September 28, 2007

வாகனமும் பாவனையும்!


அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் நாம் நேரத்தை மிகவும் கருத்தில் வைத்து வாழ வேண்டியதாகியிருக்கின்றது. நேரம் தான் பணம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் அடைந்துவிட்டது.

அன்றாட வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமாகிவிடுகின்றது. ஊரில் துவிச்சக்கர வண்டியில் ( சைக்கிள்) தான் பல இடங்களை சென்று வந்திருக்கின்றோம். ஒரு சிலர் மோட்டர் சைக்கிளை உபயோகித்து வந்தனர். பொது வாகன சேவைகளும் போக்குவரத்துக்கு பாவிக்கப்பட்டிருக்கின்றன. நானும் எனது பாடசாலை நாட்களை சைக்கிளில் தான் போய் வந்தேன்.

எனக்கு படிப்பித்த‌ tution master ‍ இரத்தினசபாபதி மாஸ்டர் ( சாக்கர் ‍பட்டப் பெயர்‍‍ ‍_ முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர்) எப்போதும் நடை பவனியில் வந்து தான் பாடம் சொல்லி தந்தவர். ஒருவருடைய வாகனத்திலும் ஏறி வந்ததில்லை. என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியர் இவர் தான்.

ஆனால் கனடாவில் நம்மவர்களுக்கு அரை மைல் தூரத்திலுள்ள கடைக்கு போவதென்றால் கூட கார் தேவைப்படுகின்றது. கனடா குளிர் நாடு தான், ஆனால் சூடான கால நிலையுள்ள காலப்பகுதி தான் அதிகம். கார் இங்குள்ளவர்களுக்கு சைக்கிள் மாதிரி தான் .

என்னுடன் வேலை பார்க்கும் கனடியர்(Brian Huntley) ஒருவரை பற்றி, அவருடைய வாழ்க்கை முறை, அவருடைய தேவைகள் எதிர் பார்ப்புகள் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு வித்தியாசமான பார்வைக்காக தருகின்றேன்.

இவர் கனடிய கடற்படையில் விமான ஓட்டியாக இருந்துவிட்டு, பல‌ ஆண்டுகள் சேவையிலிருந்து விட்டு இப்போது தகவல் தொழில் நுட்பத்தில் வேலை செய்கின்றார். இவர் சேவையிலிருக்கும் போது ஓட்டாத வாகனம் என்று ஒன்றும் இல்லை. ஆனால் இவரிடம் தற்போது உள்ள ஒரு வாகனம் சைக்கிள் தான். இவர் வேலைக்கு எப்போதும் சைக்கிளில் தான் வருவார். பூச்சியத்திற்கு கீழ் 40 பாகையாக இருந்தாலும் சைக்கிளில் தான் வருவார். பொழுது போக்காக கூட சைக்கிள் பயணம் தான்.

அவரிடம் பல தடவை மனம் விட்டு பேசியுள்ளேன். அவருக்கு வரலாறு, மற்றும் பல்வேறு தொழில் நுட்பம் பற்றிய அறிவு இருக்கின்றது. ஆனாலும் நடை முறை வாழ்க்கையில் தனது தேவைகளை மிகவும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பவர். வேலை சம்பந்தமாக பல தொழில் நுட்பங்களை கையாண்டாலும் ஒரு கைத்தொலை பேசி கூட சொந்தமாக பாவிப்பதில்லை ( வேலைக்காக Black Berry). இதற்காக காசு மிச்சம் பிடிக்கிறார் அல்லது வசதிகளை பெற வருவாயில்லை என்று தப்பாக எண்ணி விடவேண்டாம்.

இவர் தன் விடுமுறையை பெரும்பாலும் சைக்கிளில் புதிய இடங்களை வலம் வருவது தான் இவரது பொழுது போக்கு. இவர் அண்மையில் ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள ஐரோப்பிய நகரங்களை சைக்கிளில் வலம் வந்தார். எனக்கு இப்படி நகரங்கள் ஒன்ராரியோவில இருப்பது இவர் மூலம் தான் தெரிய வந்தது
City Country
Paris France
London, Belfast, Tottenham UK
Brussels Belgium
Formosa Portugal
Hanover Germany
Zurich Switzerland
சிலோன் என்று ஒரு சிறிய கிராமமும் இருக்கின்றதாம். சிலோன் என்ற பெயர் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வைத்த பெயர்.

0
படம் , வரை படம் ‍- Brian Huntley

இவர் தன்னுடைய பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக தனது தளத்தில் தெரிவித்துள்ளார்.
இவருடைய பயணத்தை தெரிந்து கொள்ள கீழே அழுத்தவும. Brian Huntley யின் சைக்கிள் பயணம்


ஓவ்வொரு மனிதருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மனிதன் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றான். இப்படியும் இந்த குளிர் நாட்டில் வாழலாம். நாம் எப்படி எங்களை தயார்படுத்தி கொள்கின்றோம் என்பதை பொறுத்து தான் எந்த தடையையும் வெல்வது தங்கியிருக்கின்றது.

Read more...

September 23, 2007

எது உண்மையான நட்பு?

வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகில், உலகம் கைகளுக்குள் வந்துவிட்டது போல் ஒரு உணர்வு. வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு பட்ட மனித‌ர்களுடன் பழக கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இதில் யார் நண்பர்கள் ?
‍ நாம் தெரிவு செய்பவர்களா அல்லது நம்மை தெரிவு செய்பவர்களா நண்பர்கள்? என் வாழ்க்கையில் இந்த கேள்வி பல தடவை எழுந்திருக்கின்றது. விடை காண பல தடவை முயற்சித்துள்ளேன் ஆனால் இன்றும் பதில் காண முடியவில்லை.

நண்பர் என்றால் என் வயதை ஒத்தவராக இருக்க வேண்டுமா , எனது பாலை ஒத்தவராக இருக்க வேண்டுமா, எனது துறையை ஒத்தவராக இருக்க வேண்டுமா அல்லது எனது விருப்புகளுக்கு ஒத்தவராக இருக்க வேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், எல்லா தரப்புகளிலும் நட்புகள் இருப்பது யதார்த்தமாகி விடுகின்றது.

" தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்"

இந்த வள்ளுவனின் குறளை நினைவுபடுத்தி நட்புகளால் ஏமாற்றப்படும் போது எல்லாம், இவர்களிடம் இருந்தும் ஒரு சிறிய உதவியாவது பெற்றிருக்கின்றோம் என்று எண்ணி முரண்படுவதை விடுத்து ஒதுங்கி வாழ்ந்திருக்கின்றேன்.

என் வாழ்வின் வெற்றிக்கு பல நட்புகள் தான் உதவின என்பது உண்மை. அதே நேரம் நட்பு, என்ற போர்வையில் என்னை தோற்கடிக்க முயற்சித்தவர்களும் உண்டு என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

" அவர் அப்படித்தான்" என்று ஒரு நட்பை பிடிகொடுத்து விடாமல் இன்னொரு நட்பு கூறுவதை கேட்டிருப்பீர்கள். "அவர் அப்படித்தான்" என்று வரையறுக்கப்பட்ட வாழ்வியலை கொண்டவர்கள் யாரும் இல்லை. பண்பு, பாசம், பொறுமை என்ற நல்ல குணங்களை தங்களுக்கு தேவையானவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொண்டு, மற்றவர்களிடம் தாங்கள் கோபமானவர்கள், எடுத்தெறிந்து பேசுவது தஙகள் சுபாவம் என்று ஒரு வேடம் போடுபவர்களை தான் " அவர்கள் அப்படித்தான்" என்கிறார்கள்.

"உன் உறவுக்காக நீ முயற்சிக்காமல் விட்டால், உனக்கு அந்த உறவு வேலை செய்யாது" என்ற பழ மொழியில் எவ்வளவு அர்த்தம். போட்டி பொறாமையாகின்ற போது தான் அனேகமான உறவுகள் தோற்றுவிடுகின்றன. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவி செய்த நட்புகளையும் பார்த்திருகின்றேன். தம் தேவைகளுக்கு மட்டும் தான் நட்புகள் என்று வேடம் போடும் கூட்டத்தையும் பார்த்திருக்கின்றேன்.

ஒரு சிலர் மற்றவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு, அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஒருவருக்கு மது குடிக்க பிடிக்கும் என்றால் அவருக்கு தான் இலவசமாக மதுவை வாங்கி கொடுத்து தனக்கு பல மடங்கு பயனை பெற்று கொள்வார்கள். இவர்கள் மற்ற நண்பர்களுக்கு ஒரு காப்பி கூட வாங்கித்தராத வள்ளல்கள்.

ஒட்டுண்ணி தாவரங்கள் எச்சங்களின் மிச்சங்களால் காவப்பட்டு, வலிய மரங்களை உறிஞ்சி வாழுபவை. மற்றவர்களின் முதலையும் உழைப்பையும் உறிஞ்சி, காலத்துக்கு காலம் ஒவ்வொருவரை ஏமாற்றி நட்பு என்ற போர்வையில் குளிர் காய்வோர் சிலர்.

நட்பு எனபது இரு மனங்களிடையே ஏற்படும் ஒரு பிணைப்பு. இது ஒரு மூன்றாவது மன‌த்தின் பிரதிபலிப்பாக இருக்க கூடாது. எதிரிக்கு எதிரி நண்பன் என்றோ அல்லது நண்பனின் எதிரி எனக்கும் எதிரி என்று ஒரு நட்பை எதிர்த்து கொள்வதோ உண்மையான நட்பாக இருக்கமுடியாது.

ஒரு நகைச்சுவையான அடிக்கடி பேசப்படும் ஒரு வாகன மோதல் சம்பந்தமான பதிவில் ஒருவர் இப்படி குறிப்பிட்டிருந்தார். " எனக்கு முன் வேகமாக சென்ற புதிய‌ பென்ஸ் கார் திடீரென நிறுத்த, நான் எனது வாகனத்தை நிறுத்த முடியாமல் பென்ஸ் காரை இடிப்பதை தவிர்க்க முயர்சித்து வாகனத்தை திருப்பிய போது வழிப் போக்கன் மேல் ஏற்றி விட்டேன் " என்று தன்னுடைய விளக்கத்தை குறிப்பிட்டிருந்தார். இது போல் ஒரு நட்பை திருப்திபடுத்துவதாக எண்ணி இன்னொரு நட்பின் உணர்வை கொன்று விடுபவர்களும் உண்டு.

நட்பு எனபது நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை பாதிக்காமல், அவர் தம் நிலை அறிந்து, மற்றவரின் கஷ்டத்தில் கை கொடுத்து உண்மையான புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் உன்னத உறவு.

நட்பு என்பது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து, தேவையான போது விட்டு கொடுத்து ,எப்போதும் நண்பன் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டிய ஒரு உன்னத உறவு. ஒருவன் நொந்திருக்கும் போது தான் உண்மையான உறவுகளை பற்றி தெரிந்து கொள்கின்றான். சந்தேகம் தான் எந்த உறவையும் பிரித்திவிடும் விசம். முடிந்தால் மனம் திறந்து பேசுங்கள். உண்மையான நட்பிடம் சரி பிழையை விவாதியுங்கள். என் பிழை, உன் பிழை என்று வாதித்து, பிரிந்து செல்லாமல் முடிந்தால் சந்த்தித்து மனம் விட்டு பேசுங்கள். தேவைகளுக்காக மாத்திரம் நட்பு என்றில்லாமல், நட்பும் தேவை என்று எண்ணினால் தான் நட்பும் வாழும். எந்த உறவும் நட்பு கலந்த உறவாகும் போது தான் வெற்றி பெறுகின்றது.

இந்த கிறுக்கன் எந்த நட்பிலும் கீறல்கள் விழுந்து விடக்கூடாது என்று எண்ணிகொண்டு எழுதிய கிறுக்கல் தான் இது.

உங்கள் பார்வையையும் தெரிவியுங்கள்.

Read more...

September 16, 2007

எதை விரும்புகின்றாய் என்று அறிந்துகொள்!

நாம் பல மனிதர்களுடன் பல வேளைகளில் பல்வேறு பட்ட கருத்துப் பரிமாற்றங்களை, எண்ணங்களையும் பரிமாறியிருக்கலாம். வாழ்க்கை எனபதிற்கு ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதை அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலரே தமது பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். என்னை மிகவும் கவர்ந்த ஒரு வெற்றி பெற்ற மனிதரின் உரையிலிருந்து சில கருத்துக்களை நம் வாழ்வியலுடன் அசை போட்டு பார்க்க முயல்கின்றேன்.


இந்த பெரும் புள்ளியின் தாயார் ( biological mother) தன் மகன் ஒரு கல்லூரி பட்டதாரியாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் தன் வருமான‌த்தின் இயலாமையால் தன் பிள்ளையை ஒரு பட்டதாரி குடும்பத்திற்கு தத்து கொடுக்க முயன்று கடைசியில் பாடசாலையே முடிக்காத தந்தையும் கல்லூரி முடிக்காத தாயும் தத்தெடுக்க விட்டார்.

தனது 17 வயதில் கல்லூரி படிப்புக்காக நுழைந்தும், சராசரி உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெற்றோரால் தாம் வாழ் நாளில் சேகரித்த முழுப்பணத்தை செலவிட்டும் கல்லூரி படிப்புக்கு மாத்திரமே செலிவிட முடிந்தது. தங்குவதற்காக நண்பர்களின் அறையில் தரையில் படுத்து காலத்தை ஓட்டினார். கைச்செலவிற்காக கோக் (coke bottles) போத்தல்களை சேர்த்து கொடுத்து ஒரு போத்தலுக்கு 5 சதம் வீதம் பெற்றுக் கொண்டார். வாரத்தில் ஒரு முறை 7 மைல்கள் நடந்து சென்று "கரே கிருஷ்ணா" ஆலயத்தில் வயிறார சாப்பிட்டாராம். இதே வேளை தான் படித்து கொண்டிருந்த பட்ட படிப்பில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். 6 மாத்தில் தான் படித்த பட்ட படிப்பை விட்டுவிட்டு தனது பகுதி நேர படிப்பாக calligraph பாடத்தை கற்று கொண்டார். இந்த படிப்பு எழுத்து உருவம் சம்பந்தமானது. இந்த படிப்பு இல்லாவிட்டால் பல எழுத்துருக்கள் ( type faces) கொண்ட கணணியை உருவாக்கியிருக்க முடியாது என்கிறார்.

தனது 20 வயதில் பெற்றோரின் கராஜ்ஜில் ( garage) இருவர் மட்டுமே கொண்ட கணணி நிறுவனத்தை ஆரம்பித்து 10 வருடங்களில் உலகு போற்றும் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றினார். வாழ்க்கையில் நாம் கடந்து வந்த வாழ்க்கையில் பின்னோக்கி பார்த்தால் மாத்திரமே அவற்றில் உள்ள முக்கிய புள்ளிகளை இணைத்து பார்க்கலாமாம் (connect your dots). ஆனால் எதிர் காலத்தை அல்ல. நாம் நம்புவது தைரியம், எதிர்காலம், வாழ்க்கை, கர்மா போன்றவை என்று சொல்லிக் கொண்டாலும் தனது அணுகுமுறையை எதுவுமே தடை செய்யவில்லையாம். தனது வாழ்க்கையில் இந்த நிலைக்கு வருவதற்கு தனது அணுகுமுறையே காரணமாம்.

நாம் நேசிப்பது எதுவாக இருந்தாலும் அது மறுக்கப்படும் போது அதன் வலி தாங்கமுடியாததாக இருக்கும். இந்த வெற்றி பெற்ற மனிதருக்கும் வாழ்க்கையில் சவால் காத்திருந்தது. தான் தன் உதவிக்காக ஒருவரை‌ ( chief Operating Officer) முதன்மை நடத்து இயக்குனராக தெரிவு செய்து, இயக்குனர் சபை அவருக்கு சார்பாகி தான் ஆரம்பித்த‌ நிறுவனத்திலிருந்து 30 வயதிலே வெளியேற்றப்பட்டார் ( Fired from his company). உலகுக்கே தெரிந்த ஒரு தலைவர் தனது வேலையில் இருந்து அகற்றப்பட்டது பத்திரிகை தலைப்புக்களாகின. செய்வதறியாது வெட்கி தலை குனிந்தார். த‌னது வாழ்க்கையின் முழு மூச்சு நின்று விட்டதாக ஒரு உணர்வு. தோல்வியின் வலி அவரை சிலிக்கன் பள்ளத்தாக்கை விட்டே ஓடலாம் என்று எண்ண வைத்ததாம்.

சில மாதங்களின் பின் தான் மறுக்கப்பட்டது சில மனிதர்களாலேயே தவிர தான் நேசித்த துறையை அல்ல என்று உணர்ந்து கொண்டார். அடுத்து வந்த 5 வருடங்களில் NeXt என்ற கணணி நிறுவனத்தையும், PIXAR என்ற‌ Animation நிறுவனத்தையும் ஆரம்பித்தார். உலகத்திலேயே முத‌ல் கணனி மயப்படுத்தப்பட்ட Animation Movie - TOY STORY தயாரிக்கப்பட்டது PIXAR இல் தான்.

சில வருடங்களின் பின் எந்த நிறுவனத்திலிருந்து இவர் நீக்கப்பட்டாரோ அதே அப்பிள் ( Apple) நிறுவனம் இவருடைய புதிய நிறுவனமான NEXT ஐ கொள்வனவு செய்து மீண்டும் அப்பிள் நிறுவனத்தின் சிம்மாசனத்தில் இருத்தியது. இவர் வேறு யாரும் இல்லை ஷ்ரீவ் ஜொப் ( Steve Jobs) தான். கசப்பான மருந்தும் உடல் நலத்தை திருத்த உதவுவது போல், Apple இல் தன் கசப்பான அனுபவங்களும் அதன் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது என்கிறார் Steve.

தன் வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் காரணி, தான் விரும்பியதை எப்போதும் செய்யக்கூடியதாக இருந்தது தானாம்.

Steve இன் பார்வையில் ‍‍‍
"
இவை எல்லாம் நடந்திருக்காது நான் அப்பிள் இருந்து அகற்றப்படாமல் விட்டால். எதற்கும் பொறுமை அவசியம் என்று நம்புகின்றேன். சில சமயங்களில் வாழ்க்கையில் நமக்கு யாரோ கல்லால் தலையில் அடித்தது போன்ற கடினமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கையை இழக்க கூடாது. நீ எதை விரும்புகின்றாய் என்று முதல் அறிந்து கொள். அது உனது காதலாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி பொருந்தும். உனது வேலை தான் உன் வாழ்க்கையின் பெரிய பாகமாக இருக்கப் போகின்றது. நீ
எது உன்னை திருப்திபடுத்தும் என்று நம்புகிறாயோ அது வரை முயற்சி செய். எந்த ஒரு நல்ல உறவாக இருந்தாலும், காலம் போக போக தான் அது மிகவும் நல்லதாக அமைகிறது. இல்லாவிடில் நல்ல ஒரு உறவுக்காக காத்திரு. அவசரப்பட்டு முடிவெடுக்காதே.

எனது 17 வயதில் நான் வாசித்த வரிகள்‍ _ நீ வாழுகின்ற ஒவ்வொரு நாளும் உனது கடைசி நாள் என்று வாழ்ந்தால் ஒரு நாள் நீ வாழ வேண்டியதை வாழ்ந்துவிடுவாய்_ .
நாம் எல்லோரும் ஒரு நாள் இறந்து விடுவோம். நம் வாழ்க்கையில் மற்றவர்களின் எதிபார்ப்புகள், புகழ், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை போன்றவை நம்மை ஆட்டி படைக்கின்றன. மரணத்தின் வாசலில் இவை எல்லாம் அடையாளமற்றவையாகிவிடுகின்றன. எந்த மனிதனும் மரணத்தை விரும்புவன் அல்ல. சொர்க்கத்திற்கு போக விரும்புவர்களும் மரணத்தை விரும்ப மட்டார்கள். ஆனால் இந்த மரணத்திற்கு யாரும் விதி வில்க்கல்ல. வாழ்வியலில் ஒரு பெரிய கண்டு பிடிப்பு மரணம். இது வாழ்வியலை மாற்றும் காரணி. இது பழையவற்றை அகற்றி புதுமைக்கு வழிவிடும் முறை. இன்று நீ புதுமை இன்னும் சில காலத்தில் நீயும் பழமையாகி அகற்றப்படுவாய். இது வாழ்க்கையின் யதார்த்தம்.

உனது நேரம் வரையறுக்கப்பட்டது. உன் நேரத்தை மற்றவரின் வாழ்க்கையை வாழ்வதில் வீணடிக்காதே. மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக வாழுகின்ற வாழ்க்கையில் சிக்கிவிடாதே. மற்ற‌வர்களின் புகைச்சல்கள் உன் உள் மனதின் குரலை நசுக்காமல் பார்த்து கொள்ளு. நீ ஏற்கனவே நிர்மாணமானவன், எனவே தயங்குவதற்கு என்ன இருக்கிறது உன் உள்ளத்தின் உணர்வுகளை பின் தொடர.

தாகமாய் இரு, முட்டாளாய் இரு. "


இந்த உரையை Steve Jobs, Stanford University பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தின‌ராக வந்த போது த‌ந்திருந்தார். நான் எனக்கு பிடித்த பகுதியை எனது தமிழாக்கத்தில் தந்திருக்கின்றேன்.

Read more...

September 3, 2007

PIT புகைப்படப் போட்டிக்காக


Read more...

நடைபாதை ஓவியம்.

மேலைத் தேசங்களில் பெயர் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் பல மில்லியன் டாலர்களிற்கு விற்கப்படும்போது, வீதியோரமாக வயிற்று பிழைப்புக்கான ஒவியங்களும் தீட்டப்படுகின்றன. ரொரன்ரொ வீதிகளில், நீளமான வீதியான (young street) யங் வீதியருகே இந்த ஓவியம் என் கண்களை கவர்ந்தது.கரி, சோக்கு போன்றவை உபயோகித்து மிகவும் துல்லியமாக இந்த ஓவியம் உயிர்ப்பு பெற்றது.
ஓர் சிறிய படத்தை வைத்துக்கொண்டு ஒரு கரடு முரடான தரையில் இந்த ஓவியம் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாகியிருக்கின்றது.நான் இரசித்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP