எம் இனத்தை காப்பாற்ற வழி இல்லையா?
உறவுகளை இழந்த வலியில் எம்மினம் என்ன செய்வதென்று அறியாத நிலையில், யாருக்கு யார் ஆறுதல் சொல்வது! புலம் பெயர் நாடெல்லாம் வீதி வீதியாய் போராட்டம் செய்தோம், பாராளுமன்றங்களை முற்றுகையிட்டு மன்றாடினோம். கை கொடுக்க யாருமில்லாமல் கடைசி நிமிடம் வரை நம்மை உலகம் காக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து கொடூரமாக கொல்லப்பட்ட சொந்தங்களுக்காக நாம் என்ன செய்தோம், செய்கின்றோம் என்பது தான் இன்று நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம்.
இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க சர்வதேசத்தில் எவ்வளவு குழப்பங்கள். மனித உரிமை நிறுவனங்கள் என்ற பேரில் மனித அவலத்தை கண்டு கொள்ளாத மனிதர்கள். 21ம் நூற்றாண்டில் மனிதம் செத்து விட்டதா? அழுகின்ற நேரமா அல்லது எழுகின்ற நேரமா? யார் உயிருடன் உள்ளார்கள், யார் இல்லை என்ற பல கேள்விகள்.
நாம் மௌனிக்கின்ற நேரமில்லை. உலகத்தில் எல்லா மூலையில் உள்ள தமிழனும் ஒற்றுமையாக செயற்பட்டு, கண்மூடித்தனமாக இருந்த உலகப் பொது அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கும் வரையும் ஓயக் கூடாது. பான் கீ மூனுக்கு 20,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் தெரிந்தும் மௌனமாக இலங்கை சென்று அங்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்ததிற்கான தடயம் இல்லை என்கின்றார். இவர்கள் எல்லாம் எப்படி ஒரு மனிதாபிமான அமைப்பில் உயர் பதிவியில் இருக்கமுடியும்?
இந்த காணொளி கனடிய மக்களின் உள்ளக் குமுறலை எடுத்து வருகின்றது.
ஓயாமல் தினமும் உழைப்போம். இந்த மனித அவலத்திற்கு துணை போனவர்கள் யார் என்றாலும் அவர்களை மனித நீதியின் முன் நிறுத்த தொடர்ந்து போராடுவோம்.