January 17, 2009

வெறிச்சோடிய நினைவுகள் விடியாதா எமக்கும்!


நதிக்கரையில் தான் நாகரீகம் பிறந்தது என்று சொல்வார்கள். யாழ்ப்பாணத்தானுக்கு சொல்லிக் கொள்ள எந்த நதியுமில்லை. ஆயினும் ஆலயங்களினாலும் பாட சலைகளினாலும் நிரம்பி வழிந்த ஆன்மீகமும் கல்வியும் அவனை பக்குவப் படுத்தும் கருவிகளாகவே அமைந்து விட்டது என்பது யதார்த்தம். ( பிற நகர்களை பற்றி தெரியாததால் குறிப்பிடவில்லை ‍ _ இது பிரதேசவாதம் அல்ல).

உயர்கல்வி என்று மறுக்கப்பட்டதோ அன்று தான் மாணவன் சிந்தித்தான் . அப்போது உதித்தது தான் போரட்டங்கள். இன அழிப்புக்களின் விளைவுகள் இந்த போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாற்றமடைந்தன. சாரம் கட்டி சைக்கிளில் சென்று சந்திகளில் அரசியல் பேசிக் கொள்வது நம் வழக்கம், சரக்கு(பெண் பிள்ளைகள்) பார்க்கும் வழக்கமும் உண்டு. " இடி அமீன்" என்ற பொலிஸ் அதிகாரியின் பெயரைக் கேட்டால் பெடிபெட்டை பயந்து ஒதுங்குகின்ற காலம் அது. பொலிஸ்காரர் வந்தால் என்றால் சந்தியில் சாரத்துடன் நிற்பவர்களுக்கு கேட்டுக் கேள்வி இல்லாமல் அடி தான். பொலிஸ் ஜீப்பை கண்டால் ஓட்டம் தான். இந்தக் கலாச்சாரம் முத்திப் போய் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் கூட எங்களை ஆடு மாடுகள் போல் நடத்தினார்கள்.

இந்தக் கால கட்டங்களில் பொலிசார் சுடப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யும் காலம் அது. வெள்ளிக் கிழமைகளில் இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் நடைபெறும். நான் ஹாட்லியில் கல்வி பொது தராதர‌ (க. பொ. த) உயர்தர வகுப்பு ( 12ம் வகுப்பு அல்லது +2) படித்துக் கொண்ட காலம். கல்லூரியிலுள்ள மாணவர்களை 5 பிரிவுகளாக பிரித்து, 5 இல்லங்களாக பிரிக்கப் பட்டு மெய் வல்லுனர் போட்டிகள் நடாத்தப் பெறுவது வழக்கம். இதற்காக 5 இல்லங்களுக்கான கூடாரம் அமைத்து பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா நிறங்களால் அந்தந்த இல்லங்கள் அலங்கரித்து உற்சாகமாக விளையாட்டுப் போட்டி நடக்கும் காலம் அது. இந்த விளையாட்டு போட்டிகளுக்காக கூடாரம் அமைப்பதற்காக போட்டிக்கு முதல் நாளில் சென்று கூடாரம் அமைத்து மாட்டிறைச்சி காய்ச்சி பாணுடன் சாப்பிட்டு ஒரு சிலர் நனைக்கத் தெரிந்த‌வர்கள் நனைத்தும், மணக்கத் தெரிந்தவர்கள் மணந்தும், அரசியல், அவள் இவள் என்ற ஆய்வு, கற்றுத் தந்த ஆசிரியர் பற்றிய கலாய்ப்பு என்ற பல விடயங்கள் அரங்கேறும் இரவு அது.

நாமும் வெள்ளி மாலை 6 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஒன்று சேர்ந்தோம். ஒரு மாதிரி இரவு 10 மணிக்கு கூடாரம் அமைத்து முடிக்கவும் மாட்டிறைச்சி சமைத்து முடிக்கவும் பசி வயிற்றை கிள்ள‌ பாண் (ரொட்டி) வாங்க அவசரம் அவசரமாக வசந்தன் என்ற நட்புடன் மூவர் பருத்தித்துறையில் உள்ள பேக்கரிக்கு போனார்கள். அங்கு பாண் முடிய பக்கத்தில் இருக்கும் நெல்லியடிக்கு பஸ்ஸில் சென்று பாண் வாங்கி திரும்பும் போது இவர்களுக்கு ஆங்கிலப் படம் பார்த்த அனுபவம் இவர்களுக்கு. வாகனத்தில் வலம் வந்த பொலிசார் சுடப் பட்டு அவர்கள் ஆயுதம் களையப்பட்டதை கண் கூடாக இவர் பார்த்திறுக்கின்றார்கள். அதன் பின் அவர்கள் பஸ் ஏறி திரும்பி வந்து விட்டார்கள்.

வீதிகள் வெறிச்சோடின, அவசரம் அவசரமாக வந்த கல்லூரி அதிபர் வந்து எங்களை அமைதி காக்கச் சொன்னார். மைதானத்தில் இருந்து இதைப் பற்றி பல அலசல்கள். வசந்தன் இந்த விடயத்தில் மிகவும் ஆவல் கொண்டவனாக இருந்தான்.

வசந்தன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். நீளம் பாய்தல், தடி ஊண்டி உயரம் பாய்தல், தத்தி மிரித்து பாய்தல் ( Triple Jump ) 800 மீற்றர் ஓட்டம் போன்றவற்றில் அவனை பாடசாலையில் யாரும் மிஞ்சியவர்கள் இல்லை. மிகவும் துடுப்பாட்டமான இளைஞன். அவன் கரவெட்டியில் துன்னாலை என்ற கிராமத்தை சேர்ந்தவன்.

கோவிற்சந்தை

கோவிற்சந்தை வசந்தனின் கிராமத்தில் உள்ள ஒரு இர‌வுச்சந்தை. இதுவும் மாணவர்கள் அரட்டை அடிக்க சேரும் இடம் என்று சொல்லிக் கொள்ளலாம்.இந்தக் கிராமத்தை சேர்ந்தவர்களின் சிறப்பு என்ன வென்றால் படிப்பிலும் விளையாட்டிலும் திறமையுள்ளவர்கள். வசந்தன் பாடசாலை படிக்கும் காலத்திலேயே வாகனம் ஓட்டத் தெரிந்தவன்.


நாங்கள் பாடசாலை முடிப்பதற்கான நாட்கள் இருக்கும் போது தான் 83 யூலை கொடூர கலவரம் நடந்ததது. இந்த சம்ப‌வத்தின் பின் தான் விடுதலை வேட்கை இன்னும் அதிகரித்தது. இதன் பின் வசந்தன் இயக்கத்திற்கு போய் விட்டான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய நெல்லியடி முகாம் மீதான முதல் கரும்புலி தாக்குதலை செய்த மில்லர் என்ற மாவீரன் தான் இந்த வசந்தன். ஜூலை 05 1987 தான் அவனுடைய தாக்குதல் நடைபெற்றது. இந்த நாளைத் தான் கரும்புலி நினைவு நாளாக கடைப்பிடிக்கின்றார்கள். அவன் நினைவாக அந்த இடத்தில் அந்த இடத்தில் பாடசாலைக்கட்டிடம் கட்டப் பட்டு அவனுக்கு நினைவுச் சிலையும் வைக்கப்பட்டது.

நெல்லியடி மத்திய மகாவித்தாலயம்.( பழைய இராணுவ முகாம்)

பின்பு மில்லருக்ககாக கட்டப் பட்ட சிலை இராணுவத்தால் உடைக்கப்பட்டு விட்டது. ( படம் தமிழ்னெற்)

மில்லர் சிலை ‍ இராணுவத்தால் உடைக்கப்பட்ட நிலையில்


வாழ்க்கையில் இப்படி ஒரு தியாகம் செயவதற்கு எப்படியான மனத்திடம் இருக்க வேண்டும், என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்கமுடியவில்லை. அன்று எங்களுடன் அந்த‌ மைதானத்தில் இருந்த பலர் மாவீரர்களாகி விட்டார்கள் என்பது எம் மீது ஒரு குற்ற உணர்வை உருவாக்குகின்றது. இப்படி எத்தனை உயிர்கள் நம்மினம் வாழவேண்டும் என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. எம்மால் முடிந்த முயற்சியைய‌யும் பங்களிப்பையும் செய்வது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்.
8 comments:

அ.மு.செய்யது 8:52 AM  

ஒரு வீர சரித்திரத்தை சுருக்கமாகவும் உருக்கமாகவும் தந்ததற்கு நன்றி தோழரே !!!!

ரசித்தேன்..இன்னும் இது போன்ற வீர சரித்திரங்கள்,தியாகங்கள் குறித்த பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

ஹேமா 3:22 PM  

காரூரன்,மனம் கனக்க எழுதியிருக்கிறீர்கள்.இப்படி எத்தனை உறவுகளைப் பலி கொடுத்துவிட்டு நின்மதிக்காகக் காத்திருக்கிறோம்.ஒரு பயனுமே இல்லையே!

மெல்போர்ன் கமல் 12:08 AM  

அண்ணா! மனதிற்கு கஸ்டமாக இருக்கிறது. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த வசந்தன் உங்கள் நண்பன் என்று நீங்கள் கூறும் போது மனதிற்கு கஸ்டமாகவே இருக்கு... எத்தனை இழப்புக்கள், எத்தனை தியாகங்கள்.... எல்லாம் வீணாகிப் போகாது.

காரூரன் 8:26 AM  

வாங்க அ.மு. செய்யது,

எனக்கு தெரிந்த அளவில் வீர காவியர்களின் நினைவை அசை போட்டு பார்க்கின்றேன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

காரூரன் 8:30 AM  

ஹேமா,
விளையாட்டுத் துறையில் அன்று என் வகுப்பில் இருந்தவர்கள் பலர் மாவீரர்கள் ஆகி விட்டார்கள். எண்ணுகின்ற போதெல்லாம் நாம் சுய நலவாதிகளோ என்று ஒரு குற்ற உணர்வு உறுத்துகின்றது. எண்ணங்களை எழுதியாவது... அவர்களை மனதில் என்றும் நிறுத்திக் கொள்வோம்.

காரூரன் 8:33 AM  

வாங்க கமல்,
என்னத்தை சொல்ல, என் வகுப்பு மாணவர்கள் பலர் தியாக தீபங்கள்.. கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.

BOOPATHY 6:58 PM  

காரூரன் உருக்கமாகவும் தெளிவாகவும் வடித்திருகின்றீர்கள்.
வசந்தன்; மில்லர், நெல்லியடி; கரவெட்டி எல்லாமே நேற்று நடந்தவை போல் இருகின்றன.

காரூரன் 6:56 PM  

பூபதி,
உண்மைதான், நேற்று நடந்தவை போல் தோன்றுகின்றன. நான் என் மனதில் பட்டதை எழுதுகின்றேன். நன்றிகள்

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP