September 29, 2008

கனடிய தமிழ் வானலைகள் ஒரு குடையில் ஒன்றாகின....


கனடிய தமிழ் வானலை நிலையங்கள் ஒன்று சேர்ந்து வன்னியில் வாடி நிற்கும் உடன் பிறப்புக்களுக்காக CARE என்ற சுய லாபமற்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட துயர் துடைக்கும் நிதி சேகரிக்கும் வைபவம் ஆவணி 27 & 28 திகதிகளில் நடை பெற்றது.


கனடிய தமிழ் மக்களுக்கு இது ஒரு முக்கிய நிகழ்வாகவே இருந்தது. தேசியத்தை நேசிக்கும் எல்லோரும் ஒருமித்த குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். எது எவ்வாறு இருப்பினும் வானொலிகள் சேவை செய்யும் நிறுவனங்கள் என்று சொன்னாலும் இதுவும் ஒரு வியாபார முயற்சி என்பதிற்கு மறுப்பதற்கு இல்லை. கலந்து கொண்ட நேயர்கள் பலர் ஆரோக்கியமான கருத்துக்களை பகிந்திருந்தனர்.

கனடிய தமிழ் பொது நிறுவனங்கள் அனைத்தும் தமிழ் வானொலிகள் எல்லாவற்றிற்கும் தமது தகவல்களை தர வேண்டும். எந்த ஒரு வானொலியும் தாம் தான் தேசியத்தின் வானொலி என்று மக்களை குழப்புவதை விட்டு, வானொலிகள் அனைத்தும் தேசியத்திற்கான வானொலிகள் என்ற எண்ணப்பாடுகள் இருக்க வேண்டும். தேசியத்திற்கான நிகழ்வுகள் அனைத்து வானொலிகளிலும் எடுத்து வரப் படவேண்டும். இது போன்ற பல கருத்துக்கள் மக்களால் முன் வைக்கப்பட்டிருந்தன.



CTR,GTR,MTR,ITR,TTR,CTBC, Tamilstar ஆகிய 7 வானொலி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் வன்னியில் அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லலுறும் மக்களின் துயர் துடைக்க ஒலித்து கொண்டிருந்தனர். இது போல் ஒற்றுமை தொடர வேண்டும்.

தமிழ்ச்சோலை வானொலி அறிவிப்பாளர் நிகழ்வுகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். பல தமிழக உணர்வாளர்கள் வானலைகளில் கலந்து கொண்டு தம் உணர்வுகளை பகிர்ந்திருந்தார்கள். தேசியம் தம் தேவைகளுக்காக யாரையும் அணுகலாம், ஆனால் மாறாக, தேசியத்தை பாவித்து யாரும் தம் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்க கூடாது. மக்கள் தற்பொழுது விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

எம்மக்களின் அவலக்குரல் தமிழகத்திலும் கேட்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. இன்று எல்லோரும் மொழியினால் இணைய வேண்டிய காலம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நன்மையாக நடக்க நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும். பிரிவுகளை உருவாக்கி சுயலாபம் தேடுபவர்களை மக்கள் இனம் காண வேண்டிய காலம் இது.





எமது வரலாற்று கடமையை தொடர்ந்து செய்ய நாம் மறந்து விடக்கூடாது. கையேந்தி நிற்கும் நம் உறவுகளுக்கு உரிமையுடன் கை கொடுத்து காப்பாற்ற வேண்டியது எம் கடமை.ஐப்பசி மாதம் 5ம் திகதி (2008) வரை CARE நிறுவனம் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மேலேயுள்ள "சுமை தாங்கி" பிரசுரப் படத்திலுள்ள முகவரியுடன், உலகத்தின் எம் மூலையிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம்.

Read more...

September 28, 2008

கனடிய தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு.


தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 21ம் ஆண்டு நினைவு நாளில் ஆரம்பித்த 30 மணி நேர உண்ணா நோன்பை மறு நாள் இரவு 10 மணியளவில் மிகவும் உணர்ச்சி தழும்பும் ஒரு நிகழ்வாக நடத்தி முடித்தார்கள். இந்த நோன்பு பல இளையோரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.

பல மேடைகளை கண்ட, அரசியல் ஆய்வுகளை தந்தவர்களை விட இந்த கனடிய தமிழ் இளையோரின் கருத்து பரிமாற்றம், உண்மையான உணர்வு பூர்வமானவையாகவே இருந்தது. பலரின் கண்களை கலங்க வைத்தது என்பது மறுக்கமுடியாத ஒன்று.

உண்ணாவிரதம் ஆவணி 26ம் திகதி பிற்பகல் 4:00 மணிக்கு கனடா ரிச்மண்ட் பிள்ளையார் மண்டபத்தில் ஆரம்பித்தது. 40 மேற்பட்ட இளையோருடன், வயதால் முதிர்ந்தாலும் உணர்வுளால் என்றும் இளமையாக இருப்பவர்களும் கலந்து இருந்தனர். தண்ணீர் மாத்திரமே உட்கொண்டு இருக்கும் விரதமாக முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும், பல இளையோர் தண்ணீர் கூட அருந்தாமல் இந்த விரதத்தில் ஈடுபட்டிருந்தது அவர்களுடைய உணர்வு பூர்வமான ஈடுபாட்டை வெளிக்காட்டியிருந்தது. ஒரு சிலர் மௌன விரதமும் செய்தார்கள். இவர்களை ஊக்குவிக்க பலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் இறுதி மணி நேரங்களில் "தாய் மடி காப்போம்" என்றும் முழங்கி நிற்கும் வானம் பாடிகள் உணர்ச்சி பாடல்களை பாடி நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றியிருந்தனர்.



வன்னியில் இருக்க இடமில்லாமல், குடிக்க குடிகூட‌ நீர் இல்லாமல், அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லல்படும் மக்களுக்காக இளையோர் பலர் தம் உணர்வுகளை பகிர்ந்து, பேசுவதுடன் நின்று விடாமல் தொடர்ந்து தமிழ் மக்களை ஒன்றிணைத்து உதவிகள் சென்றடைய செய்கிறார்கள்.


இளையவள் ஒருத்தி தன் நினைவுப் பகர்வில் தன்னுடைய வன்னிப் பயணத்தையும், தான் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தையும் அங்கு வந்திருந்தவர்களின் மனதில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில், இளையவரின் பங்கு ஏன் முக்கியமானது, பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விளக்கியிருந்தாள். யோர்க் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய மாணவர் தலவனும் நிகழ்வில் வந்து வாழ்த்தி சென்றிருந்தார்.

மேற்குலக அரசியல் தலவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அவர்கள் எம்மை வைத்து ஆதாயம் தேடும் தளங்களாகவே அனேகமான நிக்ழவுகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இது தேர்தல் காலமும் கூட. இளைவர்களின் இந்த முன்னுதராணம் மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டிய காலம் இது.


இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்து வாழ்போர் மத்தியில் கலந்து கொண்டவர்களின் பங்களிப்பு குறைவானதாக இருந்தாலும் இது ஆரம்பம் முடிவல்ல என்பதால், வரும் காலங்களில் உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்பு இந்த விடியலை தேடி நிற்கும் மக்களுக்காக கைகோர்க்கும் என்று நம்புவோமாக!



Read more...

September 16, 2008

என் மண்ணின் பயண‌ நினைவுகள்..


A remote place in Vadamarachi

அடுக்கடுக்காய் அந்தம் எல்லாம் அகதியாகி இடம் பெயர்ந்து வாழும் ஈழத்தாரில் நானும் ஒருவன். ஆண்டுகள் பலவற்றை ஆங்கிலம் பேசும் நாட்டில் கடத்தி விட்டு பெற்றவர்களையும் உற்றவர்களையும் பார்க்க என் பிற‌ந்த மண்ணிற்கு ஓர் திடீர் பயணம் செய்தேன். எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பயணமாகவே இருந்தது.

21 ஆண்டுகளின் பின் நான் வாழ்ந்த மண்ணிற்கு செல்கின்றேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், வெள்ளை வான் மிரட்டல், மற்றும் எந்த இடத்திலும் சுற்றி வளைப்புக்கள் என்ற செய்திகள் ஒரு மூலையில் எனக்கு மனப்பழுவை ஏற்படுத்தத்தான் செய்தன. வாழ்க்கையில் பல சோதனைகளை சிறிய வயதிலேயே சந்தித்த அனுபவம் இருந்த‌தால் நான் நினைத்த மாதிரி பயணத்தை ஆரம்பித்து கொழும்பை அடைந்தேன்.

கொழும்பிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானச் சீட்டு பெறுவதற்காக சிங்களம் சரளமாக பேசக் கூடிய சகோதரர் ஒருவருடன் சென்றேன். அங்கு நான் பார்த்த அலுவலக அனுபவம் ஆண்டுகள் பல மாறினாலும், அதிகாரி எல்லோரின் முன் தனக்கு கீழ் வேலை செய்பவரை பேசுதல், பயணிகளிடம் நடந்து கொள்ளும் முறை நாம் என்னும் வளர வில்லையோ என்று எண்ணத் தோன்றிற்று. ஆயினும், நான் வெளி நாட்டவன் என்பதால் சற்று பதுமையாகவே நடத்தினார்கள். பக்கத்திலிருக்கும் சென்னைக்கு போவதை விட யாழ்ப்பாணத்திற்கு போகும் விமானக்கட்டணம் அதிகம்.

ஒரு நாளுக்கு 3 விமானச்சேவைகள் மாத்திரமே, எனக்கு இரண்டாவது விமானம். ஆயினும் காலை 7:30 மணிக்கே புறப்பட்டு விமான சேவை நிறுவனத்திற்கு சென்றோம். அங்கு எல்லோரும் தங்கள் வருகையை பதிவு செய்து, கைத்தொலைபேசி, புகைப்படக் கருவிகள், ஒளிப்படக்கருவிகள் எல்லாம் கையளிக்கவேண்டும். அங்கிருந்து 9:00 மணிக்கு அவர்களின் பேருந்து வண்டியில் இரத்மலானை விமான நிலையத்திற்கு கிளம்பியது. 09:30 மணி அளவில் விமான நிலையத்திற்குள் செல்லும் சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டோம். அங்கு ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்டோம். பின் ஒருவர் ஒருவராக அழைக்கப்பட்டு நாமும் எமது பொதிகளும் சோதனைக்குள்ளாகின. 11:30 மணியளவில் ஒரு சிறிய பேரூந்தில் இராணுவ சிப்பாய் ஓட்டுனர் எங்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். அங்கு மீண்டும் இலத்திரனியல் உபகரண சோதனையின் பின் பொதிகள் கையளிக்கப்பட்டன. சுமார் 12:15 மணியளவில் விமானம் புறப்பட்டு 1:25 மணியளவில் பலாலி விமானத்தளத்தை அடைந்தது. அங்கிருந்து முழுக்க மறைக்கப்பட்ட, காற்று குறைவான இராணுவ பேருந்தில் ஏற்றப்பட்டு ஒரு பதிவு நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டோம். எல்லோரையும் தனித்தனியாக இராணுவத்தினர் படம் எடுத்து செல்லும் முகவரிகள் பதிந்தார்கள். பின்பு அங்கிருந்து விமான சேவை நிறுவனத்தினரின் பேருந்தில் யாழ்ப்பாணம் சென்றோம்.
_DSC3977
அங்கிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தில் கோப்பாய், இருபாலை, நீர்வேலி ,புத்தூர், வல்லை(2) சோதனை சாவடிகளை கடந்து எனது வீட்டை அடைந்தேன்.

சில நினைவுப்படங்கள்

Nelliady MMV

இது ஒரு நினவு கட்டிடம். முதல் கரும்புலி மில்லரால் நெல்லியடி இராணுவமுகமாக இருக்கும் போது தாக்கப்பட்ட இடம் தற்போது மீண்டும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயமாக திகழ்கின்றது.

vallipuram 049
வல்லிபுரக்கோவில்
Nallur Temple
நல்லூர் கோவில்

Jaffna Campus Library
யாழ் பல்கலைக்கழக நூலகம்.
Jaffna Campus
யாழ் பல்கலைக்கழக வளாகம்

Sannathi Temple
சந்நிதி கோவில்









Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP