வாழ்வியலில் மாற்றங்கள் தான் நிரந்தரமானவை, மற்றவை யாவும் மாறிக் கொண்டிருப்பவை என்பார்கள். கீதையில் கூட "இன்று உன்னுடையது அது நாளை இன்னொருவருடையது" என்று தத்துவங்களை அள்ளி வீசி சென்றதெல்லாம், எமக்கு ஏமாற்றங்களை ஏற்று கொள்ளுகின்ற மன நிலையை வளர்ப்பதற்கே.
ஏமாற்றங்கள் யாரால் யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒரு வகையில் நமது எதிர் பார்ப்புகளின் மறுப்பே ஏமாற்றம் எனலாம். என் வாழ்வில் ஒரு சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆரம்பத்தில் ஏமாற்றம் என்று தோன்றியவை இன்று சரியாகவே தோன்றுகின்றது.
1. தங்க மாம்பழம்
என்னடா புராணக்கதை ஏதாவது சொல்லப் போறேன் என்று பார்க்கிறீங்களா? இல்லைங்க, தொடர்ந்து வாசியுங்கள். கல்லூரி வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மனதை உற்சாகமூட்டும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை. நானும் இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலம் அது. எனது அண்ணாவுடன் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கொண்டு, நானும் எனது பொறியியல் பட்ட படிப்புக்காக கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தேன். எனக்கு மூத்த ஈழ மாணவர்கள் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அனுமதி பெற்று பின் அதை விட்டு பேராதனை பல்கலைக் கழகத்திற்கு ( இலங்கை) திரும்பி சென்று விட்டார்கள். இதன் விளைவாக, எனது காலத்தில் பொறியியல் அனுமதி கேட்ட அனேகமான ஈழ மாணவர்களுக்கு தண்ணி இல்லாத காட்டில் தான் அனுமதி கிடைத்தது.
அது போல் எனக்கும், காமாராசர் மாவட்டத்தில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. இந்த கல்லூரி ஒரே ஒரு தொடர்மாடியை மட்டும் கொண்டு ஆங்காங்கே சிறிய கொட்டகைகளுடன், ஒரு மலையடிவாரத்தில் சன நடமாட்டம் இல்லாத, வாகனப் போக்கு வரத்து குறைந்த வீதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தது. அட நம்ம பிழைப்பு அம்புட்டுத்தான் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். பேசாமல் படிப்பதை விட்டிட்டு, நம்ம ஆளுங்க போற வெளிநாடு எங்காயவது போய் ஏதாவது செய்து பிழைத்திருக்கலாம் என்று தோணிச்சு. எனது சகோதரத்தை பார்த்து, "இங்கை நான் படித்துதான் ஆகணுமா என்று கேட்க", அவர் "அவனவன் ஒரு இஞ்ஞினியரிங் சீற் எடுக்க எவ்வளவு கஸ்டப்படிகின்றான் உனக்கு தெரியாது " என்று வைய, சரி நான் எங்கு தங்கப்போகின்றேன் வினவினேன்.
எனது மூத்த ஈழ மாணவர்கள் சிறீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீடு என்று சொல்லப்படும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே ஆறு பேர் தங்கியிருந்தார்கள். சுமார் 12x16 அடிகள் மட்டுமே இருக்க கூடிய அறையில் என்னையும் ஏழாவதாக சேர்த்துக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில், இன்னொருவர் என்னுடன் படிப்பதற்கு எட்டாவாதாக சேர்ந்து கொண்டார். அங்கு 6 பேர் பொறியியல் கல்லூரியிலும், இருவர் பொலி டெக்னிக்கிலும் கற்பதாக தங்கியிருந்தோம்.
ஊரில் கிணற்று வாளியில் அள்ளி குழித்த எங்களுக்கு, அதி காலையில் வீட்டில் முற்றத்தில் உள்ள குழியில் விழுகின்ற தண்ணியை முகந்து வந்து, படிகளில் ஏறி மாடியிலுள்ள எமது அறையுடன் இணைந்துள்ள குளியல் அறையில் சேகரிக்க வேண்டும். பணத்தை விட இங்கு தண்ணியை தான் சிக்கனப்படுத்த வேண்டிய அவசியம். குளியலறை நாலு பக்கமும் மூடியதாக இருந்தாலும், மேலே மூடப்படாமலே இருந்தது.
சிறீவில்லிபுத்தூரில் குடும்பமாக வாழாதோருக்கு வீடு எடுப்பது மிகவும் கடினம். எங்களில் அனேகமானோருக்கு டாலரிலும் பவுண்டிலும் தான் பணங்கள் வரும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், எங்களுக்கு வீடு பார்ப்பதற்கு உதவாதா என்று எண்ணி, ஒரு புறோக்கர் மூலம் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதாக தீர்மானித்து கொண்டோம்.
எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை விவாதித்திருக்கின்றோம். ஈழத்தின் வரை படத்தை உருவகிபடுத்தி பார்த்தால், யாழ்ப்பாணத்தை தலை என்பார்கள், வடமராட்சியை மூளைப்பகுதி என்பார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒரு சிலர் இருப்பது ஊருக்கு பெருமை, இன்னும் சிலருக்கு ஒரு ஊரில் பிறந்தது பெருமை. நான் 2ம் வகை.
வடமராட்சியை சேர்ந்தவன் நான் ஒருத்தன் தான், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ( போட்டியோ அல்லது பொறாமையோ தெரியாது) என்னை ஒரு வழிப்பண்ணி விடுவார்கள். உதாரணத்திற்கு, நானும் வடமராட்சியை சேர்ந்த அரசியலை , போராட்டங்களை, கல்வி மான்களை உதாரணம் காட்டி அவர்களின் வாயை அவ்வப்போது மூடியதுண்டு.
சுவாரசியமாக திருமணம், காதல் சம்பந்தமாக விவாதித்திருந்தோம். அந்த சம்பாசனைகளில் வந்த சில துளிகள்:
" பலரை பார், மூவரை தெரிவு செய், இருவரை காதலி, ஒருவரை திருமணம் செய்"
"20 இலிருந்து 25 இற்குள், எவளை திருமணம் செய்வதென்று அறி, 25 இலிருந்து 30 இற்குள், எப்போது திருமணம் செய்வதென்று அறிந்து முடித்துக்கொள், 30 இற்கு மேல் உன்னை யார் திருமணம் செய்வார் என்று ஏங்க வேண்டியிருக்கும்."
"விதவைக்கு வாழ்வு கொடுக்கவேண்டும்"
" கடவுச்சீட்டில் பெண் என்று இருந்தால் போதும்"
" படித்த ஃபோவாட்டான (FORWARD) பொண்ணு வேணும்"
என்ற பல கோணங்கள் ஆராயப்பட்டன.
இப்படியான சுவாரஸ்யங்கள் ஒரு புறமிருக்க, உறவுகளின் நினைவுகளும் அப்போது வந்து கனக்க வைத்தன. விடுமுறைகளின் போது எங்கு செல்வது என்று யோசிக்க, இந்திய நட்புகள் மச்சி நீ எங்க ஊருக்கு வா என்று உரிமையோடு அழைத்தது எங்களை நெகிழ வைத்தவை.
வருடம் ஒன்று கழிந்து, ஒரு மாதிரி, ஒரு புறோக்கர் மூலம் 4 பேர் தங்கும் வசதியுள்ள, தண்ணி டாங் வசதியுள்ள 6 வீடுகள் கொண்ட ஒரு தொடரணியில் 2 மாடியுள்ள ஒரு வீடு 300 ரூபாய் வாடகைக்கும், 2000 ரூபாய் முதற்பணமாய் கொடுத்து எடுத்தோம். நானும் இன்னும் மூவரும் அந்த புதிய வீட்டிற்கு சென்றோம்.
"நைனா" என்று சொல்பவர் தான் எங்களிடம் வாடகை வசூலிப்பவர். அவர் தன் குடும்பக்கஷ்டத்தின் பேரில் எங்களிடம் கைமாறாக முன் கூட்டியே வாடகைப் பணத்தை வாங்கி கொடுப்பது வழக்கம். எங்கள் யுனிட்டில் ஒரு வீடு வாடகைக்கு வருவதை அறிந்து எனது சீனியர்சிற்கும் ஒரு வீடு எடுப்பதற்காக இவரை அணுகினோம். முதலாளியின் மகனை தெரிந்ததால் அவரிடம் கேட்ட போது, " நைனா" விடம் பேசினால் போதும் என்றார். நைனாவும் மூன்று மாம்பழத்துடன் வந்து தந்து விட்டு, வீட்டிற்கு எங்களிடம் முற்பணம் 2000 ரூபாய் வாங்கி சென்றார்.
இரண்டு வாரங்களாகின, நைனாவை காணவில்லை. முதலாளியை அணுகி, முற்பணம் கொடுத்தை சொன்ன போது, நைனாவிடம் அந்த பெரிய தொகையை கொடுத்தீர்கள் என்று சொல்லி விட்டு கையை விரித்து விட்டார்.
நைனாவை தேட தொடங்கி பல சுவாரசியமான தகவல்களை பெற்றோம். அவரது வீடு என்று அறிந்து அங்கு செல்ல, அவரது முதல் மனைவி " தானும் அவரை தேடுவதாக சொன்னாள்; அவர் இன்னொருத்தியுடன் வேறு இடத்தில் குடும்பம் நடத்துவதாக கூறினாள்". நாங்கள் அங்கும் சென்றோம், " அவளும் தன்னிடம் இல்லை என்றாள்". இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிதாக ஏமாற்றப்பட்டதாக ஒரு உணர்வு. அவர் தந்த மாம்பழத்தை தங்க மாம்பழம் என்று இன்றும் நினைவு கூறுகின்றோம்.
அன்று எங்கு படிக்க தயங்கினேனோ, அந்தப் படிப்பு என்னை வாழ்க்கையில் பல படிகள் முன்னேற்றியது மாத்திரம் அல்ல, என்னை சூழ இருந்தவர்களின் வாழ்வியலின் முன்னேற்றத்திற்கு உதவ வாய்ப்பு அளித்துள்ளது.
நான் படித்த கல்லூரி இப்போது ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாக அறிந்தேன். அதன் முகப்பை தான் எனது முகப்பிலும் போட்டிருகின்றேன்.
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
Read more...