December 25, 2008

தூங்குபவரை எழுப்பலாம் நடிப்பவர்களை அல்ல!





மாதாவிற்கே இந்த நிலை என்றால் நம்மவர் நிலை என்ன? அரசியல் ஒரு சாக்கடை என்பார். ஈழத்து அரசியலை எள்ளி நகையாடும் தேசியம் பேசும் தேசிய வாதிகளே, தகவல் வலையின் தகவல்களால் தடம் மாறி விட்டீர்களோ, அல்லது உங்கள் தனி அடையாளங்களைப் பெறுவதற்கு என்னவும் எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணமா? தமிழ் என்று அடையாளத்தால் தமிழ் மணம் திரட்டிகளினால் தங்கள் எண்ணக் கருக்களை தரும் உங்களுக்கு என்ன குழப்பம். நீ சிந்திக்க என் சிந்தனையின் சில துளிகள்.

தமிழ் நாட்டு தொட்டி பட்டி எல்லாம் திரிந்தவன், அன்னை இந்திராவின் காலத்தில் இருந்து அவர் தம் புதல்வன் ஆட்சி வரை உங்கள் மண்ணின் மனங்களின் மாற்றத்தை கண்கூடாக பார்த்தவன் நான். தேசியம் பேசும் பாரத தேசத்தின் பகுப்பறிவாளனே, தகவல்களை கண்மூடித்தனமாக உள்வாங்குவது அறிவு கிடையாது, அதை பகுத்தறிய உனக்கு நேரம் தேவை. ஏன் என்ற கேள்விகள் எழுப்பாமல் ஒன்றை பின் தொடர்ந்தால் அது மதம் அரசியல் அல்ல.

நீ நாடாரா அல்லது நாயக்கரா என்று நடு வீதியில் அடித்துக் கொண்டும், என் சாதித் தலைவன் என்று சிலை வடித்து பறைசாற்றி நிற்கும் நீ, ஈழத்தமிழன் விடயத்தில் நீ தேசிய வாதியோ!, பாடசாலைப் படிப்பு முடிந்து பட்டப் படிப்பு படிக்க வேண்டுமாயின், சாதிச் சான்றிதழ் தான் உன் அடையாளம் ஆயினும் நீ தேசிய வாதி. தேசத்தின் மேல் பற்று வை அது தவறல்ல, ஆனால் அதை தட்டிக் கேட்கவும் மறந்து விடாதே.

காமராசர் வாழ்ந்து வளர்த்து விட்ட காங்கிரசு கட்சி தொண்டனே, டெல்லி சென்னை வந்து ஆலோசனை கேட்ட காலம் அன்று, சென்னை டெல்லி சென்றாலும் ஆலோசனை கேட்காது காங்கிரசு கூட்டுக் காலம் இது. உன் இறையாண்மைக்கு ஈழத்தான் என்ன தடை. ஈழத்தான் இழப்பு உன் சினிமாவில் பார்க்கும் ஒரு காட்சியாக நினைத்து மறந்து விடுகின்றாயா?



இது புலி அல்ல கோமாதா! இந்த‌வாய் பேசா ஜீவன்கள் கூட உன் பார்வையில் பயங்காரவாதிகளா?

உன் நாட்டில் ஒரு தலைவன் மட்டும் தான் கொல்லப் பட்டதாக எண்ணிக் கொள்ளும் உன்னால் பழைய வரலாறுகளை ஏன் தட்டிப் பார்க்க முடியவில்லை. இரத்தம் சிந்தாப் போராட்டம் தான் சிறந்தது என்று சொல்லிக் கொள்ளும் நீ, திலீபன் அண்ணா உண்ணா நோன்பு இருந்து உன் தேசத்தை நோக்கி விட்ட தார்மீக போராட்டத்தை தட்டிக் கழித்து விட்ட வரலாற்றுத் தவறை ஏன் எண்ண மறுக்கின்றாய். சோற்றுக்கு மாரடித்த உதிரி இயக்கங்களைஆயுதத்தை எடு, போடு என்று ஏவி தெரிந்த அரசுகளுக்கு நம் போராட்டம் ஒரு கேலிக் கூத்துத் தான்.

உலகில் பெரிய ஜன நாயக நாடென்று மார் தட்டி சொல்லும் அந்நாட்டின் குடிமகனுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. சீமானில் பேச்சு பல உண்மைகளை வெளிப்படியாக சொல்லியிருக்கின்றது. சீமானின் பேச்சில் உன் இறையாண்மைபோய் விடும் என்றால் உன் நாட்டின் இறையாண்மை ஒரு நூல் இழையில் இணைக்கப் பட்டுள்ளதா?

மும்பாயில் வெடித்த போது நாமும் வருந்தி நின்றோம், உன் தேசத்தின் பிச்சைக்காசில் நம்மினத்தை அழிக்கும் சிங்களம் மும்பாய் சம்பவத்தை உனக்கு படிப்பினை என்று எள்ளி நகையாடியது. ஆயினும் நீ உதவச் சொல்வாய் ஏனென்றால் நீ தேசியாவாதி.

நீ நாட்டைக் கடக்க இந்தியன் என்ற கடவுச்சீட்டு என்று ஒன்றிருந்தாலும், சில நாடுகளுக்கு செல்லும் போது உன் மொழி, மதம் என்பது அடையாளப் படுத்தப் படுவது இன்றைய யதார்த்தம். அக்கிறாகரத்தில் பிறந்தாலும் கமல்ஹாசன் என்ற பெயர் இருந்தால் இஸ்லாமியரோ என்று அஞ்சி சில நாடுகள் அனுமதி மறுத்த வரலாறு உண்டு.

இத்தாலிய அம்மையாரை உன் நாட்டு முதல் குடிமகளாகவும் கொள்கை வகுப்பாளாரகவும் எற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீ ஏனோ உன் பொக்கிள் கொடி உறவின் உணர்வை அறிய முடியவில்லை.

வன்னியில் வாழும் மக்களின் அவல நிலையை உன்னால் பார்க்கமுடியாவிட்டாலும் உன் தேசத்தின் அகதி முகாமில் வாழ்வோரை சென்று பார். அப்போதாவது உன் மனிதம் உன்னை உறுத்துகின்றதா என்று எண்ணிப்பார். அகதி வாழ்வு என்ன என்று தெரிய விரும்பின், ஆண்டுகள் பலவற்றை அடிமைகளாய், காலைக்கடன் கழிப்பதற்கும் காவல்காரன் அனுமதி பெற்று, மானத்தை மறைப்பதற்கு துணி அணியும் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் நம்மவர், இங்கு அவமானத்தை மறைக்க முகங்களை மறைத்து திறந்த வெளியில் காலைக்கடன் முடிக்கும் பரிதாப நிலை. சாறிகள் தான் அவர்களை பிரித்து வைக்கும் வாழ்விடம். இந்தப் பரிதாபத்தை நேரில் சென்று கேட்டறிந்தவன். மேற்குலகில் அகதியாக வந்தவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கின்றது. உன் தேசத்தில் அகதியாய் இருப்பவர் நிலை கவலைக்கிடம் தான்.

விடியலுக்காக காத்திருக்கும் எங்களுக்கு, உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்க முயற்சி செய், உன் தேசிய வளங்களை ஒருமைப்படுத்தி, கங்கையும், ஜமுனையும், காவேரியும் கலந்திட முயற்சி செய். தமிழன் என்ற அடையாளத்தை மறந்து விடாதே. உன் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களை, உன் தேசத்திற்கு அருகில் ஒரு நேச நாடு எல்லைகளால் பிரிக்கப்பட்டாலும் மொழியினால் இணைக்கப்படும் ஒரு நாடு உருவாக ஒரு கணமாவது சிந்தி என் இனமே!

ஆக்க பூர்வமான கருத்துக்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

படங்கள்: நன்றி, www.seithy.com

8 comments:

Anonymous 4:33 PM  

\\நீ நாடாரா அல்லது நாயக்கரா என்று நடு வீதியில் அடித்துக் கொண்டும், என் சாதித் தலைவன் என்று சிலை வடித்து பறைசாற்றி நிற்கும் நீ, ஈழத்தமிழன் விடயத்தில் நீ தேசிய வாதியோ\\

அருமையான பதிவு நண்பரே.....

Anonymous 4:34 PM  

\\விடியலுக்காக காத்திருக்கும் எங்களுக்கு, உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்க முயற்சி செய்\\
யதார்த்தமான வரிகள்

ஹேமா 6:14 PM  

காரூரன்,இந்த உயிர்களுக்கும் சேர்த்து அஞ்சலி செய்வோம்.வேறு வழி?எல்லாம்...எல்லாருக்கும் செவிடன் காதில ஊதின சங்குதான்!

காரூரன் 11:28 PM  

கவின், ஹேமா,

சொல்ல வேண்டியது எங்கள் கடமை, புரிதல் அவர்களைப் பொறுத்தது. உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்

தமிழ் மதுரம் 1:58 AM  

வன்னியில் வாழும் மக்களின் அவல நிலையை உன்னால் பார்க்கமுடியாவிட்டாலும் உன் தேசத்தின் அகதி முகாமில் வாழ்வோரை சென்று பார்.//


நல்ல ஆணித்தரமான பதிவு... இதன் மூலம் அவர்கள் புத்தி தெளிவார்கள் என்றால் சந்தோசம்... ம்...என்ன செய்ய வரலாறு தெரியாதோர் எல்லாம் எங்கள் ஈழம் பற்றி வகை வகையாய் பதிவு போட்டு எம் இனத்தை அவமானப்படுத்துவதில் தனித்துவம் காண்கிறார்களே தவிர துடிக்கும் எம் மக்களிற்கு தோள் கொடுக்கப் பின் நிற்கிறார்கள்... நல்ல கருத்துக்கள் காரூரன்,,,,, தன் வீட்டு ஓட்டையை அடைப்பதை மறந்து விட்டுப் பிறர் வீட்டுன் ஓட்டையை அடைக்க நினைப்பவர்களுக்கு இது நன்றாகப் புரிய வேணும்....

காரூரன் 5:16 PM  

நன்றி கமல்.

தமிழ் மதுரம் 4:56 AM  

அன்புடன் காரூரனுக்கு! எனது தலைவலிக்கு மருந்து கொடுக்க முடியுமா??? ஒருவர் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தொல்லை செய்கிறார். ஆதலால்????

என்னிடம் அப்புக் குட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் விடை சொல்ல முடியாத சந்தர்ப்பத்தில் எனது நண்பர்கள் பலரை இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் தார்மீகக் கடமைக்கு அழைக்கின்றேன்.. அவர்கள் வேறு யாருமல்ல நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் நண்பர் லோசன், சாரல் மழை தூவும் சயந்தன், அறிவுப் பசி போக்கிக் காதற் புகழுரைக்கும் காரூரன், வானம் வசப்பட வைத்து, உப்புமடச் சந்தியில் காத்திருக்க வைக்கும் ஹேமா, நட்பாய் பெண்ணியம் பேசி , சிரிப்பால் புரிய வைக்கும் சினேகிதி இவர்களுடன் தமிழோடு தமிழால் வலம் வரும் சாந்தி முதலிய அன்புள்ளங்கள். இது பற்றி மேலும் படிக்க என் பக்கம் வருக???

butterfly Surya 5:02 AM  

நல்ல பதிவு.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP