என் மண்ணின் பயண நினைவுகள்..
அடுக்கடுக்காய் அந்தம் எல்லாம் அகதியாகி இடம் பெயர்ந்து வாழும் ஈழத்தாரில் நானும் ஒருவன். ஆண்டுகள் பலவற்றை ஆங்கிலம் பேசும் நாட்டில் கடத்தி விட்டு பெற்றவர்களையும் உற்றவர்களையும் பார்க்க என் பிறந்த மண்ணிற்கு ஓர் திடீர் பயணம் செய்தேன். எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பயணமாகவே இருந்தது.
21 ஆண்டுகளின் பின் நான் வாழ்ந்த மண்ணிற்கு செல்கின்றேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், வெள்ளை வான் மிரட்டல், மற்றும் எந்த இடத்திலும் சுற்றி வளைப்புக்கள் என்ற செய்திகள் ஒரு மூலையில் எனக்கு மனப்பழுவை ஏற்படுத்தத்தான் செய்தன. வாழ்க்கையில் பல சோதனைகளை சிறிய வயதிலேயே சந்தித்த அனுபவம் இருந்ததால் நான் நினைத்த மாதிரி பயணத்தை ஆரம்பித்து கொழும்பை அடைந்தேன்.
கொழும்பிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானச் சீட்டு பெறுவதற்காக சிங்களம் சரளமாக பேசக் கூடிய சகோதரர் ஒருவருடன் சென்றேன். அங்கு நான் பார்த்த அலுவலக அனுபவம் ஆண்டுகள் பல மாறினாலும், அதிகாரி எல்லோரின் முன் தனக்கு கீழ் வேலை செய்பவரை பேசுதல், பயணிகளிடம் நடந்து கொள்ளும் முறை நாம் என்னும் வளர வில்லையோ என்று எண்ணத் தோன்றிற்று. ஆயினும், நான் வெளி நாட்டவன் என்பதால் சற்று பதுமையாகவே நடத்தினார்கள். பக்கத்திலிருக்கும் சென்னைக்கு போவதை விட யாழ்ப்பாணத்திற்கு போகும் விமானக்கட்டணம் அதிகம்.
ஒரு நாளுக்கு 3 விமானச்சேவைகள் மாத்திரமே, எனக்கு இரண்டாவது விமானம். ஆயினும் காலை 7:30 மணிக்கே புறப்பட்டு விமான சேவை நிறுவனத்திற்கு சென்றோம். அங்கு எல்லோரும் தங்கள் வருகையை பதிவு செய்து, கைத்தொலைபேசி, புகைப்படக் கருவிகள், ஒளிப்படக்கருவிகள் எல்லாம் கையளிக்கவேண்டும். அங்கிருந்து 9:00 மணிக்கு அவர்களின் பேருந்து வண்டியில் இரத்மலானை விமான நிலையத்திற்கு கிளம்பியது. 09:30 மணி அளவில் விமான நிலையத்திற்குள் செல்லும் சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டோம். அங்கு ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்டோம். பின் ஒருவர் ஒருவராக அழைக்கப்பட்டு நாமும் எமது பொதிகளும் சோதனைக்குள்ளாகின. 11:30 மணியளவில் ஒரு சிறிய பேரூந்தில் இராணுவ சிப்பாய் ஓட்டுனர் எங்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். அங்கு மீண்டும் இலத்திரனியல் உபகரண சோதனையின் பின் பொதிகள் கையளிக்கப்பட்டன. சுமார் 12:15 மணியளவில் விமானம் புறப்பட்டு 1:25 மணியளவில் பலாலி விமானத்தளத்தை அடைந்தது. அங்கிருந்து முழுக்க மறைக்கப்பட்ட, காற்று குறைவான இராணுவ பேருந்தில் ஏற்றப்பட்டு ஒரு பதிவு நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டோம். எல்லோரையும் தனித்தனியாக இராணுவத்தினர் படம் எடுத்து செல்லும் முகவரிகள் பதிந்தார்கள். பின்பு அங்கிருந்து விமான சேவை நிறுவனத்தினரின் பேருந்தில் யாழ்ப்பாணம் சென்றோம்.
அங்கிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தில் கோப்பாய், இருபாலை, நீர்வேலி ,புத்தூர், வல்லை(2) சோதனை சாவடிகளை கடந்து எனது வீட்டை அடைந்தேன்.
சில நினைவுப்படங்கள்
இது ஒரு நினவு கட்டிடம். முதல் கரும்புலி மில்லரால் நெல்லியடி இராணுவமுகமாக இருக்கும் போது தாக்கப்பட்ட இடம் தற்போது மீண்டும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயமாக திகழ்கின்றது.
வல்லிபுரக்கோவில்
நல்லூர் கோவில்
யாழ் பல்கலைக்கழக நூலகம்.
யாழ் பல்கலைக்கழக வளாகம்
சந்நிதி கோவில்
5 comments:
கரூர் என்று எந்த ஊரை சொல்லுறியள் அண்ணன்...
எப்ப போய் வந்தனியள் நாட்டுக்கு...
அட எங்கடை ஊருக்கும் போய் வந்திருக்கிறியள்- வல்லிபுரக்கோவிலை சொல்கிறேன்...
\
பக்கத்திலிருக்கும் சென்னைக்கு போவதை விட யாழ்ப்பாணத்திற்கு போகும் விமானக்கட்டணம் அதிகம்.
\
உண்மைதான்...
முதல் படத்துல இருக்கிற இடத்தை பார்த்த ஞாபகம் இருக்கு ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை.. எந்த இடம் அண்ணன்...
Post a Comment