September 23, 2007

எது உண்மையான நட்பு?

வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகில், உலகம் கைகளுக்குள் வந்துவிட்டது போல் ஒரு உணர்வு. வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு பட்ட மனித‌ர்களுடன் பழக கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இதில் யார் நண்பர்கள் ?
‍ நாம் தெரிவு செய்பவர்களா அல்லது நம்மை தெரிவு செய்பவர்களா நண்பர்கள்? என் வாழ்க்கையில் இந்த கேள்வி பல தடவை எழுந்திருக்கின்றது. விடை காண பல தடவை முயற்சித்துள்ளேன் ஆனால் இன்றும் பதில் காண முடியவில்லை.

நண்பர் என்றால் என் வயதை ஒத்தவராக இருக்க வேண்டுமா , எனது பாலை ஒத்தவராக இருக்க வேண்டுமா, எனது துறையை ஒத்தவராக இருக்க வேண்டுமா அல்லது எனது விருப்புகளுக்கு ஒத்தவராக இருக்க வேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், எல்லா தரப்புகளிலும் நட்புகள் இருப்பது யதார்த்தமாகி விடுகின்றது.

" தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்"

இந்த வள்ளுவனின் குறளை நினைவுபடுத்தி நட்புகளால் ஏமாற்றப்படும் போது எல்லாம், இவர்களிடம் இருந்தும் ஒரு சிறிய உதவியாவது பெற்றிருக்கின்றோம் என்று எண்ணி முரண்படுவதை விடுத்து ஒதுங்கி வாழ்ந்திருக்கின்றேன்.

என் வாழ்வின் வெற்றிக்கு பல நட்புகள் தான் உதவின என்பது உண்மை. அதே நேரம் நட்பு, என்ற போர்வையில் என்னை தோற்கடிக்க முயற்சித்தவர்களும் உண்டு என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

" அவர் அப்படித்தான்" என்று ஒரு நட்பை பிடிகொடுத்து விடாமல் இன்னொரு நட்பு கூறுவதை கேட்டிருப்பீர்கள். "அவர் அப்படித்தான்" என்று வரையறுக்கப்பட்ட வாழ்வியலை கொண்டவர்கள் யாரும் இல்லை. பண்பு, பாசம், பொறுமை என்ற நல்ல குணங்களை தங்களுக்கு தேவையானவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொண்டு, மற்றவர்களிடம் தாங்கள் கோபமானவர்கள், எடுத்தெறிந்து பேசுவது தஙகள் சுபாவம் என்று ஒரு வேடம் போடுபவர்களை தான் " அவர்கள் அப்படித்தான்" என்கிறார்கள்.

"உன் உறவுக்காக நீ முயற்சிக்காமல் விட்டால், உனக்கு அந்த உறவு வேலை செய்யாது" என்ற பழ மொழியில் எவ்வளவு அர்த்தம். போட்டி பொறாமையாகின்ற போது தான் அனேகமான உறவுகள் தோற்றுவிடுகின்றன. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவி செய்த நட்புகளையும் பார்த்திருகின்றேன். தம் தேவைகளுக்கு மட்டும் தான் நட்புகள் என்று வேடம் போடும் கூட்டத்தையும் பார்த்திருக்கின்றேன்.

ஒரு சிலர் மற்றவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு, அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஒருவருக்கு மது குடிக்க பிடிக்கும் என்றால் அவருக்கு தான் இலவசமாக மதுவை வாங்கி கொடுத்து தனக்கு பல மடங்கு பயனை பெற்று கொள்வார்கள். இவர்கள் மற்ற நண்பர்களுக்கு ஒரு காப்பி கூட வாங்கித்தராத வள்ளல்கள்.

ஒட்டுண்ணி தாவரங்கள் எச்சங்களின் மிச்சங்களால் காவப்பட்டு, வலிய மரங்களை உறிஞ்சி வாழுபவை. மற்றவர்களின் முதலையும் உழைப்பையும் உறிஞ்சி, காலத்துக்கு காலம் ஒவ்வொருவரை ஏமாற்றி நட்பு என்ற போர்வையில் குளிர் காய்வோர் சிலர்.

நட்பு எனபது இரு மனங்களிடையே ஏற்படும் ஒரு பிணைப்பு. இது ஒரு மூன்றாவது மன‌த்தின் பிரதிபலிப்பாக இருக்க கூடாது. எதிரிக்கு எதிரி நண்பன் என்றோ அல்லது நண்பனின் எதிரி எனக்கும் எதிரி என்று ஒரு நட்பை எதிர்த்து கொள்வதோ உண்மையான நட்பாக இருக்கமுடியாது.

ஒரு நகைச்சுவையான அடிக்கடி பேசப்படும் ஒரு வாகன மோதல் சம்பந்தமான பதிவில் ஒருவர் இப்படி குறிப்பிட்டிருந்தார். " எனக்கு முன் வேகமாக சென்ற புதிய‌ பென்ஸ் கார் திடீரென நிறுத்த, நான் எனது வாகனத்தை நிறுத்த முடியாமல் பென்ஸ் காரை இடிப்பதை தவிர்க்க முயர்சித்து வாகனத்தை திருப்பிய போது வழிப் போக்கன் மேல் ஏற்றி விட்டேன் " என்று தன்னுடைய விளக்கத்தை குறிப்பிட்டிருந்தார். இது போல் ஒரு நட்பை திருப்திபடுத்துவதாக எண்ணி இன்னொரு நட்பின் உணர்வை கொன்று விடுபவர்களும் உண்டு.

நட்பு எனபது நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை பாதிக்காமல், அவர் தம் நிலை அறிந்து, மற்றவரின் கஷ்டத்தில் கை கொடுத்து உண்மையான புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் உன்னத உறவு.

நட்பு என்பது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து, தேவையான போது விட்டு கொடுத்து ,எப்போதும் நண்பன் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டிய ஒரு உன்னத உறவு. ஒருவன் நொந்திருக்கும் போது தான் உண்மையான உறவுகளை பற்றி தெரிந்து கொள்கின்றான். சந்தேகம் தான் எந்த உறவையும் பிரித்திவிடும் விசம். முடிந்தால் மனம் திறந்து பேசுங்கள். உண்மையான நட்பிடம் சரி பிழையை விவாதியுங்கள். என் பிழை, உன் பிழை என்று வாதித்து, பிரிந்து செல்லாமல் முடிந்தால் சந்த்தித்து மனம் விட்டு பேசுங்கள். தேவைகளுக்காக மாத்திரம் நட்பு என்றில்லாமல், நட்பும் தேவை என்று எண்ணினால் தான் நட்பும் வாழும். எந்த உறவும் நட்பு கலந்த உறவாகும் போது தான் வெற்றி பெறுகின்றது.

இந்த கிறுக்கன் எந்த நட்பிலும் கீறல்கள் விழுந்து விடக்கூடாது என்று எண்ணிகொண்டு எழுதிய கிறுக்கல் தான் இது.

உங்கள் பார்வையையும் தெரிவியுங்கள்.

5 comments:

Chandravathanaa 2:52 PM  

நல்ல பதிவு காரூரன்.

உண்மையானதொரு நட்புக் கிடைத்து விட்டால்
அது ஒருவனுக்குக் கிடைத்த கொடை என்றே நான் கருதுகிறேன்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல உண்மை நட்பை அறிந்து கொள்வதிலும் சிரமம் இருக்கிறது.
நான் ஓரிரு தடவைகள் நட்பென்று நம்பி ஏமாந்திருக்கிறேன்.
அப்போது என் மனது வேதனையில் துவண்ட போது எழுதியது இது

நட்பென்றுதானே நம்பினேன்.....!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்......?

சந்திரவதனா 12.12.2001

http://manaosai.blogspot.com/2003_08_14_manaosai_archive.html

Chandravathanaa 2:55 PM  

நட்பு பற்றிய எனது இன்னொரு பதிவு
http://manaosai.blogspot.com/2006/06/blog-post_03.html

காரூரன் 10:16 PM  

சந்திரவதனா,
நட்பை பற்றி எவ்வளவு இரத்தின சுருக்கமாக அழகாக வடித்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியவற்றை கோடிட்டு காட்டி எனக்கு ஒரு உற்சாகத்தை தந்திருக்கிறீர்கள். மனதிற்கு ஆறுதலாக இருக்கின்றது. மனமார்ந்த நன்றிகள்.

Haran 9:24 PM  

நண்பரே,
வள்ளுவன் சொன்னது போல "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் கழைவதாம் நட்பு" என்பது சரியான கருத்து என்று நான் எண்ணுகின்றேன். அதாவது, ஒருவனுடைய உடை அவன்/அவள் இடையிலிருந்து அவிழ்ந்து விழும்போது அங்கே அவனுடைய/அவளுடைய கை தன்னை அறியாமலேயே அந்த உடையைத் தாங்கிக்கொண்டு மானத்தைக் காப்பது போன்றது நட்பு.

ஆயினும், ஒரு உற்ற நண்பனைத் தேடிக்கொள்வது என்பது மிகவும் கடினமானதே...

பெரும்பான்மையானவர்களுக்கு "பயம்" ஒரு காரணம்... அதாவது இவன்/இவள் என்னை ஏமாற்றி அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்து விடுவானா/விடுவாளா என்பதாகும்.

நன்றாக எழுதுகின்றீர்கள்... தொடரட்டும்.

காரூரன் 9:19 PM  

Haran,
*\\
பெரும்பான்மையானவர்களுக்கு "பயம்" ஒரு காரணம்... அதாவது இவன்/இவள் என்னை ஏமாற்றி அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்து விடுவானா/விடுவாளா என்பதாகும் *\\

நல்ல முன் உதாரணம் கூறியுள்ளீர்கள். உங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP