April 20, 2008

கிளி (கருணாரட்னம்) அருட் தந்தை யார்?







வாழ்வியலில் மதிக்கமுடியாத செல்வம் தியாகம். போரியல் வரலாறுகளில் ஒரு நாட்டின் தேச வீரனாக மடிகின்ற பொழுது ஒருவன் தியாகி ஆகி விடுவது உண்மையாகி விட்டாலும், அவர்களுக்கு ஊதியமும், அவ்வீரனின் மறைவுக்கு பின் ஒரு நஷ்ட ஈடும் கிடைக்கப் பெறுவது ஒரு தேசத்தின் வழமை.

நம் போராட்டத்தில் தன்னுயிரை தேச விடுதலைக்காக, எந்த வித எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் கொடுத்து வாழும் வீர மறவர்கள் எத்தனை எத்தனை. நான் பிறந்து வளர்ந்த கரவெட்டி என்ற கிராமத்தில் "கிளி மாஸ்டர்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவரும், பாடசாலை நாட்களில் எங்களைப் போல் இருந்த‌ எந்த வயதினருக்கும் ஒரு நண்பனாக வாழ்ந்த அற்புத மனிதர். எந்த மனிதருடனும் அவர்கள் நிலையில் சென்று அளவளாக கூடிய மனிதர்களில் இவரும் ஒருவர். ஆரம்ப காலங்களில் ஒரு வங்கி ஊழியராக இருந்து கொண்டாலும், பகுதி நேர ஆசிரியனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர்.

படிப்படியாக கிறிஸ்தவ மதத்தலைவராக கல்வி பெற்று தனக்கென சமுதாயத்தில் ஒரு மதிப்பையும் மரியாதையும் பெற்ற அருட்தந்தையாக வாழ்ந்தவர். மனித உரிமைகள் பேணப்படவேண்டும், மனித நேயமுள்ள சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக வாழிவியலில் பல போராட்டங்களை சந்தித்த செயல் வீரன் இவர்.

அருட் தந்தை கருணாரட்னம் அடிகளாராகவும், வடக்கு கிழக்கு மனித உரிமை காப்பகத்தின் இயக்குனரவை தலைவராகவும் உலகுக்கு அறிமுகமானமவர். பல நாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து நம் அவல நிலைமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியவர்.

எனது கிராமம் பல பாடசாலைகளையும், ஆலயங்களையும் கொண்டதால் என்னவோ பல வல்லுனர்களை உருவாக்கியிருக்கின்றது. ஆன்மீகம், அரசியல், வீரம், தமிழ் என்ற பல துறைகளில் விற்பன்னர்களை உருவாக்கியுள்ளது. முதல் கரும்புலி வீரன் " மில்லர் ( வசந்தன்)", தேசத்தின் குரல் " அன்ரன் பாலசிங்கம்" போன்றவர்களைப் போல் மனித நேயத்தின் தந்தையாகிய அருட் தந்தை கருணாரட்னம் அடிகளாரையும் இழந்து நிற்கின்றது.

கிறிஸ்தவ மதத்தின் புனித ஆலயமான மடு மாதா ஆலயத்தின் திரு உருவச்சிலை பாதுகாக்கப் பட வேண்டும் என்பதற்காக, தேவஸ்தானம் முடிவிற்கு ஏற்ப புலிகளின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டதை " நிலவரம்" நிகழ்வு ஊடாக உலகுக்கு உண்மை தன்மையை எடுத்து சொன்னார். நாசகார சக்திகளால் அருட் தந்தை கருணாரட்னம் அடிகளார் மிகக் கொடூரமாக கொல்லப்ட்டுள்ளார்.

வலய உறவுகளே, இலங்கையில் 5 மணி நேரத்திற்கு ஒரு தமிழன் கடத்தப்பட்டோ, கொல்லப்பட்டு வரும் சாபக் கேடு கொடுமையானது. தமிழனாக பிறந்ததை விட இத்தரணியில் இவர்கள் இட்ட தவறு தான் என்ன?. பிரியங்காவிற்குக்கு நளினியை பார்த்து பேச தோணுகின்ற போது, நாம் ஏன் சக தமிழ் உடன் பிற‌ப்புகளைப் பற்றி குரல் கொடுக்க கூடாது. ஈழப்பிரச்சனை வெறும் அரசியல் வளர்க்கும் தளமாக மட்டும் அல்லாமல், மனித நேயத்துடன் அணுக வேண்டிய காலம் இது. அருட் தந்தை கருணாரட்னம் அடிகளார் பரப்பிச் சென்ற மனித உரிமையும், மனித நேசமும் மேலும் வளர உலக உறவுகளே ஒன்று படுங்கள்.

யாருக்கு யார் ஆறுதல் சொல்ல??

Read more...

April 6, 2008

என் குட்டியின் சுட்டித்தனம்..


"யாழினிது குழலினிது என்பார் அவர் தம் மழலை மொழி கேளாதோர்" என்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் வார்த்தைகளாகவே தோன்றின. குழந்தைகள் கிடைத்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

எனக்கு இரண்டு வால்கள் ( குழந்தைகளை சொல்கிறேன்...) . மகளுக்கு 9 வயது, மகனுக்கு 5 வயது. அக்காவிடம் தான் நினைப்பதை இலகுவாக தன் சாதுரியத்தால் சாதித்துவிடுவான் மகன். தாயின் உடை, சகோதரியின் உடை என்பவற்றை அடிக்கடி விமர்சிப்பான். தாய்க்கு "ஐஷ் " அடிப்பது அவனுக்கு கை வந்த காரியம். " அம்மா, இந்த dress இல் actress மாதிரி இருக்கிறீர்கள் என்பான்". ஆனால் அதே உடையுடன் ( சுரிதார்) தாய் பாடசாலைக்கு அவனை அழைக்க சென்றால் அவனுக்கு பிடிக்காதாம் ( நண்பர்கள் கேலி செய்வார்களாம்).

சற்று வயதுக்கு மிஞ்சிய வால்த்தனம் இருப்பதை அடிக்கடி அவதானித்திருக்கின்றேன். புத்தகம் வாசிப்பது அவனுக்கு மிகவும் பிடித்த விடயம். இந்த விடயத்தில் நானும் அவனுக்கு உற்சாகம் ஊட்டுவேன். கடையில் ஒரு விளையாட்டுப் பொருளைக்கண்டால், உடனடியாக வேண்டித்தர வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டான். ஆனால் அதை தாயிடமோ அல்லது என்னிடமோ தனக்கு எம்மிடம் எப்போதாவது சந்தர்ப்பத்தில் சொல்லி வேண்டிக்கொள்வான். ஆனால் நாம் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வான், ஆனால் "ஆம்" என்று சொல்லி விட்டு நாம் பின் வாங்க முடியாது.

அக்காவுடன் அடிக்கடி போட்டி போடுவான். காலையில் பல் விளக்குவதிலிருந்து, உடைத்தெரிவு எல்லாம் தானே செய்து கொள்வான். குழந்தைகளை சேர்த்து விளையாடுதல், பகிர்தல் போன்றவற்றில் தானாகவே முன் வந்து செய்வான்.

மகனுக்கு இந்த மாதம் பிறந்த நாள். தனது பிறந்த நாளுக்கு, நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றான். தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தன்மை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. மூன்று வண்ணத்தாள்களை எடுத்து, " Party Things", " Games" , "My Friends" என்று தலைப்பிட்டு தனக்கு தேவையானவற்றை தயார் படுத்தி, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். உதாரணமாக, "Musical Chairs" விளையாட்டிற்கு, நான் தமிழ் பாட்டு போடக்கூடாது, "High School Musicals" இலிருந்து போடவேண்டுமாம். ஏன் என்று வினவியதற்கு, என் நண்பர்கள் வேறு இனத்தவர்கள், அவர்களுக்கும் புரிகின்ற இசையாக இருக்க வேண்டாம்.



அம்மாவிற்கு, தமிழ் பிள்ளைகளை மாத்திரம் அழைத்து பிறந்த நாளை நடத்த விருப்பம். அதை தாய் சொல்ல, " மற்ற நண்பர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்று அறிவுரை சொன்னான்". அம்மாமார் நாங்கள் சொன்னால் கேட்கினோமோ இல்லையோ, மகன் சொன்னால் கேட்பினம் தானே.

நாம் வாழ்க்கையில் எப்படியான கஷ்டங்களை எந்த வடிவத்திலும் ( ஏமாற்றம், இழப்புக்கள், புறக்கணிப்புக்கள், அவமானம்) வந்தாலும் இந்த குழந்தைகள் நொடிப்பொழுதில் மறக்க வைத்துவிடுவார்கள்.

குழந்தைகள் சுயாதீனமாகவும், நமக்காக மட்டும் உலகம் என்று இல்லாமல், நாமும் உலகத்தில் ஒரு பங்கு என்று வளர்வார்களாயின் அது அவர்களை சமுதாயத்தில் சுய கௌரவத்துடன் நல்ல பிரஜைகளாக வாழ வழி வகுக்கும்.

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP