January 31, 2009

வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.- "நலமுடன் இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே!"




மின்னஞ்சலில் தொடராக வந்த இக்கடித விபரத்தை உங்கள் பார்வைக்காக தருகின்றேன். வார்த்தைகளில் வலியின் கொடுமை தெரிகின்றது. அறிவு ஜீவிகள் என்று சொல்லி அரச நாற்காலிக்காய் மாத்திரம் வாழ்ந்துவிடுபவர்களுக்கு இது எட்ட வேண்டிய கடிதம். உங்கள் நட்புகளுக்கும் இக்கடிதத்தை எடுத்துச் செல்லுங்கள்!

இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்துஎன்னையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும்
மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் முடியை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம் எங்கே!!!!!

இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில்!

உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும்,
துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த
ரணங்களின் வலியோடும்
அகதி முகாமில் வாடும்
புலம்பெயர்ந்த ஈழக்
குழந்தையின் கிழிந்து
போன சட்டைப்பைகளில்
இருந்த உடைந்த
பென்சிலின்
ஒட்டுத்துண்டில்
இந்தக்கடிதம்
எழுதப்படுகிறது)

நலமுடன்
இருக்கிறீர்களா? உலகத்
தமிழர்களே?

குண்டு விழாத
வீடுகளில்,
அமெரிக்காவுடனான
அணுகுண்டு
ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவது
பற்றி அளவளாவிக்
கொண்டிருப்பீர்கள்,
இடைஞ்சலான நேரத்தில்
கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும்,
என் வீட்டுக் கூரையில்
விழுந்த
சிங்களவிமானத்தின்
குண்டுகள் என்னைப் போல
பல்லாயிரக்கணக்கான
தமிழ்க்குழந்தைகளை
அநாதை ஆக்கிய
போது, நீங்கள் எதாவது
நெடுந்தொடரின்
நாயகிக்காகக் கண்ணீர்
விட்டுக்
கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும்
அப்பாவும்
அரைகுறையாய் வெந்து
வீழ்ந்தபோது, உங்கள்
வீட்டு
வரவேற்ப்பறைகளில்
அரைகுறை ஆடைகளுடன்
அக்காமாரெல்லாம்
ஆடும் " மஸ்தானா,
மஸ்தானாவின்"
அரையிறுதிச் சுற்று
முடிவுக்கு
வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும்
நன்றாகப்
படிக்கிறார்களா? அம்மா,
அப்பாவின்
மறைவுக்குப் பின்னால்,
எனக்குத் தலை
வாரிவிட்டு, பட்டம்மா
வீட்டில்
அவித்த இட்டலி
கொடுத்துப் பள்ளிக்கு
அனுப்பிய அண்ணனும்
இப்போது இல்லை,
நீண்ட தேடலுக்குப்
பின்னர் கிடைத்த அவன்
கால்களை மட்டும்
மாமாவும்,
சித்தப்பாவும்
வன்னிக் காடுகளில்
நல்லடக்கம்
செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும்
என்று ஆசைதான் எனக்கு,
நீங்கள் இலங்கை
கிரிக்கெட்
அணியின் இந்தியச்
சுற்றுப் பயணத்தை, இரவு
பகல் ஆட்டமாய்ப்
பார்த்திருந்தீர்கள்....அதனால்
தான் எழுதவில்லை.........

ஒலிம்பிக் தீபத்தின்
சுடர்களை உலகம்
முழுவதும், என்னைப்போல
ஒரு மலை
நாட்டு திபெத்
சிறுவனும், அவன்
இனத்துப்பெரியவரும்
சந்து பொந்தெல்லாம்
மறித்துத் தடுத்தபோது,
எனக்கு உங்கள் நினைவு
வந்தது.....அதுமட்டுமல்ல,
இந்திய அரசுகளின்
உதவியோடு, இலங்கை
ராணுவத்திற்கு நன்றி
சொல்லும்
திரைப்படச் சுருளின்
பிரதிகளும் நெஞ்சில்
நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா
எழுதிக் கொண்டு,
மறுபக்கம், நவீன
ஆயுதங்களை
அனுப்பி வைக்கும்
உங்கள் கூட்டணித்
தலைவர்கள் எல்லாம்
நலமா தமிழர்களே?

இன்னொரு முறை
ஆயுதங்கள் அனுப்பும்
போது மறக்காமல் ஒரு
இரங்கற்பா
அனுப்புங்கள், சாவின்
மடியில் எங்களுக்கு
ஒரு
தமிழ்க்கவிதையாவது
கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின்
மறைவான இடத்தில்
நீங்கள் இலங்கை
ராணுவத்திற்கு
பயிற்சி அளிக்கும்
போது, குழந்தைகளையும்,
கர்ப்பிணிப்
பெண்களையும்
வலியின்றிக் கொல்வது
பற்றி ஒரு
வகுப்பெடுத்து
விடுங்கள். கொஞ்சம்
பாவமாவது
குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை
நேரத்தின் மங்கலான
வெளிச்சத்தில்,
தம்பியின்
பிஞ்சு உடல்
நான்கைந்தாய்
சிதறடிக்கப்பட்ட அந்த
கோர நாளில் நாங்கள்
எல்லாம் கூட்டமாய்
அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும்
பள்ளிக்கூடங்களை
தேடிக் கண்டு பிடித்து
கொலை
வெறியோடு உங்கள் "நேச
நாட்டு" விமானங்கள்
குண்டு மாரி பொழிந்த
போது
நீங்கள் இந்திய
விடுதலையின் பொன்
விழாக்
கொண்டாட்டங்களுக்கான
குறுஞ்செய்தி
வாழ்த்துக்களில்
களித்திருந்தீர்கள்,
உலகத்
தொலைக்காட்சிகளின்
நீங்கள் பார்த்து
மகிழும் முதன் முறைத்
திரைப்படங்கள்
தடை படுமே என்று தான்
அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை
கொன்று குவித்து,
நிர்வாணமாக்கி, இறந்த
உடலுக்குக்
கொடுக்கின்ற இறுதி
மரியாதை இல்லாமல், எம்
இறப்பை எள்ளி நகையாடிய
உங்கள் "
சார்க்"
கூட்டாளியின் கொடிய
முகம் கண்ட போதே எழுதி
இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி
மாநாடுகளில் கவனமாய்
இருந்தீர்கள்,
பெண்களின்
இடுப்பில் பம்பரம்
விட்ட களைப்பில் கட்சி
துவக்கிய
கேப்டன்களின்
பின்னால்
அணிவகுத்து
நின்றீர்கள், நீங்கள்
போட்ட வாழ்க
கோஷங்களின்
இரைச்சலில்
எங்கள் நிஜக்
கேப்டன்களின்
வீரமரணம் கேள்விக்
குறியாய்க் கலைந்து
போனது,
தமிழர்களே?அப்பாவின்
வயிற்றை அணைத்துக்
கொண்டு, செப்பயான்
குளத்தில்
முங்கி எழுந்த
நினைவுகளை மனதில்
சுமந்து கொண்டு, வாரம்
இரண்டு முறை
அடிகுழாயில் அடித்து,
அடித்து கொஞ்சமாய்
ஒழுகும் தண்ணீர்
நின்று
போவதற்குள் ஓடி வந்து
குளித்து விடுகிறேன்
அகதி முகாமில்.

முகாமின், தகரத்
தடுப்புகளின்
இடைவெளியில் தெரியும்
பள்ளிக்கூடமும்,
அதிலிருந்து வரும்
மதிய உணவின் வாசமும்,
அம்மாவின் மடியில்
இருந்து,
எப்போதும் கிடைக்கும்
அன்பையும் எண் பழைய
வாழ்வையும் நினைவு
படுத்தும்.
ஆயினும் பாழும் வயிறு,
பசி கலந்த வலி கொடுத்து
பாய்ந்து ஓடி
வரிசையில்
நிறுத்தி விடும்,
அளந்து
கொடுக்கப்படும்
அவமானச்
சோற்றுக்காய்.......

அப்போதெல்லாம் எழுதத்
தோன்றும் எனக்கு, ஆனால்
நீங்கள் பீஸாக்
கடைகளின்,
வட்ட மேசைகளில்
அமர்ந்து ஆங்கிலம்
பேசிக்
கொண்டிருந்தீர்கள்,
எழுதத்
தோன்றவில்லை.....எனக்கு....

அமைதியாய் விடியும்
பொழுதும்,
அழகாய்க் கூவும்
குயிலும்,
தோகை விரிக்கும்
மயிலும்,
காதல் பேசும்
கண்களும்,
தாத்தா பிடித்த
மீன்களில் அம்மா வைத்த
குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள்
பறிக்க நாங்கள்
குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப்
பாண்டி அண்ணன் வேடு
கட்டக் குவித்து வைத்த
மணலும்,
அதில் சங்கு பொறுக்கி
விளையாடிய என்
தம்பியின் கால்
தடங்களும்,
கருவேலன் காடுகளில்
பொன் வண்டு பிடித்த என்
பழைய நினைவுகளும்,

இனிமேல் எனக்குக்
கிடைக்கவே கிடைக்காதா
உலகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து
மூட ஞானிக்கு எழுதிய
நீண்ட கடிதமெல்லாம்
வேண்டாம்
அண்ணா, என்
கேள்விகளில் எதாவது
ஒன்றுக்கு, உங்கள்
வீட்டில் கிழித்து
எறியப்படும்
நாட்காட்டித்
தாள்களின்
பின்புறமாவது பதில்
எழுதுங்கள்,
உலகத் தமிழர்களே........

ஏனெனில் நீங்கள்
எழுதப் போகும் பதிலில்
தான் ஒரு இருண்டு போன
இனத்தின்
விடுதலையும், துவண்டு
போன அகதிகளின்
வாழ்க்கையின்
மறுபிறப்பும்
இருக்கிறது.


வலி கலந்த
நம்பிக்கைகளுடன்,
உங்கள் தொப்புள்கொடி
உறவு,
தமிழீழத்திலிருந்து!


முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்!

Read more...

January 29, 2009

முத்துக்குமாரா! உன் குரல் கண்டம் கடந்தும் ஒலிக்கின்றது.


பத்திரிகையில் கருத்துப் பகிர்வு செய்து கருத்தாளனாய் இருந்து எம் உரிமைக்காய் குரல் கொடுத்து உன் உடலை கருக்கி உலகிற்கு வியம்பி விட்டு, பிரிந்து விட்ட தமிழ் உறவே. உன் செய்கை சரி என்றோ பிழை என்றோ விவாதிக்கும் நேரமில்லை. உன் எண்ணங்களை இமயம் போல் பரப்பி உன் தேசத்தின் மேல் நம்பிக்கையிழந்து, வார்த்தைகளில் வர்ணம் தீட்டி வரலாற்றை நமக்காய் எடுத்துரைத்து, நியாயத்திற்காய் குரல் கொடுத்து, அரசியல் சாக்கடையின் அர்த்தம் சொல்லி கேட்பாரின்றிருக்கும் என் தேச உறவுக்காய் உயிர் நீத்த உத்தமனே!


இரட்டை வேடம் போடும் இந்திய அரசின் மாயை உலகிற்கு எடுத்துரைத்து சென்றுவிட்டாய். உன் வார்த்தைகளின் ஆழம், அரசியல் தெளிவு, தூர நோக்குப் பார்வை கொண்ட ஒரு இனமானத் தமிழனை தமிழர்கள் இழந்து விட்டார்கள்.

நீ ஈழத்தான் மனிதில் என்றும் வாழ்வாய். உனக்காக வரலாற்றில் ஒரு இடம் நிச்சயமாக உண்டு. உன் உற்றாருக்கும் பெற்றோருக்கும், மற்றோருக்கும் உனை இழந்து வாடும் உறவுகளுக்கு ஈழத்தவர்கள் சார்பில் எனது ஆறுதல்கள்

"ஊன்றிப்படித்து...
உயிர்க்கொடை தந்தவன்
உணர்வுக்கு வலுசேர்ப்பீர்.! "


இந்த இளைஞனின் கோரிக்கை கீழே!

நன்றி : புதினம்
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

January 25, 2009

இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவை "தெளிவு" - பகுதி 1



செய்திகளால் நிரப்பப்பட்ட இந்த உலகிலே, நாளுக்கு நாள் அரசியல் மாற்றங்கள். வல்லரசுகளின் பார்வைகளின் மாற்றங்கள் இன விடுதலைக்காக போராடுகின்ற சிறுபான்மை இனங்களுக்கு சவலாக அமைந்து விடுகின்றது. எம் இனத்தின் விடுதலைக்கான வேட்கையை வளர்ப்பதும், அதனுக்கு தேவையான காலமறிந்த பங்களிப்புக்கள் செய்வதும் எம் எல்லோருடைய கடமை.

இந்த "தெளிவு" என்னும் தொடரை நம்பிரான் என்ற தமிழ் இன உணர்வாளர் தமிழ்ச்சோலை வானொலிக்காக தயாரித்து வழங்குகின்றார்.


Poradda Vazvum Pankalippum - nampiran


சக்கடத்தாரின் புலொக்கில் இருந்த வேங்கைகளின் கவியரங்கம் " தொட்டுத் தழுவ துடிக்கின்ற உறவுகளே எட்டுகின்றதா எங்கள் குரல்! " உயிர்ப்புடன் இருக்கின்றது. கட்டாயம் சென்று கேளுங்கள். நன்றி சக்கடத்தார்!







Read more...

January 17, 2009

வெறிச்சோடிய நினைவுகள் விடியாதா எமக்கும்!


நதிக்கரையில் தான் நாகரீகம் பிறந்தது என்று சொல்வார்கள். யாழ்ப்பாணத்தானுக்கு சொல்லிக் கொள்ள எந்த நதியுமில்லை. ஆயினும் ஆலயங்களினாலும் பாட சலைகளினாலும் நிரம்பி வழிந்த ஆன்மீகமும் கல்வியும் அவனை பக்குவப் படுத்தும் கருவிகளாகவே அமைந்து விட்டது என்பது யதார்த்தம். ( பிற நகர்களை பற்றி தெரியாததால் குறிப்பிடவில்லை ‍ _ இது பிரதேசவாதம் அல்ல).

உயர்கல்வி என்று மறுக்கப்பட்டதோ அன்று தான் மாணவன் சிந்தித்தான் . அப்போது உதித்தது தான் போரட்டங்கள். இன அழிப்புக்களின் விளைவுகள் இந்த போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாற்றமடைந்தன. சாரம் கட்டி சைக்கிளில் சென்று சந்திகளில் அரசியல் பேசிக் கொள்வது நம் வழக்கம், சரக்கு(பெண் பிள்ளைகள்) பார்க்கும் வழக்கமும் உண்டு. " இடி அமீன்" என்ற பொலிஸ் அதிகாரியின் பெயரைக் கேட்டால் பெடிபெட்டை பயந்து ஒதுங்குகின்ற காலம் அது. பொலிஸ்காரர் வந்தால் என்றால் சந்தியில் சாரத்துடன் நிற்பவர்களுக்கு கேட்டுக் கேள்வி இல்லாமல் அடி தான். பொலிஸ் ஜீப்பை கண்டால் ஓட்டம் தான். இந்தக் கலாச்சாரம் முத்திப் போய் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் கூட எங்களை ஆடு மாடுகள் போல் நடத்தினார்கள்.

இந்தக் கால கட்டங்களில் பொலிசார் சுடப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யும் காலம் அது. வெள்ளிக் கிழமைகளில் இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் நடைபெறும். நான் ஹாட்லியில் கல்வி பொது தராதர‌ (க. பொ. த) உயர்தர வகுப்பு ( 12ம் வகுப்பு அல்லது +2) படித்துக் கொண்ட காலம். கல்லூரியிலுள்ள மாணவர்களை 5 பிரிவுகளாக பிரித்து, 5 இல்லங்களாக பிரிக்கப் பட்டு மெய் வல்லுனர் போட்டிகள் நடாத்தப் பெறுவது வழக்கம். இதற்காக 5 இல்லங்களுக்கான கூடாரம் அமைத்து பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா நிறங்களால் அந்தந்த இல்லங்கள் அலங்கரித்து உற்சாகமாக விளையாட்டுப் போட்டி நடக்கும் காலம் அது. இந்த விளையாட்டு போட்டிகளுக்காக கூடாரம் அமைப்பதற்காக போட்டிக்கு முதல் நாளில் சென்று கூடாரம் அமைத்து மாட்டிறைச்சி காய்ச்சி பாணுடன் சாப்பிட்டு ஒரு சிலர் நனைக்கத் தெரிந்த‌வர்கள் நனைத்தும், மணக்கத் தெரிந்தவர்கள் மணந்தும், அரசியல், அவள் இவள் என்ற ஆய்வு, கற்றுத் தந்த ஆசிரியர் பற்றிய கலாய்ப்பு என்ற பல விடயங்கள் அரங்கேறும் இரவு அது.

நாமும் வெள்ளி மாலை 6 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஒன்று சேர்ந்தோம். ஒரு மாதிரி இரவு 10 மணிக்கு கூடாரம் அமைத்து முடிக்கவும் மாட்டிறைச்சி சமைத்து முடிக்கவும் பசி வயிற்றை கிள்ள‌ பாண் (ரொட்டி) வாங்க அவசரம் அவசரமாக வசந்தன் என்ற நட்புடன் மூவர் பருத்தித்துறையில் உள்ள பேக்கரிக்கு போனார்கள். அங்கு பாண் முடிய பக்கத்தில் இருக்கும் நெல்லியடிக்கு பஸ்ஸில் சென்று பாண் வாங்கி திரும்பும் போது இவர்களுக்கு ஆங்கிலப் படம் பார்த்த அனுபவம் இவர்களுக்கு. வாகனத்தில் வலம் வந்த பொலிசார் சுடப் பட்டு அவர்கள் ஆயுதம் களையப்பட்டதை கண் கூடாக இவர் பார்த்திறுக்கின்றார்கள். அதன் பின் அவர்கள் பஸ் ஏறி திரும்பி வந்து விட்டார்கள்.

வீதிகள் வெறிச்சோடின, அவசரம் அவசரமாக வந்த கல்லூரி அதிபர் வந்து எங்களை அமைதி காக்கச் சொன்னார். மைதானத்தில் இருந்து இதைப் பற்றி பல அலசல்கள். வசந்தன் இந்த விடயத்தில் மிகவும் ஆவல் கொண்டவனாக இருந்தான்.

வசந்தன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். நீளம் பாய்தல், தடி ஊண்டி உயரம் பாய்தல், தத்தி மிரித்து பாய்தல் ( Triple Jump ) 800 மீற்றர் ஓட்டம் போன்றவற்றில் அவனை பாடசாலையில் யாரும் மிஞ்சியவர்கள் இல்லை. மிகவும் துடுப்பாட்டமான இளைஞன். அவன் கரவெட்டியில் துன்னாலை என்ற கிராமத்தை சேர்ந்தவன்.

கோவிற்சந்தை

கோவிற்சந்தை வசந்தனின் கிராமத்தில் உள்ள ஒரு இர‌வுச்சந்தை. இதுவும் மாணவர்கள் அரட்டை அடிக்க சேரும் இடம் என்று சொல்லிக் கொள்ளலாம்.இந்தக் கிராமத்தை சேர்ந்தவர்களின் சிறப்பு என்ன வென்றால் படிப்பிலும் விளையாட்டிலும் திறமையுள்ளவர்கள். வசந்தன் பாடசாலை படிக்கும் காலத்திலேயே வாகனம் ஓட்டத் தெரிந்தவன்.


நாங்கள் பாடசாலை முடிப்பதற்கான நாட்கள் இருக்கும் போது தான் 83 யூலை கொடூர கலவரம் நடந்ததது. இந்த சம்ப‌வத்தின் பின் தான் விடுதலை வேட்கை இன்னும் அதிகரித்தது. இதன் பின் வசந்தன் இயக்கத்திற்கு போய் விட்டான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய நெல்லியடி முகாம் மீதான முதல் கரும்புலி தாக்குதலை செய்த மில்லர் என்ற மாவீரன் தான் இந்த வசந்தன். ஜூலை 05 1987 தான் அவனுடைய தாக்குதல் நடைபெற்றது. இந்த நாளைத் தான் கரும்புலி நினைவு நாளாக கடைப்பிடிக்கின்றார்கள். அவன் நினைவாக அந்த இடத்தில் அந்த இடத்தில் பாடசாலைக்கட்டிடம் கட்டப் பட்டு அவனுக்கு நினைவுச் சிலையும் வைக்கப்பட்டது.

நெல்லியடி மத்திய மகாவித்தாலயம்.( பழைய இராணுவ முகாம்)

பின்பு மில்லருக்ககாக கட்டப் பட்ட சிலை இராணுவத்தால் உடைக்கப்பட்டு விட்டது. ( படம் தமிழ்னெற்)

மில்லர் சிலை ‍ இராணுவத்தால் உடைக்கப்பட்ட நிலையில்


வாழ்க்கையில் இப்படி ஒரு தியாகம் செயவதற்கு எப்படியான மனத்திடம் இருக்க வேண்டும், என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்கமுடியவில்லை. அன்று எங்களுடன் அந்த‌ மைதானத்தில் இருந்த பலர் மாவீரர்களாகி விட்டார்கள் என்பது எம் மீது ஒரு குற்ற உணர்வை உருவாக்குகின்றது. இப்படி எத்தனை உயிர்கள் நம்மினம் வாழவேண்டும் என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. எம்மால் முடிந்த முயற்சியைய‌யும் பங்களிப்பையும் செய்வது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்.




Read more...

January 10, 2009

திருப்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை!



எதிர்பார்ப்புக்கள் நிறைந்த நம் வாழ்வியியலில் நாம் நினைத்தது எல்லாம் நடந்து விடுவதில்லை. ஆனால் எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகின்ற போது அதை தாங்குகின்ற மனப்பக்குவம் இருப்பதில்லை. நான் கடந்து வந்த பாதையில் கண்டு கொண்ட அனுபவங்களில் இருந்து சிலவற்றை இரைமீட்டு பார்க்கின்றேன். யாருடைய மனங்களையும் புண்படுத்தக் கூடாது என்பதிற்காக கதாபாத்திரங்களை மாற்றித் தருகின்றேன்.

மதன் என் பாடசாலைத் தோழன். அவன் தந்தை ஒரு மருத்துவர். நன்றாக கல்வி கற்பான் அது மாத்திரமில்லை பேச்சுப் போட்டிகள், சாரணர் அமைப்பு போன்று பொது விடயங்களிலும் ஈடுபாடுடையவன். அடி தடி என்றால் ஒதுங்கி விடுவான். "ஊரில் பெடி என்றால் இப்படி எல்லோ இருக்கோணும்" என்று என் அம்மா உட்பட நண்பர்களின் அம்மாக்களும் அவனைப் புகழ்பாடுவார்கள். அவன்ரை பேரைச்சொல்லி நாங்களும் ஊர் சுத்த சுதந்திரம் கிடைத்தது உண்மைதான்.

நாம் பத்தாம் வகுப்பு ( ரியூசன்) படிக்கும் போது ஒரு பட்டணத்து தேவதை வந்தாள் படிப்பதற்கு. பின்பு தான் தெரியும் அங்கு கற்பிக்கும் ஆசிரியரின் மகள் என்று. "அவள் வேம்படியாம்" (யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் பாடசாலை) என்று கூட படிக்கும் மாணவிகளுக்கு அவள் மீது சற்றுப் பொறாமை. ஒரிருவர் தான் பாடசாலை வெள்ளை சீர் உடையுடன் வருவார்கள். அனேகமான மாணவிகள் வண்ணங்களில் தான் காட்சி தருவார்கள். ஆயினும் இந்த வேம்படிக்காரி மீது அங்கு படிக்கும் அனேகமானோருக்கு கண். மதனுக்கும் அவள் மேல் கண் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. மதனுக்கும் வேம்படிக்கும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் நன்றாக ஆங்கிலம் பேச எழுத தெரியும்.

மதனுக்கு ஆங்கில வகுப்பு ஒன்றுக்கு வர முடியவில்லை என்று ஆங்கில ஆசிரியர் வேம்படியின் எழுத்துக் கொப்பியை வேண்டி மதனிடம் கொடுத்து பார்த்து எழுதிவிட்டு அவளிடம் கொடுத்து விடு என்றார். இதை சந்தர்ப்பமாக்கி கொண்ட மதன் முதல் காதல் கடிதத்தை இந்த கொப்பிக்குள் வைத்து கொடுத்தான். இப்படி இவர்கள் காதல் மலர ஆரம்பித்தது.
10ம் வகுப்பில் தான் அடிக்கடி இவர்கள் சந்திக்க வாய்ப்புக்கள் இருந்தது. 11ம் வகுப்பில் இருந்து மதனுக்கு ரியூட்டரி ஆண்கள் மட்டும் படிக்கும் இடமாகி விட்டது. கடிதம் தான் இவர்கள் காதலுக்கு ஒரே ஒரு ஊடக‌மாக அப்போது இருந்தது. நண்பர்களும் நண்பிகளும் தான் தூதுவர்கள்.

பாடசாலை முடியும் நாட்களில் மாணவர்கள் இயக்கங்களில் அதிகமாக சேரும் காலம் அது. இந்தப் பயத்தினால் மதனுடைய பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் எம்மை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மதன் மைசூரிலும் நான் தமிழ் நாட்டிலும் பட்டப் படிப்பு படித்து வந்தோம். அவன் காதல் நீடித்து தான் வந்தது. நாட்டுப் பிரச்சனையால் கடிதத் தொடர்பு குறைந்து கொண்டு போய்க்கொண்டிருந்தது.

படிப்பு முடித்துக் கொண்டு "வேம்படி" எங்கு இருக்கின்றாள் அறிந்து இலங்கை சென்று கொழும்பில் தங்கியிருந்த காதலியின் இடத்திற்கு சென்று பார்த்தான். அவள் உறவினர் வீட்டில் தான் தங்கியிருந்தாள். ஆனால் அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. கல்யாண அழைப்பிதழை வைத்துவிட்டு அறையினுள் சென்று விட்டாள். வெறும் தமிழ் சினிமாக்களில் காதல் தோல்வியை பார்த்தவனுக்கு தனது காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒருவருக்கும் சொல்லாமல், பெற்றோரையோ உறவுகளையோ பார்க்காமல் இந்தியவிற்கு திரும்பி விட்டான். எல்லோரிடம் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

இவனுடைய தாய் இந்த விடயத்தை அறிந்து என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் வாயை மூட முடியாமல் தான் மௌனிக்க எண்ணி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாள். நண்பனின் உறவுகள் என்னை தொடர்பு கொண்டு இதை மதனிடம் சொல்லச் சொன்னார்கள். என்னால் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் தாயின் மரணச் சடங்குகள் அவனில்லாமலே நடந்து முடிந்தது.

மூன்று மாதத்தின் பின் தொலைபேசியில் மதனுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. என்னால் அவன் எண்ண மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவனாகவும், சொந்தங்களையும் நட்புகளையும் பார்க்க விருப்பம் இல்லாதவனாகவும் இருந்தான். என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்து பார்த்தேன். அவன் பிடிவாதத்தில் இருந்து அவன் விலகவில்லை. அவனைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை.

நாட்கள் நகர்ந்தன, நானும் கனடா வந்து சேர்ந்து விட்டேன். நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் மதனைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளின் பின் அவன் எண்ணெய் வள நாட்டில் இருப்பதாக எனக்கு தொலை பேசி நம்பர் தந்தார்கள்.

அழைத்துப் பேசிய எனக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருந்தன. நெற்றிப் பட்டை பூசி, தீட்சை பெற்று, திருவம்பாவை பேசித்திரிந்த நண்பன் கிறிஸ்தவ மதத்தின் பரப்புரையாளனாக எனக்கு கிறிஸ்தவ மதத்தின் பெருமை பற்றியும் இந்து சமயத்தின் மீது அவ நம்பிக்கையும் கொண்டவனாக இருந்தான். அவன் எண்ணங்களை திருப்திப்படுத்துவதிற்காக அவன் பரப்புரையை கேட்டேன். என்னுடைய எந்த கருத்து திணிப்பையும் முன் வைக்க விரும்பவில்லை. அந்த தொலைபேசி அழைப்புக்கு 300 டாலர் செலவானது, என் அறை நண்பர்கள் நான் என் காதலியுடன் கதைத்து விட்டு நண்பனிடம் கதைத்ததாக பொய் சொல்வதாக முதலில் என்னை கேலி செய்தார்கள். பின்பு உண்மையான நிலையை புரிந்து கொண்டார்கள். மதனை மதம் மாற்றியவர்கள் தான் திருமணத்தையும் அவனுக்கு செய்து கொடுத்தார்கள். அப்படியாவது அவன் வாழ்கின்றான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இவனின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று இப்போது எனக்கு உணரக் கூடியதாக இருக்கின்றது. அவன் கிளிப் பிள்ளை போல் அம்மா, அப்பா, ஆசிரியர் சொல் கேட்டு வளர்ந்தவன், தன் காதலை தவிர வேறு எதையும் தானாகச் செய்தவனில்லை. பிள்ளைகள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதிற்காக நடுத்தர வர்க்க குடும்பங்கள் பல அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை விதிக்கின்றார்கள். இதனால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சவால்களை கையாள முடியாமலும், தன்னுடைய முழு அன்பையும் ஒருத்தியுடன் கொடுத்து விட்டு, அவள் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கின்றாள் என்பதை அறியாமல் ஒரு மாயையில் வாழ்ந்து விடுகின்றார்கள்.

குழந்தைகளை எல்லோரிடமும் பழக சந்தர்ப்பம் தந்து அதில் எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று தன் காலில் நிற்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். நான் உளவியல் நிபுணன் அல்லன், ஆயினும் மற்றவர்களுக்கும் மனம் இருக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்தவன். எம்மை சுற்றியுள்ள அனுபவங்கள் கூட எம்மை பக்குவப் படுத்தும் என்பதை நம்புவன்.

வெறும் உதட்டளவு உறவில்லாமல் எந்த உறவையும் உணர்வுடன் பழகுங்கள். இன்னொருவருடைய தவறை மறைக்க " அவர் அப்படித்தான்" என்ற தாளம் போடாதீர்கள். தன்னிலை மறந்து நடப்பவர்கள் மன நோயாளிகள். மற்றவர்கள் எல்லோரும் தன்னிலை அறிந்து நடப்பவர்கள். வெறும் சந்தர்ப்பவாதங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டாதீர்கள். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் இது தான் வாழ்க்கை!

உங்கள் பார்வையையும் தாருங்கள்.



Read more...

January 4, 2009

பொன் மொழி, பொன் விழி அழகுதான்...



அட‌டா ஆரம்பிச்சுட்டாங்க, பொண்ணுங்களை வர்ணிக்க...., இல்லைங்க..., இப்படித்தான் இந்த தமிழ் மென் பொருட்களை தயாரித்தவரின் மனைவியும் அவர் அடிக்கடி தொலை பேசியில் பேசிக் கொள்வதை கேட்டு விட்டு குழம்பியிருக்கின்றார்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் 8 வருட உழைப்பில், தமிழக மென்பொருள் விற்பன்னர்களுடன் இணைந்து படைத்த பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மூன்று தமிழ் மென்பொருட்களை பற்றிய அறிமுகமே இந்த கட்டுரை.




பொன் பேனா:
கணணியின் தட்டச்சு இயக்கியினூடாக தமிழ் தட்டச்சு செய்வதற்கு பதிலாக, எழுத்துப் பலகை எனப்படும் ( tablet padச்) மூலம் அதனுடன் வரும் பேனாவால் தமிழில் எழுதும் போது கணணியில் எழுத்துருக்களாக வரும். இதன் மூலம் தமிழ் தட்டச்சு செய்யமுடியாதவர்களும் கணணியில் தமிழில் கட்டுரை எழுதவோ பிரசுரிக்க முடியும். "ல", "ள", "ழ" போன்ற எழுத்துப் பாவனைகளை அகராதியில் ஆராய்ந்து சில தெரிவுகளையும் மென் பொருள் தருகின்றது. தமிழ், "தமில்" போல் தத்தளிக்காமல் இத் தகவல் வலையில் தமிழாக வலம் வர வசதியாக இருக்கும்.




பொன் மொழி:
தமிழில் எழுத்துப் பிழைகளில்லாமல் எழுதவும், எந்த தமிழ் எழுத்துருவையும் (TAM, TAB, Unicode) எந்த தட்டச்சு முறையையும் பாவிக்குமுறையில் அமைந்துள்ள மென்பொருள். அகராதி, பழமொழிகள் போன்றவையும், ஆங்கிலம் மூலம் தமிழ், தமிழ் மூலம் ஆங்கிலம் போன்ற அணுகுமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாமினியில் எழுதியதை இன்னொரு எழுத்துருவிலே மாற்றக் கூடிய இலகுத் தன்மை. இந்த புலொக் எழுதுபவொருக்கு உதவியாக இருக்கும். இது எழுத்துகளை கோர்க்கும் ஒரு கோவையாக தன்னிச்சையாக தொழிற்படுகின்றது.


பொன் விழி:
ஏற்கனவே தட்டச்சு செய்த விடயங்களை ஸ்கான்னர் அல்லது கணணியில் தொலை நகல் மூலம் கிடைக்கப் பெற்றவற்றை எழுத்துருக்களாக மாற்றம் செய்கின்றது . Optical Character Recognition (OCR) என்ற தொழில் நுட்பம் மூலம் தமிழ் எழுத்துருக்களை அடையாளம் காணும் தொழில் நுட்பம் இந்த பொன் விழியில் வடிவம் பெற்றிருக்கின்றது. கை
யெழுத்தை அடையாளப் படுத்தும் அளவிற்கு இந்த மென் பொருள் செய்யப்பட்ட வில்லை.

பொன் பேனா, பொன் மொழி, பொன் விழி என்ற மென்பொருள்கள் தமிழ் தகவல் ஊடகத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது முதல் வெளியீடு என்பதால் பல நுகர்வோர் அனுபவங்கள் வேண்டப்படுகின்றன. இந்த மென்பொருளை எழுதியவர் அளித்த வானலை பேட்டியிலிருந்து....


Anuraj Pon mozhi release.wav - GTR

இந்த இளம் மென் பொருள் தயாரிப்பாளர் வருங்காலங்களில் தமிழ் பேச்சு மூலம் தமிழ் எழுத்துருக்களை கொண்ட ஆவணங்களாக்க கூடிய மென்பொருளை கொண்டுவருவதாக கூறியிருந்தார்.

மேலதிக தகவல்களுக்கு http://www.pontamil.com

உங்கள் எண்ணங்களையும் தாருங்கள்.


Read more...

January 1, 2009

வாழும் மண்ணில் என் பார்வை.







பல்லினக் கலாச்சாரத்தில் முதன்மை பெறும் ஒரு நாடு கனடா. இங்குள்ளவர்கள் மதம், இனம், நிறம், கல்வி, அந்தஸ்து என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்வது என்னைப் பல தடவைகள் சிந்திக்க வைத்துள்ளது. பல வருடங்களை இந்த மண்ணில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவன் என்ற வகையில் ஒரு பார்வை.

ஒவ்வொரு இனமும் எப்படி ஒரு நாட்டுக்குள் வருகின்றது என்பதை பொறுத்து அந்த இனம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவது யதார்த்தம். ஈழத்தார் அனேகமானோர் அகதிகளாய் தான் வந்தார்கள். குறிப்பாக பொறியியலாளர்களாகவும், மருத்துவர்களாகவும், ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் தங்களை அடையாளப் படுத்தி செல்வாக்குடன் வாழ்ந்து விட்டு இங்கு தங்களை தக்க வைத்துக் கொள்வதில் பல சிரமங்கள்.

வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்கள் பலர் இங்கு தொண்ணூறூகளில் வந்த போது தாங்கள் நினைத்த வேலையை பெற முடியாமல் புலம்பி தீர்த்தார்கள். அவர்களில் பலரின் அணுகுமுறையில் தாங்கள் வல்லவர்கள் ஆயினும் இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு எங்களை அடையாளம் காணத் தெரியவில்லை என்று கூறினார்கள். நாம் முதிலில் வாழும் தேசத்தில் உள்ள தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும். எமது பிரச்சனைகளை சமூகத்திற்கும் அரசுக்கும் எடுத்துச்செல்வது எமது கடமை அதை உணர வேண்டும்.

கூட்டு முயற்சிகள் தான் பின்னாளில் நம்மவரில் பலரை அவர்கள் துறையில் இன்று தக்க வைத்துள்ளது என்பது இன்றைய யதார்த்தம். தமிழில் நாம் இந்த நாட்டில் பல பகுதிகளில் எமது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றோம். கனடிய தேசிய கீதத்திலிருந்து, அரசாங்க துண்டுப் பிரசுரங்கள், மருத்துவ கூடங்கள், போக்குவரத்துச் சேவைகள் தமிழில் சொல்லி பேசி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். பல் கலாச்சாரங்கள் இருக்கும் நாட்டில் பல் கலாச்சார வானொலி தமிழர்களால் கொண்டு நடத்தப்படுவது பெருமை தான்.

ஆயினும் தமிழர்கள் நிறுவனங்களில் நாம் இந்த நாட்டின் தரத்திற்கு முற்றாக வளர வில்லை என்பது ஒரு தவிர்க்க முடியாத கருத்து. ஒரு தமிழ் சேவை நிறுவனத்தில் " Please take one" என்று எழுதி விட்டு தமிழில் " தேவையென்றால் ஒன்றை எடுக்கவும்" எழுதியிருந்தார்கள். இங்கு மொழி பெயர்ப்பில் பிழை கண்டு பிடிக்க முயலவில்லை. நிர்வாகம் தமிழர்களை குறைத்து கருதுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றியுள்ளது.

போட்டி என்பதை விட பொறாமைகள் அதிகரித்த சமூகமாக மாறி வருகின்றோமோ என்ற அச்சம் என் மனதில் பல தடவைகள் எண்ணத் தோன்றியுள்ளது. ஈழத்தமிழர்களை ஒன்று சேர்க்கும் பலம் தமிழ்த் தேசியம். ஆயினும் ஒரு சிலர் தம் அடையாளங்களை தக்க வைக்கவும் தங்கள் வியாபாரங்கள் பெருகவும் தமிழ்த் தேசியத்தை தவறான வழியில் அடையாளப் படுத்த முயற்சிக்கின்றார்கள். வேற்றுமைகள் காண்பதை விட வேற்றுமையிலும் ஒற்றுமை காணலாம் என்பது முக்கியம். இதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

நாம் தான் தமிழ்த் தேசியவாதி என்று யாராவது சொன்னால் அது தவறு என்று சுட்டிக் காட்டுங்கள். தமிழ்த் தேசியத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் அதற்காக மற்றவர்கள் தமிழ்த் தேசியம் இல்லை என்று புறக்கணிப்பது தவறான அணுகுமுறை என்று எடுத்துரையுங்கள். அவர் பெரியவர், இவர் சிறியவர் என்ற எண்ணப்பாடுகளை தவிர்த்து கருத்துக்களை ஆராய்ந்து நடக்க கற்றுக் கொண்டு நடப்போமாயின் எம் ஒற்றுமை மேலும் வளரும்.

கனடியத் தமிழர் பேரவை, CARE போன்ற அமைப்புக்களால் பல ஒற்றுமை முனைப்புக்கள் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்டன.

1. கிராம அமைப்புக்கள், பழைய மாணவர் சங்கங்கள் ஒன்று சேர்ந்தன.
2. வானொலிகள் ஒன்றாக சேர்ந்து துயர் துடைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
3. பல விழிப்பு நிகழ்வுகள் மக்களால் நடாத்தப்பட்டது.
4. நாட்டிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மேடையில் நிகழ்வுகள் தந்தார்கள்
5. எல்லா இசைக்குழுக்களும் ஒன்றாக சேர்ந்து இசை நிகழ்வு செய்தார்கள்.

உலக அரசியலில் திருப்பங்கள்.

1. தமிழர் பிரச்சனை ஒரு பயங்கரவாதத்திற்குள் பார்க்கப் படுவது தவறு என்று சொல்லிய அமெரிக்கத்தலைவர்கள் ஒபாமா, திருமதி கிளின்டன் தெரிவான வரலாற்றுத் திருப்பம்.
2. கனடிய அரசியலில் மூன்று எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் உருவாகியது.
3. தாய்த் தமிழகம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்த வருடம்.

இப்படி உலகளாவிய அளவில் தமிழனுக்கு சாதகமான காலம் உருவாகின்ற வேளையில், உங்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை அகற்றி தமிழனுக்கு என்று தரணி அமைய நாம் எல்லோரும் உறுதியுடன் நடந்து கொள்வோம் என்று இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோம்.

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP