January 1, 2009

வாழும் மண்ணில் என் பார்வை.







பல்லினக் கலாச்சாரத்தில் முதன்மை பெறும் ஒரு நாடு கனடா. இங்குள்ளவர்கள் மதம், இனம், நிறம், கல்வி, அந்தஸ்து என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்வது என்னைப் பல தடவைகள் சிந்திக்க வைத்துள்ளது. பல வருடங்களை இந்த மண்ணில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவன் என்ற வகையில் ஒரு பார்வை.

ஒவ்வொரு இனமும் எப்படி ஒரு நாட்டுக்குள் வருகின்றது என்பதை பொறுத்து அந்த இனம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவது யதார்த்தம். ஈழத்தார் அனேகமானோர் அகதிகளாய் தான் வந்தார்கள். குறிப்பாக பொறியியலாளர்களாகவும், மருத்துவர்களாகவும், ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் தங்களை அடையாளப் படுத்தி செல்வாக்குடன் வாழ்ந்து விட்டு இங்கு தங்களை தக்க வைத்துக் கொள்வதில் பல சிரமங்கள்.

வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்கள் பலர் இங்கு தொண்ணூறூகளில் வந்த போது தாங்கள் நினைத்த வேலையை பெற முடியாமல் புலம்பி தீர்த்தார்கள். அவர்களில் பலரின் அணுகுமுறையில் தாங்கள் வல்லவர்கள் ஆயினும் இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு எங்களை அடையாளம் காணத் தெரியவில்லை என்று கூறினார்கள். நாம் முதிலில் வாழும் தேசத்தில் உள்ள தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும். எமது பிரச்சனைகளை சமூகத்திற்கும் அரசுக்கும் எடுத்துச்செல்வது எமது கடமை அதை உணர வேண்டும்.

கூட்டு முயற்சிகள் தான் பின்னாளில் நம்மவரில் பலரை அவர்கள் துறையில் இன்று தக்க வைத்துள்ளது என்பது இன்றைய யதார்த்தம். தமிழில் நாம் இந்த நாட்டில் பல பகுதிகளில் எமது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றோம். கனடிய தேசிய கீதத்திலிருந்து, அரசாங்க துண்டுப் பிரசுரங்கள், மருத்துவ கூடங்கள், போக்குவரத்துச் சேவைகள் தமிழில் சொல்லி பேசி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். பல் கலாச்சாரங்கள் இருக்கும் நாட்டில் பல் கலாச்சார வானொலி தமிழர்களால் கொண்டு நடத்தப்படுவது பெருமை தான்.

ஆயினும் தமிழர்கள் நிறுவனங்களில் நாம் இந்த நாட்டின் தரத்திற்கு முற்றாக வளர வில்லை என்பது ஒரு தவிர்க்க முடியாத கருத்து. ஒரு தமிழ் சேவை நிறுவனத்தில் " Please take one" என்று எழுதி விட்டு தமிழில் " தேவையென்றால் ஒன்றை எடுக்கவும்" எழுதியிருந்தார்கள். இங்கு மொழி பெயர்ப்பில் பிழை கண்டு பிடிக்க முயலவில்லை. நிர்வாகம் தமிழர்களை குறைத்து கருதுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றியுள்ளது.

போட்டி என்பதை விட பொறாமைகள் அதிகரித்த சமூகமாக மாறி வருகின்றோமோ என்ற அச்சம் என் மனதில் பல தடவைகள் எண்ணத் தோன்றியுள்ளது. ஈழத்தமிழர்களை ஒன்று சேர்க்கும் பலம் தமிழ்த் தேசியம். ஆயினும் ஒரு சிலர் தம் அடையாளங்களை தக்க வைக்கவும் தங்கள் வியாபாரங்கள் பெருகவும் தமிழ்த் தேசியத்தை தவறான வழியில் அடையாளப் படுத்த முயற்சிக்கின்றார்கள். வேற்றுமைகள் காண்பதை விட வேற்றுமையிலும் ஒற்றுமை காணலாம் என்பது முக்கியம். இதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

நாம் தான் தமிழ்த் தேசியவாதி என்று யாராவது சொன்னால் அது தவறு என்று சுட்டிக் காட்டுங்கள். தமிழ்த் தேசியத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் அதற்காக மற்றவர்கள் தமிழ்த் தேசியம் இல்லை என்று புறக்கணிப்பது தவறான அணுகுமுறை என்று எடுத்துரையுங்கள். அவர் பெரியவர், இவர் சிறியவர் என்ற எண்ணப்பாடுகளை தவிர்த்து கருத்துக்களை ஆராய்ந்து நடக்க கற்றுக் கொண்டு நடப்போமாயின் எம் ஒற்றுமை மேலும் வளரும்.

கனடியத் தமிழர் பேரவை, CARE போன்ற அமைப்புக்களால் பல ஒற்றுமை முனைப்புக்கள் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்டன.

1. கிராம அமைப்புக்கள், பழைய மாணவர் சங்கங்கள் ஒன்று சேர்ந்தன.
2. வானொலிகள் ஒன்றாக சேர்ந்து துயர் துடைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
3. பல விழிப்பு நிகழ்வுகள் மக்களால் நடாத்தப்பட்டது.
4. நாட்டிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மேடையில் நிகழ்வுகள் தந்தார்கள்
5. எல்லா இசைக்குழுக்களும் ஒன்றாக சேர்ந்து இசை நிகழ்வு செய்தார்கள்.

உலக அரசியலில் திருப்பங்கள்.

1. தமிழர் பிரச்சனை ஒரு பயங்கரவாதத்திற்குள் பார்க்கப் படுவது தவறு என்று சொல்லிய அமெரிக்கத்தலைவர்கள் ஒபாமா, திருமதி கிளின்டன் தெரிவான வரலாற்றுத் திருப்பம்.
2. கனடிய அரசியலில் மூன்று எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் உருவாகியது.
3. தாய்த் தமிழகம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்த வருடம்.

இப்படி உலகளாவிய அளவில் தமிழனுக்கு சாதகமான காலம் உருவாகின்ற வேளையில், உங்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை அகற்றி தமிழனுக்கு என்று தரணி அமைய நாம் எல்லோரும் உறுதியுடன் நடந்து கொள்வோம் என்று இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோம்.

5 comments:

அ.மு.செய்யது 12:27 PM  

//நாம் தான் தமிழ்த் தேசியவாதி என்று யாராவது சொன்னால் அது தவறு என்று சுட்டிக் காட்டுங்கள். தமிழ்த் தேசியத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் அதற்காக மற்றவர்கள் தமிழ்த் தேசியம் இல்லை என்று புறக்கணிப்பது தவறான அணுகுமுறை என்று எடுத்துரையுங்கள்.//

ஆணியடித்த மாதிரி கருத்துகள் !!!!!!

இயக்கங்களுக்காக தமிழனாக இருப்பதை விட, உணர்வுக்களுக்காக தமிழனாய் இருப்பது
மேல்.

அருமையான பதிவு நண்பரே !!!

- இரவீ - 3:27 PM  

நிதர்சன வார்த்தைகள் ...
கருத்து மற்றும் நிகழ்வு பதிவுகளின் பகிர்வே இதற்கு சரியானா தீர்வாக தோன்றுகிறது.
நன்றி - தொடரட்டும் இவ்வாறான சிறந்த சிந்தனை வெளிப்பாடு.

காரூரன் 10:40 PM  

இரவீ, அ.மு. செய்யது,

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்!

ஹேமா 12:54 PM  

காரூரன் யதார்த்தமான உண்மைகள்.உண்மைகள் சிலருக்குச் சில சமயம் சுடும்.

காரூரன் 9:24 PM  

வாங்க ஹேமா,
இது யாரையும் புண்படுத்த அல்ல, பண்படுத்தவே!, நான் வாழும் நாட்டில் இப்படியான குழப்பங்கள் அதிகம் அதனால் தான் இந்த கட்டுரை வரைந்தேன். உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP