வலையில் ஓர் உலா...
நீண்ட நாட்களின் பின் மீண்டும் புளொக் மூலம் புலம்பலாம் என்று வந்திருக்கிறன். ஓரளவுக்கு அங்கும் இங்கும் நுனிப்புல் மேய்ந்திருக்கின்றேன். ஈழத்தவரின் அரசியல் சார்ந்த சூழல் நம்மில் பலருக்கும், எமது போராட்டம் கலந்த தகவல்களுக்கே ஓரளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது. பல முறை எழுத வேண்டும் என்று எண்ணி அமர்ந்து விட்டு நிறுத்தி விடுகின்ற ஒரு மனோ நிலை கொஞ்ச நாட்களாக இருந்து வருகின்றது. ஆயினும் மற்றவர்களின் எழுத்துக்களை ஓரளவு வாசிப்பதுண்டு.
ஆரம்ப கால கட்டங்களில் இது ஒரு சமூக வலையாக அவர் தம் அங்கலாய்ப்புக்களையும் அனுபவங்களையும் பகிர்கின்ற ஒரு ஊடகமாகவே தென் பட்டது. என் முன் தெரிகின்ற பல விடயங்களை மேற்குலகில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு தமிழ் பேசும் எம்மவர் பார்வையில் எப்படி வித்தியாசப்படுகின்றது அது ஏன் என்ற வினாக்களை அவ்வப்போது எனக்குள் எழுப்புவதுண்டு. இதை விமர்சனங்களின் விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட ஒருவரின் விசனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
நாம் தகவல் உலகத்தில் வாழுகின்றோம். தகவல் என்பது ஒழுங்குபடுத்தபட்ட தரவுகளின் கோர்வை. நம்மவர் மத்தியில் பல திரட்டிகள் இருக்கின்றன. இவற்றை பாவிப்பதற்கான இலகுத்தன்மை இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. வலைப்பதிவு தொடர்பாக உதவி பெற்றுக் கொள்வதில் இன்றும் இன்னமும் சிரமம் இருக்கத் தான் செய்கின்றது. பல சுவாரசியமான வலைக்கு வந்த கதைகளை வாசித்திருக்கின்றேன். அனேகமானவர்களின் பதிவில் முகம் தெரியாத பிற தேசத்தில் வாழுபவரிடம் தான் உதவி பெற்று வலைக்கு வந்ததாக எழுதியுள்ளார்கள். நமக்கென்று ஒரு "வலையில் எழுத டம்மீஸ் புக்" என்று ஏன் தயாரிக்கக் கூடாது.
* புலொக் என்றால் என்ன?
* எப்படி பதிவு செய்வது?
* தமிழில் எப்படி தகவல்களை தட்டச்சு செய்வது?
* நீங்கள் எழுதியதை எப்படி மற்றவர்கள் வாசிக்க வைக்கலாம்?
* திரட்டிகளும் பயன்பாடும்.
* பின்னூட்டங்களும் அதன் கையாளுகையும்
* ஒலி, ஒளி வடிவம் இணைத்தல்
* மேம்படுத்தல்
இப்படியான தகவல்களை ஒரு கோர்வையாக ஒரு புலொக் வடிவத்திலோ அல்லது pdf வடிவத்திலேயே செய்தால் புது முகங்களை உள்வாங்கவும் எமக்குள் திறந்த மனப்பான்மையை வளர்க்கும். அடடா நான் அறிவுரை கூற மட்டும் இப்பதிவை எழுதவில்லை. இது பற்றிய தகவல்கள் பலரால் பாகம் பாகமாய் அங்கும் இங்குமாக இருக்கின்றது. பதிவர் வட்டங்கள் பல இருக்கின்றன. இந்த முயற்சி புலொக் எழுதும் எல்லா தமிழ் எழுத்தாளர்களின் கருத்தையும் உள்வாங்க உதவும் என்பது ஒரு கணிப்பு.
பதிவர் வட்டங்கள் எவை? அவற்றை தொடர்பு கொள்ள என்ன தொடர்பு முகவரி? போன்ற விடயங்களை சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கியமான விடயங்களை முயற்சிக்கலாம். இப்படி ஒரு கைக்கடக்கமான ஒரு கை நூல் வலைப்பக்கத்தில் இருக்கும் போது எல்லோரின் இணையப் பக்கங்களிலும் " நீங்களும் பதிய விரும்புகின்றீர்களா? என்ற ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பெட்டிக்குள் இருந்து சிந்திப்பதுடன் நின்றுவிடாமல் பெட்டிக்கு வெளியேயும் நின்று சிந்திக்க வேண்டும் என்பது என் அவா! அறிமுகமில்லாத அகதியின் புலொக்கிலிருந்து அறிவுமுகம் என்று சொல்லி என் கிறுக்கல்களை கொட்டியிருக்கின்றேன். எனது கிறுக்கல்கள் எந்தவித கீறல்களையும் ஏற்படுத்தியிருக்காது என்று நம்பி உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களையும் வேண்டி நிற்கின்றேன்