October 21, 2007

சிறிய கனவு நனவானது...

வாழ்வியலில் இளமை ஒரு மறக்கமுடியாத பருவம். எந்த கனவையையும் நனவாக்க துடிக்கும் ஒரு மிடுக்கு கொண்ட பருவம். இந்த இளமைப் பருவத்திலும் எல்லா விருப்பு வெறுப்புக்களையும் ஓரம் கட்டி விட்டு விடுதலை எனும் வேட்கையில் இணைந்து சுதந்திரத்திற்காக போராடும் ஈழத்து இளையவர்கள் பலர்.

மனித வாழ்வியலில் உடல், மனம், உயிர் (ஆன்மா) இவை மூன்றும் இணைக்கபட்டு இருந்தால் தான் அவன் மனிதன் எனப்படுவான். உடல் உணவுக்காகவும், உயிர் அன்புக்காகவும், மனம் அறிவுக்காகவும் தேடிக் கொண்டே இருக்குமாம்.

கிணற்றுத்தவளையாக வாழ்வோருக்கும், உணவும், அன்பும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். அறிவு என்பது கிடைப்பதற்கு கல்வி வாய்ப்பு , சூழ இருக்கும் சமூகம், பல்வேறுபட்ட மனிதரின் சந்திப்புக்கள் போன்றவை தேவையாகிவிடுகின்றது.

தகவல் தொழில் நுட்பம் என்று சொன்னால் அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று எல்லோருக்கும் தெரியும். அறிவை மூலதனமாக்கி இந்த நகரில் வாழுகின்ற‌ ஈழத்து இளைஞர்களின் முயற்சியையே இங்கு தருகின்றேன்.


இந்த நகரில் இருந்து கொண்டு "சர்வதேச தமிழ் தொழில் நுட்பவியலாளர் கழகம் ( ITTPO - International Tamil Technical Professional Organization) என்ற சமூக நோக்குடைய நிறுவனத்தை 2002ம் ஆண்டு நிறுவி, ஈழத்திலிருப்போருக்கும் தொழில் நுட்ப அறிவை கொடுப்பதற்கு வழி தேடினார்கள்.
அமெரிக்கர்களுக்கு ஒரு M.I.T ( Massachusetts Institute of Technology) போல, இந்தியர்களுக்கு ஒரு I.I.T ( Indian Institute of Technology) போல, ஈழத்தவர்களுக்கு ஒரு V.I.T( Vanni Institute of Technology) ஆரம்பிக்க திட்டம் போட்டார்கள்.




கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கனடிய தமிழ் வானொலியில் "மின் கணணி உலகம்" என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியுள்ளேன். வேலைப் பழுவினால் இப்பொழுது செய்ய முடியவில்லை. 2002ம் ஆண்டு "வன்னி ரெக்" என்ற திட்டத்தை பற்றி ஒரு பேட்டி நிகழ்ச்சியை தயாரித்திருந்தேன். சுமார் 5 வருடங்களின் பின், இந்த வெற்றி பெற்ற இத்திட்டத்தினை உங்களுக்காக கொண்டு வருகின்றேன்.

5 வருடங்களுக்கு முன்பு......

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்:

உதயன் : இலங்கை வானொலியில் பயிற்சி பெற்று, முழு நேர வானொலி அறிவிப்பாளனாக கனடாவில் இப்போதுமிருக்கின்றார்.
திவாகரன் : கணணிவல்லுனர், எனது தயாரிப்பில் உதவியாளர்.
காரூரன் ( இது எனது புனை பெயர்):‍ ‍‍ நிகழ்ச்சி தயாரிப்பாளர்.

பங்குபற்றியோர் :

1. ஜெ. குமாரசூரியர்

பல வருடமாக அமெரிக்க மண்ணில் வாழ்ந்து வருபவர். Electrical Engineering பட்டதாரியான இவர். கணணி துறையில் பல வருடமாக வேலை செய்து வருகின்றார். வன்னி ரெக் என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர். ஒரு வருடத்திற்கு மேலாக வன்னி மண்ணில் இருந்து இந்த திட்டத்தை வழி நடத்தியவர்.

2. விமல் ராஜ்கோபால்

இவரும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் பல வருடமாக மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர். தற்பொழுது ஒரு மென்பொருள் தயாரிப்பு முகாமையாளராக இருக்கின்றார். வன்னி திட்டத்திற்கு "ஜெ"இற்கு உதவியாக உள்ளவர்.

3. நவா நவரூபராஜா

இந்தியாவில் IIT- Chennai - பொறியியல் துறையில் கல்வி கற்று பின் California Berkeley பல்கலைக்கழகத்தில் கணணி துறையில் முது நிலை பட்டம் பெற்று HP நிறுவத்தினத்தில் Architect ஆக இருக்கின்றார். எனது பாடசாலை தோழன்.


இந்த பேட்டி 2002ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த பேட்டியின் ஒரு சில பகுதிகளை எழுத்துருவத்தில் கீழே தந்துள்ளேன்.

காரூரன் (CTR): வன்னி டெக் திட்டம் என்றால் என்ன?

நவா நவரூபராஜா:
ஈழத்தில் அமைதி உடன் படிக்கை ஏற்பட்டு பல தரப்பட்ட முயற்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஈழத்தை கட்டி எழுப்பும் பணிகளில் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதே நேரத்தில் எமது மக்கள் பலவற்றை இழந்து, அவர்கள் தொழில் நுட்ப அறிவில் 20ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அமைதியை கட்டி எழுப்பி, மக்களை முன்னேற்ற வேண்டுமாயின் ,இவர்களை உலக அளவாகிய மக்க‌ளுடன் நாம் சரிசமமாக கொண்டு வரவேண்டும். இந்த போட்டியான உலகத்தில், அது மட்டுமல்ல மற்றவர்களுடன் வாழ வேண்டுமாயின் நாங்கள் எங்கள் மக்களை மற்றவர்களை விட இந்த தொழில் நுட்ப துறையில் முன்னுக்கு கொண்டு வரவேண்டும். இந்த தார்மீக கடமை, புலம் பெயர்ந்து வாழும் எல்லா தமிழ் மக்களுக்கும் உண்டு. அந்த நடவடிக்கையை நாங்கள் செய்ய வேண்டுமாயின் எமது மக்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த கல்வி அறிவினை கொடுக்க வேண்டியது அவசியாமாகி விடுகின்றது. அந்த கல்வி அறிவினை புகுத்தினால் அதை தொடர்ந்து வரும் பொருளாதார புரட்சி மூலம் எமது மக்கள் நிச்சயமாக முன்னுக்கு வரலாம். இவ்வளவு காலம் நாம் எமது உரிமைகள் பலவற்றிற்காக போராட்டம் போன்ற நடவடிக்கையில் போராடினோம். இனி வரும் போராட்டங்களை எமது பொருளாதார மறுமலர்ச்சிக்காகவும் எடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்த்தத்தில் உள்ளோம். இப்படியான நிலையில் பல திட்டங்களை உடனடியாக செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இப்படியான நிலையில் சிலிக்கன் பள்ளத்தாக்கு உள்ள பலர் ஒன்று சேர்ந்து ஜெ. குமாரசூரியர் தலைமையில் வன்னி ரெக் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. உயர் தொழில் நுட்பத்தை எடுத்து செல்வதற்கு எடுத்து செல்லும் திட்டம். இதில் பல தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வெளி நாடுகளில் வாழும், பல தொழில் நுட்ப வல்லுனர்களை உள்ளடக்கிய முயற்சி தான் இது. இந்த முயற்சியை பற்றி "ஜெ" அவர்கள் மேலும் விரிவாக கூறுவார்கள்.


ஜெ. குமாரசூரியர்:

ரூபன் மிகவும் அழகாகவும் விரிவாகவும் கூறினார். இதை நான் கொஞ்சம் விரிவாக சொல்வதாக இருந்தால், வன்னி இன்சிடிடியூட் ஒஃப் ரெக்னொலயி என்ற கல்லூரியை நிறுவுவதை தான் வன்னி ரெக் என்று அன்பாக அழைக்கின்றோம்.
ஈழ தமிழ் மக்களின் உயர் தொழில் நுட்ப இடைவெளியை நிரப்புவதற்கு அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. இன்றைய சமாதான சூழ் நிலையில், எமது மக்களின் அரசியல் நிலைமைகள் தீர்க்கப் படுமாயின், எமது தாய் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவையும் பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினதும், தாயகத்தில் வாழும் மக்களின் பொறுப்பு. அங்கு நடந்த போரினால் எமது மக்களின் வாழ்க்கை தர நிலைமைகள் பின் நோக்கி நகர்த்தப்பட்டது மாத்திரம் அல்ல, இன்று சமாதான நிலைமைகள் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை தரத்தையோ அல்லது கல்வி தரத்தையோ திடமாக முன்னோக்கி கொண்டு வர பல வருடங்கள் ஆகலாம். ஆனால், இந்த பல வருட‌ங்களாகி விடும் முயற்சிகளை சில வருடங்கள் ஆக்குவது உலகெல்லாம் பரந்து வாழுகின்ற புலம் பெயர்ந்த மக்களாகிய எங்களுக்கு உண்டு.

அது ஒரு புறமிருக்க , நம்மவர்களில் பலர் வெளி நாடுகளில் உயர் தொழில் நுட்ப துறைகளில் வல்லுனர்களாகவோ கைதேர்ந்தவர்களாகவோ பல நாடுகளில் வாழுகின்றார்கள். இவ்வாறு நிலைமைகள் இருந்தாலும் தாயகத்தில் நம்மவர் இந்த தொழில் நுட்பத்தில் பின்னோக்கி தான் இருக்கின்றார்கள். இந்த பிரச்சனையும் அதற்கான தீர்வும் எம்மிடமே இருக்கின்றது. பல நாடுகளில் வாழும் உயர் தொழில் நுட்ப துறையில் வாழுகின்ற வல்லுனர்களையும் அவர்களது நண்பர்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் கூட்டு மொத்தமான அறிவை ஒன்று சேர்த்து அங்குள்ளவர்களுக்கு எடுத்து செல்லும் முயற்சி தான் இது. அங்குள்ள மக்களின் திறமையை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தான் முக்கியமாக தேவைப்படுகின்றது.



திவாகரன்(CTR):
அழகாக திட்டத்தை பற்றி கூறினீர்கள். இந்த வன்னிதிட்டத்தை நடைமுறைப் படுத்த என்ன செய்ய வேண்டும்?

ஜெ. குமாரசூரியர்:
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முயற்சியை , முதலில் உலகத்தில் உள்ள எல்லா தமிழ் தொழில் நுட்ப வல்லுனர்களை ஒரு அமைப்புக்கு கீழ் கொண்டு வர எண்ணி International Tamil Technical Professional Organization (ITTPO) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். எல்லா நாடுகளிலிருந்தும் வல்லுனர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். வன்னியில் ஒரு உயர் தொழில் நுட்ப கல்லூரி ஆரம்பிப்பதே எங்கள் நோக்கம்.

உதயன்(ctr)

இந்த முயற்சிக்கு வெளி நாட்டு தமிழர்களிடம் எவ்வளவு வரவேற்பு இருக்கின்றது?

ஜெ. குமாரசூரியர்:

ஆம், தமிழில் சொல்வதனால், பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

காரூரன்:

நல்ல விடயம். எந்த ஒரு முயற்சிக்கும் ஆயத்தங்கள் தேவை. இதை செய்ய வேண்டிய இடத்தில் செய்ய கூடிய அனுகூலங்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஈழத்திற்கு சென்றிருந்தீர்கள். அப்போது யார் யாரை சந்தித்தீர்கள், எப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தன என்று எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஜெ. குமாரசூரியர்:


நிச்சயமாக! இந்த வன்னி ரெக் ஆரம்பிப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பிதற்காகவும், இந்த பாடசாலையின் தேவை, அங்குள்ள மாணவர்களின் படிப்பறிவு, பாடசாலையை இயக்க கூடிய சூழல் போன்றவற்றை ஆராய்வதற்காக கடந்த மாதம் வன்னிக்கு ஒரு பயணம் செய்திருந்தேன். 3 வார காலத்தில் நான் பல தலைவர்களையும் மக்களையும், அறிஞர்களையும் சந்தித்து உரையாடி வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அந்த அறிக்கையில் வன்னி ரெக் ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் கூறியுள்ளேன். இக்கல்லூரி ஆரம்பிப்பதற்கான ஒரு தற்காலிகமான இடத்தையும் தெரிவு செய்துள்ளேன். தற்போது அதற்கான ஆயத்தங்களை செய்த வண்ணம் உள்ளோம். மீண்டும் தை மாதம் வன்னி செல்வதாக உத்தேசித்துள்ளேன்.

அங்குள்ளவர்கள் இந்த கல்லூரியை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தே இருக்கின்றார்கள். எவ்வளவு தெரியாது என்பதை தெரிந்து வைப்பது அவசியம், அது அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது.

உதயன்(ctr)

அதே வேளை, இந்த விடயமாக பல்கலைக்கழக மாணவர்களை, பாடசாலை மாணவர்களை சந்தித்திருப்பீர்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் எப்படி?


ஜெ. குமாரசூரியர்:

ஆம், பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தேன். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தேன், குறிப்பாக அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்தித்து உரையாடிய போது, மிகவும் ஆர்வாகமாக இருந்தார். தாய்லாந்திற்கு பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையிலும் என்னுடன் நேரத்தை ஒதுக்கி சந்தித்தது எவ்வளவு இந்த திட்டம் எவ்வளவு முக்கியம் பெறுகின்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.

மேலும் இந்த பேட்டியை அறிய வேண்டுமாயின் கீழே இருக்கும் ஒலிப்பதிவைக் கேட்கவும்.




மேலே தரப்பட்ட பகுதி திட்டத்தை ஓரளவு அறிமுகப்படுத்தியிருக்கும் என்று நம்புகின்றேன். இந்த திட்டத்தில், பாடத்திட்டம் தயாரித்தல் மற்றும் சில முயற்சிகளில் உதவியாக இருக்க வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

இன்று வன்னிரெக் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது.


கிராமிய மணம் வீசும் வன்னிரெக் Cafe

வன்னிரெக் cafe உள் பகுதி

கணணி வண்டி??


கூடிப் படிப்பதற்கு இதுவன்றோ இடம்!

விடுதிக்கு வழி

இரும்புக் குதிரைகள் ஓய்வெடுக்கின்றன!


அறிவுக்கான தேடல் ஆவலுடன் !

கனடிய மண்ணில் இருந்து சென்ற பாலா விரிவுரை வழங்குகின்றார்.


இந்த படங்களை பாலா எடுத்து தந்திருந்தார். எல்லோரும் பாலா அண்ணை என்று செல்லமாக அழைப்பார்கள். தேசியத்துடன் தன்னை இணத்திருக்கும் நட்புகளில் இவரும் ஒருவர்.
இந்த வன்னி ரெக்கை பற்றி மேலும் அறிய வேண்டுமாயின்,
Vanni Institute of Technology

அல்லது International Tamil Technical Professional Organisation இனை தொடர்பு கொள்ளுங்கள்.


நானும் எனது வாழ்த்துக்களை இந்த திட்டத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் பங்களிப்புகளை செய்ய வேண்டுமாயின் ITTPO இனை தொடர்பு கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் என் நிஜப் பெயரில் (Gana) தான் பங்களிப்பு செய்துள்ளேன்.











Read more...

October 13, 2007

கீறல்கள்


அவசரமான உலகிலே, உறவுகளின் நிலைமைகள் சற்று மன வருத்தம் தருவதாகவே இருக்கின்றது. அழையா விருந்தாளியாக ஒரு உறவை நாடி சென்ற அனுபவத்தை கிறுக்கிய போது,


மேலைத்தேச உறவுகள்



உரிமையுடன் அழைப்பு மணி அடித்தேன்
அழையா விருந்தாளியாய்,
பரிவுடன் திறந்தது கதவு
அட நீங்களா! என்றது ஓர் குரல்
ஆரவாரத்துடன் அல்ல, அலுத்து கொண்டு
முகவரி தவறினேனா என்று எண்ணி
ஒரு கணம் திகைத்து நின்று
சுதாகரித்து கொண்டு
எப்படி என்று நானும் சுகம் வினவ,
நிசப்தமே பதிலானது.

வாசல் கதவு திறந்தே இருந்தன,
சுள் என்று ஒரு உணர்வு என்னை சுடவும்
ஓரிரு அடிகள் உள்ளே எடுத்து வைக்க‌
அடுக்களையில் இருந்து ஓர் குரல்
அதிலை இருங்கோ என்று

அவசரமாய் அவள் எங்கே என்றேன் ஆதங்கத்துடன்,
இப்பத்தான் தூங்கினாள், அவளுக்கு சத்தம் பிடிக்காது
என்றாள் அவள் அன்னை.

மாடியிலேயோ என்றேன் நான்,
மறுமுறை அடித்து விட்டு வாருங்கள்
என்றது பதில்.

சிறைகளிற்குள் சிக்கிவிட்ட உணர்வுகள்,
மறுமுறை வரலாமா
என்ன தவறு நான் செய்தேன் இவர்களுக்கு,
ஆயிரம் கேள்விகள் எனக்குள்,

ஆதங்கத்தை அடக்கிக் கொண்டு,
ஆசுபத்திரிக்கு வரமுடியலை அலுவலக வேலையாலை
அது தான் இப்ப நான் இன்று.... என்றேன் அசடு வழிய‌
அதற்கும் ஏதும் பதிலில்லை.

அவசரமாய் இருக்கிறியள் போல‌
அப்புறமாய் வாறேன் என்று
சொல்லி கொண்டே வெளியேறினேன்
அப்போது தான் உறைத்தது
நான் மச்சானும் இல்லை மாமனும் இல்லை
மூன்றாவது மனிதன் மட்டும்.



கிறுக்கி முடித்துவிட்டு, மனதை திசை திருப்ப வானொலியின் ஒலியை கூட்டிய போது, வைரமுத்துவின் வரிகளில் வந்த பாடலின் இந்த வரிகள்

"உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
பௌர்ணமி ஆகுமடா"

என்னை உற்சாகமூட்டியது.




Read more...

October 6, 2007

கடந்த பாதையில் சில துளிகள்....




வாழ்வியலில் மாற்றங்கள் தான் நிரந்தரமானவை, மற்றவை யாவும் மாறிக் கொண்டிருப்பவை என்பார்கள். கீதையில் கூட "இன்று உன்னுடையது அது நாளை இன்னொருவருடையது" என்று தத்துவங்களை அள்ளி வீசி சென்றதெல்லாம், எமக்கு ஏமாற்றங்களை ஏற்று கொள்ளுகின்ற மன நிலையை வளர்ப்பதற்கே.

ஏமாற்றங்கள் யாரால் யாருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒரு வகையில் நமது எதிர் பார்ப்புகளின் மறுப்பே ஏமாற்றம் எனலாம். என் வாழ்வில் ஒரு சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆரம்பத்தில் ஏமாற்றம் என்று தோன்றியவை இன்று சரியாகவே தோன்றுகின்றது.

1. தங்க மாம்பழம்

என்னடா புராணக்கதை ஏதாவது சொல்லப் போறேன் என்று பார்க்கிறீங்களா? இல்லைங்க, தொடர்ந்து வாசியுங்கள். கல்லூரி வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மனதை உற்சாகமூட்டும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை. நானும் இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப காலம் அது. எனது அண்ணாவுடன் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கொண்டு, நானும் எனது பொறியியல் பட்ட படிப்புக்காக கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தேன். எனக்கு மூத்த ஈழ மாணவர்கள் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அனுமதி பெற்று பின் அதை விட்டு பேராதனை பல்கலைக் கழகத்திற்கு ( இலங்கை) திரும்பி சென்று விட்டார்கள். இதன் விளைவாக, எனது காலத்தில் பொறியியல் அனுமதி கேட்ட அனேகமான ஈழ மாணவர்களுக்கு தண்ணி இல்லாத காட்டில் தான் அனுமதி கிடைத்தது.

அது போல் எனக்கும், காமாராசர் மாவட்டத்தில் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. இந்த கல்லூரி ஒரே ஒரு தொடர்மாடியை மட்டும் கொண்டு ஆங்காங்கே சிறிய கொட்டகைகளுடன், ஒரு மலையடிவாரத்தில் சன நடமாட்டம் இல்லாத, வாகனப் போக்கு வரத்து குறைந்த வீதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தது. அட நம்ம பிழைப்பு அம்புட்டுத்தான் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். பேசாமல் படிப்பதை விட்டிட்டு, நம்ம ஆளுங்க போற வெளிநாடு எங்காயவது போய் ஏதாவது செய்து பிழைத்திருக்கலாம் என்று தோணிச்சு. எனது சகோதரத்தை பார்த்து, "இங்கை நான் படித்துதான் ஆகணுமா என்று கேட்க", அவர் "அவனவன் ஒரு இஞ்ஞினியரிங் சீற் எடுக்க எவ்வளவு கஸ்டப்படிகின்றான் உனக்கு தெரியாது " என்று வைய, சரி நான் எங்கு தங்கப்போகின்றேன் வினவினேன்.

எனது மூத்த ஈழ மாணவர்கள் சிறீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீடு என்று சொல்லப்படும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே ஆறு பேர் தங்கியிருந்தார்கள். சுமார் 12x16 அடிகள் மட்டுமே இருக்க கூடிய அறையில் என்னையும் ஏழாவதாக சேர்த்துக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில், இன்னொருவர் என்னுடன் படிப்பதற்கு எட்டாவாதாக சேர்ந்து கொண்டார். அங்கு 6 பேர் பொறியியல் கல்லூரியிலும், இருவர் பொலி டெக்னிக்கிலும் கற்பதாக தங்கியிருந்தோம்.

ஊரில் கிணற்று வாளியில் அள்ளி குழித்த எங்களுக்கு, அதி காலையில் வீட்டில் முற்றத்தில் உள்ள குழியில் விழுகின்ற தண்ணியை முகந்து வந்து, படிகளில் ஏறி மாடியிலுள்ள எமது அறையுடன் இணைந்துள்ள குளியல் அறையில் சேகரிக்க வேண்டும். பணத்தை விட இங்கு தண்ணியை தான் சிக்கனப்படுத்த வேண்டிய அவசியம். குளியலறை நாலு பக்கமும் மூடியதாக இருந்தாலும், மேலே மூடப்படாமலே இருந்தது.


சிறீவில்லிபுத்தூரில் குடும்பமாக வாழாதோருக்கு வீடு எடுப்பது மிகவும் கடினம். எங்களில் அனேகமானோருக்கு டாலரிலும் பவுண்டிலும் தான் பணங்கள் வரும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், எங்களுக்கு வீடு பார்ப்பதற்கு உதவாதா என்று எண்ணி, ஒரு புறோக்கர் மூலம் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதாக தீர்மானித்து கொண்டோம்.


எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை விவாதித்திருக்கின்றோம். ஈழத்தின் வரை படத்தை உருவகிபடுத்தி பார்த்தால், யாழ்ப்பாணத்தை தலை என்பார்கள், வடமராட்சியை மூளைப்பகுதி என்பார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒரு சிலர் இருப்பது ஊருக்கு பெருமை, இன்னும் சிலருக்கு ஒரு ஊரில் பிறந்தது பெருமை. நான் 2ம் வகை.

வடமராட்சியை சேர்ந்தவன் நான் ஒருத்தன் தான், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ( போட்டியோ அல்லது பொறாமையோ தெரியாது) என்னை ஒரு வழிப்பண்ணி விடுவார்கள். உதாரணத்திற்கு, நானும் வடமராட்சியை சேர்ந்த அரசியலை , போராட்டங்களை, கல்வி மான்களை உதாரணம் காட்டி அவர்களின் வாயை அவ்வப்போது மூடியதுண்டு.

சுவாரசியமாக‌ திருமணம், காதல் சம்பந்தமாக விவாதித்திருந்தோம். அந்த சம்பாசனைகளில் வந்த சில துளிகள்:

" பலரை பார், மூவரை தெரிவு செய், இருவரை காதலி, ஒருவரை திருமணம் செய்"

"20 இலிருந்து 25 இற்குள், எவளை திருமணம் செய்வதென்று அறி, 25 இலிருந்து 30 இற்குள், எப்போது திருமணம் செய்வதென்று அறிந்து முடித்துக்கொள், 30 இற்கு மேல் உன்னை யார் திருமணம் செய்வார் என்று ஏங்க வேண்டியிருக்கும்."

"விதவைக்கு வாழ்வு கொடுக்கவேண்டும்"

" கடவுச்சீட்டில் பெண் என்று இருந்தால் போதும்"

" படித்த ஃபோவாட்டான (FORWARD) பொண்ணு வேணும்"


என்ற பல கோணங்கள் ஆராயப்பட்டன.

இப்படியான சுவாரஸ்யங்கள் ஒரு புறமிருக்க, உறவுகளின் நினைவுகளும் அப்போது வந்து கனக்க வைத்தன. விடுமுறைகளின் போது எங்கு செல்வது என்று யோசிக்க, இந்திய நட்புகள் மச்சி நீ எங்க ஊருக்கு வா என்று உரிமையோடு அழைத்தது எங்களை நெகிழ வைத்தவை.

வருடம் ஒன்று கழிந்து, ஒரு மாதிரி, ஒரு புறோக்கர் மூலம் 4 பேர் தங்கும் வசதியுள்ள, தண்ணி டாங் வசதியுள்ள 6 வீடுகள் கொண்ட ஒரு தொடரணியில் 2 மாடியுள்ள ஒரு வீடு 300 ரூபாய் வாடகைக்கும், 2000 ரூபாய் முதற்பணமாய் கொடுத்து எடுத்தோம். நானும் இன்னும் மூவரும் அந்த புதிய வீட்டிற்கு சென்றோம்.

"நைனா" என்று சொல்பவர் தான் எங்களிடம் வாடகை வசூலிப்பவர். அவர் தன் குடும்பக்கஷ்டத்தின் பேரில் எங்களிடம் கைமாறாக முன் கூட்டியே வாடகைப் பணத்தை வாங்கி கொடுப்பது வழக்கம். எங்கள் யுனிட்டில் ஒரு வீடு வாடகைக்கு வருவதை அறிந்து எனது சீனியர்சிற்கும் ஒரு வீடு எடுப்பதற்காக இவரை அணுகினோம். முதலாளியின் மகனை தெரிந்ததால் அவரிடம் கேட்ட போது, " நைனா" விடம் பேசினால் போதும் என்றார். நைனாவும் மூன்று மாம்பழத்துடன் வந்து தந்து விட்டு, வீட்டிற்கு எங்களிடம் முற்பணம் 2000 ரூபாய் வாங்கி சென்றார்.

இரண்டு வாரங்களாகின, நைனாவை காணவில்லை. முதலாளியை அணுகி, முற்பணம் கொடுத்தை சொன்ன போது, நைனாவிடம் அந்த பெரிய தொகையை கொடுத்தீர்கள் என்று சொல்லி விட்டு கையை விரித்து விட்டார்.

நைனாவை தேட தொடங்கி பல சுவாரசியமான தகவல்களை பெற்றோம். அவரது வீடு என்று அறிந்து அங்கு செல்ல, அவரது முதல் மனைவி " தானும் அவரை தேடுவதாக சொன்னாள்; அவர் இன்னொருத்தியுடன் வேறு இடத்தில் குடும்பம் நடத்துவதாக கூறினாள்". நாங்கள் அங்கும் சென்றோம், " அவளும் தன்னிடம் இல்லை என்றாள்". இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிதாக ஏமாற்றப்பட்டதாக ஒரு உணர்வு. அவர் தந்த மாம்பழத்தை தங்க மாம்பழம் என்று இன்றும் நினைவு கூறுகின்றோம்.

அன்று எங்கு படிக்க தயங்கினேனோ, அந்தப் படிப்பு என்னை வாழ்க்கையில் பல படிகள் முன்னேற்றியது மாத்திரம் அல்ல, என்னை சூழ இருந்தவர்களின் வாழ்வியலின் முன்னேற்றத்திற்கு உதவ வாய்ப்பு அளித்துள்ளது.

நான் படித்த கல்லூரி இப்போது ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாக‌ அறிந்தேன். அதன் முகப்பை தான் எனது முகப்பிலும் போட்டிருகின்றேன்.
கலசலிங்கம் பல்கலைக்கழகம்

Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP