என் குட்டியின் சுட்டித்தனம்..
"யாழினிது குழலினிது என்பார் அவர் தம் மழலை மொழி கேளாதோர்" என்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் வார்த்தைகளாகவே தோன்றின. குழந்தைகள் கிடைத்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.
எனக்கு இரண்டு வால்கள் ( குழந்தைகளை சொல்கிறேன்...) . மகளுக்கு 9 வயது, மகனுக்கு 5 வயது. அக்காவிடம் தான் நினைப்பதை இலகுவாக தன் சாதுரியத்தால் சாதித்துவிடுவான் மகன். தாயின் உடை, சகோதரியின் உடை என்பவற்றை அடிக்கடி விமர்சிப்பான். தாய்க்கு "ஐஷ் " அடிப்பது அவனுக்கு கை வந்த காரியம். " அம்மா, இந்த dress இல் actress மாதிரி இருக்கிறீர்கள் என்பான்". ஆனால் அதே உடையுடன் ( சுரிதார்) தாய் பாடசாலைக்கு அவனை அழைக்க சென்றால் அவனுக்கு பிடிக்காதாம் ( நண்பர்கள் கேலி செய்வார்களாம்).
சற்று வயதுக்கு மிஞ்சிய வால்த்தனம் இருப்பதை அடிக்கடி அவதானித்திருக்கின்றேன். புத்தகம் வாசிப்பது அவனுக்கு மிகவும் பிடித்த விடயம். இந்த விடயத்தில் நானும் அவனுக்கு உற்சாகம் ஊட்டுவேன். கடையில் ஒரு விளையாட்டுப் பொருளைக்கண்டால், உடனடியாக வேண்டித்தர வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டான். ஆனால் அதை தாயிடமோ அல்லது என்னிடமோ தனக்கு எம்மிடம் எப்போதாவது சந்தர்ப்பத்தில் சொல்லி வேண்டிக்கொள்வான். ஆனால் நாம் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வான், ஆனால் "ஆம்" என்று சொல்லி விட்டு நாம் பின் வாங்க முடியாது.
அக்காவுடன் அடிக்கடி போட்டி போடுவான். காலையில் பல் விளக்குவதிலிருந்து, உடைத்தெரிவு எல்லாம் தானே செய்து கொள்வான். குழந்தைகளை சேர்த்து விளையாடுதல், பகிர்தல் போன்றவற்றில் தானாகவே முன் வந்து செய்வான்.
மகனுக்கு இந்த மாதம் பிறந்த நாள். தனது பிறந்த நாளுக்கு, நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றான். தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தன்மை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. மூன்று வண்ணத்தாள்களை எடுத்து, " Party Things", " Games" , "My Friends" என்று தலைப்பிட்டு தனக்கு தேவையானவற்றை தயார் படுத்தி, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். உதாரணமாக, "Musical Chairs" விளையாட்டிற்கு, நான் தமிழ் பாட்டு போடக்கூடாது, "High School Musicals" இலிருந்து போடவேண்டுமாம். ஏன் என்று வினவியதற்கு, என் நண்பர்கள் வேறு இனத்தவர்கள், அவர்களுக்கும் புரிகின்ற இசையாக இருக்க வேண்டாம்.
அம்மாவிற்கு, தமிழ் பிள்ளைகளை மாத்திரம் அழைத்து பிறந்த நாளை நடத்த விருப்பம். அதை தாய் சொல்ல, " மற்ற நண்பர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்று அறிவுரை சொன்னான்". அம்மாமார் நாங்கள் சொன்னால் கேட்கினோமோ இல்லையோ, மகன் சொன்னால் கேட்பினம் தானே.
நாம் வாழ்க்கையில் எப்படியான கஷ்டங்களை எந்த வடிவத்திலும் ( ஏமாற்றம், இழப்புக்கள், புறக்கணிப்புக்கள், அவமானம்) வந்தாலும் இந்த குழந்தைகள் நொடிப்பொழுதில் மறக்க வைத்துவிடுவார்கள்.
குழந்தைகள் சுயாதீனமாகவும், நமக்காக மட்டும் உலகம் என்று இல்லாமல், நாமும் உலகத்தில் ஒரு பங்கு என்று வளர்வார்களாயின் அது அவர்களை சமுதாயத்தில் சுய கௌரவத்துடன் நல்ல பிரஜைகளாக வாழ வழி வகுக்கும்.
2 comments:
குழந்தைகளோடு குழந்தையாக உறவாடுவதும் அவர்களின் மழலையை கேட்டு ரசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, காரூரன்!
அதுவே நம் மனதை என்றும் புத்தம்புதியதாக வைத்திருக்கும். உங்களுக்கும் அப்படித்தானே?
நனானி,
ஆம், பல மாதங்களின் பின் ஒரு நண்பனின் வீட்டிற்கு சென்றபோது நகைச்சுவையாக உங்கள் மகளை கொண்டு போகப்பொகின்றேன் என்று குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசல் வரை சென்றேன். குழந்தையின் தாய் தன்னை விட்டு விட்டு அவள் வரமாட்டாள் என்று சொல்லிக் கொண்டு அழைத்த போது, தாயிடம் குழந்தை போக மறுத்துவிட்டது. தாய் அழுதுவிட்டாள். குழந்தைகள் தங்கள் நிலையில் சென்று விளையாடுபவர்களை விரும்புவார்கள்.
Post a Comment