கனடிய தமிழ் வானலை ஒலிபரப்பு நிறுவனங்களிடையில் விரிசல்.
வலய உறவுகளுக்கு ஒரு அறிமுகத்தை தந்துவிட்டு ரொரன்ரோவை கலக்கி கொண்டுள்ள ஒரு பிரச்சனையை பற்றி விளக்குகின்றேன்
கனடிய தமிழ் வானொலி:
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன் 2801B எக்ளின்ரன் அவெனியு என்ற முகவரியில் கலாதரனின் தலமைக்கு கீழ் ஆரம்பிக்கப்பட்டது. பல வானொலிக் கலஞர்களை உருவாக்கிய பெருமை இந்த வானொலிக்கும் உண்டு. இந்த வானொலியின் பங்குதாரர்கள் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டு தான் இருந்தார்கள். இந்த ஃப்ம் 2ம் தர அலவரிசை வானொலிகள் என்று அழைக்கப்படும். சாதாரண வானொலிகளில் கேட்க முடியாது. பிரத்தியேகமான வானொலிப் பெட்டி தேவை. இப்படியான வானொலி சேவைகள் மாத்திரமே இருந்தது. 2003 இல் சாதரண FM அலைவரிசை எடுப்பதற்கு போட்டி போட்ட போது, கனடிய தமிழ் வானொலியின் உதவியுடன் நேயர்களின் கையெழுத்து வேட்டையில் கிடைத்த பரிசு தான் "கனடிய பல்கலாச்சார வானொலி" . ஆரம்பத்தில் சகோதர வானொலி என்று சொல்லப்பட்டாலும் இடை இடையே முறுகல் நிலை தோன்றி இருக்கின்றது. ஆரம்பத்தில் வருவாய் எடுப்பதில் சிரமப்பட்ட கனடிய தமிழ் வானொலிக்கு கை கொடுப்பார் யாருமில்லை.
கனடிய பல் கலாச்சார வானொலி:
அனேகமான கலைஞர்கள் கனடிய தமிழ் வானொலியில் இருந்து தான் இந்த வானொலியில் சேர்ந்து கொண்டார்கள். இது ஒரு பல்கலாச்சார வானொலி என்பதால் மற்ற மொழி இனத்தவருக்கு வானலை நேரத்தை விற்று நல்ல பணம் சம்பாதிக்கும் வானொலியாக மாற்றம் கொண்டது. இந்த வானொலி நிர்வாகத்திற்கு கனடிய தமிழ் வானொலியில் ஒரு பெரிய பங்கு உள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலி தமிழர் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் அமைந்திருக்கின்றது.
கடந்த மே மாதம் 11ம் திகதியில் இருந்து கனடிய தமிழ் வானொலி(CTR) 306, ரெக்ஷ்டேல் புலவாட் பகுதிக்கு மாற்றம் பெற்றதாக அறிந்தேன். தகவலை அறிய CTR ஊழியர்களை தொடர்பு கொண்ட போது அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. வானொலியின் இயக்குனருக்கோ, ஊழியர்க்கோ தெரியாமல், பல்கலாச்சார வானொலி நிர்வாகத்தை சேர்ந்த (CTR ஐ நிர்வாகம் செய்பவர்கள்) அடாவடித்தனமாக ( சில கதவுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு) வானொலி நிலையத்தில் உள்ள எல்லா தொழில் நுட்ப உபகரணாங்களை ஏற்றி சென்று விட்டார்கள். அத்துடன் நின்று விடாமல், வானொலி நிலையத்தின் முன் கதவை பூட்டை மாற்றி விட்டு வானொலி நிலையம் இடம் மாற்றப்பட்டதாக இந்த அறிவிப்பு வாசலில் போடப்பட்டிருந்தது.
இயக்குனரும், ஊழியர்களும் மிகவும் கோபமடைந்திருந்தனர். பூட்டை உடைத்து கொண்டு உள் சென்று நிலைமையை பார்த்த போது தான் என்ன நடந்தது என்று தெரிந்தது. இந்த இடம் CTR இயக்குனரின் பேரில் வாடகைக்கு இருப்பதால் அவரின் அனுமதி இல்லாமல் உள்ளே சென்று நடந்த விடயம் ஒரு சாதாரண மனிதனையும் கேள்வி கேட்க வைக்கும்
இப்போது உள்ள வானொலி நிலையத்தின் நிலை. பார்த்து நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.
1. இந்த நிர்வாகத்தினர் தங்கள் பக்கம் நேர்மை இருந்தால் ஏன் இந்த அடாவடித்தனம் செய்ய வேண்டும்?
2. உங்கள் பொறுப்பில் நிர்வாகம் இருந்தால் யாரையும் நீக்கலாம், அதற்கு ஒரு உரிய முறை உண்டு. பல பில்லியனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களே தங்கள் பங்குதாரர்களுக்கு தங்கள் நடவடிக்கையை சொல்ல வேண்டும். CTR இயக்குனர் பங்குதாரர் ஆக இருந்தும் அவருக்கும் சொல்லாமல் நடந்து கொண்டது ஏன்?
3, தங்கள் பக்கம் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இருப்பதால் எளிதாக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நம்பினார்களா?
மக்களின் கை எழுத்து சேர்க்கையால் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனத்தின் முகாமைத்துவம், மக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். கடந்து வந்த பாதைகளை மறக்கக் கூடாது. நிர்வாகம் வர்த்தகர்களையும் நேயர்களையும் நம்பி வியாபாரம் நடத்துபவர்கள் மக்களை மதிக்காவிட்டால், மக்களும் தங்கள் பலத்தை காட்ட வேண்டும். தேவைகளுக்கு மாத்திரம் பொது சேவை நிறுவனங்கள் என்று அடையாளம் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது.
சில ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை தேசியத்தை நேசிப்பதாக சொல்லிக் கொண்ட சிலர் அவரை புறம் தள்ளினார்கள். பின்னாளில் இதற்காக வருந்தினார்கள்.
இது போல் மக்களின் மனங்களை வென்ற கனடிய தமிழ் வானொலி இயக்குனரையும், ஊழியர்களையும் கருத்தில் கொள்ளாமல் விட்டுள்ள நிர்வாகம் அதற்கான ஒரு விலையை கொடுக்க வேண்டிய காலம் வரும்.
உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்.