கிளி (கருணாரட்னம்) அருட் தந்தை யார்?
வாழ்வியலில் மதிக்கமுடியாத செல்வம் தியாகம். போரியல் வரலாறுகளில் ஒரு நாட்டின் தேச வீரனாக மடிகின்ற பொழுது ஒருவன் தியாகி ஆகி விடுவது உண்மையாகி விட்டாலும், அவர்களுக்கு ஊதியமும், அவ்வீரனின் மறைவுக்கு பின் ஒரு நஷ்ட ஈடும் கிடைக்கப் பெறுவது ஒரு தேசத்தின் வழமை.
நம் போராட்டத்தில் தன்னுயிரை தேச விடுதலைக்காக, எந்த வித எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் கொடுத்து வாழும் வீர மறவர்கள் எத்தனை எத்தனை. நான் பிறந்து வளர்ந்த கரவெட்டி என்ற கிராமத்தில் "கிளி மாஸ்டர்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவரும், பாடசாலை நாட்களில் எங்களைப் போல் இருந்த எந்த வயதினருக்கும் ஒரு நண்பனாக வாழ்ந்த அற்புத மனிதர். எந்த மனிதருடனும் அவர்கள் நிலையில் சென்று அளவளாக கூடிய மனிதர்களில் இவரும் ஒருவர். ஆரம்ப காலங்களில் ஒரு வங்கி ஊழியராக இருந்து கொண்டாலும், பகுதி நேர ஆசிரியனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர்.
படிப்படியாக கிறிஸ்தவ மதத்தலைவராக கல்வி பெற்று தனக்கென சமுதாயத்தில் ஒரு மதிப்பையும் மரியாதையும் பெற்ற அருட்தந்தையாக வாழ்ந்தவர். மனித உரிமைகள் பேணப்படவேண்டும், மனித நேயமுள்ள சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக வாழிவியலில் பல போராட்டங்களை சந்தித்த செயல் வீரன் இவர்.
அருட் தந்தை கருணாரட்னம் அடிகளாராகவும், வடக்கு கிழக்கு மனித உரிமை காப்பகத்தின் இயக்குனரவை தலைவராகவும் உலகுக்கு அறிமுகமானமவர். பல நாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து நம் அவல நிலைமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியவர்.
எனது கிராமம் பல பாடசாலைகளையும், ஆலயங்களையும் கொண்டதால் என்னவோ பல வல்லுனர்களை உருவாக்கியிருக்கின்றது. ஆன்மீகம், அரசியல், வீரம், தமிழ் என்ற பல துறைகளில் விற்பன்னர்களை உருவாக்கியுள்ளது. முதல் கரும்புலி வீரன் " மில்லர் ( வசந்தன்)", தேசத்தின் குரல் " அன்ரன் பாலசிங்கம்" போன்றவர்களைப் போல் மனித நேயத்தின் தந்தையாகிய அருட் தந்தை கருணாரட்னம் அடிகளாரையும் இழந்து நிற்கின்றது.
கிறிஸ்தவ மதத்தின் புனித ஆலயமான மடு மாதா ஆலயத்தின் திரு உருவச்சிலை பாதுகாக்கப் பட வேண்டும் என்பதற்காக, தேவஸ்தானம் முடிவிற்கு ஏற்ப புலிகளின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டதை " நிலவரம்" நிகழ்வு ஊடாக உலகுக்கு உண்மை தன்மையை எடுத்து சொன்னார். நாசகார சக்திகளால் அருட் தந்தை கருணாரட்னம் அடிகளார் மிகக் கொடூரமாக கொல்லப்ட்டுள்ளார்.
வலய உறவுகளே, இலங்கையில் 5 மணி நேரத்திற்கு ஒரு தமிழன் கடத்தப்பட்டோ, கொல்லப்பட்டு வரும் சாபக் கேடு கொடுமையானது. தமிழனாக பிறந்ததை விட இத்தரணியில் இவர்கள் இட்ட தவறு தான் என்ன?. பிரியங்காவிற்குக்கு நளினியை பார்த்து பேச தோணுகின்ற போது, நாம் ஏன் சக தமிழ் உடன் பிறப்புகளைப் பற்றி குரல் கொடுக்க கூடாது. ஈழப்பிரச்சனை வெறும் அரசியல் வளர்க்கும் தளமாக மட்டும் அல்லாமல், மனித நேயத்துடன் அணுக வேண்டிய காலம் இது. அருட் தந்தை கருணாரட்னம் அடிகளார் பரப்பிச் சென்ற மனித உரிமையும், மனித நேசமும் மேலும் வளர உலக உறவுகளே ஒன்று படுங்கள்.
யாருக்கு யார் ஆறுதல் சொல்ல??