இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள், மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுத் தரவேண்டுமா? குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே என்று பலரும் பல கருத்துக்களை முன் வைக்கின்றார்கள். இந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. சென்னையிலிருந்து உளவியல் நிபுணரும், சமூக சேவகியுமான டாகடர் சாலினி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து குழந்தை வளர்ப்பை பற்றி அறிவு பூர்வமானதும் நாம் எல்லோரும் அறிய வேண்டிய கருத்துப் பதிவு.
மேற்குலகில் வாழும் இளையோருக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான். கல்லூரி நாட்களில் தனக்கு ஒரு காதல் இல்லாவிட்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று ஓர் அழுத்தம். அதற்காக காதல் இல்லாதவர்களும் காதல் ஒன்று இருப்பதாக நடித்துக் கொள்வார்கள்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில இளைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் தன் பிள்ளையில் நம்பிக்கையில்லாமல், அவள் போகுமிடம் எல்லாம் பின்னே திரிவார்கள். "என்ன கொடுமை அய்யா இது" என்று இவற்றை விமர்சிப்பவர்களும் உண்டு. பிள்ளை வீடு திரும்பினானா இல்லையா என்று தெரியாத ஒரு கூட்டமும் உண்டு. ஆண், பெண் இரு சாராருக்கும் தாம் மிகவும் கெட்டித்தனமானவர்கள் பெற்றோர்களுக்கு போதிய அறிவு இல்லை என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கின்றது.
கல்லூரியில் கற்கும் சில ஆண்கள் காலத்திற்கு காலம் பெட்டி மாத்திற மாதிரி காதலியை மாற்றுவார்கள், ஆனால் காதலில் தோல்வியுற்ற பெண்ணை விமர்சிப்பவர்களும் இவர்கள் தான். கல்லூரியில் அனேகமான காதல் கீரோக்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் இளைஞர்கள் பெண்களின் பலவீனத்தை நன்கறிந்தவர்களாகவும் காதலை காய் வெட்ட நொண்டிச்சாட்டில் மன்னர்களாகவும் இருப்பார்கள். அனேகமாக காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் ( ஒரு சிலர் விதி விலக்குத்தான்..). தாம் காதலித்து திருமணம் செய்ததையே பெற்ற பிள்ளைகளிடம் மறைத்து பிள்ளையின் பட்டப் படிப்பு முடிந்தவுடனேயே எங்காவது கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கனவு காண்பவர்களும் உண்டு. காதலித்த பெற்றோர் தாம் விட்ட பிழையை தன் பிள்ளை விடக் கூடாது என்ற ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டாலும் தவறான அணுகுமுறை என்பது என் கணிப்பு.
மூத்தவள் கறுவலுடன் போய்விட்டாள் என்றாள் அடுத்தவள் ஒரு தெற்காசியனை கட்டினால் போதும் என்று திருப்திப் படும் பெற்றோரும் உண்டு. இவர்கள் ஊரில் சாதி பேதம் பேசியவர்கள் என்பது தான் உண்மை. தனக்கு வருகின்ற போது தான் வாழ்க்கையில் யதார்த்தம் புரிகின்றது. ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் நம்மவர் மத்தியில் இருக்கும் சவால்களையும் தீர்வையும் அடையாளம் காணமுடியாமல் தான் இருக்கின்றது. டாக்டர் பெம்பிளை, நன்றாய் சம்பாதிக்கும் பெம்பிளை வேண்டும் என்று அலைகின்ற கூட்டமும் உண்டு.கடந்த காலங்களில் கொண்டு திரிந்தவர்கள் பேச்சு திருமணத்தை மற்றவர்களின் வாயை மூட காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு.
எனக்கு ஒரு நண்பன் அழைத்து தனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்றான். நானும் யார் அந்த கொடுத்து வைத்தவள் என்று கேட்க, ஒரு பெரிய மனிதர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் பேர்த்தி நல்ல ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கின்றாள் என்றான். அவனிடம் மேற்கொண்டு எந்தக் கேள்வியை முன் வைக்கவில்லை. நண்பன் அவளுடைய பெயரை முதல் சொல்லி அவளைப் பற்றி ஒரு சில வார்த்தை கூறியிருந்தால் நான் சந்தோசப் பட்டிருப்பேன். குடும்பப் பின்னணியையும் சம்பாதிக்கும் திறனையும் சந்தைப் படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு தோன்றியது.
காமத்தின் பிரதிபலிப்பு தான் காதல் என்போரும், நட்பின் ஒரு பரிமாணம் தான் காதல் என்போரும் விவாதித்துக் கொண்டாலும், இந்த காந்தர்வ கவர்ச்சிக்கு காரணம் அறிய முடியாமல் தான் இருக்கின்றது. மேற்குலகில் வாழும் இளைஞர்களுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எண்ணங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நண்பர்களைப் போல நடத்தினால் அவர்களின் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால் 3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு. இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை. ஊரில் "சரக்கு" என்று இளம் பெண்களை அழைக்கும் வழக்கம் உண்டு, அதற்கு விளக்கமறிய வர்த்தக ஆசிரியரை கேட்ட போது " விற்பனைக்குள்ள பொருள் சரக்கு எனப்படும்" என்றார். இப்படி திருமணங்கள் இன்றும் ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.
இக்கட்டுரை என் கண்ணில் பட்ட அல்லது கேட்டவற்றை அடிப்படையாக கொண்டது. உங்கள் பார்வையையும் தாருங்கள்.
வலய உறவுகளுக்கு ஒரு அறிமுகத்தை தந்துவிட்டு ரொரன்ரோவை கலக்கி கொண்டுள்ள ஒரு பிரச்சனையை பற்றி விளக்குகின்றேன்
கனடிய தமிழ் வானொலி:
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன் 2801B எக்ளின்ரன் அவெனியு என்ற முகவரியில் கலாதரனின் தலமைக்கு கீழ் ஆரம்பிக்கப்பட்டது. பல வானொலிக் கலஞர்களை உருவாக்கிய பெருமை இந்த வானொலிக்கும் உண்டு. இந்த வானொலியின் பங்குதாரர்கள் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டு தான் இருந்தார்கள். இந்த ஃப்ம் 2ம் தர அலவரிசை வானொலிகள் என்று அழைக்கப்படும். சாதாரண வானொலிகளில் கேட்க முடியாது. பிரத்தியேகமான வானொலிப் பெட்டி தேவை. இப்படியான வானொலி சேவைகள் மாத்திரமே இருந்தது. 2003 இல் சாதரண FM அலைவரிசை எடுப்பதற்கு போட்டி போட்ட போது, கனடிய தமிழ் வானொலியின் உதவியுடன் நேயர்களின் கையெழுத்து வேட்டையில் கிடைத்த பரிசு தான் "கனடிய பல்கலாச்சார வானொலி" . ஆரம்பத்தில் சகோதர வானொலி என்று சொல்லப்பட்டாலும் இடை இடையே முறுகல் நிலை தோன்றி இருக்கின்றது. ஆரம்பத்தில் வருவாய் எடுப்பதில் சிரமப்பட்ட கனடிய தமிழ் வானொலிக்கு கை கொடுப்பார் யாருமில்லை.
கனடிய பல் கலாச்சார வானொலி:
அனேகமான கலைஞர்கள் கனடிய தமிழ் வானொலியில் இருந்து தான் இந்த வானொலியில் சேர்ந்து கொண்டார்கள். இது ஒரு பல்கலாச்சார வானொலி என்பதால் மற்ற மொழி இனத்தவருக்கு வானலை நேரத்தை விற்று நல்ல பணம் சம்பாதிக்கும் வானொலியாக மாற்றம் கொண்டது. இந்த வானொலி நிர்வாகத்திற்கு கனடிய தமிழ் வானொலியில் ஒரு பெரிய பங்கு உள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலி தமிழர் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் அமைந்திருக்கின்றது.
கடந்த மே மாதம் 11ம் திகதியில் இருந்து கனடிய தமிழ் வானொலி(CTR) 306, ரெக்ஷ்டேல் புலவாட் பகுதிக்கு மாற்றம் பெற்றதாக அறிந்தேன். தகவலை அறிய CTR ஊழியர்களை தொடர்பு கொண்ட போது அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. வானொலியின் இயக்குனருக்கோ, ஊழியர்க்கோ தெரியாமல், பல்கலாச்சார வானொலி நிர்வாகத்தை சேர்ந்த (CTR ஐ நிர்வாகம் செய்பவர்கள்) அடாவடித்தனமாக ( சில கதவுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு) வானொலி நிலையத்தில் உள்ள எல்லா தொழில் நுட்ப உபகரணாங்களை ஏற்றி சென்று விட்டார்கள். அத்துடன் நின்று விடாமல், வானொலி நிலையத்தின் முன் கதவை பூட்டை மாற்றி விட்டு வானொலி நிலையம் இடம் மாற்றப்பட்டதாக இந்த அறிவிப்பு வாசலில் போடப்பட்டிருந்தது.
இயக்குனரும், ஊழியர்களும் மிகவும் கோபமடைந்திருந்தனர். பூட்டை உடைத்து கொண்டு உள் சென்று நிலைமையை பார்த்த போது தான் என்ன நடந்தது என்று தெரிந்தது. இந்த இடம் CTR இயக்குனரின் பேரில் வாடகைக்கு இருப்பதால் அவரின் அனுமதி இல்லாமல் உள்ளே சென்று நடந்த விடயம் ஒரு சாதாரண மனிதனையும் கேள்வி கேட்க வைக்கும்
இப்போது உள்ள வானொலி நிலையத்தின் நிலை. பார்த்து நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.
1. இந்த நிர்வாகத்தினர் தங்கள் பக்கம் நேர்மை இருந்தால் ஏன் இந்த அடாவடித்தனம் செய்ய வேண்டும்?
2. உங்கள் பொறுப்பில் நிர்வாகம் இருந்தால் யாரையும் நீக்கலாம், அதற்கு ஒரு உரிய முறை உண்டு. பல பில்லியனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களே தங்கள் பங்குதாரர்களுக்கு தங்கள் நடவடிக்கையை சொல்ல வேண்டும். CTR இயக்குனர் பங்குதாரர் ஆக இருந்தும் அவருக்கும் சொல்லாமல் நடந்து கொண்டது ஏன்?
3, தங்கள் பக்கம் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இருப்பதால் எளிதாக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நம்பினார்களா?
மக்களின் கை எழுத்து சேர்க்கையால் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனத்தின் முகாமைத்துவம், மக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். கடந்து வந்த பாதைகளை மறக்கக் கூடாது. நிர்வாகம் வர்த்தகர்களையும் நேயர்களையும் நம்பி வியாபாரம் நடத்துபவர்கள் மக்களை மதிக்காவிட்டால், மக்களும் தங்கள் பலத்தை காட்ட வேண்டும். தேவைகளுக்கு மாத்திரம் பொது சேவை நிறுவனங்கள் என்று அடையாளம் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது.
சில ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை தேசியத்தை நேசிப்பதாக சொல்லிக் கொண்ட சிலர் அவரை புறம் தள்ளினார்கள். பின்னாளில் இதற்காக வருந்தினார்கள். இது போல் மக்களின் மனங்களை வென்ற கனடிய தமிழ் வானொலி இயக்குனரையும், ஊழியர்களையும் கருத்தில் கொள்ளாமல் விட்டுள்ள நிர்வாகம் அதற்கான ஒரு விலையை கொடுக்க வேண்டிய காலம் வரும்.
வருடங்கள் பல வந்து போயினும் உதிக்கின்ற புது வருடம் புத்துணர்வையும் பல விடயங்களுக்கு ஒரு விடிவையும் தேடி தரும் என்று நம்பி வலய உறவுகளுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்து, வழமை போல் எனது கிறுக்கலை தொடர்கின்றேன்.
கடந்து வந்த பாதையை சில கணங்களாவது எண்ணி பார்க்க முடிபவர்களால் தான் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாம் இன்று ஓரளவுக்காவது இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம் என்றால் பலர் செய்து விட்ட தியாகங்கள் தான் காரணம்.
தியாகம் என்றால்,
எங்களை பற்றி சிந்திக்கின்ற தன்மையை குறைத்துக் கொண்டு, மற்றவர்களின் நன்மை கருதிய எண்ணங்களை மேலும் மேலும் வளர்த்து, எம்மை மற்றவர்களிற்கான சேவையில் ஈடுபடுத்தி, எங்களிடம் இருப்பதில் மற்றவர்களுக்கு எங்கள் நேரத்தையோ, செல்வத்தையோ அல்லது வாழ்க்கையோ கொடுப்பது தான் தியாகம். முடியாவிட்டால், மற்றவர்களின் கஷ்டத்தில் ஒரு ஆறுதல் வார்த்தை, அல்லது ஒரு தோள் கொடுப்பு போன்றவையும் தியாகங்களே.
இப்படியான எண்ணக்கருக்களை நாம் வளர்த்துக் கொள்வதால் தான் பொதுச்சேவையில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளலாம். இப்படியான பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களூக்கு புகழும் மதிப்பும் அவர்களை தேடிவரும். இப்படியானவை சுய நலவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையினாலும் தங்கள் இயலாமையினாலும் பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களின் மனதை காயப் படுத்துவதே இச் சுய நலவாதிகளின் முனைப்பாக இருக்கும்.
இதனால், இந்த சுய நலவாதிகள் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களின் நெருங்கிய உறவுகளை அணுகி, அவர்களை தங்கள் பகடை வார்த்தையில் நம்ப வைத்து ( தாங்கள் மற்றவர்களின் நலத்தில் அக்கறை கொள்வதாக நம்ப வைத்து விடுவார்கள் _ இதை பொது நலம் என்று சிலர் நம்பி விடுகின்றார்கள்) ஏமாற்றி விடுகின்றார்கள். அடிக்கடி வீடுகளில் மனவிமார் சொல்லுவார்கள் " ஊருக்கு உதவுபவன் வீட்டுக்கு உதவ மாட்டான்". இது யாரும் ஞானியோ, யோகியோ சொல்லி விட்ட சித்தார்ந்தம் அல்ல, சுய நலவாதிகளால் மற்றவர்களின் குடும்பத்தில் சிக்கலை உருவாக்குவதற்கு கூறப்பட்ட மந்திரமே இது.
ஈழத்தில் தம்முயிரை தியாகம் செய்யும் எம் வீர மறவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏது? நாமும் இந்த வாழ்வியலில் பங்காளர்கள், எமது கடமையை நாம் செய்ய தவறக்கூடாது. நாமும் பொது நலத்தில் ஈடுபடுகின்ற போது தான் எமக்கான விடியல் கிடைக்கும். நான் பெரியவன், நீ சிறியவன் என்ற அகந்தைகளை விட்டு உறவுகளுடன் மனம் விட்டு உரையாடி சந்தோசமாக ஒரு புதிய வேகத்துடன் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்.
வாழ்வியலில் இளமை ஒரு மறக்கமுடியாத பருவம். எந்த கனவையையும் நனவாக்க துடிக்கும் ஒரு மிடுக்கு கொண்ட பருவம். இந்த இளமைப் பருவத்திலும் எல்லா விருப்பு வெறுப்புக்களையும் ஓரம் கட்டி விட்டு விடுதலை எனும் வேட்கையில் இணைந்து சுதந்திரத்திற்காக போராடும் ஈழத்து இளையவர்கள் பலர்.
மனித வாழ்வியலில் உடல், மனம், உயிர் (ஆன்மா) இவை மூன்றும் இணைக்கபட்டு இருந்தால் தான் அவன் மனிதன் எனப்படுவான். உடல் உணவுக்காகவும், உயிர் அன்புக்காகவும், மனம் அறிவுக்காகவும் தேடிக் கொண்டே இருக்குமாம்.
கிணற்றுத்தவளையாக வாழ்வோருக்கும், உணவும், அன்பும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். அறிவு என்பது கிடைப்பதற்கு கல்வி வாய்ப்பு , சூழ இருக்கும் சமூகம், பல்வேறுபட்ட மனிதரின் சந்திப்புக்கள் போன்றவை தேவையாகிவிடுகின்றது.
தகவல் தொழில் நுட்பம் என்று சொன்னால் அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று எல்லோருக்கும் தெரியும். அறிவை மூலதனமாக்கி இந்த நகரில் வாழுகின்ற ஈழத்து இளைஞர்களின் முயற்சியையே இங்கு தருகின்றேன்.
இந்த நகரில் இருந்து கொண்டு "சர்வதேச தமிழ் தொழில் நுட்பவியலாளர் கழகம் ( ITTPO - International Tamil Technical Professional Organization) என்ற சமூக நோக்குடைய நிறுவனத்தை 2002ம் ஆண்டு நிறுவி, ஈழத்திலிருப்போருக்கும் தொழில் நுட்ப அறிவை கொடுப்பதற்கு வழி தேடினார்கள். அமெரிக்கர்களுக்கு ஒரு M.I.T ( Massachusetts Institute of Technology) போல, இந்தியர்களுக்கு ஒரு I.I.T ( Indian Institute of Technology) போல, ஈழத்தவர்களுக்கு ஒரு V.I.T( Vanni Institute of Technology) ஆரம்பிக்க திட்டம் போட்டார்கள்.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கனடிய தமிழ் வானொலியில் "மின் கணணி உலகம்" என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியுள்ளேன். வேலைப் பழுவினால் இப்பொழுது செய்ய முடியவில்லை. 2002ம் ஆண்டு "வன்னி ரெக்" என்ற திட்டத்தை பற்றி ஒரு பேட்டி நிகழ்ச்சியை தயாரித்திருந்தேன். சுமார் 5 வருடங்களின் பின், இந்த வெற்றி பெற்ற இத்திட்டத்தினை உங்களுக்காக கொண்டு வருகின்றேன்.
5 வருடங்களுக்கு முன்பு......
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்:
உதயன் : இலங்கை வானொலியில் பயிற்சி பெற்று, முழு நேர வானொலி அறிவிப்பாளனாக கனடாவில் இப்போதுமிருக்கின்றார். திவாகரன் : கணணிவல்லுனர், எனது தயாரிப்பில் உதவியாளர். காரூரன் ( இது எனது புனை பெயர்): நிகழ்ச்சி தயாரிப்பாளர்.
பங்குபற்றியோர் :
1. ஜெ. குமாரசூரியர்
பல வருடமாக அமெரிக்க மண்ணில் வாழ்ந்து வருபவர். Electrical Engineering பட்டதாரியான இவர். கணணி துறையில் பல வருடமாக வேலை செய்து வருகின்றார். வன்னி ரெக் என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர். ஒரு வருடத்திற்கு மேலாக வன்னி மண்ணில் இருந்து இந்த திட்டத்தை வழி நடத்தியவர்.
2. விமல் ராஜ்கோபால்
இவரும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் பல வருடமாக மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர். தற்பொழுது ஒரு மென்பொருள் தயாரிப்பு முகாமையாளராக இருக்கின்றார். வன்னி திட்டத்திற்கு "ஜெ"இற்கு உதவியாக உள்ளவர்.
3. நவா நவரூபராஜா
இந்தியாவில் IIT- Chennai - பொறியியல் துறையில் கல்வி கற்று பின் California Berkeley பல்கலைக்கழகத்தில் கணணி துறையில் முது நிலை பட்டம் பெற்று HP நிறுவத்தினத்தில் Architect ஆக இருக்கின்றார். எனது பாடசாலை தோழன்.
இந்த பேட்டி 2002ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த பேட்டியின் ஒரு சில பகுதிகளை எழுத்துருவத்தில் கீழே தந்துள்ளேன்.
காரூரன் (CTR):வன்னி டெக் திட்டம் என்றால் என்ன?
நவா நவரூபராஜா: ஈழத்தில் அமைதி உடன் படிக்கை ஏற்பட்டு பல தரப்பட்ட முயற்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஈழத்தை கட்டி எழுப்பும் பணிகளில் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதே நேரத்தில் எமது மக்கள் பலவற்றை இழந்து, அவர்கள் தொழில் நுட்ப அறிவில் 20ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அமைதியை கட்டி எழுப்பி, மக்களை முன்னேற்ற வேண்டுமாயின் ,இவர்களை உலக அளவாகிய மக்களுடன் நாம் சரிசமமாக கொண்டு வரவேண்டும். இந்த போட்டியான உலகத்தில், அது மட்டுமல்ல மற்றவர்களுடன் வாழ வேண்டுமாயின் நாங்கள் எங்கள் மக்களை மற்றவர்களை விட இந்த தொழில் நுட்ப துறையில் முன்னுக்கு கொண்டு வரவேண்டும். இந்த தார்மீக கடமை, புலம் பெயர்ந்து வாழும் எல்லா தமிழ் மக்களுக்கும் உண்டு. அந்த நடவடிக்கையை நாங்கள் செய்ய வேண்டுமாயின் எமது மக்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த கல்வி அறிவினை கொடுக்க வேண்டியது அவசியாமாகி விடுகின்றது. அந்த கல்வி அறிவினை புகுத்தினால் அதை தொடர்ந்து வரும் பொருளாதார புரட்சி மூலம் எமது மக்கள் நிச்சயமாக முன்னுக்கு வரலாம். இவ்வளவு காலம் நாம் எமது உரிமைகள் பலவற்றிற்காக போராட்டம் போன்ற நடவடிக்கையில் போராடினோம். இனி வரும் போராட்டங்களை எமது பொருளாதார மறுமலர்ச்சிக்காகவும் எடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்த்தத்தில் உள்ளோம். இப்படியான நிலையில் பல திட்டங்களை உடனடியாக செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இப்படியான நிலையில் சிலிக்கன் பள்ளத்தாக்கு உள்ள பலர் ஒன்று சேர்ந்து ஜெ. குமாரசூரியர் தலைமையில் வன்னி ரெக் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. உயர் தொழில் நுட்பத்தை எடுத்து செல்வதற்கு எடுத்து செல்லும் திட்டம். இதில் பல தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வெளி நாடுகளில் வாழும், பல தொழில் நுட்ப வல்லுனர்களை உள்ளடக்கிய முயற்சி தான் இது. இந்த முயற்சியை பற்றி "ஜெ" அவர்கள் மேலும் விரிவாக கூறுவார்கள்.
ஜெ. குமாரசூரியர்:
ரூபன் மிகவும் அழகாகவும் விரிவாகவும் கூறினார். இதை நான் கொஞ்சம் விரிவாக சொல்வதாக இருந்தால், வன்னி இன்சிடிடியூட் ஒஃப் ரெக்னொலயி என்ற கல்லூரியை நிறுவுவதை தான் வன்னி ரெக் என்று அன்பாக அழைக்கின்றோம். ஈழ தமிழ் மக்களின் உயர் தொழில் நுட்ப இடைவெளியை நிரப்புவதற்கு அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. இன்றைய சமாதான சூழ் நிலையில், எமது மக்களின் அரசியல் நிலைமைகள் தீர்க்கப் படுமாயின், எமது தாய் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவையும் பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினதும், தாயகத்தில் வாழும் மக்களின் பொறுப்பு. அங்கு நடந்த போரினால் எமது மக்களின் வாழ்க்கை தர நிலைமைகள் பின் நோக்கி நகர்த்தப்பட்டது மாத்திரம் அல்ல, இன்று சமாதான நிலைமைகள் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை தரத்தையோ அல்லது கல்வி தரத்தையோ திடமாக முன்னோக்கி கொண்டு வர பல வருடங்கள் ஆகலாம். ஆனால், இந்த பல வருடங்களாகி விடும் முயற்சிகளை சில வருடங்கள் ஆக்குவது உலகெல்லாம் பரந்து வாழுகின்ற புலம் பெயர்ந்த மக்களாகிய எங்களுக்கு உண்டு.
அது ஒரு புறமிருக்க , நம்மவர்களில் பலர் வெளி நாடுகளில் உயர் தொழில் நுட்ப துறைகளில் வல்லுனர்களாகவோ கைதேர்ந்தவர்களாகவோ பல நாடுகளில் வாழுகின்றார்கள். இவ்வாறு நிலைமைகள் இருந்தாலும் தாயகத்தில் நம்மவர் இந்த தொழில் நுட்பத்தில் பின்னோக்கி தான் இருக்கின்றார்கள். இந்த பிரச்சனையும் அதற்கான தீர்வும் எம்மிடமே இருக்கின்றது. பல நாடுகளில் வாழும் உயர் தொழில் நுட்ப துறையில் வாழுகின்ற வல்லுனர்களையும் அவர்களது நண்பர்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் கூட்டு மொத்தமான அறிவை ஒன்று சேர்த்து அங்குள்ளவர்களுக்கு எடுத்து செல்லும் முயற்சி தான் இது. அங்குள்ள மக்களின் திறமையை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தான் முக்கியமாக தேவைப்படுகின்றது.
திவாகரன்(CTR): அழகாக திட்டத்தை பற்றி கூறினீர்கள். இந்த வன்னிதிட்டத்தை நடைமுறைப் படுத்த என்ன செய்ய வேண்டும்?
ஜெ. குமாரசூரியர்: இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முயற்சியை , முதலில் உலகத்தில் உள்ள எல்லா தமிழ் தொழில் நுட்ப வல்லுனர்களை ஒரு அமைப்புக்கு கீழ் கொண்டு வர எண்ணி International Tamil Technical Professional Organization (ITTPO) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். எல்லா நாடுகளிலிருந்தும் வல்லுனர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். வன்னியில் ஒரு உயர் தொழில் நுட்ப கல்லூரி ஆரம்பிப்பதே எங்கள் நோக்கம்.
உதயன்(ctr)
இந்த முயற்சிக்கு வெளி நாட்டு தமிழர்களிடம் எவ்வளவு வரவேற்பு இருக்கின்றது?
ஜெ. குமாரசூரியர்:
ஆம், தமிழில் சொல்வதனால், பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
காரூரன்:
நல்ல விடயம். எந்த ஒரு முயற்சிக்கும் ஆயத்தங்கள் தேவை. இதை செய்ய வேண்டிய இடத்தில் செய்ய கூடிய அனுகூலங்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஈழத்திற்கு சென்றிருந்தீர்கள். அப்போது யார் யாரை சந்தித்தீர்கள், எப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தன என்று எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஜெ. குமாரசூரியர்:
நிச்சயமாக! இந்த வன்னி ரெக் ஆரம்பிப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பிதற்காகவும், இந்த பாடசாலையின் தேவை, அங்குள்ள மாணவர்களின் படிப்பறிவு, பாடசாலையை இயக்க கூடிய சூழல் போன்றவற்றை ஆராய்வதற்காக கடந்த மாதம் வன்னிக்கு ஒரு பயணம் செய்திருந்தேன். 3 வார காலத்தில் நான் பல தலைவர்களையும் மக்களையும், அறிஞர்களையும் சந்தித்து உரையாடி வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அந்த அறிக்கையில் வன்னி ரெக் ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் கூறியுள்ளேன். இக்கல்லூரி ஆரம்பிப்பதற்கான ஒரு தற்காலிகமான இடத்தையும் தெரிவு செய்துள்ளேன். தற்போது அதற்கான ஆயத்தங்களை செய்த வண்ணம் உள்ளோம். மீண்டும் தை மாதம் வன்னி செல்வதாக உத்தேசித்துள்ளேன்.
அங்குள்ளவர்கள் இந்த கல்லூரியை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தே இருக்கின்றார்கள். எவ்வளவு தெரியாது என்பதை தெரிந்து வைப்பது அவசியம், அது அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது.
உதயன்(ctr)
அதே வேளை, இந்த விடயமாக பல்கலைக்கழக மாணவர்களை, பாடசாலை மாணவர்களை சந்தித்திருப்பீர்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் எப்படி?
ஜெ. குமாரசூரியர்:
ஆம், பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தேன். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தேன், குறிப்பாக அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்தித்து உரையாடிய போது, மிகவும் ஆர்வாகமாக இருந்தார். தாய்லாந்திற்கு பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையிலும் என்னுடன் நேரத்தை ஒதுக்கி சந்தித்தது எவ்வளவு இந்த திட்டம் எவ்வளவு முக்கியம் பெறுகின்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.
மேலும் இந்த பேட்டியை அறிய வேண்டுமாயின் கீழே இருக்கும் ஒலிப்பதிவைக் கேட்கவும்.
மேலே தரப்பட்ட பகுதி திட்டத்தை ஓரளவு அறிமுகப்படுத்தியிருக்கும் என்று நம்புகின்றேன். இந்த திட்டத்தில், பாடத்திட்டம் தயாரித்தல் மற்றும் சில முயற்சிகளில் உதவியாக இருக்க வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.
இன்று வன்னிரெக் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது.
இந்த படங்களை பாலா எடுத்து தந்திருந்தார். எல்லோரும் பாலா அண்ணை என்று செல்லமாக அழைப்பார்கள். தேசியத்துடன் தன்னை இணத்திருக்கும் நட்புகளில் இவரும் ஒருவர். இந்த வன்னி ரெக்கை பற்றி மேலும் அறிய வேண்டுமாயின், Vanni Institute of Technology
நானும் எனது வாழ்த்துக்களை இந்த திட்டத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் பங்களிப்புகளை செய்ய வேண்டுமாயின் ITTPO இனை தொடர்பு கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் என் நிஜப் பெயரில் (Gana) தான் பங்களிப்பு செய்துள்ளேன்.
அவசரமான உலகிலே, உறவுகளின் நிலைமைகள் சற்று மன வருத்தம் தருவதாகவே இருக்கின்றது. அழையா விருந்தாளியாக ஒரு உறவை நாடி சென்ற அனுபவத்தை கிறுக்கிய போது,
மேலைத்தேச உறவுகள்
உரிமையுடன் அழைப்பு மணி அடித்தேன் அழையா விருந்தாளியாய், பரிவுடன் திறந்தது கதவு அட நீங்களா! என்றது ஓர் குரல் ஆரவாரத்துடன் அல்ல, அலுத்து கொண்டு முகவரி தவறினேனா என்று எண்ணி ஒரு கணம் திகைத்து நின்று சுதாகரித்து கொண்டு எப்படி என்று நானும் சுகம் வினவ, நிசப்தமே பதிலானது.
வாசல் கதவு திறந்தே இருந்தன, சுள் என்று ஒரு உணர்வு என்னை சுடவும் ஓரிரு அடிகள் உள்ளே எடுத்து வைக்க அடுக்களையில் இருந்து ஓர் குரல் அதிலை இருங்கோ என்று
அவசரமாய் அவள் எங்கே என்றேன் ஆதங்கத்துடன், இப்பத்தான் தூங்கினாள், அவளுக்கு சத்தம் பிடிக்காது என்றாள் அவள் அன்னை.
மாடியிலேயோ என்றேன் நான், மறுமுறை அடித்து விட்டு வாருங்கள் என்றது பதில்.
சிறைகளிற்குள் சிக்கிவிட்ட உணர்வுகள், மறுமுறை வரலாமா என்ன தவறு நான் செய்தேன் இவர்களுக்கு, ஆயிரம் கேள்விகள் எனக்குள்,
ஆதங்கத்தை அடக்கிக் கொண்டு, ஆசுபத்திரிக்கு வரமுடியலை அலுவலக வேலையாலை அது தான் இப்ப நான் இன்று.... என்றேன் அசடு வழிய அதற்கும் ஏதும் பதிலில்லை.
அவசரமாய் இருக்கிறியள் போல அப்புறமாய் வாறேன் என்று சொல்லி கொண்டே வெளியேறினேன் அப்போது தான் உறைத்தது நான் மச்சானும் இல்லை மாமனும் இல்லை மூன்றாவது மனிதன் மட்டும்.
கிறுக்கி முடித்துவிட்டு, மனதை திசை திருப்ப வானொலியின் ஒலியை கூட்டிய போது, வைரமுத்துவின் வரிகளில் வந்த பாடலின் இந்த வரிகள்
"உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால் உலகம் ரொம்பச் சின்னதடா ஊனப்பட்ட நிலவும் ஒருநாள் பௌர்ணமி ஆகுமடா"
வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகில், உலகம் கைகளுக்குள் வந்துவிட்டது போல் ஒரு உணர்வு. வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு பட்ட மனிதர்களுடன் பழக கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இதில் யார் நண்பர்கள் ? நாம் தெரிவு செய்பவர்களா அல்லது நம்மை தெரிவு செய்பவர்களா நண்பர்கள்? என் வாழ்க்கையில் இந்த கேள்வி பல தடவை எழுந்திருக்கின்றது. விடை காண பல தடவை முயற்சித்துள்ளேன் ஆனால் இன்றும் பதில் காண முடியவில்லை.
நண்பர் என்றால் என் வயதை ஒத்தவராக இருக்க வேண்டுமா , எனது பாலை ஒத்தவராக இருக்க வேண்டுமா, எனது துறையை ஒத்தவராக இருக்க வேண்டுமா அல்லது எனது விருப்புகளுக்கு ஒத்தவராக இருக்க வேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், எல்லா தரப்புகளிலும் நட்புகள் இருப்பது யதார்த்தமாகி விடுகின்றது.
" தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்"
இந்த வள்ளுவனின் குறளை நினைவுபடுத்தி நட்புகளால் ஏமாற்றப்படும் போது எல்லாம், இவர்களிடம் இருந்தும் ஒரு சிறிய உதவியாவது பெற்றிருக்கின்றோம் என்று எண்ணி முரண்படுவதை விடுத்து ஒதுங்கி வாழ்ந்திருக்கின்றேன்.
என் வாழ்வின் வெற்றிக்கு பல நட்புகள் தான் உதவின என்பது உண்மை. அதே நேரம் நட்பு, என்ற போர்வையில் என்னை தோற்கடிக்க முயற்சித்தவர்களும் உண்டு என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
" அவர் அப்படித்தான்" என்று ஒரு நட்பை பிடிகொடுத்து விடாமல் இன்னொரு நட்பு கூறுவதை கேட்டிருப்பீர்கள். "அவர் அப்படித்தான்" என்று வரையறுக்கப்பட்ட வாழ்வியலை கொண்டவர்கள் யாரும் இல்லை. பண்பு, பாசம், பொறுமை என்ற நல்ல குணங்களை தங்களுக்கு தேவையானவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொண்டு, மற்றவர்களிடம் தாங்கள் கோபமானவர்கள், எடுத்தெறிந்து பேசுவது தஙகள் சுபாவம் என்று ஒரு வேடம் போடுபவர்களை தான் " அவர்கள் அப்படித்தான்" என்கிறார்கள்.
"உன் உறவுக்காக நீ முயற்சிக்காமல் விட்டால், உனக்கு அந்த உறவு வேலை செய்யாது" என்ற பழ மொழியில் எவ்வளவு அர்த்தம். போட்டி பொறாமையாகின்ற போது தான் அனேகமான உறவுகள் தோற்றுவிடுகின்றன. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவி செய்த நட்புகளையும் பார்த்திருகின்றேன். தம் தேவைகளுக்கு மட்டும் தான் நட்புகள் என்று வேடம் போடும் கூட்டத்தையும் பார்த்திருக்கின்றேன்.
ஒரு சிலர் மற்றவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு, அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஒருவருக்கு மது குடிக்க பிடிக்கும் என்றால் அவருக்கு தான் இலவசமாக மதுவை வாங்கி கொடுத்து தனக்கு பல மடங்கு பயனை பெற்று கொள்வார்கள். இவர்கள் மற்ற நண்பர்களுக்கு ஒரு காப்பி கூட வாங்கித்தராத வள்ளல்கள்.
ஒட்டுண்ணி தாவரங்கள் எச்சங்களின் மிச்சங்களால் காவப்பட்டு, வலிய மரங்களை உறிஞ்சி வாழுபவை. மற்றவர்களின் முதலையும் உழைப்பையும் உறிஞ்சி, காலத்துக்கு காலம் ஒவ்வொருவரை ஏமாற்றி நட்பு என்ற போர்வையில் குளிர் காய்வோர் சிலர்.
நட்பு எனபது இரு மனங்களிடையே ஏற்படும் ஒரு பிணைப்பு. இது ஒரு மூன்றாவது மனத்தின் பிரதிபலிப்பாக இருக்க கூடாது. எதிரிக்கு எதிரி நண்பன் என்றோ அல்லது நண்பனின் எதிரி எனக்கும் எதிரி என்று ஒரு நட்பை எதிர்த்து கொள்வதோ உண்மையான நட்பாக இருக்கமுடியாது.
ஒரு நகைச்சுவையான அடிக்கடி பேசப்படும் ஒரு வாகன மோதல் சம்பந்தமான பதிவில் ஒருவர் இப்படி குறிப்பிட்டிருந்தார். " எனக்கு முன் வேகமாக சென்ற புதிய பென்ஸ் கார் திடீரென நிறுத்த, நான் எனது வாகனத்தை நிறுத்த முடியாமல் பென்ஸ் காரை இடிப்பதை தவிர்க்க முயர்சித்து வாகனத்தை திருப்பிய போது வழிப் போக்கன் மேல் ஏற்றி விட்டேன் " என்று தன்னுடைய விளக்கத்தை குறிப்பிட்டிருந்தார். இது போல் ஒரு நட்பை திருப்திபடுத்துவதாக எண்ணி இன்னொரு நட்பின் உணர்வை கொன்று விடுபவர்களும் உண்டு.
நட்பு எனபது நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை பாதிக்காமல், அவர் தம் நிலை அறிந்து, மற்றவரின் கஷ்டத்தில் கை கொடுத்து உண்மையான புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் உன்னத உறவு.
நட்பு என்பது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து, தேவையான போது விட்டு கொடுத்து ,எப்போதும் நண்பன் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டிய ஒரு உன்னத உறவு. ஒருவன் நொந்திருக்கும் போது தான் உண்மையான உறவுகளை பற்றி தெரிந்து கொள்கின்றான். சந்தேகம் தான் எந்த உறவையும் பிரித்திவிடும் விசம். முடிந்தால் மனம் திறந்து பேசுங்கள். உண்மையான நட்பிடம் சரி பிழையை விவாதியுங்கள். என் பிழை, உன் பிழை என்று வாதித்து, பிரிந்து செல்லாமல் முடிந்தால் சந்த்தித்து மனம் விட்டு பேசுங்கள். தேவைகளுக்காக மாத்திரம் நட்பு என்றில்லாமல், நட்பும் தேவை என்று எண்ணினால் தான் நட்பும் வாழும். எந்த உறவும் நட்பு கலந்த உறவாகும் போது தான் வெற்றி பெறுகின்றது.
இந்த கிறுக்கன் எந்த நட்பிலும் கீறல்கள் விழுந்து விடக்கூடாது என்று எண்ணிகொண்டு எழுதிய கிறுக்கல் தான் இது.
நான் சொன்னால் நம்பமாட்டியள், கனடாவிலை தமிழர்களின் விழாக்களுக்கு குறைச்சல் இல்லை பாருங்கோ. இதுக்குள்ள ஆளாளுக்கு போட்டி பாருங்கோ. ஒரு சிலர் சொல்லுவினம் நாங்கள் தேசியத்திற்காக செய்யிறம் என்றும் இன்னும் சிலர் உள்ளூர் கலைஞர்களை வளர்க்கிறதுக்கெண்டும் சொல்லுகினம். இன்னும் சிலர் மக்களை திருப்திபடுத்த வெளிநாட்டு கலைஞர்களை கொண்டு வந்து செய்யிறம் என்கினம்.
தேசியம், தேசியம் பற்றிய எண்ணங்கள் வளரோணும் அதிலை மாற்று கருத்தில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறதிற்கு ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இதிலை பெரிய புதினம் என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளை பற்றியும் எல்லா ஊடகங்களிலும் காசு கொடுத்தாலும் போடமாட்டினம்.தாங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு போட்டி என்று நினைத்தால் அது சகோதர அமைப்பாக இருந்தாலும் இருட்டடிப்பு தான்.
இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒரு ஊடகத்தின் பொதுக்கோட்பாடுகளுக்கு முரணானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான நடவடிக்கையாகும். இவ்வூடகங்களில் உள்ளோர் தாம் கனடிய நீரோட்டத்திலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு நிகராக வள்ர்ந்து விட்டதாக மார் தட்டவும் மறப்பதில்லை.
இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு தாங்கள் மக்கள் ஊடகம் என்பதை மறந்து ஒரு சில தனிப்பட்டவர்களின் முடிவுகளுக்கு கேள்வி கேட்க யாருமில்லை என்ற ஒரு எண்ணமோ அல்லது தாம் வளர்ந்து விட்டோம் இனிமேல் ஒருவருடைய தயவும் தேவையில்லை என்ற எண்ணமோ?
நானறிய, சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக கனடிய மண்ணில் தேசியம் சம்பந்தமான பல விழாக்களை வெற்றியாக நடத்திய ஒருவர் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு விளம்பரம் தர ஒரு தேசிய நீரோட்டதுடன் இருக்கும் பத்திரிகை ஆசிரியர் அனுமதி மறுத்துவிட்டார்.
இப்படியான போட்டிகளும் பொறாமைகளும் ஈழத்தமிழர்களாகிய எங்களுடைய விடிவுக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுகின்றது. நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம், எல்லாத்தமிழர்களையும் ஒருமுகப்படுத்தி கொண்டு செல்லவேண்டிய கடமை எல்லா தமிழ் ஊடகங்களுக்கும் உண்டு.