமாறிக்கொள்வதுகூட எங்கள் நாட்டிற்கான ஒரு உதவிதான்.

ஆனால் உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்டு இன்றும் பொருளால்,மன உளைச்சலால் அவஸ்தைப்படும் அனுபவமும் உண்டு எனக்கு.நன்றி காரூரன்.

காரூரன் 8:37 AM  

ஹேமா,
ஆயிரம் நொன்டிச்சாட்டு சொல்லி உதவாமய் இருக்கின்றவை, உங்களுக்கு வேலை இல்லை என்று உதவினதுக்கு நாங்கள் என்ன செய்யிறது என்று விளக்கம் கூட கொடுப்பினம். அவைக்கும் உள்ளுக்குள்ள குத்தும் வெளிய சும்மா நடிச்சு தாழிப்பினம். "வாழ்ந்தாலும் தூற்றும் தாழ்ந்தாலும் தூற்றும் வையகம் இது தானே" என்று சும்மாவா சொன்னவை. உதவியவர்களுக்கு எப்படியோ உதவி இன்னொரு வடிவத்தில் வரும் அதாலை யோசிக்கத் தேவையில்லை.

BOOPATHY 8:24 PM  

காரூரன் மற்றவர்கள் மனசறிந்து எழுதப்பட்ட கட்டுரை. தனிப்பட்ட வாழ்வில் கேட்காமலே உதவி செய்த மனிதர்கள்தான் அதிகம். ஒன்றை கேட்டு அது நிராகரிக்கும் போது ஏற்படும் காயம் பெரியது. செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒருவர் உதவியை கேட்பார். செய்யமுடிந்தும் செய்யாமல் தவிர்ப்பது மன்னிக்க முடியாது.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP