Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

September 24, 2009

வலையில் ஓர் உலா...

நீண்ட நாட்களின் பின் மீண்டும் புளொக் மூலம் புலம்பலாம் என்று வந்திருக்கிறன். ஓரளவுக்கு அங்கும் இங்கும் நுனிப்புல் மேய்ந்திருக்கின்றேன். ஈழத்தவரின் அரசியல் சார்ந்த சூழல் நம்மில் பலருக்கும், எமது போராட்டம் கலந்த தகவல்களுக்கே ஓரளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது. பல முறை எழுத வேண்டும் என்று எண்ணி அமர்ந்து விட்டு நிறுத்தி விடுகின்ற ஒரு மனோ நிலை கொஞ்ச நாட்களாக இருந்து வருகின்றது. ஆயினும் மற்றவர்களின் எழுத்துக்களை ஓரளவு வாசிப்பதுண்டு.




ஆரம்ப கால கட்டங்களில் இது ஒரு சமூக வலையாக அவர் தம் அங்கலாய்ப்புக்களையும் அனுபவங்களையும் பகிர்கின்ற ஒரு ஊடகமாகவே தென் பட்டது. என் முன் தெரிகின்ற பல விடயங்களை மேற்குலகில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு தமிழ் பேசும் எம்மவர் பார்வையில் எப்படி வித்தியாசப்படுகின்றது அது ஏன் என்ற வினாக்களை அவ்வப்போது எனக்குள் எழுப்புவதுண்டு. இதை விமர்சனங்களின் விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட ஒருவரின் விசனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நாம் தகவல் உலகத்தில் வாழுகின்றோம். தகவல் என்பது ஒழுங்குபடுத்தபட்ட தரவுகளின் கோர்வை. நம்மவர் மத்தியில் பல திரட்டிகள் இருக்கின்றன. இவற்றை பாவிப்பதற்கான இலகுத்தன்மை இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. வலைப்பதிவு தொடர்பாக உதவி பெற்றுக் கொள்வதில் இன்றும் இன்னமும் சிரமம் இருக்கத் தான் செய்கின்றது. பல சுவாரசியமான வலைக்கு வந்த கதைகளை வாசித்திருக்கின்றேன். அனேகமானவர்களின் பதிவில் முகம் தெரியாத பிற தேசத்தில் வாழுபவரிடம் தான் உதவி பெற்று வலைக்கு வந்ததாக எழுதியுள்ளார்கள். நமக்கென்று ஒரு "வலையில் எழுத டம்மீஸ் புக்" என்று ஏன் தயாரிக்கக் கூடாது.

* புலொக் என்றால் என்ன?
* எப்படி பதிவு செய்வது?
* தமிழில் எப்படி தகவல்களை தட்டச்சு செய்வது?
* நீங்கள் எழுதியதை எப்படி மற்றவர்கள் வாசிக்க வைக்கலாம்?
* திரட்டிகளும் பயன்பாடும்.
* பின்னூட்டங்களும் அதன் கையாளுகையும்
* ஒலி, ஒளி வடிவம் இணைத்தல்
* மேம்படுத்தல்

இப்படியான தகவல்களை ஒரு கோர்வையாக ஒரு புலொக் வடிவத்திலோ அல்லது pdf வடிவத்திலேயே செய்தால் புது முகங்களை உள்வாங்கவும் எமக்குள் திறந்த மனப்பான்மையை வளர்க்கும். அடடா நான் அறிவுரை கூற மட்டும் இப்பதிவை எழுதவில்லை. இது பற்றிய தகவல்கள் பலரால் பாகம் பாகமாய் அங்கும் இங்குமாக இருக்கின்றது. பதிவர் வட்டங்கள் பல இருக்கின்றன. இந்த முயற்சி புலொக் எழுதும் எல்லா தமிழ் எழுத்தாளர்களின் கருத்தையும் உள்வாங்க உதவும் என்பது ஒரு கணிப்பு.

பதிவர் வட்டங்கள் எவை? அவற்றை தொடர்பு கொள்ள என்ன தொடர்பு முகவரி? போன்ற விடயங்களை சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கியமான விடயங்களை முயற்சிக்கலாம். இப்படி ஒரு கைக்கடக்கமான ஒரு கை நூல் வலைப்பக்கத்தில் இருக்கும் போது எல்லோரின் இணையப் பக்கங்களிலும் " நீங்களும் பதிய விரும்புகின்றீர்களா? என்ற ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு பெட்டிக்குள் இருந்து சிந்திப்பதுடன் நின்றுவிடாமல் பெட்டிக்கு வெளியேயும் நின்று சிந்திக்க வேண்டும் என்பது என் அவா! அறிமுகமில்லாத அகதியின் புலொக்கிலிருந்து அறிவுமுகம் என்று சொல்லி என் கிறுக்கல்களை கொட்டியிருக்கின்றேன். எனது கிறுக்கல்கள் எந்தவித கீறல்களையும் ஏற்படுத்தியிருக்காது என்று நம்பி உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களையும் வேண்டி நிற்கின்றேன்




Read more...

January 31, 2009

வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.- "நலமுடன் இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே!"




மின்னஞ்சலில் தொடராக வந்த இக்கடித விபரத்தை உங்கள் பார்வைக்காக தருகின்றேன். வார்த்தைகளில் வலியின் கொடுமை தெரிகின்றது. அறிவு ஜீவிகள் என்று சொல்லி அரச நாற்காலிக்காய் மாத்திரம் வாழ்ந்துவிடுபவர்களுக்கு இது எட்ட வேண்டிய கடிதம். உங்கள் நட்புகளுக்கும் இக்கடிதத்தை எடுத்துச் செல்லுங்கள்!

இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்துஎன்னையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும்
மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் முடியை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம் எங்கே!!!!!

இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில்!

உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும்,
துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த
ரணங்களின் வலியோடும்
அகதி முகாமில் வாடும்
புலம்பெயர்ந்த ஈழக்
குழந்தையின் கிழிந்து
போன சட்டைப்பைகளில்
இருந்த உடைந்த
பென்சிலின்
ஒட்டுத்துண்டில்
இந்தக்கடிதம்
எழுதப்படுகிறது)

நலமுடன்
இருக்கிறீர்களா? உலகத்
தமிழர்களே?

குண்டு விழாத
வீடுகளில்,
அமெரிக்காவுடனான
அணுகுண்டு
ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவது
பற்றி அளவளாவிக்
கொண்டிருப்பீர்கள்,
இடைஞ்சலான நேரத்தில்
கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும்,
என் வீட்டுக் கூரையில்
விழுந்த
சிங்களவிமானத்தின்
குண்டுகள் என்னைப் போல
பல்லாயிரக்கணக்கான
தமிழ்க்குழந்தைகளை
அநாதை ஆக்கிய
போது, நீங்கள் எதாவது
நெடுந்தொடரின்
நாயகிக்காகக் கண்ணீர்
விட்டுக்
கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும்
அப்பாவும்
அரைகுறையாய் வெந்து
வீழ்ந்தபோது, உங்கள்
வீட்டு
வரவேற்ப்பறைகளில்
அரைகுறை ஆடைகளுடன்
அக்காமாரெல்லாம்
ஆடும் " மஸ்தானா,
மஸ்தானாவின்"
அரையிறுதிச் சுற்று
முடிவுக்கு
வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும்
நன்றாகப்
படிக்கிறார்களா? அம்மா,
அப்பாவின்
மறைவுக்குப் பின்னால்,
எனக்குத் தலை
வாரிவிட்டு, பட்டம்மா
வீட்டில்
அவித்த இட்டலி
கொடுத்துப் பள்ளிக்கு
அனுப்பிய அண்ணனும்
இப்போது இல்லை,
நீண்ட தேடலுக்குப்
பின்னர் கிடைத்த அவன்
கால்களை மட்டும்
மாமாவும்,
சித்தப்பாவும்
வன்னிக் காடுகளில்
நல்லடக்கம்
செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும்
என்று ஆசைதான் எனக்கு,
நீங்கள் இலங்கை
கிரிக்கெட்
அணியின் இந்தியச்
சுற்றுப் பயணத்தை, இரவு
பகல் ஆட்டமாய்ப்
பார்த்திருந்தீர்கள்....அதனால்
தான் எழுதவில்லை.........

ஒலிம்பிக் தீபத்தின்
சுடர்களை உலகம்
முழுவதும், என்னைப்போல
ஒரு மலை
நாட்டு திபெத்
சிறுவனும், அவன்
இனத்துப்பெரியவரும்
சந்து பொந்தெல்லாம்
மறித்துத் தடுத்தபோது,
எனக்கு உங்கள் நினைவு
வந்தது.....அதுமட்டுமல்ல,
இந்திய அரசுகளின்
உதவியோடு, இலங்கை
ராணுவத்திற்கு நன்றி
சொல்லும்
திரைப்படச் சுருளின்
பிரதிகளும் நெஞ்சில்
நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா
எழுதிக் கொண்டு,
மறுபக்கம், நவீன
ஆயுதங்களை
அனுப்பி வைக்கும்
உங்கள் கூட்டணித்
தலைவர்கள் எல்லாம்
நலமா தமிழர்களே?

இன்னொரு முறை
ஆயுதங்கள் அனுப்பும்
போது மறக்காமல் ஒரு
இரங்கற்பா
அனுப்புங்கள், சாவின்
மடியில் எங்களுக்கு
ஒரு
தமிழ்க்கவிதையாவது
கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின்
மறைவான இடத்தில்
நீங்கள் இலங்கை
ராணுவத்திற்கு
பயிற்சி அளிக்கும்
போது, குழந்தைகளையும்,
கர்ப்பிணிப்
பெண்களையும்
வலியின்றிக் கொல்வது
பற்றி ஒரு
வகுப்பெடுத்து
விடுங்கள். கொஞ்சம்
பாவமாவது
குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை
நேரத்தின் மங்கலான
வெளிச்சத்தில்,
தம்பியின்
பிஞ்சு உடல்
நான்கைந்தாய்
சிதறடிக்கப்பட்ட அந்த
கோர நாளில் நாங்கள்
எல்லாம் கூட்டமாய்
அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும்
பள்ளிக்கூடங்களை
தேடிக் கண்டு பிடித்து
கொலை
வெறியோடு உங்கள் "நேச
நாட்டு" விமானங்கள்
குண்டு மாரி பொழிந்த
போது
நீங்கள் இந்திய
விடுதலையின் பொன்
விழாக்
கொண்டாட்டங்களுக்கான
குறுஞ்செய்தி
வாழ்த்துக்களில்
களித்திருந்தீர்கள்,
உலகத்
தொலைக்காட்சிகளின்
நீங்கள் பார்த்து
மகிழும் முதன் முறைத்
திரைப்படங்கள்
தடை படுமே என்று தான்
அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை
கொன்று குவித்து,
நிர்வாணமாக்கி, இறந்த
உடலுக்குக்
கொடுக்கின்ற இறுதி
மரியாதை இல்லாமல், எம்
இறப்பை எள்ளி நகையாடிய
உங்கள் "
சார்க்"
கூட்டாளியின் கொடிய
முகம் கண்ட போதே எழுதி
இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி
மாநாடுகளில் கவனமாய்
இருந்தீர்கள்,
பெண்களின்
இடுப்பில் பம்பரம்
விட்ட களைப்பில் கட்சி
துவக்கிய
கேப்டன்களின்
பின்னால்
அணிவகுத்து
நின்றீர்கள், நீங்கள்
போட்ட வாழ்க
கோஷங்களின்
இரைச்சலில்
எங்கள் நிஜக்
கேப்டன்களின்
வீரமரணம் கேள்விக்
குறியாய்க் கலைந்து
போனது,
தமிழர்களே?அப்பாவின்
வயிற்றை அணைத்துக்
கொண்டு, செப்பயான்
குளத்தில்
முங்கி எழுந்த
நினைவுகளை மனதில்
சுமந்து கொண்டு, வாரம்
இரண்டு முறை
அடிகுழாயில் அடித்து,
அடித்து கொஞ்சமாய்
ஒழுகும் தண்ணீர்
நின்று
போவதற்குள் ஓடி வந்து
குளித்து விடுகிறேன்
அகதி முகாமில்.

முகாமின், தகரத்
தடுப்புகளின்
இடைவெளியில் தெரியும்
பள்ளிக்கூடமும்,
அதிலிருந்து வரும்
மதிய உணவின் வாசமும்,
அம்மாவின் மடியில்
இருந்து,
எப்போதும் கிடைக்கும்
அன்பையும் எண் பழைய
வாழ்வையும் நினைவு
படுத்தும்.
ஆயினும் பாழும் வயிறு,
பசி கலந்த வலி கொடுத்து
பாய்ந்து ஓடி
வரிசையில்
நிறுத்தி விடும்,
அளந்து
கொடுக்கப்படும்
அவமானச்
சோற்றுக்காய்.......

அப்போதெல்லாம் எழுதத்
தோன்றும் எனக்கு, ஆனால்
நீங்கள் பீஸாக்
கடைகளின்,
வட்ட மேசைகளில்
அமர்ந்து ஆங்கிலம்
பேசிக்
கொண்டிருந்தீர்கள்,
எழுதத்
தோன்றவில்லை.....எனக்கு....

அமைதியாய் விடியும்
பொழுதும்,
அழகாய்க் கூவும்
குயிலும்,
தோகை விரிக்கும்
மயிலும்,
காதல் பேசும்
கண்களும்,
தாத்தா பிடித்த
மீன்களில் அம்மா வைத்த
குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள்
பறிக்க நாங்கள்
குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப்
பாண்டி அண்ணன் வேடு
கட்டக் குவித்து வைத்த
மணலும்,
அதில் சங்கு பொறுக்கி
விளையாடிய என்
தம்பியின் கால்
தடங்களும்,
கருவேலன் காடுகளில்
பொன் வண்டு பிடித்த என்
பழைய நினைவுகளும்,

இனிமேல் எனக்குக்
கிடைக்கவே கிடைக்காதா
உலகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து
மூட ஞானிக்கு எழுதிய
நீண்ட கடிதமெல்லாம்
வேண்டாம்
அண்ணா, என்
கேள்விகளில் எதாவது
ஒன்றுக்கு, உங்கள்
வீட்டில் கிழித்து
எறியப்படும்
நாட்காட்டித்
தாள்களின்
பின்புறமாவது பதில்
எழுதுங்கள்,
உலகத் தமிழர்களே........

ஏனெனில் நீங்கள்
எழுதப் போகும் பதிலில்
தான் ஒரு இருண்டு போன
இனத்தின்
விடுதலையும், துவண்டு
போன அகதிகளின்
வாழ்க்கையின்
மறுபிறப்பும்
இருக்கிறது.


வலி கலந்த
நம்பிக்கைகளுடன்,
உங்கள் தொப்புள்கொடி
உறவு,
தமிழீழத்திலிருந்து!


முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்!

Read more...

December 6, 2008

மேற்குலகில் நம்மவர் காதல்.



மேற்குலகில் வாழும் இளையோருக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான். கல்லூரி நாட்களில் தன‌க்கு ஒரு காதல் இல்லாவிட்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று ஓர் அழுத்தம். அதற்காக காதல் இல்லாதவர்களும் காதல் ஒன்று இருப்பதாக நடித்துக் கொள்வார்கள்.



பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில இளைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் தன் பிள்ளையில் நம்பிக்கையில்லாமல், அவள் போகுமிடம் எல்லாம் பின்னே திரிவார்கள். "என்ன கொடுமை அய்யா இது" என்று இவற்றை விமர்சிப்பவர்களும் உண்டு. பிள்ளை வீடு திரும்பினானா இல்லையா என்று தெரியாத ஒரு கூட்டமும் உண்டு. ஆண், பெண் இரு சாராருக்கும் தாம் மிகவும் கெட்டித்தனமானவர்கள் பெற்றோர்களுக்கு போதிய அறிவு இல்லை என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கின்றது.

கல்லூரியில் கற்கும் சில ஆண்கள் காலத்திற்கு காலம் பெட்டி மாத்திற மாதிரி காதலியை மாற்றுவார்கள், ஆனால் காதலில் தோல்வியுற்ற பெண்ணை விமர்சிப்பவர்களும் இவர்கள் தான். கல்லூரியில் அனேகமான காதல் கீரோக்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் இளைஞர்கள் பெண்களின் பலவீனத்தை நன்கறிந்தவர்களாகவும் காதலை காய் வெட்ட நொண்டிச்சாட்டில் மன்னர்களாகவும் இருப்பார்கள். அனேகமாக காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் ( ஒரு சிலர் விதி விலக்குத்தான்..). தாம் காதலித்து திருமணம் செய்ததையே பெற்ற பிள்ளைகளிடம் மறைத்து பிள்ளையின் பட்டப் படிப்பு முடிந்தவுடனேயே எங்காவது கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கனவு காண்பவர்களும் உண்டு. காதலித்த பெற்றோர் தாம் விட்ட பிழையை தன் பிள்ளை விடக் கூடாது என்ற ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டாலும் தவறான அணுகுமுறை என்பது என் கணிப்பு.

மூத்தவள் கறுவலுடன் போய்விட்டாள் என்றாள் அடுத்தவள் ஒரு தெற்காசியனை கட்டினால் போதும் என்று திருப்திப் படும் பெற்றோரும் உண்டு. இவர்கள் ஊரில் சாதி பேதம் பேசியவர்கள் என்பது தான் உண்மை. தனக்கு வருகின்ற போது தான் வாழ்க்கையில் யதார்த்தம் புரிகின்றது. ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் நம்மவர் மத்தியில் இருக்கும் சவால்களையும் தீர்வையும் அடையாளம் காணமுடியாமல் தான் இருக்கின்றது. டாக்டர் பெம்பிளை, நன்றாய் சம்பாதிக்கும் பெம்பிளை வேண்டும் என்று அலைகின்ற கூட்டமும் உண்டு.கடந்த காலங்களில் கொண்டு திரிந்தவர்கள் பேச்சு திருமணத்தை மற்றவர்களின் வாயை மூட காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு.

எனக்கு ஒரு நண்பன் அழைத்து தனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்றான். நானும் யார் அந்த கொடுத்து வைத்தவள் என்று கேட்க, ஒரு பெரிய மனிதர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் பேர்த்தி நல்ல ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கின்றாள் என்றான். அவனிடம் மேற்கொண்டு எந்தக் கேள்வியை முன் வைக்கவில்லை. நண்பன் அவளுடைய பெயரை முதல் சொல்லி அவளைப் பற்றி ஒரு சில வார்த்தை கூறியிருந்தால் நான் சந்தோசப் பட்டிருப்பேன். குடும்பப் பின்னணியையும் சம்பாதிக்கும் திறனையும் சந்தைப் படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு தோன்றியது.

காமத்தின் பிரதிபலிப்பு தான் காதல் என்போரும், நட்பின் ஒரு பரிமாணம் தான் காதல் என்போரும் விவாதித்துக் கொண்டாலும், இந்த காந்தர்வ கவர்ச்சிக்கு காரணம் அறிய முடியாமல் தான் இருக்கின்றது. மேற்குலகில் வாழும் இளைஞர்களுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எண்ணங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நண்பர்களைப் போல நடத்தினால் அவர்களின் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால் 3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு. இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை. ஊரில் "சரக்கு" என்று இளம் பெண்களை அழைக்கும் வழக்கம் உண்டு, அதற்கு விளக்கமறிய வர்த்தக ஆசிரியரை கேட்ட போது " விற்பனைக்குள்ள பொருள் சரக்கு எனப்படும்" என்றார். இப்படி திருமணங்கள் இன்றும் ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.

இக்கட்டுரை என் கண்ணில் பட்ட அல்லது கேட்டவற்றை அடிப்படையாக கொண்டது. உங்கள் பார்வையையும் தாருங்கள்.


Read more...

April 6, 2008

என் குட்டியின் சுட்டித்தனம்..


"யாழினிது குழலினிது என்பார் அவர் தம் மழலை மொழி கேளாதோர்" என்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் வார்த்தைகளாகவே தோன்றின. குழந்தைகள் கிடைத்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

எனக்கு இரண்டு வால்கள் ( குழந்தைகளை சொல்கிறேன்...) . மகளுக்கு 9 வயது, மகனுக்கு 5 வயது. அக்காவிடம் தான் நினைப்பதை இலகுவாக தன் சாதுரியத்தால் சாதித்துவிடுவான் மகன். தாயின் உடை, சகோதரியின் உடை என்பவற்றை அடிக்கடி விமர்சிப்பான். தாய்க்கு "ஐஷ் " அடிப்பது அவனுக்கு கை வந்த காரியம். " அம்மா, இந்த dress இல் actress மாதிரி இருக்கிறீர்கள் என்பான்". ஆனால் அதே உடையுடன் ( சுரிதார்) தாய் பாடசாலைக்கு அவனை அழைக்க சென்றால் அவனுக்கு பிடிக்காதாம் ( நண்பர்கள் கேலி செய்வார்களாம்).

சற்று வயதுக்கு மிஞ்சிய வால்த்தனம் இருப்பதை அடிக்கடி அவதானித்திருக்கின்றேன். புத்தகம் வாசிப்பது அவனுக்கு மிகவும் பிடித்த விடயம். இந்த விடயத்தில் நானும் அவனுக்கு உற்சாகம் ஊட்டுவேன். கடையில் ஒரு விளையாட்டுப் பொருளைக்கண்டால், உடனடியாக வேண்டித்தர வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டான். ஆனால் அதை தாயிடமோ அல்லது என்னிடமோ தனக்கு எம்மிடம் எப்போதாவது சந்தர்ப்பத்தில் சொல்லி வேண்டிக்கொள்வான். ஆனால் நாம் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வான், ஆனால் "ஆம்" என்று சொல்லி விட்டு நாம் பின் வாங்க முடியாது.

அக்காவுடன் அடிக்கடி போட்டி போடுவான். காலையில் பல் விளக்குவதிலிருந்து, உடைத்தெரிவு எல்லாம் தானே செய்து கொள்வான். குழந்தைகளை சேர்த்து விளையாடுதல், பகிர்தல் போன்றவற்றில் தானாகவே முன் வந்து செய்வான்.

மகனுக்கு இந்த மாதம் பிறந்த நாள். தனது பிறந்த நாளுக்கு, நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றான். தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தன்மை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. மூன்று வண்ணத்தாள்களை எடுத்து, " Party Things", " Games" , "My Friends" என்று தலைப்பிட்டு தனக்கு தேவையானவற்றை தயார் படுத்தி, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். உதாரணமாக, "Musical Chairs" விளையாட்டிற்கு, நான் தமிழ் பாட்டு போடக்கூடாது, "High School Musicals" இலிருந்து போடவேண்டுமாம். ஏன் என்று வினவியதற்கு, என் நண்பர்கள் வேறு இனத்தவர்கள், அவர்களுக்கும் புரிகின்ற இசையாக இருக்க வேண்டாம்.



அம்மாவிற்கு, தமிழ் பிள்ளைகளை மாத்திரம் அழைத்து பிறந்த நாளை நடத்த விருப்பம். அதை தாய் சொல்ல, " மற்ற நண்பர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்று அறிவுரை சொன்னான்". அம்மாமார் நாங்கள் சொன்னால் கேட்கினோமோ இல்லையோ, மகன் சொன்னால் கேட்பினம் தானே.

நாம் வாழ்க்கையில் எப்படியான கஷ்டங்களை எந்த வடிவத்திலும் ( ஏமாற்றம், இழப்புக்கள், புறக்கணிப்புக்கள், அவமானம்) வந்தாலும் இந்த குழந்தைகள் நொடிப்பொழுதில் மறக்க வைத்துவிடுவார்கள்.

குழந்தைகள் சுயாதீனமாகவும், நமக்காக மட்டும் உலகம் என்று இல்லாமல், நாமும் உலகத்தில் ஒரு பங்கு என்று வளர்வார்களாயின் அது அவர்களை சமுதாயத்தில் சுய கௌரவத்துடன் நல்ல பிரஜைகளாக வாழ வழி வகுக்கும்.

Read more...

January 14, 2008

வாழ்த்துக்களும் நடைமுறைகளும்....


மனித நாகரிகத்தில் சில பண்பாடுகள் அவர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே ஆராயப்படும். தமிழர்களின் நன்றியுணர்வுக்கான ஒரு பண்டிகையே தைப்பொங்கல். சந்தோசத்தை வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்து கொள்ளும் ஒரு நடைமுறையே வாழ்த்துக்கள்.



இப்பண்டிகைகளில் உறவுகளில் வீடுகளில் சென்று வாழ்த்தி சொந்தம் கொண்டாடும் நடைமுறைகள் கிராமங்களில் இன்றும் உள்ளது. ஒருவரை வாழ்த்துவதாக இருந்தால் நேரில் சென்று வாழ்த்துவது சிறந்தது. முடியாவிட்டால் தொலை பேசியில் அழைத்து வாழ்த்துவது நல்லது. இவை இரண்டுமே ஒருவரின் உரையாடலில் மற்றவரின் உணர்வுகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் வாழ்த்தும் போது அது கிடைத்ததா, அல்லது அவர் வாசித்தாரா என்பது சில வேளைகளில் கேள்விக்குறியாகவே அமைந்து விடும். ஆங்கிலத்தில் ( passive medium) பசிவ் மீடியம் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் நேரில் அழைத்து வாழ்த்த வாய்ப்புகள் இல்லை. மின்னஞ்சலில் வாழ்த்தும் போது

1. தனித்தனியே ஒவ்வொருக்கும் அனுப்புதல் சிறந்தது.
2. முடியாவிட்டால் வாழ்த்தும் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து வாழ்த்த வேண்டும்.

உதாரணமாக‌

To: Raymond, Smith, Pluto
எல்லோரையும் To: என்று முகவரியிட்டு வாழ்த்த வேண்டும். இல்லையேல் CC - Carbon Copy முறையில் வாழ்த்த வேண்டும் ( To or BCC இல்லாமல்). ஒரு சிலர் எல்லோரையும் BCC list இல் வாழ்த்துவார்கள்.

இதற்கு பதிலாக சிலர்,

To: Pluto
CC: Smith, Raymond
Sub: Happy Pongal

இப்படி வாழ்த்தும் போது, Pluto வை வாழ்த்துவதை Smith & Raymond இற்கு தெரிய வைப்பதாகவே அமையும்.

சந்தோசங்கள் பகிர்வதனால் பெருகும். உணர்வுடன் வாழ்த்துங்கள்!. வலய நட்புகளுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Read more...

October 6, 2007

கடந்த பாதையில் சில துளிகள்....




வாழ்வியலில் மாற்றங்கள் தான் நிரந்தரமானவை, மற்றவை யாவும் மாறிக் கொண்டிருப்பவை என்பார்கள். கீதையில் கூட "இன்று உன்னுடையது அது நாளை இன்னொருவருடையது" என்று தத்துவங்களை அள்ளி வீசி சென்றதெல்லாம், எமக்கு ஏமாற்றங்களை ஏற்று கொள்ளுகின்ற மன நிலையை வளர்ப்பதற்கே.

ஏமாற்றங்கள் யாரால் யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒரு வகையில் நமது எதிர் பார்ப்புகளின் மறுப்பே ஏமாற்றம் எனலாம். என் வாழ்வில் ஒரு சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆரம்பத்தில் ஏமாற்றம் என்று தோன்றியவை இன்று சரியாகவே தோன்றுகின்றது.

1. தங்க மாம்பழம்

என்னடா புராணக்கதை ஏதாவது சொல்லப் போறேன் என்று பார்க்கிறீங்களா? இல்லைங்க, தொடர்ந்து வாசியுங்கள். கல்லூரி வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மனதை உற்சாகமூட்டும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை. நானும் இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலம் அது. எனது அண்ணாவுடன் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கொண்டு, நானும் எனது பொறியியல் பட்ட படிப்புக்காக கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தேன். எனக்கு மூத்த ஈழ மாணவர்கள் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அனுமதி பெற்று பின் அதை விட்டு பேராதனை பல்கலைக் கழகத்திற்கு ( இலங்கை) திரும்பி சென்று விட்டார்கள். இதன் விளைவாக, எனது காலத்தில் பொறியியல் அனுமதி கேட்ட அனேகமான ஈழ மாணவர்களுக்கு தண்ணி இல்லாத காட்டில் தான் அனுமதி கிடைத்தது.

அது போல் எனக்கும், காமாராசர் மாவட்டத்தில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. இந்த கல்லூரி ஒரே ஒரு தொடர்மாடியை மட்டும் கொண்டு ஆங்காங்கே சிறிய கொட்டகைகளுடன், ஒரு மலையடிவாரத்தில் சன நடமாட்டம் இல்லாத, வாகனப் போக்கு வரத்து குறைந்த வீதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தது. அட நம்ம பிழைப்பு அம்புட்டுத்தான் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். பேசாமல் படிப்பதை விட்டிட்டு, நம்ம ஆளுங்க போற வெளிநாடு எங்காயவது போய் ஏதாவது செய்து பிழைத்திருக்கலாம் என்று தோணிச்சு. எனது சகோதரத்தை பார்த்து, "இங்கை நான் படித்துதான் ஆகணுமா என்று கேட்க", அவர் "அவனவன் ஒரு இஞ்ஞினியரிங் சீற் எடுக்க எவ்வளவு கஸ்டப்படிகின்றான் உனக்கு தெரியாது " என்று வைய, சரி நான் எங்கு தங்கப்போகின்றேன் வினவினேன்.

எனது மூத்த ஈழ மாணவர்கள் சிறீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீடு என்று சொல்லப்படும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே ஆறு பேர் தங்கியிருந்தார்கள். சுமார் 12x16 அடிகள் மட்டுமே இருக்க கூடிய அறையில் என்னையும் ஏழாவதாக சேர்த்துக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில், இன்னொருவர் என்னுடன் படிப்பதற்கு எட்டாவாதாக சேர்ந்து கொண்டார். அங்கு 6 பேர் பொறியியல் கல்லூரியிலும், இருவர் பொலி டெக்னிக்கிலும் கற்பதாக தங்கியிருந்தோம்.

ஊரில் கிணற்று வாளியில் அள்ளி குழித்த எங்களுக்கு, அதி காலையில் வீட்டில் முற்றத்தில் உள்ள குழியில் விழுகின்ற தண்ணியை முகந்து வந்து, படிகளில் ஏறி மாடியிலுள்ள எமது அறையுடன் இணைந்துள்ள குளியல் அறையில் சேகரிக்க வேண்டும். பணத்தை விட இங்கு தண்ணியை தான் சிக்கனப்படுத்த வேண்டிய அவசியம். குளியலறை நாலு பக்கமும் மூடியதாக இருந்தாலும், மேலே மூடப்படாமலே இருந்தது.


சிறீவில்லிபுத்தூரில் குடும்பமாக வாழாதோருக்கு வீடு எடுப்பது மிகவும் கடினம். எங்களில் அனேகமானோருக்கு டாலரிலும் பவுண்டிலும் தான் பணங்கள் வரும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், எங்களுக்கு வீடு பார்ப்பதற்கு உதவாதா என்று எண்ணி, ஒரு புறோக்கர் மூலம் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதாக தீர்மானித்து கொண்டோம்.


எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை விவாதித்திருக்கின்றோம். ஈழத்தின் வரை படத்தை உருவகிபடுத்தி பார்த்தால், யாழ்ப்பாணத்தை தலை என்பார்கள், வடமராட்சியை மூளைப்பகுதி என்பார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒரு சிலர் இருப்பது ஊருக்கு பெருமை, இன்னும் சிலருக்கு ஒரு ஊரில் பிறந்தது பெருமை. நான் 2ம் வகை.

வடமராட்சியை சேர்ந்தவன் நான் ஒருத்தன் தான், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ( போட்டியோ அல்லது பொறாமையோ தெரியாது) என்னை ஒரு வழிப்பண்ணி விடுவார்கள். உதாரணத்திற்கு, நானும் வடமராட்சியை சேர்ந்த அரசியலை , போராட்டங்களை, கல்வி மான்களை உதாரணம் காட்டி அவர்களின் வாயை அவ்வப்போது மூடியதுண்டு.

சுவாரசியமாக‌ திருமணம், காதல் சம்பந்தமாக விவாதித்திருந்தோம். அந்த சம்பாசனைகளில் வந்த சில துளிகள்:

" பலரை பார், மூவரை தெரிவு செய், இருவரை காதலி, ஒருவரை திருமணம் செய்"

"20 இலிருந்து 25 இற்குள், எவளை திருமணம் செய்வதென்று அறி, 25 இலிருந்து 30 இற்குள், எப்போது திருமணம் செய்வதென்று அறிந்து முடித்துக்கொள், 30 இற்கு மேல் உன்னை யார் திருமணம் செய்வார் என்று ஏங்க வேண்டியிருக்கும்."

"விதவைக்கு வாழ்வு கொடுக்கவேண்டும்"

" கடவுச்சீட்டில் பெண் என்று இருந்தால் போதும்"

" படித்த ஃபோவாட்டான (FORWARD) பொண்ணு வேணும்"


என்ற பல கோணங்கள் ஆராயப்பட்டன.

இப்படியான சுவாரஸ்யங்கள் ஒரு புறமிருக்க, உறவுகளின் நினைவுகளும் அப்போது வந்து கனக்க வைத்தன. விடுமுறைகளின் போது எங்கு செல்வது என்று யோசிக்க, இந்திய நட்புகள் மச்சி நீ எங்க ஊருக்கு வா என்று உரிமையோடு அழைத்தது எங்களை நெகிழ வைத்தவை.

வருடம் ஒன்று கழிந்து, ஒரு மாதிரி, ஒரு புறோக்கர் மூலம் 4 பேர் தங்கும் வசதியுள்ள, தண்ணி டாங் வசதியுள்ள 6 வீடுகள் கொண்ட ஒரு தொடரணியில் 2 மாடியுள்ள ஒரு வீடு 300 ரூபாய் வாடகைக்கும், 2000 ரூபாய் முதற்பணமாய் கொடுத்து எடுத்தோம். நானும் இன்னும் மூவரும் அந்த புதிய வீட்டிற்கு சென்றோம்.

"நைனா" என்று சொல்பவர் தான் எங்களிடம் வாடகை வசூலிப்பவர். அவர் தன் குடும்பக்கஷ்டத்தின் பேரில் எங்களிடம் கைமாறாக முன் கூட்டியே வாடகைப் பணத்தை வாங்கி கொடுப்பது வழக்கம். எங்கள் யுனிட்டில் ஒரு வீடு வாடகைக்கு வருவதை அறிந்து எனது சீனியர்சிற்கும் ஒரு வீடு எடுப்பதற்காக இவரை அணுகினோம். முதலாளியின் மகனை தெரிந்ததால் அவரிடம் கேட்ட போது, " நைனா" விடம் பேசினால் போதும் என்றார். நைனாவும் மூன்று மாம்பழத்துடன் வந்து தந்து விட்டு, வீட்டிற்கு எங்களிடம் முற்பணம் 2000 ரூபாய் வாங்கி சென்றார்.

இரண்டு வாரங்களாகின, நைனாவை காணவில்லை. முதலாளியை அணுகி, முற்பணம் கொடுத்தை சொன்ன போது, நைனாவிடம் அந்த பெரிய தொகையை கொடுத்தீர்கள் என்று சொல்லி விட்டு கையை விரித்து விட்டார்.

நைனாவை தேட தொடங்கி பல சுவாரசியமான தகவல்களை பெற்றோம். அவரது வீடு என்று அறிந்து அங்கு செல்ல, அவரது முதல் மனைவி " தானும் அவரை தேடுவதாக சொன்னாள்; அவர் இன்னொருத்தியுடன் வேறு இடத்தில் குடும்பம் நடத்துவதாக கூறினாள்". நாங்கள் அங்கும் சென்றோம், " அவளும் தன்னிடம் இல்லை என்றாள்". இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிதாக ஏமாற்றப்பட்டதாக ஒரு உணர்வு. அவர் தந்த மாம்பழத்தை தங்க மாம்பழம் என்று இன்றும் நினைவு கூறுகின்றோம்.

அன்று எங்கு படிக்க தயங்கினேனோ, அந்தப் படிப்பு என்னை வாழ்க்கையில் பல படிகள் முன்னேற்றியது மாத்திரம் அல்ல, என்னை சூழ இருந்தவர்களின் வாழ்வியலின் முன்னேற்றத்திற்கு உதவ வாய்ப்பு அளித்துள்ளது.

நான் படித்த கல்லூரி இப்போது ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாக‌ அறிந்தேன். அதன் முகப்பை தான் எனது முகப்பிலும் போட்டிருகின்றேன்.
கலசலிங்கம் பல்கலைக்கழகம்

Read more...

September 28, 2007

வாகனமும் பாவனையும்!


அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் நாம் நேரத்தை மிகவும் கருத்தில் வைத்து வாழ வேண்டியதாகியிருக்கின்றது. நேரம் தான் பணம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் அடைந்துவிட்டது.

அன்றாட வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமாகிவிடுகின்றது. ஊரில் துவிச்சக்கர வண்டியில் ( சைக்கிள்) தான் பல இடங்களை சென்று வந்திருக்கின்றோம். ஒரு சிலர் மோட்டர் சைக்கிளை உபயோகித்து வந்தனர். பொது வாகன சேவைகளும் போக்குவரத்துக்கு பாவிக்கப்பட்டிருக்கின்றன. நானும் எனது பாடசாலை நாட்களை சைக்கிளில் தான் போய் வந்தேன்.

எனக்கு படிப்பித்த‌ tution master ‍ இரத்தினசபாபதி மாஸ்டர் ( சாக்கர் ‍பட்டப் பெயர்‍‍ ‍_ முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர்) எப்போதும் நடை பவனியில் வந்து தான் பாடம் சொல்லி தந்தவர். ஒருவருடைய வாகனத்திலும் ஏறி வந்ததில்லை. என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியர் இவர் தான்.

ஆனால் கனடாவில் நம்மவர்களுக்கு அரை மைல் தூரத்திலுள்ள கடைக்கு போவதென்றால் கூட கார் தேவைப்படுகின்றது. கனடா குளிர் நாடு தான், ஆனால் சூடான கால நிலையுள்ள காலப்பகுதி தான் அதிகம். கார் இங்குள்ளவர்களுக்கு சைக்கிள் மாதிரி தான் .

என்னுடன் வேலை பார்க்கும் கனடியர்(Brian Huntley) ஒருவரை பற்றி, அவருடைய வாழ்க்கை முறை, அவருடைய தேவைகள் எதிர் பார்ப்புகள் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு வித்தியாசமான பார்வைக்காக தருகின்றேன்.

இவர் கனடிய கடற்படையில் விமான ஓட்டியாக இருந்துவிட்டு, பல‌ ஆண்டுகள் சேவையிலிருந்து விட்டு இப்போது தகவல் தொழில் நுட்பத்தில் வேலை செய்கின்றார். இவர் சேவையிலிருக்கும் போது ஓட்டாத வாகனம் என்று ஒன்றும் இல்லை. ஆனால் இவரிடம் தற்போது உள்ள ஒரு வாகனம் சைக்கிள் தான். இவர் வேலைக்கு எப்போதும் சைக்கிளில் தான் வருவார். பூச்சியத்திற்கு கீழ் 40 பாகையாக இருந்தாலும் சைக்கிளில் தான் வருவார். பொழுது போக்காக கூட சைக்கிள் பயணம் தான்.

அவரிடம் பல தடவை மனம் விட்டு பேசியுள்ளேன். அவருக்கு வரலாறு, மற்றும் பல்வேறு தொழில் நுட்பம் பற்றிய அறிவு இருக்கின்றது. ஆனாலும் நடை முறை வாழ்க்கையில் தனது தேவைகளை மிகவும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பவர். வேலை சம்பந்தமாக பல தொழில் நுட்பங்களை கையாண்டாலும் ஒரு கைத்தொலை பேசி கூட சொந்தமாக பாவிப்பதில்லை ( வேலைக்காக Black Berry). இதற்காக காசு மிச்சம் பிடிக்கிறார் அல்லது வசதிகளை பெற வருவாயில்லை என்று தப்பாக எண்ணி விடவேண்டாம்.

இவர் தன் விடுமுறையை பெரும்பாலும் சைக்கிளில் புதிய இடங்களை வலம் வருவது தான் இவரது பொழுது போக்கு. இவர் அண்மையில் ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள ஐரோப்பிய நகரங்களை சைக்கிளில் வலம் வந்தார். எனக்கு இப்படி நகரங்கள் ஒன்ராரியோவில இருப்பது இவர் மூலம் தான் தெரிய வந்தது








City Country
Paris France
London, Belfast, Tottenham UK
Brussels Belgium
Formosa Portugal
Hanover Germany
Zurich Switzerland




சிலோன் என்று ஒரு சிறிய கிராமமும் இருக்கின்றதாம். சிலோன் என்ற பெயர் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வைத்த பெயர்.

0
படம் , வரை படம் ‍- Brian Huntley

இவர் தன்னுடைய பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக தனது தளத்தில் தெரிவித்துள்ளார்.
இவருடைய பயணத்தை தெரிந்து கொள்ள கீழே அழுத்தவும. Brian Huntley யின் சைக்கிள் பயணம்


ஓவ்வொரு மனிதருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மனிதன் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றான். இப்படியும் இந்த குளிர் நாட்டில் வாழலாம். நாம் எப்படி எங்களை தயார்படுத்தி கொள்கின்றோம் என்பதை பொறுத்து தான் எந்த தடையையும் வெல்வது தங்கியிருக்கின்றது.

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP