December 14, 2008

தனி மனித அடையாள‌ங்களும் குழப்பங்களும்..



மனிதர்களில் சிலர் தம் சுய அடையாளத்தை பெற்று கொள்ள சிலர் நட்புகளையும் உறவுகளையும் கையாளும் முறையில் வித்தியாசப்படுகின்றனர். ஒரு மனிதன் தன்னைப்பற்றிய எண்ணத்தை தன‌க்குள் குறைத்து மதித்துக் கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னைப் பற்றிய மிகைப்படுத்திய எண்ண வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் போது தனக்கும் மற்றவர்களுக்கும் சவாலாக அமைந்து விடுகின்றான்.

"பாம்பு சீறுவது " அதனுள் ஏற்பட்ட பயத்தினால் தான், தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது சீறுகின்றது. இது போல் நம்மவரில் சிலர் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காகவும், தங்களைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்பதற்காகவும் தாங்கள் கோபக்காரர்களாக காட்டி ஒரு மாய வலையை போட்டு விடுகின்றார்கள்.
அதே சமயம் இன்னொருவர் இரக்க சுபாவம் உள்ளவர் என்று அடையாளம் கண்டால், அவரை தன் வசம் இழுக்க தன் சொந்தக் கதை, சோகக்கதை சொல்லி மற்றவரின் அனுதாபத்தை பெறுவதில் முனைப்பாக இருப்பார்கள்.

ஒரு சிலர் நட்புகள், உறவுகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஒருவரைப் பற்றி மற்றவருக்கும் கருத்துக்களை பரிமாறி பிரிவினை ஏற்படுத்தி விட்டு இருவரிடமும் நண்பர்கள் போல் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள். இந்த நவீன நாரதர்கள் தாங்கள் நட்புக்களுக்கு உதவுவது போல் வெளியே சொல்லிக் கொண்டாலும் அவர்களை பிரித்து அதில் தாங்கள் உதவுவதாக நடித்துக் கொள்வார்கள். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் காணாவிட்டால் பல உறவுகளை இழந்து விடுவோம். இவர்களை அடையாளம் காணத் தான் வள்ளுவன் "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு " என்று சொல்லியுள்ளான் போலும்.

சில‌ ஆண்கள் திருமண வயதில் திருமணமாகாது, தனித்தவர்களாக வாழும்போது பலருக்கும் சவாலாக அமைந்து விடுகின்றார்கள். இவர்களுக்கு சமூக அடையாளம் குறைந்து விடுகின்றது. இவர்கள் தங்கள் ஆண்மையை பற்றி தன் நட்புகள் தவறாக எண்ணக் கூடாது என்பதற்காக தன்னுடன் பழகும் பெண்களைப் பற்றி குறைவாக கூறி தம்மை நியாயப்படுத்த முயல்வார்கள். ஒரு பெண்ணின் முன் இன்னொரு பெண்ணைப் பற்றி சொல்லி அதில் ஆதாயம் தேடவும் முற்படுவார்கள். இவர்கள் தங்களை நியாயப் படுத்த "மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது "என்று சொன்ன விடயங்களை மற்றவர்களிடம் போட்டுடைத்து விடுவார்கள். இதை நியாயப்படுத்த " உளவியல் பிரச்சனை" என்று சொல்ல சிலர் முனைவதும் உண்டு. என்னப் பொறுத்தவரையில் உளவியல் சம்பந்தமான வருத்தம் உள்ளவர்கள் தன்னிலை அறியாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்படி மூர்க்கதன‌மாக நடப்பவர்களின் செயற்பாடு தன்னிலை அறிந்த செயற்பாடு. உதாரணமாக குடிவெறியில் கத்திக்கொண்டிருப்பவர் பொலிசைக் கண்டவுடன் வாய் அடைத்து நிற்கின்றார். ஏன் என்றால் அவருக்கு சத்தம் போட்டால் என்ன பின் விளைவு என்று தெரிந்த படியால் தான்.

விட்டுக் கொடுத்து நடப்பவர்கள் எளியவர்களாகவும், கத்திக் குளறி நடப்பவர்கள் பலமானவார்களாகவும் சிலர் எண்ணி சிலரை கண்டு கொள்ளமலும் நடந்து கொள்கின்றார்கள். ஒருவர் அடிக்கடி கோபப்பட்டால் அது பலவீனம் அது பலம் அல்ல!

கலைஞர்கள், பொது அமைப்பு, அரசியல் உறுப்பினர்களிடையே தனி மனித அங்கீகாரத்துக்கான போட்டி பெரிதும் நிலவும். இவர்களுக்கு ஒரு மனப் பக்குவம் வேண்டும். இல்லையேல் இவர்களுக்கிடையில் இருக்கும் போட்டி பொறாமையாக வளர்ந்து பிரிவுகளும், தேவையில்லாத பிரச்சனைகளும் தோன்றுகின்றன. இதில் வால் பிடிப்பவர்களால் தான் அனேகமான பிரச்சனைகள் உருவாகின்றன.

அமெரிக்க அரசியலில் போட்டி போட்டு அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவால் பல சவால்களின் மத்தியில் தன் அடையாளத்தை அமெரிக்க மக்களின் முன் வைக்கமுடிகின்றது. தன்னுடன் கட்சித்தலைவருக்கு போட்டியிட்ட கிலறி கிளிண்ட்னை தனது அரசில் முக்கிய பகுதிக்கு அமத்தும் அளவிற்கு அவருக்கு பக்குவம் இருக்கின்றது. இந்த பக்குவம் நம்மவர்களுக்கும் தேவை.

நாலுமுழ வேட்டி கட்டி நாசனல் போட்டு நின்று அல்லது பட்டுச் சேலை கட்டி, நெற்றிக் குங்குமமிட்டு சபை தனை அலங்கரிப்பது மாத்திரம் நமது அடையாளங்கள் என்று நின்று விடாமல், மனதளவில் மற்றவர்களின் அடையாளங்களையும் மதித்து நடப்பவர்களாக முயற்சிக்க வேண்டும். கல்வி ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் கருவி, சிலர் கல்வி தம் தனி மனித அங்கீகாரத்தை தருவதாக‌ கருதி பலரை புறக் கணித்து வாழ்கின்றார்கள்.

பணம், கல்வி, அந்தஸ்து , புகழ் என்ற அடிப்படையில் மனித அடையாளங்களை பார்க்காமல் எல்லோரையுடைய‌ சுய அடையாளங்களையும் மதித்து, முடிந்தால் அவர் உங்களை கேளாமல் நீங்கள் அவருக்கு முன்னுதவ வரவேண்டும்.

வெற்றி பெற்ற மனிதர் ஒருவரைப் பற்றி நான் எழுதிய பழைய கட்டுரை வாசித்துப் பாருங்கள்.

Read more...

December 7, 2008

மும்பாய் சம்பவத்தில் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கான கனடியரின் அக வணக்கம்.





இந்திய மக்களை உலுக்கிய மும்பாய் கொடூர சம்பவம் உலகத்தின் எல்லா மூலையில் வாழும் மக்களின் மனதை பாதித்துள்ளது. பல இனங்களை சேர்ந்த மக்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூன்று கனடியர்களும் கொல்லப் பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அக வணக்கம் செலுத்துவதற்கு பல்வேறு அரசு சார் அமைச்சர்களும் பல்லினத் தலைவர்களும் கலந்து கொண்டு பிரார்த்திது கொண்டார்கள்.




ஈழத்தவனுக்கு இழப்பு என்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் துர்பாக்கியமான நிலை. அவனுக்கு மற்றவர்களுக்கு இழப்பு எற்படும் போது அதன் வலியை யதார்த்தமாக உணர்ந்தவன். இந்திய உறவுகளுடன் கை கோர்த்து நாமும் எமது பிரார்த்தனையை செய்தோம். கனடிய தமிழர் பேரவை இயக்குனர் ஒருவர், கனடாவில் வாழும் தமிழர்கள் சார்பில் குப்பி விளக்கேற்றினார்.




பல நாட்டு தூதரகங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் வணக்கத்தை தெரிவித்திருந்தார்கள். கனடிய பிரதம மந்திரியின் செய்தியை குடிவரவு குடியகல்வு பல் கலாச்சார‌ அமைச்சர் Jason Kenny வாசித்தார். அவரும் விளக்கேற்றி வணக்கத்தை தெரிவித்தார்.



கனடிய அரசியலில் இந்தியர்களின் அடையாளத்தை முன் வைத்தவரும் முன்னாள் பிரிட்டிஸ் கொலம்பியாவின் முதலமைச்சரும், இந்திய அரசினால் இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்தியர்களுக்கான அதி உயர் விருது பெற்றவரும் சட்ட வல்லுனருமான Ujjal Dosanjh மிகவும் பொறுப்பான உரையை முன் வைத்தார். தீவிரவாதம் என்பது ஒரு இனத்தையோ, மதத்தையோ, மொழியையோ கொண்ட பார்வையாக இருக்காது இதை ஒழிப்பதற்கு எல்லோரும் முன் வரவேண்டும். இந்தியா உலகிலேயே ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் நாடுகளில் பெரியது, அதன் ஜன நாயகத்துக்கு சவால் என்றால், நம் எல்லோருக்கும் அது சவால் என்று குறிப்பிட்டார்.



வலய உறவுகளுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தித்து நிற்போமாக!

படங்கள்: நன்றி! www.ninaivukal.com


Read more...

December 6, 2008

மேற்குலகில் நம்மவர் காதல்.



மேற்குலகில் வாழும் இளையோருக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான். கல்லூரி நாட்களில் தன‌க்கு ஒரு காதல் இல்லாவிட்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று ஓர் அழுத்தம். அதற்காக காதல் இல்லாதவர்களும் காதல் ஒன்று இருப்பதாக நடித்துக் கொள்வார்கள்.



பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில இளைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் தன் பிள்ளையில் நம்பிக்கையில்லாமல், அவள் போகுமிடம் எல்லாம் பின்னே திரிவார்கள். "என்ன கொடுமை அய்யா இது" என்று இவற்றை விமர்சிப்பவர்களும் உண்டு. பிள்ளை வீடு திரும்பினானா இல்லையா என்று தெரியாத ஒரு கூட்டமும் உண்டு. ஆண், பெண் இரு சாராருக்கும் தாம் மிகவும் கெட்டித்தனமானவர்கள் பெற்றோர்களுக்கு போதிய அறிவு இல்லை என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கின்றது.

கல்லூரியில் கற்கும் சில ஆண்கள் காலத்திற்கு காலம் பெட்டி மாத்திற மாதிரி காதலியை மாற்றுவார்கள், ஆனால் காதலில் தோல்வியுற்ற பெண்ணை விமர்சிப்பவர்களும் இவர்கள் தான். கல்லூரியில் அனேகமான காதல் கீரோக்களாக தங்களை உருவகித்துக் கொள்ளும் இளைஞர்கள் பெண்களின் பலவீனத்தை நன்கறிந்தவர்களாகவும் காதலை காய் வெட்ட நொண்டிச்சாட்டில் மன்னர்களாகவும் இருப்பார்கள். அனேகமாக காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் ( ஒரு சிலர் விதி விலக்குத்தான்..). தாம் காதலித்து திருமணம் செய்ததையே பெற்ற பிள்ளைகளிடம் மறைத்து பிள்ளையின் பட்டப் படிப்பு முடிந்தவுடனேயே எங்காவது கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கனவு காண்பவர்களும் உண்டு. காதலித்த பெற்றோர் தாம் விட்ட பிழையை தன் பிள்ளை விடக் கூடாது என்ற ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டாலும் தவறான அணுகுமுறை என்பது என் கணிப்பு.

மூத்தவள் கறுவலுடன் போய்விட்டாள் என்றாள் அடுத்தவள் ஒரு தெற்காசியனை கட்டினால் போதும் என்று திருப்திப் படும் பெற்றோரும் உண்டு. இவர்கள் ஊரில் சாதி பேதம் பேசியவர்கள் என்பது தான் உண்மை. தனக்கு வருகின்ற போது தான் வாழ்க்கையில் யதார்த்தம் புரிகின்றது. ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டாலும் நம்மவர் மத்தியில் இருக்கும் சவால்களையும் தீர்வையும் அடையாளம் காணமுடியாமல் தான் இருக்கின்றது. டாக்டர் பெம்பிளை, நன்றாய் சம்பாதிக்கும் பெம்பிளை வேண்டும் என்று அலைகின்ற கூட்டமும் உண்டு.கடந்த காலங்களில் கொண்டு திரிந்தவர்கள் பேச்சு திருமணத்தை மற்றவர்களின் வாயை மூட காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு.

எனக்கு ஒரு நண்பன் அழைத்து தனக்கு திருமணம் நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்றான். நானும் யார் அந்த கொடுத்து வைத்தவள் என்று கேட்க, ஒரு பெரிய மனிதர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரின் பேர்த்தி நல்ல ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கின்றாள் என்றான். அவனிடம் மேற்கொண்டு எந்தக் கேள்வியை முன் வைக்கவில்லை. நண்பன் அவளுடைய பெயரை முதல் சொல்லி அவளைப் பற்றி ஒரு சில வார்த்தை கூறியிருந்தால் நான் சந்தோசப் பட்டிருப்பேன். குடும்பப் பின்னணியையும் சம்பாதிக்கும் திறனையும் சந்தைப் படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு தோன்றியது.

காமத்தின் பிரதிபலிப்பு தான் காதல் என்போரும், நட்பின் ஒரு பரிமாணம் தான் காதல் என்போரும் விவாதித்துக் கொண்டாலும், இந்த காந்தர்வ கவர்ச்சிக்கு காரணம் அறிய முடியாமல் தான் இருக்கின்றது. மேற்குலகில் வாழும் இளைஞர்களுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எண்ணங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நண்பர்களைப் போல நடத்தினால் அவர்களின் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேற்குலகில் வாங்கும் அனேகமான பொருட்களுக்கு பாவித்து விட்டு தேவை இல்லை என்றால் 3 அல்லது 6 மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறை உண்டு. இந்தப் பாதிப்பினால் காதலும் அப்படி ஒரு பொருள் என்று நினைத்து விடுகின்றார்களோ தெரியவில்லை. ஊரில் "சரக்கு" என்று இளம் பெண்களை அழைக்கும் வழக்கம் உண்டு, அதற்கு விளக்கமறிய வர்த்தக ஆசிரியரை கேட்ட போது " விற்பனைக்குள்ள பொருள் சரக்கு எனப்படும்" என்றார். இப்படி திருமணங்கள் இன்றும் ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.

இக்கட்டுரை என் கண்ணில் பட்ட அல்லது கேட்டவற்றை அடிப்படையாக கொண்டது. உங்கள் பார்வையையும் தாருங்கள்.


Read more...

November 28, 2008

மாவீரர் வாரம் - கனடா



புலம் பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் ஒரு முக்கிய நாடான கனடாவில் பல தடைகளின் மத்தியிலும் மிகவும் எழுச்சியாக மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப் படுகின்றன. இங்கு வாழும் இளையவர்கள் பல நெருக்கடியில் மத்தியில், சட்ட வல்லுனர்களின் அனுகூலத்தை பெற்று நடத்த எடுத்த கொண்ட இடத்தில் எல்லா பல்கலைக் கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்து வித்தாகி விட்ட வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த இளையோர் பாரட்டப் பட வேண்டியவர்கள்!



வருடா வருடம் கார்த்திகை 27 நிகழ்வுகள் எழுச்சியின் உச்சக் கட்டத்தை வியம்பி நிற்கும் நிகழ்வுகளாகவே இருந்து வருகின்றன. இந்த முறை நிகழ்வும் மிகவும் எழுச்சியாகவும், அலை கடலாய் மக்கள் கூட்டம் காலை 6:00 மணியிலிருந்து கலந்து கொண்டார்கள். பல மக்கள் மண்டபம் நிரம்பி திரும்பி செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். வாகனத்தரிப்புக்கள் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கைக்குழந்தைகளுடனும், தள்ளாடும் வயதில் முதியோரும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருந்தனர்.




மறைமுக காவல் துறையினரின் நடமாட்டம் சற்று அதிக‌மாகவே இருந்தது. அவர்களும் தகவல் சேகரிக்கும் முயற்சியிலும் தம் தேவைகளுக்கு ஆவணப்படுத்துதலிலும் ஆங்காங்கே முயன்ற வண்ணம் இருந்தார்கள். இது தொடர்பாக துடுப்பான இளைஞர் ஒருவரிடம் வேற்றினத்தவரின் கலந்துரையாடிய போது ( கேட்ட சம்பவம்)

வேற்றினத்தவர்: எங்கு செல்கிறீர்கள்?

இளைஞன்: மாவீரர் நாளுக்கு

வேற்றினத்தவர் : எப்படி இது நடக்கின்றது என்று உமக்கு தெரிந்தது?, யாராவது அழைத்துச் சொன்னார்களா?

இளைஞன்: எனக்கு ஒருவரும் அழைத்து சொல்லவில்லை, கார்த்திகை 27 என்றால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவோம். இதற்காக நான் காத்திருந்தேன்.

வேற்றினத்தவர்: இங்கு யாராவது பணம் சேகரிக்கின்றார்களா?

இளைஞன்: எனக்கு தெரியாது, நான் என் நாட்டில் கஷ்ட்ப்படும் மக்களுக்கு கொடுக்க
விரும்புகின்றேன், உங்களுக்குத் தெரியுமா?

வேற்றினத்தவர்: இந்த நிக்ழ்ச்சியை நடத்துபவர் யார்?

இளைஞன்: எனக்குத் தெரியாது, அதை அறியத்தான் நீங்கள் வந்திருந்தால்
உள்ளே சென்று அறிந்து கொள்ளுங்கள் அது எனக்கு தேவையில்லாத தகவல்.

வேற்றினத்தவர்: நீங்கள் போகலாம்.

எது எவ்வாறு இருந்தாலும் மக்களின் மன நிலை அங்கு வந்திருந்த வேற்றினத்தினருக்கும் நிச்சயமாக விளங்கியிருக்கும்.





நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்தால் போல், "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை போராடுமா" என்ற நாட்டிய நாடக நிகழ்வு நடந்தது.



நிகழ்வின் இறுதி நிகழ்வாக மக்களின் மனதை உருக்கி ஈழத்தில் இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மன நிலையயும், அவர்கள் கஷ்டத்தையும் வெளிப்படுத்தும் முகமாகவும் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பின் தேவையை விளக்குமாக ஒரு எழுச்சி நாடகம் நடை பெற்றது.



உலகெல்லாம் நடந்த நிகழ்வுகளின் பெயர்கள் கொண்ட பதாதைகளுடன் இடம்பெயர்ந்தோருக்கு கைகொடுப்பதாக சித்தரித்திருந்தார்கள்.



போராளிகள் பூட்டை உடைக்க பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கைகொடுக்க விடுதலை என்ற கதவு திறக்க ஈழ மாதா தோன்றுகின்றாள்.



மக்கள் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றார்கள்.



எல்லோர் மனதிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் நாடகம் அமைந்திருந்தது. நாம் எல்லோரையும் இந்த குறிக்கோள் நோக்கி அழைத்து செல்ல வேண்டிய காலம். நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி எந்த பொழுதிலும் மக்களோடு இணையாமல் இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களையும் உள் வாங்க வேண்டிய காலம் இது.



மாவீரர் நிகழ்வு நினைவுப் படங்களை பார்க்க... ( நன்றி , நினைவுகள், செய்தி இணையம்)






Read more...

November 22, 2008

எந்த வயதில் வாழ்க்கைத் துணை தேட...



பதின்மர் வயதில் பருவ மிடுக்கில் கிடைத்த உறவு வாழ்க்கைத்துணையாகி விடுமா?
பள்ளிப் படிப்பில் பக்கத்தில் இருந்து பகிடி பண்ணியவன்(ள்) வாழ்க்கைத் துணையா?
கடைசி வாங்கில் களிசறை என்று வாத்தி கடிந்து கொண்டதால் கொண்ட அக்கறையால் கடைசி நாளில் காதலாகி வாழ்க்கைத் துணையாகுமா?
படிப்பேறாது என்று சொல்லி துடிப்போடு சொல்லி தந்த நட்பு வாழ்க்கைத் துணையாகுமா?
கண் காணா இடத்தில் இருந்து கணணி அரட்டை செய்தவன் வாழ்க்கைத் துணையாகுமா?

day2_london 549
வாழ்க்கைத் துணையாக இவன்/இவள் அமைந்து விடமாட்டார்களா என்று எம் வாழ்க்கைச் சக்கரத்தில் பல சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கின்றன. இதில் எந்த வயதில் எம் எண்ணங்களுக்கு நாமாகவே ஒரு வடிவம் கொடுக்க முயல்கின்றோமோ அப்போது தான் உதயமாவது காதல் என்கிறார்களோ! இந்த எண்ணங்கள் வடிவம் பெறாமலே அழிந்துவிடுவது தான் அதிகம். இதற்கு எம் குடும்ப அமைப்பு, நண்பர்கள் உறவுகளின் அனுபவங்கள் எங்கள் எண்ணங்களை பாதிக்கின்றன.எனக்கு தெரிந்த அனுபவங்கள் சிலவற்றை கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி தருகின்றேன்.

அகிலன் ஒரு பொறியியல் மாணவன், அவனைக் கண்டால் ஜொள்ளு விடாத கல்லூரி மாணவி கிடையாது. இவன் ஒரு முற்போக்கு சிந்தனையுடையவன். கடைத்தெருவிற்கு போனால் கல்யாணமான பெண்கள் கூட அவனை சுகம் விசாரிக்காமல் போவது கிடையாது. பெற்றோர் வாழ்க்கைத்துணை தேடுவதில் இவனுக்கு முழும் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். நட்புகளுக்கு காதல் தூதுவனும் இவன் தான்.

ஆயினும் அகிலனுக்கு நிறைய தெரிவுகள் இருந்ததோ என்னவோ தனக்கு வாழ்க்கைத் துணை தேடுவதில் குழப்பம் தான். அவன் அடிக்கடி விதவைக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று சொல்வான். அவனுடைய சகோதர சகோதரிகள் எல்லோரும் காதல் திருமணம் தான். காலங்கள் ஓடின, கல்லூரி வாழ்க்கை முடிந்தது. வேலை தேட சென்னை வந்து தங்கினான். உணவுக்காக ஒரு யாழ்ப்பாணத்து குடும்பத்தினரிடம் வந்து பணம் கொடுத்து சாப்பிட்டு வந்தான். சாப்பாடு செய்து கொடுத்த அன்ரிக்கு பெடியனை பிடித்துப் போட்டுது. தன் குடும்பத்திற்குள் மாப்பிள்ளையாக்க எண்ணி தனது லண்டனில் இருக்கும் மகளின் படத்தை காட்டி அகிலனிடம் விருப்பம் இருந்தால் சொல்லச் சொன்னார். பெண் அழகாய் இருந்ததாலும் அன்ரியின் பண்பு பிடித்திருந்ததால் அவனும் லண்டன் பிள்ளையுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாகச் சொன்னான்.

லண்டன் பிள்ளையுடன் பேசிய பின் திருப்திப் பட்டு சீதனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லித்தான் கல்யாணத்திற்கு உடன் பட்டான். அகிலனுக்கு புத்துணர்வு பிறந்து விட்டது. லண்டன் தொலைபேசி அழைப்பு வராதோ என்ற ஏக்கம் தான் எப்போதும், நாட்கள் செல்ல செல்ல லண்டன் மணமகள் அகிலனுடனான சம்பாசனை நேரத்தை குறைத்தாள். அகிலன் அழைத்தால் அவள் ஏதாவது நொண்டி சாட்டுச் சொல்லி தட்டிக் கழித்து விடுவாள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்த அகிலன் பேயறைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். நண்பர்களிடம் தன்னிலையை சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டான். ஏன் அவளுடன் பேச வேண்டும் அவளுக்கு என்ன தான் தவறு செய்தேன் என்று என்னை புறக்கணிக்கின்றாள் என்பது அவனது புலம்பல். பெண்ணின் தாயாருடன் மனம் விட்டு பிரச்சனையை சொன்னான். தாய் மகளை தொலை பேசியில் அழைத்து என்னவென்று வினவ " சீதனம் இல்லாமல் ஒரு இஞ்சினியர் கல்யாணம் கட்ட வருவதால், அகிலனுக்கு ஆண்மை இல்லை என்று சொல்லிவிட்டாள்". தாய் ஆத்திரத்தில் போனை வைத்துவிட்டு " அவள் இனிமேல் எனக்கு பிள்ளை இல்லை தம்பி, உங்களைப் போய் தரக்குறைவாச் சொல்லிறாள், என்னை மன்னிச்சு போடுங்கோ, வெளி நாட்டுக்கு போய் அவள் இப்படி மாறுவாள் என்று எனக்குத் தெரியாது.

அகிலனின் நண்பர்கள் பெண்ணைப் பற்றி விசாரித்த போது தான் தெரிந்தது அவளுக்கு இலண்டனில் காதலன் ஒருவன் நீண்டகாலம் இருப்பதை. தனது காதலை மறைத்துக் கொண்டு இஞ்சினியர் மாப்பிள்ளை எடுக்க முற்பட்டு காதலினால் மனமாற்றப்பட்டு பின்பு பேசிய மாப்பிள்ளைக்கு டாட்டா காட்டிவிட்டாள்.

அகிலன் யாருக்கும் தீங்கு விளைவித்திருக்க மாட்டான். அவனுக்குள் ஒரு ஏமாற்றம். கல்லூரியில் எல்லோருக்கும் கதாநாயகனாக இருந்தவன் நிலை மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது. திருமணம் செயவது என்றால் சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்வதாக முடிவெடுத்தான். அதே மாதிரி சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்தான். ஒரு காலத்தில் சீதனம் வேண்டக் கூடாது, விதவைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்றவனின் வாழ்க்கைத் தெரிவு எப்படி மாறியது.

எந்த வயதில் காதலிப்பது என்பது முக்கியமல்ல, எந்தளவு புரிந்துணர்வு இருப்பதில் தான் தங்கியிருக்கின்றது. சின்ன வயதில் காதலிக்கும் போது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ குறுகிய தெரிவுகள் தான் கிடைக்கும், பின்னாளில் அந்த ஆணோ/ பெண்ணோ வெற்றி அடைவார்கள் என்று திட்ட வட்டமாக சொல்லி விடமுடியாது. ஆணோ பெண்ணோ வெற்றி பெற தவறினால் சில காதல்கள் முறிவடைந்து விடுகின்றன.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொன்னாலும் அனேகமாக ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப் படுகின்றன. கல்லூரி நாட்களில் கொண்டு திரிய பல காதல்கள் தோன்றினாலும், பண வருவாயை மனதில் வைத்து தான் இன்றைய அனேகமான வாழ்க்கைத் துணைகள் தேடப்படுகின்றன.

உங்களுடைய பார்வையையும் தாருங்கள்


Read more...

November 17, 2008

உணவுப் பொருட்களை உபயோகித்து உருவங்கள்.



கிறிஸ்மஸ் விடுமுறை காலங்களில் சேகரிக்கப்படும் உலர் உணவுகளை உபயோகித்து சில உருவங்கள் கீழே!

CAN Images


CAN Images2

CAN Images2


இதை அழுத்தவும் எல்லாப் படங்களையும் பார்க்க..."


Read more...

October 11, 2008

பழக்கமும் வழக்கமும்..


"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்று ஒரு பழமொழியில் சொல்லி இருந்தாலும் பழக்கம் என்பது நாம் வாழும் சூழல், பழகிய மனிதர்கள், கல்வி வாய்ப்புகள் போன்ற பல காரணிகளை கொண்டுள்ளது.

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது " என்பர் சான்றோர். இங்கு ஒரு விலங்கினுடைய பழக்கம் கூட மாற்றப்படும் தனக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தால். மனித பழக்க வழக்கங்கள் மாற்றப் பட வேண்டுமாயின், அவனுடைய செய்கையால் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

நம்மூரில் வாழும் காலங்களில், நாம் மறைவாக ஒரு காரியம் செய்து விட்டு தப்பி விட முடியாது. நமது சுற்றத்தாரும் உறவுகளும் அறிந்து வீட்டுக்கு விடயம் வந்து விடும். மேல் நாடுகளில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. அதனால் தான் என்னவோ சில இளையவர்கள் தங்களுக்கு நிறைய சுதந்திரம் இருப்பதாக எண்ணி தங்கள் அடையாளங்களை தொலைத்து விடுவார்கள்.

ஒளவை கூட

" சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்த தொரு கல்வி மனப் பழக்கம்
தினமும் நடை நடைப் பழக்கம்
நட்பும் தயை கொடையும் பிறவிக்குணம்."


என்கின்றாள். ( கேள்வி ஞானத்தில் எழுதியது, வார்த்தை தவறுகள் இருக்கலாம்.)

என்னதான் பழக்கம் பலவற்றிற்கு காரணமாக இருந்தாலும், சில பிறவிக்குணங்களும் மனித இயல்பை ஆட்டி படைக்கின்றன.

வழக்கம் என்பது எதையும் ஆராயாமல் மற்றவர்கள் செய்வதைப் போல் செய்யும் முயற்சிகள். இந்த முயற்சிகளில் பல பழமை வாதங்கள் கலந்திருக்கின்றன. அதற்காக பழமை வாதங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் புதுமை வாதிகளாகி விட முடியாது.

நாம் நல்ல பழக்க வழக்கமாக வாழ விரும்பினால் " சகிப்புத்தன்மை, புரிந்துணர்தல், விட்டு கொடுத்தல் " போன்ற பண்புகளை வளர்க்க முயற்சிக்க வேண்டும். நான் தமிழ் நாட்டுக் கிராமங்களிற்கு சென்ற போது சில பழக்க வழக்கங்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. முகவரி தேடி குக்கிராமத்திலுள்ள ஓர் கொட்டிலில் இருந்த தேனீர்க் கடை சென்று வினவிய போது, தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்து முகவரியை கூறிவிட்டு " சார் ரீ சாப்பிறீங்களா!" என்று வினவினார். ஓரிரு நிமிட சம்பாசனையின் பின் என்னை ஒரு விருந்தினனாக நடத்திய விதம் என்னை நெகிழ வைத்தது.

நம்பிக்கையுடன் பழகுபவர்கள் தான் ஏமாற்றப்படுவார்கள், ஏமாற்றுபவர்கள் இன்னொருவரை தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் பழகுவார்கள்.

பழக்க வழக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையும் தாருங்கள்.






Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP