கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு" நூல் வெளியீட்டு விழா "தகவல்" சஞ்சிகையின் ஆசிரியர் திருச்செல்வம் தலைமையில் ஸ்காபரோ நகர மண்டபத்தில் ( கனடாவில்) ஐப்பசி 3ம் திகதி வெள்ளிக்கிழமையில் நடைபெற்றது.
இரு குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி மாணவியின் கனடிய தேசிய கீதம் என்பவற்றை தொடர்ந்து கனடிய தமிழர் சம்மேளனத்தின் இயக்குனர் ஒருவர் வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து ஆசிரியரின் பாடசாலை நண்பன் வேலா ஆசியுரை வழங்கினார். அவர் தன் உரையில் " ஆசிரியர் பாடசாலை நாட்களில் எவ்வளவு தூரம் வரலாறு சம்மந்தமான துறையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தது மட்டும் நின்றுவிடமால் அதன் துறை சார் கல்வி பெற்று அவுஸ்திரேலியாவில் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் இருந்தார். அந்த வேலையை துறந்து தன் குடும்பத்தையும் பிரிந்து பல மாதங்கள், வருடங்களை தமிழரின் வரலாறு பற்றிய தேடலை செய்தார்.
இதற்காக நம் நாட்டை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் ஆவணங்களை தேடி அதை மொழி பெயர்ப்பு செய்து பல சிரமங்களின் மத்தியில் தான் இந்த நூலை வெளியிட்டுள்ளார். இவர் தேசியத்தின் சொத்து என்று கூறும் போது அவை நிறைந்த கைதட்டுக்கள் அதன் உண்மைத் தனமை ஆமோதித்து நின்றது."
தலைவர் திருச்செல்வம் தனது உரையில், இப்படியான வரலாற்று நூல்கள் எழுதுவதிலுள்ள சிரமங்கள், நிதி தேவைகள் என்பவற்றை விளக்கி இந்நூலின் வெளியீட்டுக்காக 10,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸை வழங்கிய பேருக்கு பொருத்தமான அம்மையார் "கற்பகம்" அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இப்படியான நூல்களை எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், புத்தகத்தை கடனாக தரமுடியாவிட்டாலும் பணத்தை கடனாக தர இங்கு நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று புத்தகத்தை வேண்டுவதற்கான உந்துதலை கொடுத்தார். நேரக்குறைவினால் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய நக்கீரன், நூல்களை ஆக்குவதிலும், சந்தைப்படுத்தல், மக்களை வாசிக்க வைத்தல் போன்றவற்றிலுள்ள சிரமங்களை நகைச்சுவையுணர்வுடன் தன் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். ஆலயத்திற்கு தேர் செய்ய 35,000 டாலரை கொடுக்க முன் வருபவர்கள் இப்படியான நூல் வெளியீடுகளில் பங்களிக்க முன் வருகின்றார்களில்லை என்று தன் வருத்தத்தை வெளியிட்டார்.
ஆய்வுரை நிகழ்த்திய நவம், ஈழத்து இடம் பெயர்வினை விளக்கும் ஓர் கவிதையை வாசித்துவிட்டு ஆய்வுரைக்குள் சென்றார். பொதுவாக ஆய்வுரை செய்பவர் நூலை முழுதாக படித்து முடித்தததிற்கான தொனிப்பை கொடுப்பார்கள். நவமும் தனது பார்வையிலுள்ள கருத்துக்களை முன் மொழிந்தார். இந்த வரலாற்று நூல் எல்லோரையும் சென்றடைவதற்கான முயற்சியில் ( வேற்றினத்தவர் உட்பட) சில முயற்சிகள் செய்யப்படவில்லை என்று சில முன்னுதாரணங்களை முன் வைத்தார். பிரபல்யமான பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டிருந்தால் நிறைய மக்களை சேர்ந்தடைய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கும். முன்னுரை, ஆய்வுரை போன்ற விளக்க உரைகள் வரலாற்று ஆசிரியர்கள் சிலரினால் தரப்பட்டிருந்தால் நூலுக்கு மேலும் சிறப்பு தந்திருக்கும் என்று கூறினார். புத்தகத்தில் ஒர் முத்திரை தலை கீழாக போடப் பட்டிருப்பதாகவும் சுட்டி காட்டினார். அத்துடன் நின்று விடாமல் புத்தகத்தில் ஆழமாக கையாளப்பட்ட விதம், எல்லோரும் படிக்கவேண்டிய முக்கியத்துவத்தையும் கூறி சேரனின் ஒரு கவிதையுடன் முடித்துக் கொண்டார்.
ஏற்புரை நிகழ்த்த வந்த ஆசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தனது ஏற்புரையில், ஆய்வுரை நிகழ்த்திய நவம் எழுப்பியிருந்த வினாக்களுக்கு விளக்கம் தந்தார். புத்தகத்திலுள்ள எல்லா விடயங்களுக்கும் தான் தன்னுடைய கருத்துக்களையே முன் வைத்ததாகவும், தன்னுடைய பதிப்பகத்தில் தான் பதிவு செய்ததாகவும் சொன்னார். நாம் எம்மில் நம்பிக்கை வைக்கவேண்டும் கேம்பிற்ட்ஜ் பதிப்பகம் போன்ற பெரிய பதிப்பகங்களை நம்பித்தான் நாம் எம் நூலை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இருக்கக் கூடாது. காலனித்துவ ஆட்சியில் வாழ்ந்த மனப்பாங்கு தான் எங்களை அப்படி சிந்திக்க வைக்கின்றது என்று விளக்கமளித்தார்.
முத்திரை தலைகீழாக முதற் பிரசுரத்தில் இருக்கும் தவறை அடுத்த பிர்சுரத்தில் சரி செய்து கொள்வதாக கூறினார்.
ஈழத்தமிழனின் வரலாற்று பின்னணியல் அனுராதபுரம், கதிர்காமம், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி எல்லாம் தமிழனின் ஆட்சியில் இருந்ததாகவும், நம்மினம் நமது நிலச் சொத்துக்களின் உறுதியை பாதுகாப்பாக பூட்டிவைத்து ஓரங்குலம் நிலம் கூட மற்றவர்களிடம் சென்று விடக்கூடாது என்று ஆயுதம் எடுத்து அடிபட்டுக் கொண்ட சமுதாயம் இப்போது தன் நாட்டை பறிகொடுத்து விட்டு நிற்கின்றது தன் நாடு என்று தெரியாமல்.
தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரத்தை தான் சந்தித்த போது, அவரிடம் , அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னணியில் புலிகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் அதனால் உங்களுக்கு அவர்களின் தலைவர் மீது கோபம் இல்லையா என்று வினவிய போது, தேசியத் தலைவர் ஒருவர் தான் எந்த சந்தர்ப்பந்த்தத்திலும் விலை போகாத தலைவன் என்று சொன்னதாக கூறினார்.
வீட்டுக்காரன் வெளியிலிருந்து வரும் நாய்க்கு சாப்பாடு போட்டாலும், வீட்டு நாய் அதனை சாப்பிட விடாமல் கலைக்குமாம். வெளி நாய் சொல்லிக் கொள்ளுமாம் எம் இனத்திற்கு நம் இனமே எதிரி என்று சுவாரசியமாக எமது இன்றைய நிலைமையை விளக்கினார்.
கெலிகொப்டரில் மணமகன் அல்லது மணமகளை அழைக்கின்ற வரைக்கும் புலம் பெயர்ந்த தமிழன் சென்று தன் பணத்தை விரயம் செய்கின்றான். அங்கு குண்டு மழைக்குள் தவிக்கும் மக்களுக்கும் அங்கு தன்னுயிரை தியாகம் செய்யும் போரளிகளையும் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள் என்று உணர்வு ததும்ப பேசினார். புத்தகம் குறைந்த விலையில் பிரசுரிக்க விரும்பி இந்தியா சென்று அங்கு அவர்கள் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்கள். அதன் பின் ஜேர்மனில் தான் புத்தகம் பிரசுரிக்கப் பட்டதாம்.
அவர் உரை மிகவும் சுவாரசியமாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும், உணர்பூர்வமாகவும் இருந்தது. தனது புத்தகம் விற்பதற்கு நேரம் இல்லாவிட்டாலும் தான் இந்த சந்தர்ப்பத்தில் தனது உரையை முழுதாக வைக்க வேண்டும் என்று முயன்றார். நேரப் பற்றாக் குறையினால் தொடரமுடியால் நிறுத்திக் கொண்டார். தலைவர் போதும் என்ற மன நிலையில் வீடு செல்வதை விட, இன்னமும் வேண்டும் என்ற மன நிலையில் விடை பெற்றால் தான் சிறப்பு என்று சொல்லி வந்திருந்தவர்களை தேற்றினார். வானம் பாடிகளின் மூத்த பாடகர் நம்மூரையும் தலவரையும் வாழ்த்தும் இரு பாடல்களை பாடி சென்றார். புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ் என்ற இரு மொழியிலும் விற்பனைக்கிருந்தன. நல்ல ஒரு நிகழ்வில் கல்ந்து கொண்ட ஒரு திருப்தி எனக்கு ஏற்பட்டது. புத்தகத்தை வாசித்து விட்டு மீதியை சொல்கின்றேன்.
Read more...