October 13, 2007

கீறல்கள்


அவசரமான உலகிலே, உறவுகளின் நிலைமைகள் சற்று மன வருத்தம் தருவதாகவே இருக்கின்றது. அழையா விருந்தாளியாக ஒரு உறவை நாடி சென்ற அனுபவத்தை கிறுக்கிய போது,


மேலைத்தேச உறவுகள்



உரிமையுடன் அழைப்பு மணி அடித்தேன்
அழையா விருந்தாளியாய்,
பரிவுடன் திறந்தது கதவு
அட நீங்களா! என்றது ஓர் குரல்
ஆரவாரத்துடன் அல்ல, அலுத்து கொண்டு
முகவரி தவறினேனா என்று எண்ணி
ஒரு கணம் திகைத்து நின்று
சுதாகரித்து கொண்டு
எப்படி என்று நானும் சுகம் வினவ,
நிசப்தமே பதிலானது.

வாசல் கதவு திறந்தே இருந்தன,
சுள் என்று ஒரு உணர்வு என்னை சுடவும்
ஓரிரு அடிகள் உள்ளே எடுத்து வைக்க‌
அடுக்களையில் இருந்து ஓர் குரல்
அதிலை இருங்கோ என்று

அவசரமாய் அவள் எங்கே என்றேன் ஆதங்கத்துடன்,
இப்பத்தான் தூங்கினாள், அவளுக்கு சத்தம் பிடிக்காது
என்றாள் அவள் அன்னை.

மாடியிலேயோ என்றேன் நான்,
மறுமுறை அடித்து விட்டு வாருங்கள்
என்றது பதில்.

சிறைகளிற்குள் சிக்கிவிட்ட உணர்வுகள்,
மறுமுறை வரலாமா
என்ன தவறு நான் செய்தேன் இவர்களுக்கு,
ஆயிரம் கேள்விகள் எனக்குள்,

ஆதங்கத்தை அடக்கிக் கொண்டு,
ஆசுபத்திரிக்கு வரமுடியலை அலுவலக வேலையாலை
அது தான் இப்ப நான் இன்று.... என்றேன் அசடு வழிய‌
அதற்கும் ஏதும் பதிலில்லை.

அவசரமாய் இருக்கிறியள் போல‌
அப்புறமாய் வாறேன் என்று
சொல்லி கொண்டே வெளியேறினேன்
அப்போது தான் உறைத்தது
நான் மச்சானும் இல்லை மாமனும் இல்லை
மூன்றாவது மனிதன் மட்டும்.



கிறுக்கி முடித்துவிட்டு, மனதை திசை திருப்ப வானொலியின் ஒலியை கூட்டிய போது, வைரமுத்துவின் வரிகளில் வந்த பாடலின் இந்த வரிகள்

"உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
பௌர்ணமி ஆகுமடா"

என்னை உற்சாகமூட்டியது.




8 comments:

மே. இசக்கிமுத்து 5:32 AM  

//அவசரமான உலகிலே, உறவுகளின் நிலைமைகள் சற்று மன வருத்தம் தருவதாகவே இருக்கின்றது//

உண்மைதான்..தன்னலமும் கலந்துவிடுவதால்!!

காரூரன் 4:50 PM  

இசக்கிமுத்து,
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

நளாயினி 1:24 AM  

சில சந்தற்பங்கள் நமது உறவுகளை பகைத்துக்கொள்ளச்செய்வதுமுண்டு.

( அதிக உரிமை எடுக்கிறதாலை வரும் சிக்கல்கள் இது)

எத்தனை உரிமையோடு அந்த வீட்டினுள் சென்றீர்கள். அதே உரிமையோடு ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் அப்படிச்செய்திருக்கலாம்தானே.

( அல்லது நீங்கள் அவர்களில் வைத்த உரிமைப்பாசத்தை காட்டிலும் அவர்கள் உங்களில் குறைவாக வைத்திருக்கலாம் தானே. இது யாருடைய தப்பு? நமது தப்பு தானே.)

அதை மட்டும் அந்த கோபநேரம் நாம் சிந்திக்காமல் நிறைய பேசிவிடுகிறோம்.

அதையே கொஞ்ச நாள் மௌனம் காத்து அமைதிகாத்து பின்னர் யோசித்தா சிக்கல்கள் புரியலாம்.

இதைப்போல் நான் ஒருகுடும்ப நண்பர்களிடமிருந்து தூர இருத்தப்பட்டிருக்கிறேன்.

காரூரன் 7:57 PM  

நளாயினி,

உரிமை எடுப்பதில் தான் பிரச்சனை இருக்கின்றது என்பதில் உண்மை உண்டு. ஆயினும் நாம் கடந்து வந்த பாதைகளை ஓரளவுக்கு திரும்பி பார்க்க வேண்டும். தேவைகளுக்கு தான் மனிதர் என்று எண்ணிவிட்டால் இது தான் நிலைமை எல்லோருக்கும்.

பத்மா 1:42 AM  

kashtammaai ullathu.manithargal manithargali etta niruthuvathu een?enge ponathu snehitham?

காரூரன் 12:03 AM  

பத்மா,
உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி. சினேகிதம் மேலைத்தேசங்களில் மலிந்துவிட்டதோ என்று சில வேளைகளில் எண்ணத் தோன்றுவதுண்டு.

ஹேமா 1:02 PM  

வணக்கம் காரூரன்.உங்கள் பெயரை பெயரை முதன் முதலாக உச்சரிக்கிறேன்.தமிழாய் இனிக்கிறது.

உங்கள் பக்கம் உலாவுகிறேன்.
நிறையவே இருக்கிறது.நீங்கள் காட்டிய"மேலைத்தேய உறவுகள்"வாசித்தேன்.யதார்த்த உணர்வு மனதை உரசிப் போகிறது.
நீங்கள் சொன்னபடி மாமனோ மச்சானோ என்றில்லை.மனம் இல்லா மனிதருக்கு மாமன் மச்சான் மூன்றாவது மனிதன் எல்லோருமே ஒன்றுதான்.இன்றைய உலகில் பாசம் சிதைக்கப் பட்டுக் கிடக்கிறது பணக்குப்பைக்குள்.

காரூரன் 2:32 PM  

ஹேமா,

ஊரில் இன்றும் உறவுகள் நிலைத்திருக்கின்றன. நான் நேரில் சென்று பார்த்து வந்தேன். மேற்குலகில் எல்லோரும் தன்னிறைவு அடைந்து விட்டதாக எண்ணம்!

அடிக்கடி வந்து போங்கோ, நன்றிகள்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP