எனக்கும் சினிமா விமர்சனத்திற்கும் ரொம்பத்தூரம். நண்பர் மெல்போர்ன் கமல் கேட்டுக் கொண்ட அழைப்பிற்காக விடை காண முயல்கின்றேன். சிறிய வயதில் சினிமாப் பிரியன், பார்ப்பதற்கு வீட்டில் அனுமதி கிடைப்பது குறைவு என்பதால் போலும். எனது ஊரில் மகாத்மா, லக்ஸ்மி என்று இரண்டு சினிமாக் கொட்டகைகள். இங்கு வரும் சினிமாக்கள் அனேகமானவை மிகவும் பழைய படங்கள். எனது தந்தை யாழ்ப்பாண நகரில் வேலை செய்த்ததால் வார விடுமுறை நாட்களில் அப்பாவிற்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுக்கும் சாட்டில் சினிமா பார்ப்பதுண்டு.
1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ஆறு வயதில் மூத்த சகோதரர்களுடன் சென்று படம் பார்க்க போய் பாதியில் அழுது கொண்டு வீடு திரும்பிய நினைவு உண்டு. படம் ஞாபகம் இல்லை.
2) நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
நிறம் மாறாத பூக்கள் படத்தை யாழ்ப்பாணம் வின்சர் தியட்டரில் பார்த்தேன். அந்தக் காலத்தில் வந்த அறிமுக நடிகர்களை வைத்து எடுத்திருந்த படம். இப்படத்தில் அதிகமான நடிகர்கள் தங்கள் சொந்தப் பெயரிலேயே நடித்திருந்தார்கள். சுதாகர், ராதிகா, விஜயன்,ரதி போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் ராதிகா காதலித்து விட்டு வந்து தந்தையிடம் தன் காதலை சொல்லுகின்ற போது தந்தை ஆத்திரப்பட்டு அப்படியென்றால் தன் இனிசலை நீ பாவிக்க முடியாது என்று சொல்வார். அதற்கு ராதிகா "நான் இப்பவும் "S" ராதிகா , புரியலையா சுதாகர் ராதிகா" என்பார். " முதன் முதலாக காதல் டூயட் பாடவந்தேன்", " ஆயிரம் மலர்களே" போன்ற பாடல்கள் இன்றும் என் மனதில் அழியாமல் பதிந்திருக்கின்றது.
3) என்ன உணர்ந்தீர்கள்?
MGR, சிவாஜி காதல் காட்சியை விட சற்று யதார்த்தமான காதல்காட்சிகள், ஒளிப்பிடிப்பு, பாட்டுக்கள் பார்ப்பதற்கு சற்று யதார்த்தமாக இருந்தது. கதா நாயகர்களின் பேரை பார்த்து படம் பார்த்த காலம் இது. அப்போது யார் டைரக்டர், இசையமைப்பாளர், ஒளிப்படப்பாளர் என்று தெரியாத காலம். பாரதிராஜாவின் டைரக்சனில், பாக்கியராஜ்ஜின் கதையில், இளையராஜாவின் இசை அமைப்பில் வந்த படம் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன். நல்ல கொம்பினேசன் உள்ள வர்கள் போட்டி போடாமல் ஒன்று சேர்ந்தால் படங்கள் வெற்றி பெறும் என்பதை இப்போது உணர்கின்றேன்.
4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
வாழ்த்துக்கள்: தமிழ் உணர்வாளர் சீமானின் படைப்பில் வந்த குடும்பப் படம். மாதவன், பாவனா நடித்த படம். இப்படியெல்லாம் குடும்பங்கள் அமையாதோ என்று எண்ணத் தோன்றுகின்ற படம். தமிழ் தனித்துவமாக உச்சரிக்கப்படுவது இந்தப் படத்தின் சிறப்பு. புலம் பெயர்ந்து தாய் தந்தையரை பிரிந்து வாழும் எம் போன்றோருக்கு குடும்பப் படங்கள் கொஞ்சம் உணர்வு பூர்வமாக அமைந்து விடுகின்றது.
5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
சேவல்: பரத், பூனம், சிம்ரன், வடிவேல் நடித்த படத்தை வீட்டில் பார்த்தோம். நல்ல படம் என்று வீட்டுக்காரர் சொல்ல, எதிர்பார்ப்பில் பார்த்ததோ தெரியவில்லை. சப் என்று போய் விட்டது. அரைத்த மாவை எவ்வளவு நாளைக்குத்தான் அரைப்பார்கள். இப்போது சினிமா எடுக்க எந்த சரக்கும் தேவையில்லையோ என்று எண்ணத் தோன்றிற்று.
6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சிவசங்கரியின் கதையில் வந்த 47 நாட்கள் கதையை பாலச்சந்திரரின் டைரக்சனில் எடுக்கப்பட்ட " 47 நாட்கள்" திரைப்படம். வெளி நாட்டு மாப்பிள்ளை அப்பாவித் தமிழ் பெண்ணை திருமணம் செய்து வெளி நாடு கொண்டு சென்று அவள் படும் பாடுகள், பாசை பிரச்சனைகள் போன்றவற்றை வெளிப்படுத்த யதார்த்தமாக எடுத்த படம்.
"இந்தியத் தாய் நாட்டை என்ணுகின்றாள் மங்கை, சென்றிட வழியில்லை, தாய் வீட்டுத் தீபங்கள் துணையாக வாராதோ இன்று" என்ற வரிகள் எல்லோர் மனதையும் உருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
"மொழி" படம் எடுக்கப் பட்ட விதம், பாடல்கள் நடிப்பும் பிடித்திருந்தது.
7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சினிமாவிற்குள் அரசியலை விட சினிமாவிற்கு வெளியே இருக்கும் அரசியல் தான் தமிழ் நாட்டில் அதிகம். அதனால் எனக்கு பெரிதாக சொல்லத் தெரியவில்லை.
8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பதால், தமிழ்ச்சினிமா தொழில் நுட்பம் என்று பெரிதாக சொல்லத் தெரியவில்லை. கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றவற்றை சொல்லலாம்.
9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லை. இங்கு கனடாவில் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் "சினி மினி மசாலா" என்று வார விடுமுறைகளில் கேட்பதுண்டு. நிச்சயமாக அவர்கள் நிறைய தமிழ்ச்சினிமா பற்றி வாசித்து விட்டு மிகவும் சுவாரசியமாக தகவல் கூறுவார்கள். யாருக்கும், யாருக்கும் காதல், யார் முழுகாமல் இருக்கின்றார். எந்தக் கூட்டு பிரிந்தது என்று விளாசித்தள்ளுவார்கள்.
10)தமிழ்ச்சினிமா இசை?
நிறையப் பாடல்கள் பழைய பாடல் மிக்ஸ் ஆக வருகின்றது. நிறைய புது இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் உருவாகி இருக்கின்றார்கள். ஊரில் ஆரம்பித்த பாட்டுக்குப் பாட்டு இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. விஜய் டி.வி யின் சுப்பர் சிங்கர், ஜோடி, மற்றும் பல பாட்டு நிகழ்ச்சிகளால் தமிழ் சினிமாவின் இசை ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என நம்புகின்றேன்.
11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலப் படங்கள் தான் பார்ப்பதுண்டு. "SPEED", "Phone Booth" போன்ற படங்களில் படம் எடுக்கப் பட்ட விதம் ஒரு சிறிய விடயத்தையும் இரசிக்கத்தக்க விதமாக தருவது என்னை பல தடவை சிந்திக்க வைத்துள்ளது. "American Pshyco", "How to loose a guy in 10 days" போன்ற படங்கள் மனிதர்களின் "ஈகோ" எவ்வளவு தூரம் ஆட்டி வைக்கும் என்பதையும் ஆண், பெண் உளவியல், அணுகுமுறைகளை நம்பத்தக்க வகையில் எடுத்துள்ளார்கள்.
12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ்ச் சினிமா வளர சில படங்களை திரையில் பார்ப்பதை விட வேறு பங்களிப்பு என்று பெரிதாக சொல்ல இல்லை. ஒரு கைதியின் டயரி படம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எடுக்கப் பட்டபோது தான், ஒவ்வொரு கலைஞனும் ஒரு சிறிய காட்சி எடுப்பதற்கு, அதுவும் இரட்டை வேடம் என்றால் எவ்வளவு சிரமம் எடுக்கின்றார்கள் என்று கண்கூடாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. அதற்கேற்ப தொழில் நுட்பமும் கதை அமசங்களும் கொண்ட படங்கள் வந்தால் இது வளரும். திரைப்படக்கலைக் கல்லூரிகளின் தரம் மேலும் வளர்ச்சியடைந்து தமிச் சினிமா வளரும் என நம்புகின்றேன்.
14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒன்றும் பெரிதாகி ஆகி விடாது. தமிழ் நாட்டுப் பொருளாதாரம், இந்தத் துறையை சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலை பாதிப்படையும். தன் பாதிப்புக்கு உதவாத எதுவும் தங்களுக்கும் தேவையில்லை என்று குழப்பங்கள் எழலாம்.
அப்பாடா, ஒரு மாதிரி கிறுக்கியாச்சு, சொற்பிழை, பொருட் பிழை காணாது, வந்த வாசித்ததிற்கு நீங்களும் உங்க பாட்டுக்கு சொல்லிட்டு போங்கோ.
Read more...