December 31, 2008

புதுவருடத்தில் புத்துணர்வுடன் வாழ வாழ்த்துக்கள்!
தமிழால் ஒன்றிணைந்து
தமிழ் மணம் பரப்பி
ஆண் என்றோ பெண் என்றோ
பிரித்தாளாமல்
மனிதத்தை வளர்த்து
விடிவுக்காய் ஏங்கும் இதயங்களுக்காய்
தேச எல்லைகளை மறந்து
பாச உணர்வுடன்
நேசக் கரம் நீட்ட‌
பிறக்கின்ற புத்தாண்டில்
கீறல்களை மறந்து
புத்துணர்வுடன் எழுந்து
வா என் வலயக‌த்து நட்பே!

Read more...

December 30, 2008

திருமணம் ‍ எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்...ஆயிரம் காலத்துப் பயிர் என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவது என்று திருமணங்கள் சொல்லப் பட்டாலும் தகவல்களால் நிரம்பிய உலகத்தில் குழப்பங்கள் தானா? என்று எண்ணத் தோன்றுகின்றது. நண்பர் கமலுக்கு கல்யாண ஆசை வந்திட்டுது போல எல்லாரட்டையும் திருமண முறிவு ஏன் ஏற்படுது என்று கேட்டிருக்கின்றார்.

சேர்ந்து வாழுவதற்கு காரணம் தேடிய காலம் போய், இன்று பிரிந்து வாழுவதற்கு காரணம் தேடுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

1) விவாகரத்து இன்றைய உலகில் அவசியம் தானா?? அல்லது விவாகரத்துப் பெறுவது இன்றைய உலகில் ஓர் நாகரிகமாகிவிட்டதா???

திருமணம் என்றால் என்ன? எனக்கு எப்படி ஒரு வாழக்கைத்துணை வேண்டும் என்றும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். ஒரு ஆண், பெண்ணின் குண இயல்பு என்ன?, அவளுக்குரிய காலச்சக்கரத்தில் அவளின் பிரச்சனை என்ன என்று தெளிவும், பெண்ணுக்கு ஆணைப் பற்றிய அறிவும் இருக்க வேண்டும். குடும்பம் என்றால் என்ன அதன் நன்மைகள் என்ன ஒரு தெளிவு இருக்கவேண்டும்.

உதாரணத்திற்கு, கறுப்பின மக்கள் அமெரிக்க மண்ணிற்கு தெற்காசிய மக்களை முன் வந்திருந்தாலும், அறிவியல் துறைகளில் அவர்களின் வீதம் குறைவு. இதற்கான அடிப்படை காரணம், விவாகரத்து அதிகமாக கறுப்பு இனத்தில் இருப்பதாலும், குழந்தைகள் தாய் அல்லது தந்தை என்று ஒருவரிடம் மாத்திரம் வளர்கின்றதால் என்று சில ஆய்வுகள் சொல்கின்றது.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு மேற்குலகில் திருமணம் என்ற ஒன்று அவசியமில்லை. மேல் நாட்டு சட்ட திட்டங்கள் பிரிந்து வாழ்வதற்கான வழிமுறைகளையே ஊக்குவிக்கின்றன. டாகடர் பெம்பிளை வேண்டும் என்றால் அதற்கான விட்டுக் கொடுப்புகளுக்குத் ஆண் தயாராக இருக்க வேண்டும்.

தாம்பத்திய வாழ்வில் சுவாரசியமும், பிடிப்பும் இருவருக்கும் இடையில் இருக்கும் நிலை இருந்தால் பல சிக்கல்களுக்கு தீர்வு வந்து விடும். குழந்தை பிறந்த பின் தன்னைப் பற்றி கண்டு கொள்ளாமல் ஏனோ தானோ என்று ஒரு பெண் நடந்து கொள்வதாலும் குடும்பங்களில் குழப்பம் உருவாகின்றது.

நம் வாழ்க்கையில் தேர்வு செய்யும் வாழ்க்கைத்துணையில் தான் எமது 90% மான சந்தோசமும், கஸ்டமும் தங்கியிருக்கின்றது என்கின்றார் ஒரு மேற்கத்தேச அறிஞர். விட்டுக் கொடுத்து வாழத் தெரியாதவர்களின் இறுதி நிலை விவாகரத்துத் தான்.

2) பெரும்பாலும் இந்த விவாகரத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் யார்???

கோபம் வந்தால் அதிகம் பேசுபவர்கள் பெண்கள், மெளனித்து விடுபவர்கள் ஆண்கள் அதனால் எது காரணம் என்று நான் சொல்ல வரவில்லை. உத்தியோகம் புருச லட்சணம் என்பார்கள். ஆண்கள் "தான் ஆண் என்ற ஆதிக்கமும்" ஆனால் பெண்ணின் உழைப்பில் தங்கியிருக்கும் நிலை இருந்தால் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். நான் தனித்து வாழலாம் என்ற மேலோங்கிய எண்ணமோ அல்லது என்னை அவர் கண்டு கொள்வதில்லை என்ற மன அங்கலாய்ப்போ விவாகார ரத்துக்கு காரணம்.

"கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம், காசிருந்தால் வாங்கலாம்" என்ற எண்ணப்பாடுகள் கூட விவாகரத்தில் தான் போய் முடியும். ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை நேசிக்கலாம், பழகலாம் ஆயினும் நான் தான் அவர் மனைவி என்ற தெளிவு இருக்க வேண்டும். அவர் என்னை விட்டு விட்டு போய் விடக்கூடாது என்ற அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை ஆணுக்கு பெண் விதித்தாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.

அழகான மனைவி வேண்டும் என்று எடுத்து விட்டு, அவளை சந்தேக கண்ணுடன் பார்க்கும் ஆண்களாலும் இந்த நிலை தான். ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை தான் காரணம். திருமணத்தின் முன் உறவை வைத்திருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அப்பாவித்தனமாக வருகின்ற வாழ்க்கைத் துணையிடம் தம் அனுபவங்களை ஒப்பிட முயன்றாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.

3) விவாகரத்தினூடாக எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கை முறை கட்டியெழுப்பப் படுகின்றதா??? இந்த விவாகரத்தின் மூலம் எதிர்காலச் சந்ததிகளிற்குக் கிடைப்பவை என்ன??? அவற்றுக்கான காரணம் என்ன???

தன்னம்பிக்கை இல்லாததும், சமுதாயத்திற்கு சவாலாக அமைந்து விடும் இளையவர்களை தான் திருமண முறிவுகள் ஏற்படுத்துகின்றன. தந்தை உலகத்தை பார்க்கும் விதமும், தாய் உலகத்தை பார்க்கும் விதமும் வேறு , இவை இரண்டும் குழந்தைக்கு தேவையாம்.

உளவியலும், சமூகவியலும் தான் ஒரு மனிதனை சம்பிரதாயங்களுக்குட்பட்ட மனிதர்களாக வாழ வழிவகுக்கின்றது. ஆனால் சமுதாயத்தை வெறுக்கின்ற அல்லது அதன் நம்பிக்கை இல்லாத இந்த சந்ததியனர், தம் செய்கைகளை நியாயப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர்களாகவும் வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள்.

தனித்தாயின் வளர்ப்பில் வளரும் பெண் குழந்தைகள், தாய்க்கு ஏன் இந்த நிலை உருவானது? ஆண்களுக்கு நான் அடி பணியக் கூடாது என்ற ஆண்களுடன் போட்டி போடும் கலாச்சாரமாக வளர்ந்து விடுகின்றாள்.

4) விவாகரத்து எம் தமிழ்ச் சமூக அமைப்பில் அதிகரித்துச் செல்வதைக் குறைக்க ஏதேனுன் வழிமுறைகள் உள்ளனவா?? உங்கள் பார்வையில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா??? நீங்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???

புரிந்துணர்வை வளர்க்க வாய்ப்புகள் உருவாக வேண்டும். திருமணமான நண்பர்கள் குடும்பங்களாக ஒன்று கூடும் போது மனம் விட்டு பிரச்சனைகளை பேசும் போது இது எல்லா வீட்டிலும் நடக்கும் விடயம் அதை பெரிது படுத்தக் கூடாது என்று தெளிவு வரும். பெண்கள் நம்பிக்கையான தோழிகளிடம் கட்டில் முதல் தொட்டில் வரையுள்ள அனுபவங்களை பகிரும் போது பல விடயங்களில் தெளிவு உருவாகின்றது.

நமக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் அறியும் பக்குவம் இருப்பின் எமக்கு ஒரு திருப்தி உண்டாகும். உங்களை ஒருவர் எப்படி நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அதைப் போல் அவரையும் நேசிக்கப் பழக வேண்டும். தீர்வு என்று ஒருவரியில் சொல்ல ஒன்றுமில்லை.

அப்புக்குட்டி மாதிரி ஆக்களுக்கு நான் பதில் சொல்லுவதை விட உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி அனைத்துலக தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் உளவியல் பற்றி நல்லாச் சொல்லிய்ருக்கின்றார். உங்களுக்காக உங்கு எடுத்து போட்டிருக்கின்றன். முழுதாக கேட்டு முழு மனிதராக குடும்பம் குட்டி என்று சந்தோசமாக வாழ்கின்ற வழியைப் பாருங்கோ.


DR. Shalini Women Concerns and Solutions.wav - Dr. N. Shalini

உங்கள் பார்வையயும் தாருங்கள்.

Read more...

December 25, 2008

தூங்குபவரை எழுப்பலாம் நடிப்பவர்களை அல்ல!

மாதாவிற்கே இந்த நிலை என்றால் நம்மவர் நிலை என்ன? அரசியல் ஒரு சாக்கடை என்பார். ஈழத்து அரசியலை எள்ளி நகையாடும் தேசியம் பேசும் தேசிய வாதிகளே, தகவல் வலையின் தகவல்களால் தடம் மாறி விட்டீர்களோ, அல்லது உங்கள் தனி அடையாளங்களைப் பெறுவதற்கு என்னவும் எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணமா? தமிழ் என்று அடையாளத்தால் தமிழ் மணம் திரட்டிகளினால் தங்கள் எண்ணக் கருக்களை தரும் உங்களுக்கு என்ன குழப்பம். நீ சிந்திக்க என் சிந்தனையின் சில துளிகள்.

தமிழ் நாட்டு தொட்டி பட்டி எல்லாம் திரிந்தவன், அன்னை இந்திராவின் காலத்தில் இருந்து அவர் தம் புதல்வன் ஆட்சி வரை உங்கள் மண்ணின் மனங்களின் மாற்றத்தை கண்கூடாக பார்த்தவன் நான். தேசியம் பேசும் பாரத தேசத்தின் பகுப்பறிவாளனே, தகவல்களை கண்மூடித்தனமாக உள்வாங்குவது அறிவு கிடையாது, அதை பகுத்தறிய உனக்கு நேரம் தேவை. ஏன் என்ற கேள்விகள் எழுப்பாமல் ஒன்றை பின் தொடர்ந்தால் அது மதம் அரசியல் அல்ல.

நீ நாடாரா அல்லது நாயக்கரா என்று நடு வீதியில் அடித்துக் கொண்டும், என் சாதித் தலைவன் என்று சிலை வடித்து பறைசாற்றி நிற்கும் நீ, ஈழத்தமிழன் விடயத்தில் நீ தேசிய வாதியோ!, பாடசாலைப் படிப்பு முடிந்து பட்டப் படிப்பு படிக்க வேண்டுமாயின், சாதிச் சான்றிதழ் தான் உன் அடையாளம் ஆயினும் நீ தேசிய வாதி. தேசத்தின் மேல் பற்று வை அது தவறல்ல, ஆனால் அதை தட்டிக் கேட்கவும் மறந்து விடாதே.

காமராசர் வாழ்ந்து வளர்த்து விட்ட காங்கிரசு கட்சி தொண்டனே, டெல்லி சென்னை வந்து ஆலோசனை கேட்ட காலம் அன்று, சென்னை டெல்லி சென்றாலும் ஆலோசனை கேட்காது காங்கிரசு கூட்டுக் காலம் இது. உன் இறையாண்மைக்கு ஈழத்தான் என்ன தடை. ஈழத்தான் இழப்பு உன் சினிமாவில் பார்க்கும் ஒரு காட்சியாக நினைத்து மறந்து விடுகின்றாயா?இது புலி அல்ல கோமாதா! இந்த‌வாய் பேசா ஜீவன்கள் கூட உன் பார்வையில் பயங்காரவாதிகளா?

உன் நாட்டில் ஒரு தலைவன் மட்டும் தான் கொல்லப் பட்டதாக எண்ணிக் கொள்ளும் உன்னால் பழைய வரலாறுகளை ஏன் தட்டிப் பார்க்க முடியவில்லை. இரத்தம் சிந்தாப் போராட்டம் தான் சிறந்தது என்று சொல்லிக் கொள்ளும் நீ, திலீபன் அண்ணா உண்ணா நோன்பு இருந்து உன் தேசத்தை நோக்கி விட்ட தார்மீக போராட்டத்தை தட்டிக் கழித்து விட்ட வரலாற்றுத் தவறை ஏன் எண்ண மறுக்கின்றாய். சோற்றுக்கு மாரடித்த உதிரி இயக்கங்களைஆயுதத்தை எடு, போடு என்று ஏவி தெரிந்த அரசுகளுக்கு நம் போராட்டம் ஒரு கேலிக் கூத்துத் தான்.

உலகில் பெரிய ஜன நாயக நாடென்று மார் தட்டி சொல்லும் அந்நாட்டின் குடிமகனுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. சீமானில் பேச்சு பல உண்மைகளை வெளிப்படியாக சொல்லியிருக்கின்றது. சீமானின் பேச்சில் உன் இறையாண்மைபோய் விடும் என்றால் உன் நாட்டின் இறையாண்மை ஒரு நூல் இழையில் இணைக்கப் பட்டுள்ளதா?

மும்பாயில் வெடித்த போது நாமும் வருந்தி நின்றோம், உன் தேசத்தின் பிச்சைக்காசில் நம்மினத்தை அழிக்கும் சிங்களம் மும்பாய் சம்பவத்தை உனக்கு படிப்பினை என்று எள்ளி நகையாடியது. ஆயினும் நீ உதவச் சொல்வாய் ஏனென்றால் நீ தேசியாவாதி.

நீ நாட்டைக் கடக்க இந்தியன் என்ற கடவுச்சீட்டு என்று ஒன்றிருந்தாலும், சில நாடுகளுக்கு செல்லும் போது உன் மொழி, மதம் என்பது அடையாளப் படுத்தப் படுவது இன்றைய யதார்த்தம். அக்கிறாகரத்தில் பிறந்தாலும் கமல்ஹாசன் என்ற பெயர் இருந்தால் இஸ்லாமியரோ என்று அஞ்சி சில நாடுகள் அனுமதி மறுத்த வரலாறு உண்டு.

இத்தாலிய அம்மையாரை உன் நாட்டு முதல் குடிமகளாகவும் கொள்கை வகுப்பாளாரகவும் எற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீ ஏனோ உன் பொக்கிள் கொடி உறவின் உணர்வை அறிய முடியவில்லை.

வன்னியில் வாழும் மக்களின் அவல நிலையை உன்னால் பார்க்கமுடியாவிட்டாலும் உன் தேசத்தின் அகதி முகாமில் வாழ்வோரை சென்று பார். அப்போதாவது உன் மனிதம் உன்னை உறுத்துகின்றதா என்று எண்ணிப்பார். அகதி வாழ்வு என்ன என்று தெரிய விரும்பின், ஆண்டுகள் பலவற்றை அடிமைகளாய், காலைக்கடன் கழிப்பதற்கும் காவல்காரன் அனுமதி பெற்று, மானத்தை மறைப்பதற்கு துணி அணியும் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் நம்மவர், இங்கு அவமானத்தை மறைக்க முகங்களை மறைத்து திறந்த வெளியில் காலைக்கடன் முடிக்கும் பரிதாப நிலை. சாறிகள் தான் அவர்களை பிரித்து வைக்கும் வாழ்விடம். இந்தப் பரிதாபத்தை நேரில் சென்று கேட்டறிந்தவன். மேற்குலகில் அகதியாக வந்தவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கின்றது. உன் தேசத்தில் அகதியாய் இருப்பவர் நிலை கவலைக்கிடம் தான்.

விடியலுக்காக காத்திருக்கும் எங்களுக்கு, உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்க முயற்சி செய், உன் தேசிய வளங்களை ஒருமைப்படுத்தி, கங்கையும், ஜமுனையும், காவேரியும் கலந்திட முயற்சி செய். தமிழன் என்ற அடையாளத்தை மறந்து விடாதே. உன் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களை, உன் தேசத்திற்கு அருகில் ஒரு நேச நாடு எல்லைகளால் பிரிக்கப்பட்டாலும் மொழியினால் இணைக்கப்படும் ஒரு நாடு உருவாக ஒரு கணமாவது சிந்தி என் இனமே!

ஆக்க பூர்வமான கருத்துக்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

படங்கள்: நன்றி, www.seithy.com

Read more...

December 20, 2008

குழந்தை வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டுமா?இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள், மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுத் தரவேண்டுமா? குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே என்று பலரும் பல கருத்துக்களை முன் வைக்கின்றார்கள். இந்தக் கேள்வி என‌க்குள்ளும் எழுந்தது. சென்னையிலிருந்து உளவியல் நிபுணரும், சமூக சேவகியுமான டாகடர் சாலினி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து குழந்தை வளர்ப்பை பற்றி அறிவு பூர்வமானதும் நாம் எல்லோரும் அறிய வேண்டிய கருத்துப் பதிவு.


DR. Shalini. PARENTING.17.12.08.wav -

Read more...

December 19, 2008

எம்மில் சினிமாவின் பாதிப்பையறிய விடப்பட்ட வினாக்களுக்கு...எனக்கும் சினிமா விமர்சனத்திற்கும் ரொம்பத்தூரம். நண்பர் மெல்போர்ன் கமல் கேட்டுக் கொண்ட அழைப்பிற்காக விடை காண முயல்கின்றேன். சிறிய வயதில் சினிமாப் பிரியன், பார்ப்பதற்கு வீட்டில் அனுமதி கிடைப்பது குறைவு என்பதால் போலும். எனது ஊரில் மகாத்மா, லக்ஸ்மி என்று இரண்டு சினிமாக் கொட்டகைகள். இங்கு வரும் சினிமாக்கள் அனேகமானவை மிகவும் பழைய படங்கள். எனது தந்தை யாழ்ப்பாண நகரில் வேலை செய்த்ததால் வார விடுமுறை நாட்களில் அப்பாவிற்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுக்கும் சாட்டில் சினிமா பார்ப்பதுண்டு.


1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஆறு வயதில் மூத்த சகோதரர்களுடன் சென்று படம் பார்க்க போய் பாதியில் அழுது கொண்டு வீடு திரும்பிய நினைவு உண்டு. படம் ஞாபகம் இல்லை.

2) நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

நிறம் மாறாத பூக்கள் படத்தை யாழ்ப்பாணம் வின்சர் தியட்டரில் பார்த்தேன். அந்தக் காலத்தில் வந்த அறிமுக நடிகர்களை வைத்து எடுத்திருந்த படம். இப்படத்தில் அதிகமான நடிகர்கள் தங்கள் சொந்தப் பெயரிலேயே நடித்திருந்தார்கள். சுதாகர், ராதிகா, விஜயன்,ரதி போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் ராதிகா காதலித்து விட்டு வந்து தந்தையிடம் தன் காதலை சொல்லுகின்ற போது தந்தை ஆத்திரப்பட்டு அப்படியென்றால் தன் இனிசலை நீ பாவிக்க முடியாது என்று சொல்வார். அதற்கு ராதிகா "நான் இப்பவும் "S" ராதிகா , புரியலையா சுதாகர் ராதிகா" என்பார். " முதன் முதலாக காதல் டூயட் பாடவந்தேன்", " ஆயிரம் மலர்களே" போன்ற பாடல்கள் இன்றும் என் மனதில் அழியாமல் பதிந்திருக்கின்றது.

3) என்ன உணர்ந்தீர்கள்?

MGR, சிவாஜி காதல் காட்சியை விட சற்று யதார்த்தமான காதல்காட்சிகள், ஒளிப்பிடிப்பு, பாட்டுக்கள் பார்ப்பதற்கு சற்று யதார்த்தமாக இருந்தது. கதா நாயகர்களின் பேரை பார்த்து படம் பார்த்த காலம் இது. அப்போது யார் டைரக்டர், இசைய‌மைப்பாளர், ஒளிப்படப்பாளர் என்று தெரியாத காலம். பாரதிராஜாவின் டைரக்சனில், பாக்கியராஜ்ஜின் கதையில், இளையராஜாவின் இசை அமைப்பில் வந்த படம் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன். நல்ல கொம்பினேசன் உள்ள வர்கள் போட்டி போடாமல் ஒன்று சேர்ந்தால் படங்கள் வெற்றி பெறும் என்பதை இப்போது உணர்கின்றேன்.


4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

வாழ்த்துக்கள்: தமிழ் உணர்வாளர் சீமானின் படைப்பில் வந்த குடும்பப் படம். மாதவன், பாவனா நடித்த படம். இப்படியெல்லாம் குடும்பங்கள் அமையாதோ என்று எண்ணத் தோன்றுகின்ற படம். தமிழ் தனித்துவமாக உச்சரிக்கப்படுவது இந்தப் படத்தின் சிறப்பு. புலம் பெயர்ந்து தாய் தந்தையரை பிரிந்து வாழும் எம் போன்றோருக்கு குடும்பப் படங்கள் கொஞ்சம் உணர்வு பூர்வமாக அமைந்து விடுகின்றது.


5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
சேவல்: பரத், பூனம், சிம்ரன், வடிவேல் நடித்த படத்தை வீட்டில் பார்த்தோம். நல்ல படம் என்று வீட்டுக்காரர் சொல்ல, எதிர்பார்ப்பில் பார்த்ததோ தெரியவில்லை. சப் என்று போய் விட்டது. அரைத்த மாவை எவ்வளவு நாளைக்குத்தான் அரைப்பார்கள். இப்போது சினிமா எடுக்க எந்த சரக்கும் தேவையில்லையோ என்று எண்ணத் தோன்றிற்று.

6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?சிவசங்கரியின் கதையில் வந்த 47 நாட்கள் கதையை பாலச்சந்திரரின் டைரக்சனில் எடுக்கப்பட்ட " 47 நாட்கள்" திரைப்படம். வெளி நாட்டு மாப்பிள்ளை அப்பாவித் தமிழ் பெண்ணை திருமணம் செய்து வெளி நாடு கொண்டு சென்று அவள் படும் பாடுகள், பாசை பிரச்சனைகள் போன்றவற்றை வெளிப்படுத்த யதார்த்தமாக எடுத்த படம்.

"இந்தியத் தாய் நாட்டை என்ணுகின்றாள் மங்கை, சென்றிட வழியில்லை, தாய் வீட்டுத் தீபங்கள் துணையாக வாராதோ இன்று" என்ற வரிகள் எல்லோர் மனதையும் உருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

"மொழி" படம் எடுக்கப் பட்ட விதம், பாடல்கள் நடிப்பும் பிடித்திருந்தது.

7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சினிமாவிற்குள் அரசியலை விட சினிமாவிற்கு வெளியே இருக்கும் அரசியல் தான் தமிழ் நாட்டில் அதிகம். அதனால் எனக்கு பெரிதாக சொல்லத் தெரியவில்லை.

8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பதால், தமிழ்ச்சினிமா தொழில் நுட்பம் என்று பெரிதாக சொல்லத் தெரியவில்லை. கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றவற்றை சொல்லலாம்.


9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லை. இங்கு கனடாவில் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் "சினி மினி மசாலா" என்று வார விடுமுறைகளில் கேட்பதுண்டு. நிச்சயமாக அவர்கள் நிறைய தமிழ்ச்சினிமா பற்றி வாசித்து விட்டு மிகவும் சுவாரசியமாக தகவல் கூறுவார்கள். யாருக்கும், யாருக்கும் காதல், யார் முழுகாமல் இருக்கின்றார். எந்தக் கூட்டு பிரிந்தது என்று விளாசித்தள்ளுவார்கள்.

10)தமிழ்ச்சினிமா இசை?

நிறையப் பாடல்கள் பழைய பாடல் மிக்ஸ் ஆக வருகின்றது. நிறைய புது இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் உருவாகி இருக்கின்றார்கள். ஊரில் ஆரம்பித்த பாட்டுக்குப் பாட்டு இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. விஜய் டி.வி யின் சுப்பர் சிங்கர், ஜோடி, மற்றும் பல பாட்டு நிகழ்ச்சிகளால் தமிழ் சினிமாவின் இசை ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என நம்புகின்றேன்.

11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?


ஆங்கிலப் படங்கள் தான் பார்ப்பதுண்டு. "SPEED", "Phone Booth" போன்ற படங்களில் படம் எடுக்கப் பட்ட விதம் ஒரு சிறிய விடயத்தையும் இரசிக்கத்தக்க விதமாக தருவது என்னை பல தடவை சிந்திக்க வைத்துள்ளது. "American Pshyco", "How to loose a guy in 10 days" போன்ற படங்கள் மனிதர்களின் "ஈகோ" எவ்வளவு தூரம் ஆட்டி வைக்கும் என்பதையும் ஆண், பெண் உளவியல், அணுகுமுறைகளை நம்பத்தக்க வகையில் எடுத்துள்ளார்கள்.

12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


தமிழ்ச் சினிமா வளர சில படங்களை திரையில் பார்ப்பதை விட வேறு பங்களிப்பு என்று பெரிதாக சொல்ல இல்லை. ஒரு கைதியின் டயரி படம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எடுக்கப் பட்டபோது தான், ஒவ்வொரு கலைஞனும் ஒரு சிறிய காட்சி எடுப்பதற்கு, அதுவும் இரட்டை வேடம் என்றால் எவ்வளவு சிரமம் எடுக்கின்றார்கள் என்று கண்கூடாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. அதற்கேற்ப தொழில் நுட்பமும் கதை அமசங்களும் கொண்ட படங்கள் வந்தால் இது வளரும். திரைப்படக்கலைக் கல்லூரிகளின் தரம் மேலும் வளர்ச்சியடைந்து தமிச் சினிமா வளரும் என நம்புகின்றேன்.

14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒன்றும் பெரிதாகி ஆகி விடாது. தமிழ் நாட்டுப் பொருளாதாரம், இந்தத் துறையை சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலை பாதிப்படையும். தன் பாதிப்புக்கு உதவாத எதுவும் தங்களுக்கும் தேவையில்லை என்று குழப்பங்கள் எழலாம்.

அப்பாடா, ஒரு மாதிரி கிறுக்கியாச்சு, சொற்பிழை, பொருட் பிழை காணாது, வந்த வாசித்ததிற்கு நீங்களும் உங்க பாட்டுக்கு சொல்லிட்டு போங்கோ.


Read more...

December 14, 2008

தனி மனித அடையாள‌ங்களும் குழப்பங்களும்..மனிதர்களில் சிலர் தம் சுய அடையாளத்தை பெற்று கொள்ள சிலர் நட்புகளையும் உறவுகளையும் கையாளும் முறையில் வித்தியாசப்படுகின்றனர். ஒரு மனிதன் தன்னைப்பற்றிய எண்ணத்தை தன‌க்குள் குறைத்து மதித்துக் கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னைப் பற்றிய மிகைப்படுத்திய எண்ண வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் போது தனக்கும் மற்றவர்களுக்கும் சவாலாக அமைந்து விடுகின்றான்.

"பாம்பு சீறுவது " அதனுள் ஏற்பட்ட பயத்தினால் தான், தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது சீறுகின்றது. இது போல் நம்மவரில் சிலர் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காகவும், தங்களைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்பதற்காகவும் தாங்கள் கோபக்காரர்களாக காட்டி ஒரு மாய வலையை போட்டு விடுகின்றார்கள்.
அதே சமயம் இன்னொருவர் இரக்க சுபாவம் உள்ளவர் என்று அடையாளம் கண்டால், அவரை தன் வசம் இழுக்க தன் சொந்தக் கதை, சோகக்கதை சொல்லி மற்றவரின் அனுதாபத்தை பெறுவதில் முனைப்பாக இருப்பார்கள்.

ஒரு சிலர் நட்புகள், உறவுகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஒருவரைப் பற்றி மற்றவருக்கும் கருத்துக்களை பரிமாறி பிரிவினை ஏற்படுத்தி விட்டு இருவரிடமும் நண்பர்கள் போல் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள். இந்த நவீன நாரதர்கள் தாங்கள் நட்புக்களுக்கு உதவுவது போல் வெளியே சொல்லிக் கொண்டாலும் அவர்களை பிரித்து அதில் தாங்கள் உதவுவதாக நடித்துக் கொள்வார்கள். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் காணாவிட்டால் பல உறவுகளை இழந்து விடுவோம். இவர்களை அடையாளம் காணத் தான் வள்ளுவன் "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு " என்று சொல்லியுள்ளான் போலும்.

சில‌ ஆண்கள் திருமண வயதில் திருமணமாகாது, தனித்தவர்களாக வாழும்போது பலருக்கும் சவாலாக அமைந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு சமூக அடையாளம் குறைந்து விடுகின்றது. இவர்கள் தங்கள் ஆண்மையை பற்றி தன் நட்புகள் தவறாக எண்ணக் கூடாது என்பதற்காக தன்னுடன் பழகும் பெண்களைப் பற்றி குறைவாக கூறி தம்மை நியாயப்படுத்த முயல்வார்கள். ஒரு பெண்ணின் முன் இன்னொரு பெண்ணைப் பற்றி சொல்லி அதில் ஆதாயம் தேடவும் முற்படுவார்கள். இவர்கள் தங்களை நியாயப் படுத்த "மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது "என்று சொன்ன விடயங்களை மற்றவர்களிடம் போட்டுடைத்து விடுவார்கள். இதை நியாயப்படுத்த " உளவியல் பிரச்சனை" என்று சொல்ல சிலர் முனைவதும் உண்டு. என்னப் பொறுத்தவரையில் உளவியல் சம்பந்தமான வருத்தம் உள்ளவர்கள் தன்னிலை அறியாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்படி மூர்க்கதன‌மாக நடப்பவர்களின் செயற்பாடு தன்னிலை அறிந்த செயற்பாடு. உதாரணமாக குடிவெறியில் கத்திக்கொண்டிருப்பவர் பொலிசைக் கண்டவுடன் வாய் அடைத்து நிற்கின்றார். ஏன் என்றால் அவருக்கு சத்தம் போட்டால் என்ன பின் விளைவு என்று தெரிந்த படியால் தான்.

விட்டுக் கொடுத்து நடப்பவர்கள் எளியவர்களாகவும், கத்திக் குளறி நடப்பவர்கள் பலமானவார்களாகவும் சிலர் எண்ணி சிலரை கண்டு கொள்ளமலும் நடந்து கொள்கின்றார்கள். ஒருவர் அடிக்கடி கோபப்பட்டால் அது பலவீனம் அது பலம் அல்ல!

கலைஞர்கள், பொது அமைப்பு, அரசியல் உறுப்பினர்களிடையே தனி மனித அங்கீகாரத்துக்கான போட்டி பெரிதும் நிலவும். இவர்களுக்கு ஒரு மனப் பக்குவம் வேண்டும். இல்லையேல் இவர்களுக்கிடையில் இருக்கும் போட்டி பொறாமையாக வளர்ந்து பிரிவுகளும், தேவையில்லாத பிரச்சனைகளும் தோன்றுகின்றன. இதில் வால் பிடிப்பவர்களால் தான் அனேகமான பிரச்சனைகள் உருவாகின்றன.

அமெரிக்க அரசியலில் போட்டி போட்டு அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவால் பல சவால்களின் மத்தியில் தன் அடையாளத்தை அமெரிக்க மக்களின் முன் வைக்கமுடிகின்றது. தன்னுடன் கட்சித்தலைவருக்கு போட்டியிட்ட கிலறி கிளிண்ட்னை தனது அரசில் முக்கிய பகுதிக்கு அமத்தும் அளவிற்கு அவருக்கு பக்குவம் இருக்கின்றது. இந்த பக்குவம் நம்மவர்களுக்கும் தேவை.

நாலுமுழ வேட்டி கட்டி நாசனல் போட்டு நின்று அல்லது பட்டுச் சேலை கட்டி, நெற்றிக் குங்குமமிட்டு சபை தனை அலங்கரிப்பது மாத்திரம் நமது அடையாளங்கள் என்று நின்று விடாமல், மனதளவில் மற்றவர்களின் அடையாளங்களையும் மதித்து நடப்பவர்களாக முயற்சிக்க வேண்டும். கல்வி ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் கருவி, சிலர் கல்வி தம் தனி மனித அங்கீகாரத்தை தருவதாக‌ கருதி பலரை புறக் கணித்து வாழ்கின்றார்கள்.

பணம், கல்வி, அந்தஸ்து , புகழ் என்ற அடிப்படையில் மனித அடையாளங்களை பார்க்காமல் எல்லோரையுடைய‌ சுய அடையாளங்களையும் மதித்து, முடிந்தால் அவர் உங்களை கேளாமல் நீங்கள் அவருக்கு முன்னுதவ வரவேண்டும்.

வெற்றி பெற்ற மனிதர் ஒருவரைப் பற்றி நான் எழுதிய பழைய கட்டுரை வாசித்துப் பாருங்கள்.

Read more...

December 7, 2008

மும்பாய் சம்பவத்தில் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கான கனடியரின் அக வணக்கம்.

இந்திய மக்களை உலுக்கிய மும்பாய் கொடூர சம்பவம் உலகத்தின் எல்லா மூலையில் வாழும் மக்களின் மனதை பாதித்துள்ளது. பல இனங்களை சேர்ந்த மக்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூன்று கனடியர்களும் கொல்லப் பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அக வணக்கம் செலுத்துவதற்கு பல்வேறு அரசு சார் அமைச்சர்களும் பல்லினத் தலைவர்களும் கலந்து கொண்டு பிரார்த்திது கொண்டார்கள்.
ஈழத்தவனுக்கு இழப்பு என்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் துர்பாக்கியமான நிலை. அவனுக்கு மற்றவர்களுக்கு இழப்பு எற்படும் போது அதன் வலியை யதார்த்தமாக உணர்ந்தவன். இந்திய உறவுகளுடன் கை கோர்த்து நாமும் எமது பிரார்த்தனையை செய்தோம். கனடிய தமிழர் பேரவை இயக்குனர் ஒருவர், கனடாவில் வாழும் தமிழர்கள் சார்பில் குப்பி விளக்கேற்றினார்.
பல நாட்டு தூதரகங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் வணக்கத்தை தெரிவித்திருந்தார்கள். கனடிய பிரதம மந்திரியின் செய்தியை குடிவரவு குடியகல்வு பல் கலாச்சார‌ அமைச்சர் Jason Kenny வாசித்தார். அவரும் விளக்கேற்றி வணக்கத்தை தெரிவித்தார்.கனடிய அரசியலில் இந்தியர்களின் அடையாளத்தை முன் வைத்தவரும் முன்னாள் பிரிட்டிஸ் கொலம்பியாவின் முதலமைச்சரும், இந்திய அரசினால் இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்தியர்களுக்கான அதி உயர் விருது பெற்றவரும் சட்ட வல்லுனருமான Ujjal Dosanjh மிகவும் பொறுப்பான உரையை முன் வைத்தார். தீவிரவாதம் என்பது ஒரு இனத்தையோ, மதத்தையோ, மொழியையோ கொண்ட பார்வையாக இருக்காது இதை ஒழிப்பதற்கு எல்லோரும் முன் வரவேண்டும். இந்தியா உலகிலேயே ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் நாடுகளில் பெரியது, அதன் ஜன நாயகத்துக்கு சவால் என்றால், நம் எல்லோருக்கும் அது சவால் என்று குறிப்பிட்டார்.வலய உறவுகளுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தித்து நிற்போமாக!

படங்கள்: நன்றி! www.ninaivukal.com


Read more...

December 6, 2008

மேற்குலகில் நம்மவர் காதல்.மேற்குலகில் வாழும் இளையோருக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான். கல்லூரி நாட்களில் தன‌க்கு ஒரு காதல் இல்லாவிட்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று ஓர் அழுத்தம். அதற்காக காதல் இல்லாதவர்களும் காதல் ஒன்று இருப்பதாக நடித்துக் கொள்வார்கள்.பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில இளைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் தன் பிள்ளையில் நம்பிக்கையில்லாமல், அவள் போகுமிடம் எல்லாம் பின்னே திரிவார்கள். "என்ன கொடுமை அய்யா இது" என்று இவற்றை விமர்சிப்பவர்களும் உண்டு. பிள்ளை வீடு திரும்பினானா இல்லையா என்று தெரியாத ஒரு கூட்டமும் உண்டு. ஆண், பெண் இரு சாராருக்கும் தாம் மிகவும் கெட்டித்தனமானவர்கள் பெற்றோர்களுக்கு போதிய அறிவு இல்லை என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கின்றது.

கல்லூரியில் கற்கும் சில ஆண்கள் காலத்திற்கு காலம் பெட்டி மாத்திற மாதிரி காதலியை மாற்றுவார்கள், ஆனால் காதலில் தோல்வியுற்ற பெண்ணை விமர்சிப்பவர்களும் இவர்கள் தான். கல்லூரியில் அனேகமான காதல் கீரோக்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் இளைஞர்கள் பெண்களின் பலவீனத்தை நன்கறிந்தவர்களாகவும் காதலை காய் வெட்ட நொண்டிச்சாட்டில் மன்னர்களாகவும் இருப்பார்கள். அனேகமாக காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் ( ஒரு சிலர் விதி விலக்குத்தான்..). தாம் காதலித்து திருமணம் செய்ததையே பெற்ற பிள்ளைகளிடம் மறைத்து பிள்ளையின் பட்டப் படிப்பு முடிந்தவுடனேயே எங்காவது கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கனவு காண்பவர்களும் உண்டு. காதலித்த பெற்றோர் தாம் விட்ட பிழையை தன் பிள்ளை விடக் கூடாது என்ற ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டாலும் தவறான அணுகுமுறை என்பது என் கணிப்பு.

மூத்தவள் கறுவலுடன் போய்விட்டாள் என்றாள் அடுத்தவள் ஒரு தெற்காசியனை கட்டினால் போதும் என்று திருப்திப் படும் பெற்றோரும் உண்டு. இவர்கள் ஊரில் சாதி பேதம் பேசியவர்கள் என்பது தான் உண்மை. தனக்கு வருகின்ற போது தான் வாழ்க்கையில் யதார்த்தம் புரிகின்றது. ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் நம்மவர் மத்தியில் இருக்கும் சவால்களையும் தீர்வையும் அடையாளம் காணமுடியாமல் தான் இருக்கின்றது. டாக்டர் பெம்பிளை, நன்றாய் சம்பாதிக்கும் பெம்பிளை வேண்டும் என்று அலைகின்ற கூட்டமும் உண்டு.கடந்த காலங்களில் கொண்டு திரிந்தவர்கள் பேச்சு திருமணத்தை மற்றவர்களின் வாயை மூட காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு.

எனக்கு ஒரு நண்பன் அழைத்து தனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்றான். நானும் யார் அந்த கொடுத்து வைத்தவள் என்று கேட்க, ஒரு பெரிய மனிதர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் பேர்த்தி நல்ல ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கின்றாள் என்றான். அவனிடம் மேற்கொண்டு எந்தக் கேள்வியை முன் வைக்கவில்லை. நண்பன் அவளுடைய பெயரை முதல் சொல்லி அவளைப் பற்றி ஒரு சில வார்த்தை கூறியிருந்தால் நான் சந்தோசப் பட்டிருப்பேன். குடும்பப் பின்னணியையும் சம்பாதிக்கும் திறனையும் சந்தைப் படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு தோன்றியது.

காமத்தின் பிரதிபலிப்பு தான் காதல் என்போரும், நட்பின் ஒரு பரிமாணம் தான் காதல் என்போரும் விவாதித்துக் கொண்டாலும், இந்த காந்தர்வ கவர்ச்சிக்கு காரணம் அறிய முடியாமல் தான் இருக்கின்றது. மேற்குலகில் வாழும் இளைஞர்களுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எண்ணங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நண்பர்களைப் போல நடத்தினால் அவர்களின் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால் 3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு. இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை. ஊரில் "சரக்கு" என்று இளம் பெண்களை அழைக்கும் வழக்கம் உண்டு, அதற்கு விளக்கமறிய வர்த்தக ஆசிரியரை கேட்ட போது " விற்பனைக்குள்ள பொருள் சரக்கு எனப்படும்" என்றார். இப்படி திருமணங்கள் இன்றும் ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.

இக்கட்டுரை என் கண்ணில் பட்ட அல்லது கேட்டவற்றை அடிப்படையாக கொண்டது. உங்கள் பார்வையையும் தாருங்கள்.


Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP