தனி மனித அடையாளங்களும் குழப்பங்களும்..
மனிதர்களில் சிலர் தம் சுய அடையாளத்தை பெற்று கொள்ள சிலர் நட்புகளையும் உறவுகளையும் கையாளும் முறையில் வித்தியாசப்படுகின்றனர். ஒரு மனிதன் தன்னைப்பற்றிய எண்ணத்தை தனக்குள் குறைத்து மதித்துக் கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னைப் பற்றிய மிகைப்படுத்திய எண்ண வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் போது தனக்கும் மற்றவர்களுக்கும் சவாலாக அமைந்து விடுகின்றான்.
"பாம்பு சீறுவது " அதனுள் ஏற்பட்ட பயத்தினால் தான், தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது சீறுகின்றது. இது போல் நம்மவரில் சிலர் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காகவும், தங்களைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்பதற்காகவும் தாங்கள் கோபக்காரர்களாக காட்டி ஒரு மாய வலையை போட்டு விடுகின்றார்கள்.
அதே சமயம் இன்னொருவர் இரக்க சுபாவம் உள்ளவர் என்று அடையாளம் கண்டால், அவரை தன் வசம் இழுக்க தன் சொந்தக் கதை, சோகக்கதை சொல்லி மற்றவரின் அனுதாபத்தை பெறுவதில் முனைப்பாக இருப்பார்கள்.
ஒரு சிலர் நட்புகள், உறவுகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஒருவரைப் பற்றி மற்றவருக்கும் கருத்துக்களை பரிமாறி பிரிவினை ஏற்படுத்தி விட்டு இருவரிடமும் நண்பர்கள் போல் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள். இந்த நவீன நாரதர்கள் தாங்கள் நட்புக்களுக்கு உதவுவது போல் வெளியே சொல்லிக் கொண்டாலும் அவர்களை பிரித்து அதில் தாங்கள் உதவுவதாக நடித்துக் கொள்வார்கள். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் காணாவிட்டால் பல உறவுகளை இழந்து விடுவோம். இவர்களை அடையாளம் காணத் தான் வள்ளுவன் "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு " என்று சொல்லியுள்ளான் போலும்.
சில ஆண்கள் திருமண வயதில் திருமணமாகாது, தனித்தவர்களாக வாழும்போது பலருக்கும் சவாலாக அமைந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு சமூக அடையாளம் குறைந்து விடுகின்றது. இவர்கள் தங்கள் ஆண்மையை பற்றி தன் நட்புகள் தவறாக எண்ணக் கூடாது என்பதற்காக தன்னுடன் பழகும் பெண்களைப் பற்றி குறைவாக கூறி தம்மை நியாயப்படுத்த முயல்வார்கள். ஒரு பெண்ணின் முன் இன்னொரு பெண்ணைப் பற்றி சொல்லி அதில் ஆதாயம் தேடவும் முற்படுவார்கள். இவர்கள் தங்களை நியாயப் படுத்த "மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது "என்று சொன்ன விடயங்களை மற்றவர்களிடம் போட்டுடைத்து விடுவார்கள். இதை நியாயப்படுத்த " உளவியல் பிரச்சனை" என்று சொல்ல சிலர் முனைவதும் உண்டு. என்னப் பொறுத்தவரையில் உளவியல் சம்பந்தமான வருத்தம் உள்ளவர்கள் தன்னிலை அறியாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்படி மூர்க்கதனமாக நடப்பவர்களின் செயற்பாடு தன்னிலை அறிந்த செயற்பாடு. உதாரணமாக குடிவெறியில் கத்திக்கொண்டிருப்பவர் பொலிசைக் கண்டவுடன் வாய் அடைத்து நிற்கின்றார். ஏன் என்றால் அவருக்கு சத்தம் போட்டால் என்ன பின் விளைவு என்று தெரிந்த படியால் தான்.
விட்டுக் கொடுத்து நடப்பவர்கள் எளியவர்களாகவும், கத்திக் குளறி நடப்பவர்கள் பலமானவார்களாகவும் சிலர் எண்ணி சிலரை கண்டு கொள்ளமலும் நடந்து கொள்கின்றார்கள். ஒருவர் அடிக்கடி கோபப்பட்டால் அது பலவீனம் அது பலம் அல்ல!
கலைஞர்கள், பொது அமைப்பு, அரசியல் உறுப்பினர்களிடையே தனி மனித அங்கீகாரத்துக்கான போட்டி பெரிதும் நிலவும். இவர்களுக்கு ஒரு மனப் பக்குவம் வேண்டும். இல்லையேல் இவர்களுக்கிடையில் இருக்கும் போட்டி பொறாமையாக வளர்ந்து பிரிவுகளும், தேவையில்லாத பிரச்சனைகளும் தோன்றுகின்றன. இதில் வால் பிடிப்பவர்களால் தான் அனேகமான பிரச்சனைகள் உருவாகின்றன.
அமெரிக்க அரசியலில் போட்டி போட்டு அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவால் பல சவால்களின் மத்தியில் தன் அடையாளத்தை அமெரிக்க மக்களின் முன் வைக்கமுடிகின்றது. தன்னுடன் கட்சித்தலைவருக்கு போட்டியிட்ட கிலறி கிளிண்ட்னை தனது அரசில் முக்கிய பகுதிக்கு அமத்தும் அளவிற்கு அவருக்கு பக்குவம் இருக்கின்றது. இந்த பக்குவம் நம்மவர்களுக்கும் தேவை.
நாலுமுழ வேட்டி கட்டி நாசனல் போட்டு நின்று அல்லது பட்டுச் சேலை கட்டி, நெற்றிக் குங்குமமிட்டு சபை தனை அலங்கரிப்பது மாத்திரம் நமது அடையாளங்கள் என்று நின்று விடாமல், மனதளவில் மற்றவர்களின் அடையாளங்களையும் மதித்து நடப்பவர்களாக முயற்சிக்க வேண்டும். கல்வி ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் கருவி, சிலர் கல்வி தம் தனி மனித அங்கீகாரத்தை தருவதாக கருதி பலரை புறக் கணித்து வாழ்கின்றார்கள்.
பணம், கல்வி, அந்தஸ்து , புகழ் என்ற அடிப்படையில் மனித அடையாளங்களை பார்க்காமல் எல்லோரையுடைய சுய அடையாளங்களையும் மதித்து, முடிந்தால் அவர் உங்களை கேளாமல் நீங்கள் அவருக்கு முன்னுதவ வரவேண்டும்.
வெற்றி பெற்ற மனிதர் ஒருவரைப் பற்றி நான் எழுதிய பழைய கட்டுரை வாசித்துப் பாருங்கள்.
6 comments:
காரூரன்,உண்மையில் சுயசிந்தனை செய்யக்கூடிய ஒரு பதிவு.நான் நேறும் இன்றும் வாசித்தும் என்னதான் பின்னூட்டம் என்று யோசித்தபடியே பின்னூட்டம் இடுகிறேன்.இயல்பாய் மனித மனங்களோடு பேசியிருக்கிறீர்கள்.
என்றுமே நாங்கள் நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ மற்றவர்களைப் பற்றி திடீரென்று விமர்சனம் வைக்காமல் அவர் இடத்திலிருந்து அந்த நிலைமையைச் சிந்தித்துவிட்டு செயல்படுவோமேயானால்
அவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டவராயிருப்போம்.
அன்புடன் காரூரனுக்கு! தங்களுக்கு கமல் எழுதிக் கொள்வது!
அது சரி சும்மா நாமளாச்சு நம்ம பாடாய்ச்சு என்று இருந்த என்னை ஏதோ வம்பில மாட்டி விட்டு விட்டு தான் தப்பினேன் பிழைத்தேன் என்று ஹேமா இருப்பது போல் நானும் இருக்க வேண்டாமா???
யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்பதற்கமைவாக நானும் கொஞ்சப் பேரை இந்தச் சினிமாத் தொடர் பதிவுக்கு பெரும் உவகையுடன் அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அவங்கள் வேறு யாரும் இல்லை. இதோ இந்தத் தொடர் பதிவினைத் தொடர்ந்து தொடர்ந்திட
'சினேகிதி' அவர்களையும்.
'கவின்' அவர்களையும்
கனடாவில் இருந்து காதல் பற்றி புகழுரைக்குக் 'காரூரனையும்' அன்போடு அழைக்கின்றோம்.
விட்டுக் கொடுத்து நடப்பவர்கள் எளியவர்களாகவும், கத்திக் குளறி நடப்பவர்கள் பலமானவார்களாகவும் சிலர் எண்ணி சிலரை கண்டு கொள்ளமலும் நடந்து கொள்கின்றார்கள். ஒருவர் அடிக்கடி கோபப்பட்டால் அது பலவீனம் அது பலம் அல்ல!//
இது இலங்கை அரசியல் வாதிகளுக்கு நன்றாகப் பொருந்தும்.
ஹேமா,
நீங்கள் கூறுவது உண்மை. என் கிறுக்கலும் சிந்திக்க வைத்துள்ளது என்பதில் மகிழ்ச்சி. மனமுவந்து நடப்பது என்பது ஒரு தேடலின் வெளிப்பாடு. உதாரணமாக உங்களுடன் பேசிய ஒருவர் திடீரென பேசாமல் விட்டுவிட்டார் என்றால் அதற்கு ஏதாவது பின்னணி இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து அவரைப் பகைத்துக் கொள்ளாமல் அதற்கான காரணத்தை தேடும் போது பல சுவாரசியமான விடயங்கள் வெளி வரும். வெறுப்பு என்பது புறக்கணிக்கப்பட்ட விருப்பின் வெளிப்பாடு. வாழ்வியியலில் "சமூகவியல் அல்லது உளவியல்" பாடமாக கற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் அனுபவத்திலாவது இதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற அவாவில் எழுதியது தான் இந்த கிறுக்கல்.
வாங்க கமல்.
நமக்கு சினிமா விமர்சிக்கின்ற ஆற்றல் பெரிதா இல்லை, முயற்சிக்கின்றன். நேரம் கொஞ்சம் வேணும். மூத்தவர்கள் எழுதட்டும் பார்த்து ஏதோ கிறுக்கிறம்.
நமக்கு சினிமா விமர்சிக்கின்ற ஆற்றல் பெரிதா இல்லை, முயற்சிக்கின்றன். நேரம் கொஞ்சம் வேணும். மூத்தவர்கள் எழுதட்டும் பார்த்து ஏதோ கிறுக்கிறம்.//
மூத்தவர்கள் நீங்கள் எழுதினால் தான் இளையவர்கள் உங்களைப் பார்த்து எழுதுவார்கள். எனவே மூத்தவர் நீங்கள் முதலில் முயன்று பாருங்கள்.
Post a Comment