திருப்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை!
எதிர்பார்ப்புக்கள் நிறைந்த நம் வாழ்வியியலில் நாம் நினைத்தது எல்லாம் நடந்து விடுவதில்லை. ஆனால் எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகின்ற போது அதை தாங்குகின்ற மனப்பக்குவம் இருப்பதில்லை. நான் கடந்து வந்த பாதையில் கண்டு கொண்ட அனுபவங்களில் இருந்து சிலவற்றை இரைமீட்டு பார்க்கின்றேன். யாருடைய மனங்களையும் புண்படுத்தக் கூடாது என்பதிற்காக கதாபாத்திரங்களை மாற்றித் தருகின்றேன்.
மதன் என் பாடசாலைத் தோழன். அவன் தந்தை ஒரு மருத்துவர். நன்றாக கல்வி கற்பான் அது மாத்திரமில்லை பேச்சுப் போட்டிகள், சாரணர் அமைப்பு போன்று பொது விடயங்களிலும் ஈடுபாடுடையவன். அடி தடி என்றால் ஒதுங்கி விடுவான். "ஊரில் பெடி என்றால் இப்படி எல்லோ இருக்கோணும்" என்று என் அம்மா உட்பட நண்பர்களின் அம்மாக்களும் அவனைப் புகழ்பாடுவார்கள். அவன்ரை பேரைச்சொல்லி நாங்களும் ஊர் சுத்த சுதந்திரம் கிடைத்தது உண்மைதான்.
நாம் பத்தாம் வகுப்பு ( ரியூசன்) படிக்கும் போது ஒரு பட்டணத்து தேவதை வந்தாள் படிப்பதற்கு. பின்பு தான் தெரியும் அங்கு கற்பிக்கும் ஆசிரியரின் மகள் என்று. "அவள் வேம்படியாம்" (யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் பாடசாலை) என்று கூட படிக்கும் மாணவிகளுக்கு அவள் மீது சற்றுப் பொறாமை. ஒரிருவர் தான் பாடசாலை வெள்ளை சீர் உடையுடன் வருவார்கள். அனேகமான மாணவிகள் வண்ணங்களில் தான் காட்சி தருவார்கள். ஆயினும் இந்த வேம்படிக்காரி மீது அங்கு படிக்கும் அனேகமானோருக்கு கண். மதனுக்கும் அவள் மேல் கண் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. மதனுக்கும் வேம்படிக்கும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் நன்றாக ஆங்கிலம் பேச எழுத தெரியும்.
மதனுக்கு ஆங்கில வகுப்பு ஒன்றுக்கு வர முடியவில்லை என்று ஆங்கில ஆசிரியர் வேம்படியின் எழுத்துக் கொப்பியை வேண்டி மதனிடம் கொடுத்து பார்த்து எழுதிவிட்டு அவளிடம் கொடுத்து விடு என்றார். இதை சந்தர்ப்பமாக்கி கொண்ட மதன் முதல் காதல் கடிதத்தை இந்த கொப்பிக்குள் வைத்து கொடுத்தான். இப்படி இவர்கள் காதல் மலர ஆரம்பித்தது.
10ம் வகுப்பில் தான் அடிக்கடி இவர்கள் சந்திக்க வாய்ப்புக்கள் இருந்தது. 11ம் வகுப்பில் இருந்து மதனுக்கு ரியூட்டரி ஆண்கள் மட்டும் படிக்கும் இடமாகி விட்டது. கடிதம் தான் இவர்கள் காதலுக்கு ஒரே ஒரு ஊடகமாக அப்போது இருந்தது. நண்பர்களும் நண்பிகளும் தான் தூதுவர்கள்.
பாடசாலை முடியும் நாட்களில் மாணவர்கள் இயக்கங்களில் அதிகமாக சேரும் காலம் அது. இந்தப் பயத்தினால் மதனுடைய பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் எம்மை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மதன் மைசூரிலும் நான் தமிழ் நாட்டிலும் பட்டப் படிப்பு படித்து வந்தோம். அவன் காதல் நீடித்து தான் வந்தது. நாட்டுப் பிரச்சனையால் கடிதத் தொடர்பு குறைந்து கொண்டு போய்க்கொண்டிருந்தது.
படிப்பு முடித்துக் கொண்டு "வேம்படி" எங்கு இருக்கின்றாள் அறிந்து இலங்கை சென்று கொழும்பில் தங்கியிருந்த காதலியின் இடத்திற்கு சென்று பார்த்தான். அவள் உறவினர் வீட்டில் தான் தங்கியிருந்தாள். ஆனால் அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. கல்யாண அழைப்பிதழை வைத்துவிட்டு அறையினுள் சென்று விட்டாள். வெறும் தமிழ் சினிமாக்களில் காதல் தோல்வியை பார்த்தவனுக்கு தனது காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒருவருக்கும் சொல்லாமல், பெற்றோரையோ உறவுகளையோ பார்க்காமல் இந்தியவிற்கு திரும்பி விட்டான். எல்லோரிடம் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.
இவனுடைய தாய் இந்த விடயத்தை அறிந்து என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் வாயை மூட முடியாமல் தான் மௌனிக்க எண்ணி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாள். நண்பனின் உறவுகள் என்னை தொடர்பு கொண்டு இதை மதனிடம் சொல்லச் சொன்னார்கள். என்னால் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் தாயின் மரணச் சடங்குகள் அவனில்லாமலே நடந்து முடிந்தது.
மூன்று மாதத்தின் பின் தொலைபேசியில் மதனுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. என்னால் அவன் எண்ண மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவனாகவும், சொந்தங்களையும் நட்புகளையும் பார்க்க விருப்பம் இல்லாதவனாகவும் இருந்தான். என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்து பார்த்தேன். அவன் பிடிவாதத்தில் இருந்து அவன் விலகவில்லை. அவனைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை.
நாட்கள் நகர்ந்தன, நானும் கனடா வந்து சேர்ந்து விட்டேன். நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் மதனைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளின் பின் அவன் எண்ணெய் வள நாட்டில் இருப்பதாக எனக்கு தொலை பேசி நம்பர் தந்தார்கள்.
அழைத்துப் பேசிய எனக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருந்தன. நெற்றிப் பட்டை பூசி, தீட்சை பெற்று, திருவம்பாவை பேசித்திரிந்த நண்பன் கிறிஸ்தவ மதத்தின் பரப்புரையாளனாக எனக்கு கிறிஸ்தவ மதத்தின் பெருமை பற்றியும் இந்து சமயத்தின் மீது அவ நம்பிக்கையும் கொண்டவனாக இருந்தான். அவன் எண்ணங்களை திருப்திப்படுத்துவதிற்காக அவன் பரப்புரையை கேட்டேன். என்னுடைய எந்த கருத்து திணிப்பையும் முன் வைக்க விரும்பவில்லை. அந்த தொலைபேசி அழைப்புக்கு 300 டாலர் செலவானது, என் அறை நண்பர்கள் நான் என் காதலியுடன் கதைத்து விட்டு நண்பனிடம் கதைத்ததாக பொய் சொல்வதாக முதலில் என்னை கேலி செய்தார்கள். பின்பு உண்மையான நிலையை புரிந்து கொண்டார்கள். மதனை மதம் மாற்றியவர்கள் தான் திருமணத்தையும் அவனுக்கு செய்து கொடுத்தார்கள். அப்படியாவது அவன் வாழ்கின்றான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இவனின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று இப்போது எனக்கு உணரக் கூடியதாக இருக்கின்றது. அவன் கிளிப் பிள்ளை போல் அம்மா, அப்பா, ஆசிரியர் சொல் கேட்டு வளர்ந்தவன், தன் காதலை தவிர வேறு எதையும் தானாகச் செய்தவனில்லை. பிள்ளைகள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதிற்காக நடுத்தர வர்க்க குடும்பங்கள் பல அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை விதிக்கின்றார்கள். இதனால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சவால்களை கையாள முடியாமலும், தன்னுடைய முழு அன்பையும் ஒருத்தியுடன் கொடுத்து விட்டு, அவள் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கின்றாள் என்பதை அறியாமல் ஒரு மாயையில் வாழ்ந்து விடுகின்றார்கள்.
குழந்தைகளை எல்லோரிடமும் பழக சந்தர்ப்பம் தந்து அதில் எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று தன் காலில் நிற்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். நான் உளவியல் நிபுணன் அல்லன், ஆயினும் மற்றவர்களுக்கும் மனம் இருக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்தவன். எம்மை சுற்றியுள்ள அனுபவங்கள் கூட எம்மை பக்குவப் படுத்தும் என்பதை நம்புவன்.
வெறும் உதட்டளவு உறவில்லாமல் எந்த உறவையும் உணர்வுடன் பழகுங்கள். இன்னொருவருடைய தவறை மறைக்க " அவர் அப்படித்தான்" என்ற தாளம் போடாதீர்கள். தன்னிலை மறந்து நடப்பவர்கள் மன நோயாளிகள். மற்றவர்கள் எல்லோரும் தன்னிலை அறிந்து நடப்பவர்கள். வெறும் சந்தர்ப்பவாதங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டாதீர்கள். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் இது தான் வாழ்க்கை!
உங்கள் பார்வையையும் தாருங்கள்.
14 comments:
காரூரன் எப்படியென்று சொல்லத் தெரியவில்லை.ஒரளவு விருத்தெரிஞ்ச வயசில இருந்து சின்னச் சின்னப் பொறுப்புக்களைக் கொடுக்க வேணுமாம்.அப்போதானாம் குடும்பம்,பொறுப்பு என்கிற ஒரு கவனம் மனசில படியும்.மற்றது எதிலும் எங்கும் நிறைந்த எதிர்பார்ப்பைக் குறைத்து அளவோடு இருப்பது நல்லது.எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் ஏமாற்றங்
களைக்கூடச் சமாளித்துக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.
காரூரன் நல்லதொரு அனுபவப் பகிர்வு தந்துள்ளீர்கள்! உளவியல் ரீதியான பிரச்சினைக்குரிய தீர்வினைத் தந்துள்ளீர்கள். இளமையில் கண்டிப்புடனும் கண்ணியத்துடனும் வளர்த்தால் முதுமையில் நல்ல முறையில் குழந்தை வளரும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு! ''எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைகளே மண்ணில் பிறக்கையிலே ! அவர்கள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!
// வெறும் உதட்டளவு உறவில்லாமல் எந்த உறவையும் உணர்வுடன் பழகுங்கள். இன்னொருவருடைய தவறை மறைக்க " அவர் அப்படித்தான்" என்ற தாளம் போடாதீர்கள். தன்னிலை மறந்து நடப்பவர்கள் மன நோயாளிகள். //
கருத்தை வழிமொழிகிறேன் காரூரன்...
//வெறும் உதட்டளவு உறவில்லாமல் எந்த உறவையும் உணர்வுடன் பழகுங்கள். இன்னொருவருடைய தவறை மறைக்க " அவர் அப்படித்தான்" என்ற தாளம் போடாதீர்கள். தன்னிலை மறந்து நடப்பவர்கள் மன நோயாளிகள். மற்றவர்கள் எல்லோரும் தன்னிலை அறிந்து நடப்பவர்கள். வெறும் சந்தர்ப்பவாதங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டாதீர்கள். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் இது தான் வாழ்க்கை!//
ஹேமா,
எழுத வேண்டும் தோன்றியதால் ஓர் அனுபவப் பகிர்வு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
கமல்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
அ.மு. செய்யது,
மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் எண்ணங்களில் ஒற்றுமை நன்மை தானே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
கவின்,
வருகைக்கு நன்றிகள்!
அருமை
Focus Lanka திரட்டியில் இணைக்க...
http://www.focuslanka.com
நன்றாக எழுதியுள்ளீர்கள் காருரான். வாழ்த்துக்கள். எனது கருத்தையும் சொல்லட்டுமா?
மனித வாழ்வில் படிப்படியாக மனிதன் பல அனுபவங்களைப் பெற்று இறுதியல் சமூகத்திற்கு உதவும் வாழ்வையோ இல்லை ஆன்மீக வாழ்வையோ கடைப் பிடிக்கிறான். இதைத்தான் மேல் குறிப்பிட்ட கதையின்மூலம் என்னால் உணரக்கூடியதாக இருக்கின்றது.
இளமைப் பருவம் என்பது துள்ளும் பருவம். பலதைச் சாதிக்க நினைக்கும் பருவம். பல விதமான எண்ணங்கள் தோன்றும் தான் நினைத்ததே சரி எனத் தோன்றும் அதிலும் தனித்து நின்று சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிட்டால் சில சமயம் சுயநலம் அவர்கள் செயல்களில் கலந்துவிடும். காதல், ஆசைகள் என்று பல விதமான எண்ணங்கள் அலைபோல் மனதில் தோன்றி மறையும். இந்தவயதிலே மனதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆதலால் அவரது இளமைக்கால நிகழ்வுகளை மறந்து மன்னித்துவிடலாம்.
ஆனால் எத்தனையோ பேர் முதிர்வடைந்தபின்பும் சரியான முடிவுகளை எடுக்கத்தவறி வேதனைப்படுவதை கண்டிருக்கின்றோம். இதற்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை, சில செயல்களாலும், முடிவுகளாலும் கிடைக்கின்ற அனுபவத்தைப் பெறுவதற்கு அதிக விலை கொடுக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.
நன்றி திகழ்மிகிர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
பூபதி,
நல்ல கருத்தாய்வு, யதார்த்தமான கருத்துக்களுடன் பின்னூட்டம். உங்கள் அம்மாவை நன்கு உங்களுக்கு பிடிக்கும் போல, வருக்கைக்கு நன்றிகள்
அம்மாவையும் பிடிக்கும் அப்பாவைத்தான் கூடப் பிடிக்கும். அப்பா மனசில் பூவாக அம்மா வலையில் பூவாக. //முகவரி தேடும்// என்று கூறிவிட்டு சொந்த முகவரியை மறைத்து விட்டீர்களே?
Post a Comment